செவ்வாய், 2 டிசம்பர், 2025

பெண்ணை நம்பாதே; சன் - ஐயும் நம்பாதே.... - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கிருஷ்ண தாசி - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மாடிப்படி ஏறிக்கொண்டு இருந்தபோது ஒரு வீட்டிலிருந்து கேட்ட ஒரு ஆணின் குரல்....  "பெண்ணை நம்பாதே! Son - ஐயும் நம்பாதே, Pension ஐ மட்டும் நம்பு" என்பது தான்..... அதற்கு பதில் கேள்வியாக இன்னுமொரு ஆணின் குரல் - "Pension இல்லாதவங்க யாரை  நம்பறது?" இதே கேள்வி எனக்குள்ளும் இருக்க, மாடிப்படிகளில் ஏறிவிட்டேன். அதுவும் 2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு வேலைகளில் சேர்ந்திருந்தால் கூட பென்ஷன் கிடையாது.  அவர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கும் சம்பளத்தில் ஒரு பங்கை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் மாதா மாதம் காசு கிடைக்கும் என்றாலும் அது ஒரே அளவில் இருக்காது - கூடலாம் அல்லது குறையலாம் - பங்குச் சந்தையினைப் பொறுத்து! இப்படியிருக்க அந்த மனிதர் சொன்ன வாக்கியம் சரியா? நான் சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து வீடு திரும்பி வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.  ஆனாலும் இந்த வாக்கியங்கள் இன்னமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.....  


அவர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. நாம் கேட்கும் பல செய்திகள் அப்படித்தான் இருக்கின்றன.  ஓய்வு பெற்றவுடன் வரும் பணத்தினை எப்படியாவது பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பல வீடுகளில் பெற்ற பிள்ளைகள்/பெண்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு பெண்மணி தனது செல்லக் குழந்தைகள் அனைவரும்  காசு பிடுங்கிக் கொள்வதில் குறியாக இருக்கிறார்கள் என்று என்னிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அலைபேசியில் என்னிடம் பேசிய அவருக்கு என்ன சொல்வது என்று யோசித்து தான் பேசினேன். அப்படியே பணம் கொடுக்க வேண்டியிருந்தால் கூட, உங்கள் தேவைகளுக்காக ஒரு பகுதியை வைத்துக் கொண்டு கொடுங்கள். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள் - அது பெற்ற பிள்ளைகளாக/பெண்களாக இருந்தாலும் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது....


பணம் இல்லையெனில் மதிப்பில்லை என்று எனது உறவினர் ஒருவர் அடிக்கடிச் சொல்வார். என்னதான் பார்த்துப் பார்த்து அவருக்கு பணிவிடை செய்தாலும் அவருடைய பணத்திற்காகத் தான் எல்லோரும் அவரை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள் என்பது அவருடைய கணிப்பாக இருந்தது. இவை எல்லாமே இன்றைக்கு மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது...... 


யாரையும் நம்ப முடியாத அளவில் ஏன் இந்த சமூகம் மாறியிருக்கிறது?  கூட்டுக் குடும்பங்கள் எங்கே போயின? எல்லாம் தங்களைச் சுற்றி மட்டுமே ஏன் யோசிக்கிறார்கள் என்றெல்லாம் சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கிறது..... கேட்கும் வார்த்தைகள் பலதும் நம்மை  சிந்திக்க வைத்து விடுகிறது என்பதை மீண்டும் உணர வைத்தது இன்றைய வாக்கியம். பல சமயங்களில் இப்படி காதில் விழும் விஷயங்களை "ராஜா காது கழுதை காது" என்று ஒரு பகுதியாகவே எனது வலைப்பூவில் எழுதியது உண்டு. ஆனால் பெரும்பாலானவை நகைச்சுவை கலந்த விஷயங்கள்..... ஆனால் இப்படி சில சமயங்களில் சிந்தனைகளைத் தூண்டும் விதமாக அமைந்து விடுகிறது....... அந்த மனிதர் சொன்ன, என் காதில் விழுந்த வார்த்தைகள் குறித்த உங்கள் எண்ணம் என்ன? சொல்லுங்களேன்.....


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

2 டிசம்பர் 2025


1 கருத்து:

  1. பெண்ணை நம்பாதே ஆட்டோ வாசகம் போல இருந்தாலும் நிறைய இடங்களில் இது நடக்கிறதுதான். என்னுடன் வேலை பார்த்த சிலருக்கும், என் உறவிலேயே மாமனார் உட்பட சிலருக்கும் நடந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....