அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் - நடை நல்லது - நடைபாதை கடைகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்த மாத ஆரம்பத்தில் ஒரு நாள் பயணமாக நெய்வேலி நகரம் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் குறித்த மூன்று பதிவுகளை - பேருந்துப் பயணத்தில், நீங்காத நினைவுகள் மற்றும் மாற்றங்கள் மட்டுமே மாறாதது என மூன்று பதிவுகள் இங்கே எழுதியிருக்கிறேன். அந்த வரிசையில் இதோ இன்றைக்கு நான்காம் பதிவு.
உணவகத்திலிருந்து புறப்பட்டதும் நாங்கள் நெய்வேலி நகரினுள் நுழைவதற்கான நுழைவாயில் வழி சென்றோம். இந்த இடத்தில் எங்கள் மனதில் பதிந்து இருந்தது வேறு ஒரு நுழைவாயில். ஆனால் ஒன்றிரு வருடங்களுக்கு முன்னர் அந்த நுழைவாயிலை இடித்து வேறு வடிவில் புதிதாக அமைத்திருக்கிறார்கள். முந்தைய நுழைவாயில், சாதாரண வடிவில் இருக்க, இப்போது ஏதோ டிசைனர் வடிவமைத்தது போல இருக்கிறது. பழைய நுழைவாயில் மனதில் பதிந்த அளவுக்கு இந்த நுழைவாயில் இன்னும் பதியவில்லை. படங்களில் இப்போதைய நுழைவாயிலை பார்த்திருந்தாலும் இந்தப் பயணத்தில் தான் முதல் முறையாக பார்க்கிறேன். முதல் முறையாக பார்த்தாலும் இந்த நுழைவாயில் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. மாலை நேரங்களில் ஒளிவிளக்கில் ஒளிர்வதுடன் நீரூற்று அமைப்புகளும் இருக்கும் என்று தோழி சொல்லிக் கொண்டு வந்தார். நாங்கள் சென்றது மாலை 04 மணி அளவில் என்பதால் இந்த அமைப்புகளை நான் பார்க்கவில்லை.
நுழைவாயிலில் நுழைந்து உள்ளே செல்லச் செல்ல பழைய நினைவுகள். அப்பா அந்தப் பகுதியிலிருந்த ஒரு அலுவலகத்தில் தான் பல வருடங்கள் பணி புரிந்தார். அங்கே அலுவலக வளாகத்தின் அருகிலேயே முந்திரி தோப்புகள் இருக்கும். மதிய உணவு கொண்டு போன டிஃபன் பாக்ஸில் முந்திரிப் பழங்களை போட்டு எடுத்து வருவார் அப்பா. அதன் சுவை பிடிக்கும் என்றாலும் அதிகம் சாப்பிட முடியாது. அதைப் போலவே சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் தொண்டைக் கட்டிக்கொள்ளும் - கரகரப்ப்ரியாவில் பேசலாம்! சில சமயம் வேண்டுமென்றே முந்திரிப் பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் அருந்தி குரலில் மாற்றம் வருகிறதா என்று பார்த்ததுண்டு. அதையெல்லாம் நினைத்தபடியே பயணிக்க Block-1, Block-2, ஸத்ஸங்கம் மணித்வீபம், ஸ்டோர் ரோடு, வாட்டர் டாங்க் என பேருந்து நிறுத்தங்களை நினைத்தபடியே பயணித்துக் கொண்டிருந்தேன். நான் சொல்லாமலேயே நண்பர் முரளி சரியாக எனது வீடு இருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்ல நினைத்து ஒரு திருப்பத்தில் திரும்பி எனது வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் வாழ்ந்த வீட்டின் முன்னே நிறுத்தினார்.
சுமார் இருபது வருடங்கள்..... பிறந்து (in fact நான் பிறந்ததே இந்த வீட்டில் தான்), தவழ்ந்து, வளர்ந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் பொக்கிஷப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய நினைவுகள் தந்ததாகவே இருக்கும். எனக்கும் அப்படியே...... நெய்வேலி நகரில் இருந்தது கார்பரேஷன் குடியிருப்பு என்றாலும், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் நினைவுப் பெட்டகத்தில் ஆழப் பதிந்து இருக்கும்.... எத்தனை எத்தனை மறக்க முடியாத நிகழ்வுகள் அந்த வீட்டில் நடந்தன.....
