அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அலைபேசி அட்டூழியங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
அலுவலக அனுபவங்கள் : தில்லியும் திருச்சியும்…
கிட்டத்தட்ட 35 வருடங்கள் தலைநகர் தில்லியில் பணிபுரிந்த அலுவலகங்களில் கிடைத்த அனுபவங்களுக்கும் தற்போது கடந்த நான்கு மாதங்களில் திருச்சி அலுவலகத்தில் கிடைத்துக் கொண்டிருக்கும் அனுபவங்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள். அலுவலில் இன்னும் இருப்பதால் பல விஷயங்களை வெளியே சொல்லிக் கொள்ள முடியாது. ஆனாலும் சில அனுபவங்களை அவ்வப்போது எழுதலாம் - அதிலும் குறிப்பாக தில்லி அனுபவங்கள் குறித்து எழுதலாம் என்று தோன்றுகிறது. முடிந்தால் வரும் வாரங்களிலிருந்து எழுதுகிறேன். முன்னரும் சில அனுபவங்களை எழுதியிருக்கிறேன் என்றாலும் இன்னும் எழுத நிறையவே விஷயங்கள் உண்டு. தில்லி அனுபவங்களை எழுதினால் படிக்க நீங்க ரெடி என்றால் எழுத நான் ரெடி? என்ன ஆரம்பிக்கலாமா? சொல்லுங்களேன்.
******
இந்த வாரத்தின் ரசித்த காணொளி : ZAOULI நடனம்
Ivory Coast என்கிற நாட்டில் உள்ள Guro பழங்குடியினரின் ஒரு வித நடனம் தான் ZAOULI எனும் நடனம். பார்க்கும் நமக்கே கால் வலிப்பது போல உணர்வு வரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. எத்தனை வேகம் இந்த வித நடனத்தில். அதிலும் நின்ற இடத்திலேயே எத்தனை வேக வேகமாக கால்கள் மேலும் கீழும் சென்று வருகின்றன. சாதாரணமாக ஏதோ வேலைக்காக ஸ்டூல் மீது ஏறி கீழே குதித்தாலே கால் வலிப்பதாய் உணரும் நாம் எங்கே? இந்த நடனக் கலைஞர்கள் எங்கே? நடனத்தினை நீங்களும் பாருங்களேன்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : விருது வாங்கலையோ விருது
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - விருது வாங்கலையோ விருது - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. பதிவுலகத்தில் இருந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விருது வழங்கி மகிழ்வுற்ற காலமது… இனிய நினைவுகள் - பதிவில் கருத்திட்ட பலரும் இப்போது பதிவுகளே எழுதாமல் முகநூலில் மூழ்கி விட்டார்கள்!
“என்னங்க! வாசல்ல கையிலே வீடியோ காமிரா, மைக் எல்லாம் வச்சுக்கிட்டு ஒரு பெரிய கும்பல், உங்க பேரைச் சொல்லி கேட்கறாங்க! நீங்க என்னடான்னா இன்னும் தூங்கிக்கிட்டிருக்கீங்க, சீக்கிரம் எழுந்து வாங்க" என்ற குரல் கேட்டு ”ஞாயிற்றுக்கிழமை தானே இன்னிக்கு! காலையிலேயே எழுப்பறியே!” என்று கேட்டபடியே எழுந்தேன்.
“அட காமிரா, மைக் எல்லாம் எடுத்துட்டு ஒரு கும்பல் நம்மளத் தேடியா? தப்பா எதுவும் பண்ணலையே” என்று எண்ணியபடியே வெளியே வந்தேன். மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி வெளியே வரும்போது தள்ளுமுள்ளு பண்ணி ஒரே சமயத்தில் பல நிருபர்கள் மைக்கை நீட்டி கேள்வி கேட்பது போல, என்னிடம் கேள்வி கேட்க முட்டி மோதினார்கள் நிருபர்கள். என்ன விஷயம் என்றே புரியாமல் முழித்தேன்.
