அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட நச்சுன்னு நறுக்குன்னு - வாசலிலே மல்லியப்பூ பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஜீம் பூம் பா - 21 டிசம்பர் 2025 :
ஞாயிறு என்பதால் இன்று சமையல் வேலையை கொஞ்சம் பொறுமையா செய்து கொள்ளலாமே என்று க்ளீனிங் வேலையைத் துவக்கினேன்! வாசல்கதவு, கிரில் கேட் முதல் எல்லாவற்றையும் டஸ்டரால் க்ளீன் செய்து கொண்டே வரும் போது அப்பாவின் நினைவு மனதில் எழுந்தது!
அப்பாவும் இப்படித்தான் வார விடுமுறை நாட்களில் அதிகாலையில் எழுந்து தன் உடைகளையும் என்னுடையது மற்றும் தம்பியுடைய உடைகளையும் சோப் பவுடரில் ஊறவைத்து விட்டு க்ளீனிங் வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்! சிறிது நேரத்திற்கு பின் ஊறிய துணிமணிகளை எல்லாம் துவைத்து போட்டு விட்டு குளித்து வெளியே கிளம்பி விடுவார்! நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்து விட்டு வருவார்!
அப்பா! இன்று அப்பாவின் சிரார்தம்(திவசம்) என்று நேற்று அலுவலக வேலையாக திருச்சிக்கு வந்திருந்த தம்பி சொன்னானே! ஆமாம்! மார்கழியாச்சே! இதைப் பற்றி என்னவரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, சரி! நான் ஒண்ணு பண்றேன்! குளிச்சிட்டு நானும் ரோஷியும் போய் ஒரு பத்து பேருக்கு அப்பா ஞாபகமா டிஃபன் வாங்கிக் குடுத்துட்டு வரோம்! சரியா! என்றார்! ம்ம்ம்! நல்ல விஷயம்! போய்ட்டு வாங்களேன்! அப்பாவும் சந்தோஷப்பட்டுப்பார்!
சிறிது நேரத்திற்குப் பின் வேலையின் நடுவே எதையோ நான் வீடு முழுவதும் தேடிக் கொண்டிருக்க, இருவரும் என்னவென்று விசாரித்ததில் க்ளீன் செய்து கொண்டிருந்த டஸ்டரை எங்கே வைத்தேன் என்றே தெரியவில்லை! என்றேன்!
அடைசல் இல்லாத வீடு! எங்கே என்ன இருக்கிறது என்று பளிச்சென்று தெரியும் விதமாகத் தான் இருக்கும் என்றாலும் இன்று ஏனோ கண்ணுக்கு சட்டென்று புலப்படவே இல்லை…:) என்னுடைய குழப்பத்தைப் பார்த்து இருவருமே எனக்காக எங்கெங்கோ தேடினார்கள்! ம்ம்ம்ஹூம்..🙂
சிறிது நேரத்திற்குப் பின் மகள் தான் கிச்சன் காபினெட் ஒன்றிற்குள் நான் டஸ்டரை வைத்து மூடி வைத்திருந்ததாக எடுத்துத் தந்தாள்…:) அங்கே எதுக்குப் போனேன்??? ம்ம்ம்! கிடாரங்காய் ஊறுகாய் போட ஜாடி எடுத்த போது கையில் அப்போது வைத்திருந்த டஸ்டரை ஷெல்ஃபில் பத்திரமாக வைத்து மூடிவிட்டு வீடே தேடியிருக்கிறேன்..🙂
மனதில் சிந்தனைகள் அடுக்கடுக்காக பதிகின்ற போது இப்படித்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல் ஜீம் பூம் பா என்றாகி விடும் போல…:) ஹா..ஹா..ஹா.. இன்றைய நாள் இப்படி..🙂
மாலைநேரத்து ஸ்நாக்ஸாக இன்று சந்தையில் வாங்கிய ஸ்வீட்கார்னை பால்ஸாக செய்திருந்தேன்!
******
கடந்து வந்த பாதை - 2025 - 23-12-2025:
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்று அறுசுவைகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும்! எந்த சுவையின் விகிதம் கூடுதலாக இருக்கிறதோ அதுக்கேற்றப் போல் நம் நாவின் சுவைநரம்புகளும் ஏன் நம் மனதும் கூட மாறுபடும்! இது உண்மை தானே!
நம் வாழ்விலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு என்பது போல ஏற்றங்களும், இறக்கங்களும் என மாறிக் கொண்டே தான் இருக்கும்! உணவின் சுவையைப் போல எதன் விகிதம் இங்கு கூடுதலாக இருக்கிறதோ அதை வைத்து இந்த வருடம் இப்படித்தான் இருந்தது என்று நாம் எல்லோரிடமும் சொல்லிக் கொள்வோம்!
எங்கள் வாழ்வும் இந்த 2025ல் ஏற்றம், இறக்கம், இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறது! சென்ற வருடத்தின் இறுதியில் மாமனாரை இழந்தேன் என்றால் சற்றும் எதிர்பாராத சூழலாக அடுத்த பத்து மாதங்களுக்குள் மாமியாரையும் இழந்து விட்டேன்! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவிதத்தில் இருவரையும் எங்கள் பேச்சிலும், செய்யும் செயலிலும் நினைவில் கொள்வதுண்டு!
