அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சிறுகதை - மௌனத்தின் குரல் - வாசந்தி - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்த மாத ஆரம்பத்தில் ஒரு நாள் பயணமாக நெய்வேலி நகரம் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் குறித்த இரண்டு பதிவுகளை - பேருந்துப் பயணத்தில் என்ற பதிவும், நீங்காத நினைவுகள் என்ற பதிவும் இங்கே எழுதியிருக்கிறேன். அந்த வரிசையில் இதோ இன்றைக்கு மூன்றாம் பதிவு.
மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பது எப்போதும் நாம் சொல்லும் விஷயம். எல்லா விஷயங்களுமே என்றைக்காவது ஒரு நாள் மாறியே தீரும். நன்றாக இருந்த ஒரு குடும்பம் மொத்தமாக அனைத்தையும் இழந்து வேதனையில் வாடுவதும், கஷ்டப்பட்ட ஒரு குடும்பம் வாழ்க்கையில் மேலான நிலை அடைந்து சிறப்புகளைப் பெறுவதும் அப்படியான மாற்றங்களே. இதைப் போலவே நகரங்களும் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன. இன்றைக்கு பார்க்க ஒரு விதத்தில் இருக்கும் நகரம், சில வருடங்களில் மாறித்தான் போகின்றன. அந்த நகரத்தைப் பற்றிய நமது நினைவுகள், மீண்டும் ஒரு முறை அங்கே சில வருடங்களுக்குப் பின்னர் செல்லும் போது, நினைவுகள் மொத்தமாக அழிந்து போகக் கூட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு மொத்த கட்டமைப்பே மாறியிருக்கிறது. அப்படித்தான் என் நினைவிலிருக்கும் நெய்வேலி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் மொத்தமாக மாறியிருக்கிறது.
நண்பர் குமார் வீட்டிலிருந்து புறப்பட்ட நாங்கள் நேரடியாகச் சென்றது வடலூர் பன்ரூட்டி சாலையில் உள்ள ஒரு உணவகம். பெயர் Archana Garden Restaurant. எனக்குத் தெரிந்த, அந்த நாளின் வடலூர்-பன்ரூட்டி (சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை) சாலையில் இப்படியான உணவகம் இல்லை. இரண்டு பக்கங்களிலும் முந்திரி தோப்புகள் தான் இருந்தது. ஏதோ ஒன்றோ அல்லது இரண்டோ தேநீர் கடைகள் மட்டுமே இருக்கும். தொடர்ந்து செல்லச் செல்ல, இரண்டு பக்கங்களிலும் முந்திரி தோப்புகள் மட்டுமே. ஒரு சில இடங்களில் முந்திரி பருப்பு விற்கும் கடைகளும் இருந்தன. நெல்லிக்குப்பம், பன்ரூட்டி போன்ற இடங்களில் கடைகள் உண்டு. ஆனால் பெரும்பாலும் முந்திரி தோப்புகள் தான். ஆனால் இப்போது அப்படி ஒரு மாற்றம். பெரும்பாலான முந்திரி தோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன/அழிந்துவிட்டன. பெரிய சாலை - ஆனால் பல வருடங்களாகவே பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்பதால் நிறைய குழப்பங்கள் என்று நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஏற்படும் சாலை விபத்துகளும் அதிகம் என்றும் கேள்விப்பட்டேன்.
நம் நினைவில் இருந்த காட்சிகள் மாறி, மாற்றங்கள் அதிக அளவில் நடந்தால் ஏனோ நமக்குப் பிடிப்பதே இல்லை. வளர்ச்சி என்றாலும் அடியோடு மாறிய இடங்கள் ஏனோ பிடிப்பதே இல்லை. இது பொதுவான விஷயம் தான் என்றாலும், எனக்கு ஏனோ எனது நினைவில் நின்ற நெய்வேலி நகரை இழந்தது போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வு இன்னும் அதிகமாக ஆகும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. இப்படியே காட்சிகளைக் கவனித்தபடியே நாங்கள் சென்று சேர்ந்தது அர்ச்சனா கார்டன் என்கிற உணவகம். உணவகம் அமைந்திருக்கும் இடம் அழகான தோட்டம், ஊஞ்சல்கள், பெரிய வெண்கல நடராஜர் சிலை, வாயிலில் இருக்கும் இரண்டு வெண்கல சிங்கங்கள் சிலை என மிகவும் அழகாகவே இருக்கிறது. சைவ உணவகம் தான். நண்பர் முரளி அவ்வப்போது இங்கே வந்து செல்வது வழக்கம் என்றதோடு அங்கே கிடைக்கும் சிறப்பு உணவுகள் குறித்தும் சொல்லிக் கொண்டு வந்தார். மதியம் தான் நான் சாப்பிட்டேன் என்பதால் உணவு சாப்பிடத் தோன்றவில்லை. ஆனாலும் நண்பர்கள் சாப்பிட்டு நேரம் ஆனதால் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டோம். இங்கே Mushroom Sizzler நன்றாக இருக்கும் என்று சொல்லி அதையும் வேறொரு உணவும் சொன்னார் நண்பர். நான் முதன் முறையாக மஷ்ரூம் சாப்பிட்டேன்! 🙂
உணவகத்தில் உணவருந்தியபடியே எங்களது நினைவுகளையும், நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்களுடனான அனுபவங்களையும் அளவளாவபடியே சில நிமிடங்கள் அங்கே கழிந்தன. அங்கிருந்து ஒரு தோழி வடலூர் நோக்கி புறப்பட, நானும் மற்ற இருவரும் நெய்வேலி நகரம் நோக்கி புறப்பட்டோம். வழியில் பார்த்த காட்சிகள், அங்கே கிடைத்த அனுபவங்கள் போன்றவற்றை பிறிதொரு பதிவில் எழுதுகிறேன். மாற்றங்கள் எத்தனை வந்தாலும், நம் மனதில் இருக்கும் நினைவுகள் என்றைக்கும் மாறாமல் இருக்கட்டும் என்று நினைத்தபடியே பயணித்தேன். தொடர்ந்து சந்திப்போம்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
16 டிசம்பர் 2025






மிகச்சில வருடங்களுக்கு முன்னால் கூட இந்த சென்னை கும்பகோணம் சாலை குறுகலாகவும் கடைகள் இன்றியும் இருக்கும். சென்று வரவும் மிகவும் தாமதமாகும். ஆனால் இப்போது சாலைகள் மிக அகலப்படுத்தப்பட்டு இரட்டை வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. சென்று வர வசதியாகவே இருக்கிறது. ஆனால் அதில் இயற்கையை அழித்திருக்கிறார்கள் என்று படிக்கும்போது மனம் வலிக்கிறது. இரண்டு வீடியோக்களும் வரவில்லை.