நான் பேய் முழி முழிப்பதைப் பார்த்த ஒரு நிருபர், “என்ன சார் அடுத்தடுத்த நாள்ல இரண்டு பெரிய விருது வாங்கிட்டு, இப்படி அடக்கமா ஒண்ணும் தெரியாத மாதிரி முழிக்கிறீங்களே! நாங்க ஒண்ணும் பார்ட்டி வையுங்க என்றெல்லாம் கேட்க மாட்டோம்! தைரியமா வெளியே வாங்க!” என்றார். விருதா? எனக்கா? என்ன விருது என்று இன்னமும் புரியாமல் கேட்டேன்.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் தகவல் : Suri பழங்குடி
சமீபத்தில் வித்தியாசமான தலை அலங்காரத்துடன் இருந்த ஒரு பழங்குடிப் பெண்ணின் நிழற்படத்தினை காண நேர்ந்தது. வித்தியாசமான அவரது தலை அலங்காரம் மற்றும் முகத்தில் போட்டிருந்த அலங்காரம் அவர்களைப் பற்றிய மேலதிகாரத் தகவல்களை தேடித் தெரிந்து கொள்ளத் தூண்டியது. எதியோப்பியாவில் இருக்கும் Suri என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் குறித்த தகவல்களைத் தேடியதில் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கட்டுரை சிறப்பானதாக இருந்தது. அந்தக் கட்டுரை நீங்களும் படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம். Atlas of Humanity எனும் இந்தத் தளத்தில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. முடிந்தால் தளத்திற்குச் சென்று பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் ரசித்த பகிர்வு : சந்தோஷம்
சந்தோஷம் என்றால் என்ன என்பதை ஓவியமாகத் தீட்டச் சொன்னார்களாம் ஒருவரிடம்… அவர் தீட்டிய ஓவியம் தான் மேலே இருப்பது. இது குறித்த ஆங்கிலத்திலிருந்த ஒரு பகிர்வு கீழே! படித்துப் பாருங்களேன் - உங்களுக்கும் பிடிக்கலாம்!
What is happiness?
A famous Turkish poet once asked his painter friend to capture happiness on canvas.
The painter chose an unexpected scene: a family sleeping peacefully on a creaking bed. One leg of the bed was broken, supported by two bricks. The roof of their modest home leaked. Even the family dog slept calmly beside them.
That painting became immortal because it revealed a powerful truth: happiness is not the absence of problems. It is the ability to rest your heart even when life is imperfect. It is acceptance, gratitude, and inner peace amid uncertainty.
Happiness is being grateful, finding comfort in what you have, seeing light despite cracks, and letting go of sorrow over things beyond your control.
Whenever your heart feels heavy, remember this painting.
Be content,
Be grateful,
sleep peacefully & stay blessed forever .. ☮️☮️
******
இந்த வாரத்தின் வாசிப்பு - தரிசனம் :
திருவரங்கத்தின் நண்பர் ரிஷபன் அவர்கள் தற்போது முகநூலில் தரிசனம் எனும் தலைப்பில் தொடர்ந்து கதைகளை எழுதி வருகிறார். ஒவ்வொன்றும் ஒரு முத்து! அவருடைய எழுத்து குறித்து சொல்லவா வேண்டும்? மிகச் சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரர். விரைவில் அச்சுப் புத்தகமாக வரும் என்ற காத்திருப்பில் நானும்… முகநூலில் இருந்தால் படித்துப் பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் ரசித்த கவிதை - காதல் :
ஓவியமும் கவிதையும் - முகநூலில் நண்பர் விஜயகுமார் வேல்முருகன் அவர்களது பக்கத்தில் பார்த்த ஒரு ஓவியமும் அதற்கான அவரது கவிதையும். நீங்களும் படித்து ரசிக்க இங்கே! ஓவியம் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றிய கவிதை ஏதேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
காதல்:
மின்னலென நீ பூத்த புன்னகையில்
சுடரும் ஒளியிழந்து போனது..
பேசாத உன் இதழ்கள்
கதைகள் பல பேசியது..
ஓர விழிப் பார்வைகளோ
நேராய் எனைத் தாக்கியது..
வளைக்கரங்கள் தழுவிய மரமாக
நானாகிடக் கூடாதா-
மனம் விம்மி விம்மியே ஏங்கியது..
புன்னகை சூடிய முகமதிலே
பொன்னகையும் களையிழந்தது..