பதினான்கு வருட வனவாசத்துக்குப் பின் பகவான் ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பியதைப் போல என் கணவர் வெங்கட்ராமனும் பணியில் மாற்றம் கண்டு 14 வருடங்களுக்குப் பின் தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்! அன்று அயோத்தியில் உள்ள மக்கள் ராமன் திரும்பியதை ஆரவாரத்தோடு இதை பெரும் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனராம்! அதைப் போல மகளும் நானும் கூட துள்ளி குதித்து எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம் என்று சொன்னால் அது மிகையாகாது!
இந்த வருடத்தில் மனதிற்கினிய நிகழ்வாக 25 வருடங்களுக்குப் பிறகு என் கல்லூரிக்குச் சென்றதும் அங்கே கல்லூரியில் உடன் பயின்ற நண்பர்களையும், பேராசிரியர்களையும் சந்தித்து மகிழ்ந்ததையும், அன்றைய நாளை மிகவும் இனிமையாக செலவிட்டதையும் சொல்வேன்! இதைப் பற்றி ‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்!’ என்று தொடராகவும் எழுதி இங்கு பகிர்ந்திருந்தேன்!
அடுத்து பதிவர் அமுதாக்காவின் அன்பு உபசரிப்பில் குளுகுளு கோத்தகிரியில் எங்கள் நேரத்தை இனிமையாக செலவிட்டதும் சொல்லலாம்! இதைப் பற்றியும் ‘குளுகுளு போகலாமா!’ என்று 30 பகுதிகளில் தொடராகவும் எழுதியிருக்கிறேன்! பெற்றோரின் மறைவுக்குப் பின் கோவையோடு இருந்த பிணைப்பு என்பது அரிதாகி விட்ட நிலையில் இந்த வருடம் கல்லூரி சந்திப்பு, கோத்தகிரி பயணம் என்று காரணங்களை வைத்துக் கொண்டு என் இனிய கோவைக்கு அடுத்தடுத்து இருமுறை பயணம் செய்துவிட்டேன்!
இந்த 40+ல் அவ்வப்போது தலையெடுக்கும் உடல் உபாதைகளை மனதில் வைத்து இந்த வருடம் தான் Intermittent fastingஐ துவக்கினேன்! சில மாதங்களாகவே 14 மணிநேர fastingஐ இடைவிடாமல் கடைபிடித்தும் வருகிறேன்! இதனால் உடலிலும் சரி! மனதிலும் சரி! நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது! ஆரோக்கியமான முறையில் எடையும் குறைந்திருக்கிறது! Hypertension, sugar level எல்லாமும் கூட குறைந்திருக்கிறது! புத்துணர்வுடனும் செயல்பட முடிகிறது!
இந்த வருடத்திலும் சமஸ்கிருதத்தோடு ஏற்பட்டிருக்கும் பந்தத்தில் இரண்டு தேர்வுகள் எழுதி அதில் நல்ல முறையில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்! இன்னமும் நான் மாணவியாக இருப்பதில் முதலில் மகிழ்வு கொள்கிறேன்! கற்றல் என்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை என்னுடன் பயிலும் 80+ வயதிலும் ஆர்வத்துடன் பயிலும் மாணவியைப் பார்க்கும் போது உணர முடிகிறது!
இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் நம்முடையது என்பதால் இயற்கைக்கு விரோதமாக செயல்படா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்! சில வருடங்களாகவே மண்பாத்திரங்களில் தான் சமையல் என்பதும், Minimalism என்பதை எப்போதுமே மனதில் இருத்திக் கொள்வதையும் கடைபிடித்து வருகிறேன்!
பிறக்கப் போகும் புத்தாண்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் எங்கும் பல்கி பெருகட்டும்! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
24 டிசம்பர் 2025




இனி வரும் காலங்கள் இனிதானவையாகவே இருக்கட்டும்.
பதிலளிநீக்குகீதா அக்கா வந்து படித்தால் சிறு திருத்தம் ஒன்று சொல்வார். சிரார்த்தம் என்று சொல்லக் கூடாது. ஸ்ராத்தம் என்று சொல்ல வேண்டும் என்பார். அதாவது 'ர்' வரக்கூடாது!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. எப்போதும் போல கதம்பம் மணம் வீசுகிறது. உங்கள் அப்பாவின் நினைவு நாளை மறக்காமல் பிறருக்கு சாப்பாடு வாங்கித் தந்து உதவியது மிக்க மகிழ்ச்சி. அப்பா, அம்மா நினைவுகள் என்பது என்றுமே நம் மனதோடு பிணைக்கப்பட்டவைதான். .
அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் சில நேரங்களில் நம்மிடமிருந்து தப்பித்துக் கொள்ளும். அதை மீண்டும் கண்டெடுக்கும் போது நமக்குண்டான ஆனந்தத்தை அதுவும் உணரும் என நினைக்கிறேன்.
இவ் வருடத்திய மகிழ்வு தரும் விஷயங்களை நினைத்து சந்தோஷபடுங்கள். துன்பமும் இன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை. தங்களின் மாமனார், மாமியார் இருவரையும் நீங்கள் எவ்வளவு நேசித்து வந்தீர்கள் என்பதை அறிவேன். இவ்விஷயத்தில் என் பாராட்டுக்கள் உங்களுக்குண்டு.
இனி வரும் காலங்கள் தோறும் நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மனதில்பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும் போது இந்த மறதி எனக்கும் அவ்வப்போது ஏற்படுகிறது.
பதிலளிநீக்குஇனி வரும் காலம் இனிமையாக இருக்கட்டும்...எல்லோருக்கும்
கீதா