1991 - ஆம் ஆண்டில் தில்லி சென்ற பிறகு இன்னும் சில வருடங்கள் அங்கே சென்று வந்தேன். அதற்குப் பிறகு அப்பா பணி ஓய்வு பெற்ற பிறகு அங்கே செல்வது என்பது மிகமிகக் குறைவு. நான் பார்த்த, நான் ரசித்த நெய்வேலி தற்போது இல்லை. எத்தனையோ மாற்றங்கள்.... மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பதை நிரூபிக்கும் விதமாக.... சில மாற்றங்கள் நல்லதற்கு என்றாலும் ஒரு சில மாற்றங்களை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது.
எங்கள் வீடு இருந்த இடத்தில் வரிசையாக நான்கு வீடுகள் இருக்கும். இரண்டிரண்டு வீடுகள் தொட்டடுத்து இருக்க, அடுத்து கொஞ்சம் தோட்டம், அதை அடுத்து இன்னும் இரண்டு வீடுகள். நான்கு வீட்டில் இருந்தவர்களுக்கும் இடையே அப்படி ஒரு ஒட்டுதல். அனைவருமே பல வருடங்களாக அதே வீடுகளில் இருந்ததால் நல்ல நட்பு. நான்கில் மூன்று வீட்டினர் (எங்களையும் சேர்த்து) இப்போதும் தொடர்பில் இருக்கிறோம் என்பதிலிருந்தே அந்த நட்பின் ஆழத்தினை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த நான்கு வீடுகளில் மூன்று வீடுகள் இப்போது காலியாக இருக்கிறது...... ஹிந்தியில் khandar என்று சொல்வார்கள்...... பாழடைந்து கிடந்த வீடுகளை பார்க்கும்போதே மனதில் அப்படி ஒரு துயரம்.... என்னதான் அது சொந்த வீடு இல்லை என்றாலும் இப்படி பாழடைந்து கிடக்கிறதே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை......
எத்தனை எத்தனை பசுமையான நினைவுகள் தந்த வீடு.... ஓடித் திரிந்த காலங்கள், வீட்டுத் தோட்டத்தில் விளைந்த எலுமிச்சை, புளி, மாம்பழம், அதனை தெரிந்தவர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் பங்குபோட்டு கொடுத்த அம்மா...... என்ன சொல்ல..... இன்றைக்கும் அந்த புளிய மரத்தில் புளி காய்த்துத் தொங்குகிறது...... ஆனால் வீட்டில் தான் யாருமில்லை. நாங்கள் இருந்த போது இருந்த பல்வேறு மரங்களில் புளியமரமும், ஒரு மாமரமும் மட்டும் அப்படியே இருக்கிறது. மற்ற மரங்கள் எல்லாம் இல்லை. வேறு சில மரங்கள் புதியதாக இருந்தன. புளியமரத்தில் காய்த்திருந்த புளியைப் பார்த்ததும், அந்த மரத்தில் ஏறி புளியை நான் உலுக்க, அம்மா அதனை காய வைத்து, ஓடெடுத்து, கொட்டைகளை அகற்றி, பதப்படுத்தி என எத்தனை வேலைகள் செய்வார் என்பதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
எத்தனை நினைவுகள்..... மறக்கக்கூடிய நினைவுகளா அவை........ இன்னும் எத்தனையோ எழுத வேண்டும் என்று தான் தோன்றுகிறது..... ஆனால் எழுத இயலவில்லை...... என் நினைவில் இருந்த வீட்டினை முற்றிலும் மாற்றி ஏதோ ஒரு பாழடைந்த பங்களாவிற்கு வந்தது போன்றிருந்தது. என்னதான் இப்படிப் பார்த்தாலும், நினைவில் இருக்கும் நினைவுகள் எப்படியும் நீங்கிவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். வீடுகளை படம் எடுத்து மற்ற இரு வீட்டிலிருந்த தோழமைகளுக்கும் அனுப்பி வைத்தேன். எப்படி இருந்த வீடு, இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் தான் எங்கள் அனைவரிடமுமே.
