அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
புகைப்படச் சுருள் - 30 டிசம்பர் 2025 :
நீங்கள் முதன்முதலில் வாங்கிய புகைப்படக் கருவியைப் பற்றிய ஒரு நினைவை படம் பிடித்துக் காட்டுங்கள் என்று அன்புத்தோழி ஜெயா சிங்காரவேலு எழுதிப் பகிர்ந்த அழகிய பகிர்வைப் பார்த்தவுடன் சட்டென்று நானும் ஒரு நினைவுச் சுருளுக்குள் சென்று வந்த உணர்வை ஊட்டியது! அது தான் எழுத்துக்கு உள்ள ஆளுமைத் திறன்.❤️
இன்று எளிமையாக கிடைக்கும் விஷயங்கள் அனைத்தும் அன்று எட்டாக்கனியாக இருந்த நடுத்தரக் குடும்பத்தில் நாங்கள் இருவருமே வளர்ந்திருந்ததால், புகைப்படக் கருவி என்பதை முதன்முதலில் எங்களுக்காக நாங்கள் வாங்கிக் கொண்டது என்றால் அது எங்கள் மகள் பிறந்த பிறகு தான் என்று சொல்வேன்!
2005ஆம் வருடம் அப்போது கிழக்கு டெல்லியில் நாங்கள் வசித்த நேரம், அப்போது தான் சின்னஞ்சிறு பஞ்சுப் பொதியாய் பிறந்திருந்த எங்கள் செல்ல மகளின் சின்னஞ்சிறு விஷமங்களை விதம்விதமாக படம் பிடிக்கலாமே என்று தான் கேமிரா ஒன்றை ஆசையாக வாங்கினார் என்னவர்! அது Canon BF 800 மாடல்! அன்றைய கேமிராவில் கணக்கிட்டு பார்த்து பார்த்து தான் புகைப்படங்களை எடுக்க வேண்டும்!
ஒரு புகைப்படச் சுருளுக்கு 36 படங்களே எடுக்க முடியும்! முதலில் எல்லாம் நாங்கள் இருவரும் தான் மாற்றி மாற்றி எங்கள் மகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வோம்! நேரம் செட் செய்து விட்டு அதற்கு ஏற்றாற் போல் ஓடி வந்து எடுக்க துவங்கிய நினைவுகள் ஸ்வாரஸ்யம்! பின்பு மகள் வளர்ந்தது முதல் அவள் எங்கள் இருவரையும் க்யூட்டாக படம் பிடிக்கத் துவங்கினாள்!
மகள் ஒவ்வொரு கட்டமாக வளரத் துவங்கினது போல நாங்களும் வாழ்வில் மெல்ல மெல்ல மெருகேறத் துவங்கிய பின் டிஜிட்டல் கேமிரா, DSLR என்று பயன்படுத்தத் துவங்கினோம்! பின்பு திட்டமிடல் ஏதும் இல்லாமல் கணக்கில்லாமல் நிறைய நிறைய புகைப்படங்களை எடுக்கத் துவங்கினோம்..🙂 என்னவர் ஒரு பயணக்காதலன் என்பதால் தன்னுடைய பயண அனுபவங்களை எல்லாம் புகைப்படங்களில் பத்திரப்படுத்தத் துவங்கினார்!
நமக்கே நமக்காக சிறுகச் சிறுக பொருள் சேர்த்து வாங்கிப் பயன்படுத்தும் ஒரு பொருளுக்குள் தான் எத்தனை கதைகள் பொதிந்திருக்கின்றன! வாழ்வில் பின்னோக்கி நம்மை பயணிக்கச் செய்து நம்மை மகிழச் செய்யும் ஒரு கருவியாக இருக்கும் அழகிய புகைப்படங்களை உருவாக்கும் கேமிரா! நீங்களும் இப்படியொரு நினைவு சுருளுக்குள் உங்களை பிணைத்துக் கொண்டு மகிழுங்களேன்.
******
Roshni Corner - Doodle Art:
Doodle Art - மகளின் கைவண்ணத்தில்… பாருங்களேன்.