பதிலளிநீக்குவீடியோ இப்பொழுது வருகிறதா என்று பாருங்கள். YouTube வழி பதிவேற்றம் செய்து இருக்கிறேன்.
நீக்குYes. இரண்டு வீடியோக்களும் இப்போது வருகின்றன... பார்த்து ரசித்தேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. நெய்வேலி பயணம் குறித்த தகவல்கள் படித்தேன். பல வருடங்கள் கழிந்த பின் முன்பு சென்ற அவ்வூரின மாற்றங்கள் பார்க்கவே வித்தியாசமாகத்தான் இருக்கும். பழையனவற்றை அப்படியே வைத்திருக்கலாதா என நம் மனம் ஏங்குவதும் உண்மை. ஆனால், மாறுவதும், மாற்றுவதும் மனிதரின் இயல்பல்லவா..! படங்கள் காணொளிகள் கண்டேன். மீனின் படங்கள் காணொளி நன்றாக உள்ளது.
உங்கள் நண்பரின் பிரிவும் அதன் வேதனையையும் படித்தேன். மனம் கனத்தது. அவரின் உறவுகளுக்கு நீங்கள் அனைவரும் சென்று ஆறுதல் அளித்தது நல்ல செயல். எங்கிருந்தாலும் அவரின் ஆத்மாவும் ஆறுதலடையும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குமுந்திரி தோப்புக்கள் அழிக்கப்பட்டு அங்கு ஓட்டல் வந்து இருப்பது வருத்தம் தான்.
பழைய மாதிரி ஊர் இருக்காது மாற்றம் நிறைய ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்தேன், அது போலவே நிறைய மாற்றங்களை பார்த்து விட்டீர்கள்.
உணவகம் அழகாய் இருக்கிறது.
காணொளிகள் நன்றாக இருக்கிறது.
இரண்டு பக்கங்களிலும் முந்திரி தோப்புகள் தான் இருந்தது. //
பதிலளிநீக்குஆமாம் ஜி! இந்த வழியாக நிறைய பயணித்திருக்கிறேன். நிறைய முந்திரி, பலா மரங்களும் இடையில் ....அது போல நெய்வேலிக்கும்.
ஆனால் இப்போது அப்படி ஒரு மாற்றம். பெரும்பாலான முந்திரி தோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன/அழிந்துவிட்டன//
மனம் ரொம்பவே வேதனைப்படுகிறது. எவ்வளவு பயணித்திருக்கிறேன் அச்சாலைகளில். பாண்டிச்சேரியில் இருந்த சமயம் அது.
மேம்பாலங்கள், இரண்டுவழி நான்கு வழிச் சாலைகள் போடுவது வேகமாகச் செல்லப் பயன்பட்டாலும், இயற்கையை அழிக்காமல் செய்வதில்லை என்பதுதான் வேதனை.
கீதா
வீடியோ காலையிலேயே வந்துவிட்டது எனக்கு.
பதிலளிநீக்குஆனால் இப்பதான் பார்த்தேன் ஜி.
நெய்வேலிக்கு நான் ஒரு சில முறைகள் சென்றிருக்கிறேன் ஜி. குறிப்பாக டவுன்ஷிப். அந்த இடமே அவ்வளவு அழகாக இருக்கும் ஒவ்வொரு வீட்டின் பின் புறமும் தென்னை பலா (கண்டிப்பாக) மா என்று இருக்கும். பார்க்கவே பசுமையாக இருக்கும். அது ஆச்சு 15 வருஷங்கள் +
நகர்வலம் வந்ததில்லை அவ்வளவாக. நகர் எல்லாம் பேருந்தில் போகும் போது பார்த்ததுதான். நினைவில் இருப்பது டவுன்ஷிப்.
மீன்கள் திரும்புவது செம அழகா இருக்கும் ஜி. எங்க ஊர்க்குளத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். பாத்துக் கொண்டே இருந்த நாட்கள் உண்டு. சில சமயம் வெயில் படும் போது உடல் வெள்ளி போன்று பள பளப்பாகத் தெரியும் நீருக்குள்!
மீன் தொட்டி மீன்கள் அழகாக இருக்கின்றன. வகைவகையான மீன்கள். உணவகமும் அழகு, இப்படியான உணவகங்கள் நிறைய ஆங்காங்கே வருகின்றன. இப்போதெல்லாம் கல்யாணங்கள் ரெசார்ட்டில்தானே நடக்கின்றன! இப்படித்தான் இருக்கின்றன பெரும்பாலும்.
கீதா