அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட தில்லி போல வராது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாசிப்பு என்பது மிக நல்லதொரு பொழுதுபோக்கு. அதனுடன் நமக்குக் கிடைக்கும் தகவல்களும் நல்ல விஷயம். தில்லியில் தனிமையில் இருந்தபோது எனக்குக் கிடைக்கும் நேரத்தினை ஊர் சுற்றுவது, வாசிப்பது என பல விதங்களிலும் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். இணைய வழி நிறைய நூல்கள் வாசிக்கக் கிடைத்தாலும், அச்சுப் புத்தகங்கள் படிக்க அங்கே குறைவாகவே வாய்ப்பு. தமிழகம் வந்த பிறகு நேரம் எடுத்து, நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வந்து, வீட்டில் இருக்கும் படிக்காத புத்தகங்கள் எடுத்து, நிறைய வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனாலும் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? சோம்பேறித்தனமும் கூடவே ஒட்டிக்கொண்டு விடுகிறது. ஒரு சில நாட்கள் எதுவுமே செய்யாமல் சும்மா இரு மனமே என்று இருந்து விடுகிறேன். அலுவலகம் செல்வது, வீடு திரும்புவது தவிர பெரிதாக ஒன்றுமே செய்வதில்லை. ஆனாலும் சில நாட்கள் திடீரென பழைய நினைவுகள் திரும்ப, நூல்களை எடுத்துப் படிக்கத் தோன்றும். அப்படி சமீபத்தில் ஒரு நாள் அதிகாலை விழிப்பு வர, எழுந்து பல் துலக்கி, ஒரு காஃபி போட்டு (நானே தான்!) அதனை அருந்தியபடி, நூல்கள் அடுக்கி வைத்திருக்கும் இடத்திலிருந்து எடுத்து வாசித்த ஒரு நூல் - கிருஷ்ண தாசி!
இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய ஒரு சிறந்த புத்தகம். வானதி பதிப்பகத்தின் வெளியீடு! பத்து வருடங்களுக்கு முன்னர் திருமண நாள் ஒன்றில் இல்லாளுக்கு பரிசளித்த சில இந்திரா சௌந்தர்ராஜன் நூல்களில் இதுவும் ஒன்று என்பதை முன் பக்கத்தில் நான் கையொப்பமிட்டு தந்த செய்தி சொல்கிறது! திருமண நாளில் புத்தகப் பரிசு - ஹாஹா…. ஆனாலும் இவ்வளவு கஞ்சனாக இருக்கக் கூடாது என்று உள்மனது சொல்கிறது! ஆனால் எனக்கல்லவா தெரியும், புத்தகம் அவள் ஆசைப்பட்டுக் கேட்டது என்று! அதனால் கேட்டதைத் தந்திருக்கிறேன் என்று தற்பெருமை தக்காளியாக மாறிவிட வேண்டியது தான்! பொதுவாக இந்திரா சௌந்தர்ராஜன் என்றால் அமானுஷ்யம், தெய்வீகம் என இருக்கும். ஆனால் கிருஷ்ண தாசி அப்படியான கதை அல்ல. விதி வசத்தால் தாசி என்ற பெயர் பெற்ற, அந்த பெயருக்கான ஒரு விஷயமும் செய்யாத ஒரு நல்ல பெண்ணும், அவர்களைச் சுற்றிய விஷயங்களும் கொண்ட அற்புதமான கதை.
இந்த உலகம் எப்படியெல்லாம் இது போன்றவர்களை புண்படுத்துகிறது, எல்லாவற்றிலும் இருக்கும் Generalisation - தாசி என்றால் இப்படித்தான் என்று பொதுவாகச் சொல்லிவிடுவது, அவர்களுக்கும் மனது என ஒன்று உண்டு என்பதை உணர்ந்து கொள்ளாமல், அவளும் சக மனுஷி தானே என்ற எண்ணமே இல்லாமல் புண்படும்படியாக நடந்து கொள்வது என இப்படித்தானே இருக்கிறது இந்த சமூகம். ஆண் குழந்தைக்காகவே விதம் விதமாக பிரார்த்தனைகள் செய்வது, அடுத்துப் பிறக்கப் போகும் ஏழாவது குழந்தை ஆணாக இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லும் பெண்மணி, அப்படி ஆணாக இருக்காவிட்டால் நான் செய்யும் ஆன்மீக உபந்யாசங்களை மூட்டை கட்டி வைத்து விடுவேன் என்று சொல்லும் அந்தப் பெண்மணியின் கணவர், இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கும் அப்பெண்ணின் தம்பி, பெண்ணாசையும் மண்ணாசையும் கொண்ட நபர் என பிரதான கதாபாத்திரங்கள். இவர்களுடன் கதை நாயகனும், நாயகியும்.