******
கனவுகள்:
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
31 டிசம்பர் 2025




எங்கள் அப்பா மிக நன்றாக புகைப்படம் எடுப்பார். அவரிடம் இரண்டு காமிராக்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஏரி ஃப்லெக்ஸ். தானே புகைபடங்களை வாஷ் பண்ணிடெவலப் பண்ணுவார். ரொம்ப காஸ்ட்லி ஹாபி என்றதால் காமிராவை கொடுத்து விட்டார். அஎன் அண்ணா மஸ்கட் சென்றதும் மினோல்டா காமிரா வாங்கினான்(ர்). நான் மஸ்கட் சென்ற புதிதில் யாஷிகா காமிரா வாங்கினோம். அங்கு தமிழ்ச் சங்கம் நடத்திய ஜோக் போட்டியில் எனக்கு முதல் பரிசாக ஒரு காமிரா கிடைத்தது. அதன் பிறகு நிறைய டிஜிட்டல் காமிராக்கள் வாங்கி விட்டோம். செல் ஃபோன் வந்த பிறகு காமிராக்களுக்கு என்ன தேவை? வீட்டில் இருக்கும் யாஷிகா காமிராவையும், சோனி வீடியோ காமிராவையும் என்ன செய்வது என்று தெரியவில்லை. மகனிடம் my son has a DSLR camera, but he hardly uses that.
பதிலளிநீக்குPrevious comment is mine.
பதிலளிநீக்குBhanumathy Venkateswaran
புகைப்படக் கருவி என்பதை முதன்முதலில் எங்களுக்காக நாங்கள் வாங்கிக் கொண்டது என்றால்//
பதிலளிநீக்குஇதுவரை எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. குடும்பத்தில் யாரேனும் பயன்படுத்தியோ இல்லை பயன்படுத்தாமல் சும்மா கிடந்ததையோ கொடுப்பார்கள்! வழக்கமாக எனக்கு சுயமரியாதை ரொம்பவே தலைதூக்கும்! அதுவும் பிரச்சனை ஏற்படுத்தும் அளவிற்கு!!!! ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏனோ தலை தூக்காது. வாங்கிக் கொண்டுவிடுவேன். அப்படித்தான் படங்கள் எடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
அப்படி முதன் முதலில் வந்த ஒரு புகைப்படக்கருவி இப்படிய்ச் சுருள் போடும் ஒன்று.
இப்போதுதான் ஒரு கேமரா பெரிய லெவல் எல்லாம் இல்லாமல் நமக்கான பட்ஜெட்டில் ஒன்று வாங்க வேண்டும் என்று வீட்டில் சொல்லியிருக்கிறேன். ஆனால் எப்போது வாங்குவோம் என்று தெரியவில்லை.
புகைப்படக்கருவி மீதும் கூடவே புத்தகம் மீதும் அப்படியான காதல். ஆனால் புத்தகமேனும் நான் ஒன்றோ இரண்டோ வாங்கியிருக்கிறேன். பெரும்பாலும் யாரேனும் தருவதுதான். அப்படி சமீபத்தில் எனக்கு ஒரு புத்தகம் (பெரிய விலை என்னைப் பொருத்தவரை) அன்பளிப்பாகக் கிடைத்தது. அங்கும் என் சுயமரியாதை தலைதூக்கியது. ஆனால் பிரச்சனை ஆகிவிடக் கூடாதே என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல். இப்படியான தருணங்களில் Embarrassing ஆக உணர்வேன்.
கீதா
நல்ல நினைவுகள். எனக்கும் என் நினைவுகளைத் தூண்டி விட்டது உங்கள் எழுத்து. கேமிரா வாங்குவது அனைவருக்குமே ஒரு ஆசையாக, கனவாக இருக்கும். நானும் இரண்டு மூன்று கேமிராக்கள்வாங்கி அவை இப்போது தூங்குகின்றன. முதன்முதலில் டிஜிட்டல் கேமிரா ஒன்று நண்பரிடம் இரவல் வாங்கி நாற்காலி, Fan டம்ளர் என்று ஒன்று விடாமல் புகைப்படமெடுத்தது நினைவில் இருக்கிறது. நானாக திருப்பிக் கொடுக்கும் வரை பொறுமையாக என்னிடம் என் நண்பர் கேமிராவை விட்டு வைத்திருந்தார். அப்போது அது புதிது அல்லவா.. நண்பரையும் மறக்க முடியாது!
பதிலளிநீக்குரோஷ்ணியின் ஆர்ட் அருமை. கண்களைக் கவர்கிறது. உங்கள் கவிதையும் அருமை. அதை வெளியிட்டிருக்கும் விதமும் அருமை. நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்!
பதிலளிநீக்கு