இதில்லை எனது வீடு என்ற எண்ணங்களோடு அங்கிருந்து அகன்று, நண்பர்களுடன் தோழியின் இல்லத்திற்குச் சென்றேன். இந்த நெய்வேலி பயணத்தில் இப்படியான நிகழ்வுகள் மட்டுமே நினைவில் இருக்க, நண்பர்கள் என்னை CBS என நாங்கள் அழைத்த பேருந்து நிலையத்தில் விட்டுச் செல்ல மந்தாரக்குப்பம் வழியாக திருச்சி வரை பேருந்துப் பயணம் செய்தேன். காலை நேரத்தில் அக்கம்பக்கம் காட்சிகளைப் பார்த்தபடி பயணம் செய்த நான் திரும்பும் போது எதையும் பார்க்காமல் நெய்வேலியில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள், இந்தப் பயணத்தில் பார்த்த காட்சிகள் ஆகியவற்றை சிந்தனை செய்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். ஒரு நாள் பயணம் என்றாலும், இந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எத்தனை - அவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
18 டிசம்பர் 2025









கரகரப்ரியாவில் பேசலாம். - ரசித்தேன். தஞ்சையில் முந்திரித் தோப்புகளுக்கிடையே வீடு என்பதால் எனக்கும் அனுபவம் உண்டு!
பதிலளிநீக்குஉங்கள் மனஎழுச்சி புரிகிறது. தஞ்சையிலும், மதுரையிலும் எனக்கும் இந்த உணர்வுகள் ஏற்படும்.
வாசகம் சூப்பர்.
பதிலளிநீக்குவளைவு புதியதாக இருக்கிறது ....நானும் பழையதுதான் பார்த்திருக்கிறேன்.
நெய்வேலி அந்தச் சாலைகள் இப்பவும் இரு புறமும் மரங்கள் இருக்கின்றனவே!
கொல்லாம்பழம் என்போம் எங்க ஊரில். முந்திரிபழத்தை. சாப்பிட்டால் தொண்டை அரிக்கும் தண்ணீர் குடித்தவுடன். நான் படித்த கல்லூரியில் கொல்லாம்பழ காட்டுக்குள்தான் மதியம் உணவருந்திவிட்டு டிராமா ரிகர்சல் எல்லாம் செய்வது. மரங்கள் கிளைகள் கீழே எல்லாம் படர்ந்திருக்கும் அதில் உட்கார்ந்து....இப்பவும் இருக்கா என்று தெரியவில்லை.
கரகரப்பிரியா - ஹாஹாஹாஹா இதைப் பார்த்ததுமே நம்ம வீட்டில் சொல்வதும்....ஃப்ளைட் நம்பர் நாடகத்தில் நீலு நினைவும் வரும்.
கீதா
உங்கள் நினைவுகளையும் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கும் எங்கள் ஊருக்குப் போன போது வந்தது. ரொம்ப அபூர்வம் ஊருக்குப் போவது.
பதிலளிநீக்குஉங்கள் நினைவுகள் பசுமையானவை.
//என் நினைவில் இருந்த வீட்டினை முற்றிலும் மாற்றி ஏதோ ஒரு பாழடைந்த பங்களாவிற்கு வந்தது போன்றிருந்தது. என்னதான் இப்படிப் பார்த்தாலும், நினைவில் இருக்கும் நினைவுகள் எப்படியும் நீங்கிவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். வீடுகளை படம் எடுத்து மற்ற இரு வீட்டிலிருந்த தோழமைகளுக்கும் அனுப்பி வைத்தேன். எப்படி இருந்த வீடு, இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் தான் எங்கள் அனைவரிடமுமே. //
புரிகிறது ஜி. வீட்டின் படம் பார்த்ததுமே கஷ்டமாக இருக்கிறது. எல்லோரும் இருந்திருந்தப்ப அந்த வீட்டின் உயிர் எப்படி இருந்திருக்கும்....இப்ப அது என்ன நினைக்கும்?
எங்கள் தளத்தில் ஒரு வீடு பேசுவது போன்று எழுதியிருந்த நினைவு வருகிறது.
கீதா
வாசகம் அருமை
பதிலளிநீக்குஉறவினர் ஒருவர் இந்த குடியிருப்பில் இருந்தார்கள் அவர்கள் வீட்டுக்கு நாங்கள் வந்து இருக்கிறோம். பெரிய நடராஜ சிலையோடு ஒரு கோயில் பார்த்தோம். பிறகு ஒரு ஐயனார் கோயில், முருகன் கோயில் போனோம். அப்புறம் வடலூர் போனோம்.
அந்த குடியிருப்பில் எலுமிச்சை, பலா மரம் இருந்தது. பன்னீர் ரோஜா வைத்து இருந்தார்கள்.
நீங்கள் இருந்த வீடு இப்படி பராமரிப்பு இல்லாமல் இருப்பது பார்க்க கவலையாக இருக்கு அப்புறம் பழைய நினைவுகள் எல்லாம் மனம் அசைப்போட்ட படி பயணம் பாரமாக இருந்து இருக்கும்.