ஒரு தாசியின் குடும்பத்தில் பிறந்து விட்டாலே அப்பெண்ணும் தாசியாகவே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் என ஆகிவிட்ட கொடுமை. அதனை நமக்கு உணர்த்தும் விதமாக இந்த வரிகள் - ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் நீராட வரும் போது, உள்ளூர் மக்கள் பேசும் பேச்சைக் கேட்ட தாசியாக்கப்பட்ட பெண்ணின் நிலை சொல்லும் இந்த வரிகள் - “அவளுக்குள் காவிரியின் பெருக்கைவிட, அதிகமான சலனப் பெருக்கு. மீன்கள் காலைக் கடிக்கத் தொடங்கி விட்டன. வெளியில் மனித உதடுகள்”. தாசியின் மகளாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக, அப்படியெல்லாம் என்னால் தாசியாக இருக்க முடியாது எனப் போராடும் கதையின் நாயகி, அப்படியான பெண்ணுக்கு உதவி செய்யும் கதையின் நாயகன் என நிறைய முடிச்சுகள். அவர்கள் வாழ்வில் இருக்கும் ஒரு ரகசியம். மூவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என நினைத்திருந்தது எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் சிலருக்கும் தெரிந்தது, அப்படித் தெரிந்தும் அதனை சுயநலத்துடன் வெளிக்காட்டாத மனிதர் ஒருவர், அதனை பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் ஒருவர் என கதை முழுவதும் ஸ்வாரஸ்யத்திற்குக் குறைவில்லை. முடிவு நல்லதாகவே இருந்ததா இல்லையா என்பதை நூலை வாங்கிப் படிக்கலாமே!
கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆரம்பிக்கும் போது ஒரு சிறப்பான கவிதையுடன் ஆரம்பித்து இருக்கிறார் கதாசிரியர். அப்படி அவர் கையாண்ட கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதை கீழே!
பஞ்சுப் பொதிகளைப் பத்திரப்படுத்திக்
கொண்டிருக்கிறது அணில்.
கந்தல் துணிகளைக் கண்டால்,
விட மறுக்கிறது காகம்.
சணல் பிரிகளைத் தூக்கிவந்து
ஒரு பந்தாக்கிவிட்டது சிட்டுக்குருவி.
இடம் தேடிக்கொண்டிருக்கிறது
எங்கள் வீட்டுப் பூனை… (குட்டி போட).
ஆஸ்பத்திரி வாசலில் மட்டும்
அபார்ஷனுக்காக வரிசையில்
அன்பே உருவான அம்மாக்கள்!
மறுபடியும் நூலில் - பத்மாவதி தாயுமானவன்
காவிரி மற்றும் மனித வயிறு குறித்த எண்ணச் சிதறல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதையும் இங்கே பார்க்கலாம்.
“அவனறிய காவிரி மாறவேயில்லை.
ஆடியில் வெள்ளப் பிரவாகம்; சித்திரை வைகாசியில் அடங்கி ஒடுங்கிய ஓட்டம். ஐப்பசி, கார்த்திகையில் ஸ்படிக ரூபம் - பிரபஞ்ச நலனை உத்தேசித்து அவள் அயராமல் ஒரு நாள் ஓய்வின்றி ஆடிக்கொண்டேயிருக்கிறாள்! அவள் மட்டுமா? நட்ட விதைக்குப் பழுதின்றி முளைத்துவிட்ட எந்த மரம், பழம் கொடுக்கவோ, நிழல் கொடுக்கவோ தவறியிருக்கிறது? …..
ஆனால் மனிதன்? ….
அரைச் சாண் வயிற்றைப் பார்க்கிறான். ஒட்டிப் பிறந்து விட்ட உபாதை! பிறந்தது முதல் இறப்பது வரை பிய்த்தெறிய முடியாதபடி ஒட்டிக் கிடக்கும் அந்தப் பகுதியில் உணவிட்டு நிரப்பாவிட்டால், தன்னை சுமப்பவனையே அது உண்டு இல்லை என்றாக்கிவிடுவதை எண்ணிப் பார்த்தான். இந்த நிரந்தரமான எதிரியை விடவா, உலகில் வேறு எதிரிகள் இருக்க முடியும்?”
இப்படி எடுத்துக் காட்ட நிறைய பகுதிகள் உண்டு என்றாலும் அத்தனையும் இங்கே சொல்லப் போவதில்லை. முடிந்தால் வானதி பதிப்பகத்தின் வெளியீடான இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ”கிருஷ்ண தாசி” நூலை வாங்கிப் படிக்கலாமே. நான் வாங்கிய, 2013-இல் வெளியான, நான்காம் பதிப்பின் விலை ரூபாய் 90/- மட்டும். இணையத்திலும் இந்த நூல் கிடைக்கலாம். முடிந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள் நண்பர்களே… மீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
1 டிசம்பர் 2025


புத்தகம் படிப்பது தொடர்பான உங்கள் பழக்கங்கள்தான் எனக்கும். கண்களும் களைப்படைந்து விடுகின்றன.
பதிலளிநீக்குநல்லதொரு புத்தக அறிமுகம். இ சௌ சுவாரஸ்யமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர். கட்டாயம் சுவாரஸ்யமாக இருக்கும்.
பதிலளிநீக்கு