சிறு வெட்கம் நீ கொள்ள
பக்கம் பக்கமாய் கவி தோன்றியது..
சாளரத்து மரம் கூட உயிராகிடுமோ
உன் எழில் காண..
அத்தனை ஆவல் கொண்டேனே
என்னவளே உன் மீதே..
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
14 ஃபிப்ரவரி 2026




அனுபவங்கள் எப்பவுமே சுவாரஸ்யமானவை. எழுதுங்கள்.
பதிலளிநீக்குகால்களுக்கு மட்டுமே நடனம். அற்புதம். கால்களா மெஷினா?
விருது அப்போது பெற்றதற்கு இப்போது வாழ்த்துகள். ஏனெனில் அப்போது நான் சொல்லவில்லை!
அழாகான தீம். அழகான படம்.
ரிஷபன் ஸார் ஒரு கதைச் சுரங்கம். எப்போது கேட்டாலும் பெரிய மன பீரோவைத் திறந்து ஒரு கதையை எடுத்துக் கொடுப்பார்.
ஓவியம் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைக் காட்டுகிறது. கவிதையை ரசித்தேன். முடிந்தால் ஏதாவது எழுத வந்தால் பின்னர் எழுதுகிறேன்!!!
அனுபவங்கள் - எழுத வேண்டும் - விரைவில் எழுதுவேன்.
நீக்குகால்களா மெஷினா - ஆமாம்... எனக்கும் பார்த்தபோது இப்படித்தான் தோன்றியது. பார்த்ததற்கே கால் வலிப்பது போலவும் இருந்தது!
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் சிந்தனைகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
விளக்கைப் பார்ப்பதால்
பதிலளிநீக்குவிலகிச் செல்லுமோ
மன இருள்?
என் மதி குழப்பம் தீர
நிம்மதி தேடி வந்த
இடத்தில்
சன்னதி இன்னும் திறக்கவில்லை
காத்திருக்கிறேன் நான்
கதவு திறக்கவும்
என் பால் அவன்
அருள் சுரக்கவும்.
அழுத மனம் இப்போது
தொழுது நிற்கிறது
அருகில் வந்ததுமே
அமைதி திரும்பியதே
உன் ஒளி என்னுள்ளும்
பரவியதே
ஆறுமுகம் நீ கொண்டாய்
ஆறுதலை என்னுள்
தந்தாய்!
ஸ்ரீராம், உங்கள் கவிதையும் அருமை.
நீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குபடத்திற்கான உங்கள் கவிதை சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.
நீக்குதில்லி அனுபவங்களா!! சூப்பர்! கமான்! Set ready Go!
பதிலளிநீக்குZAOULI நடனம் பார்த்ததுண்டு ஜி. வீடியோவில்தான். பிரமித்ததுண்டு. இடுப்பு, கால்களில் எப்படியான பலம் வேண்டும்! கூடவே concentration! பயிற்சி இருந்தாலொழிய இப்படி ஆடுவது கடினம்தான்.
ஓ! விருது பெற்றதற்கு வாழ்த்துகள்!
நீங்கள் அங்கு குறிப்பிட்டிருக்கும் 7 பாயின்ட்ஸும் மீக்கும் டிட்டோ!
கீதா
தில்லி அலுவலக அனுபவங்கள் - வெளியிட வேண்டும் - நேரமெடுத்து. தொடங்குகிறேன் விரைவில்....
நீக்குநடனம் - கடினமான விஷயம் தான்.
விருது - வாழ்த்தியமைக்கு நன்றி. அந்தக் கால கட்டங்களில் பதிவுலகில் இப்படி விருதுகள் வழங்குவது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. எத்தனை எத்தனை பதிவர்கள் - எத்தனை பதிவுகள்.... அது ஒரு கனாக்காலம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
எத்தியோப்பியா பற்றி வாசித்திருக்கிறேன், ஜி அங்குள்ள பழங்குடிமக்கள் குறித்தும். அவர்களின் தொழில் என்று பலதும். நம்ம வீட்டவர் அங்கு சில மாதங்கள் இருந்ததால். பழங்குடிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் பாருங்க என்னைப் போல ஃபோட்டோக்கள் எடுக்கும் பழக்கமெல்லாம் சுத்தமாக இல்லாதவர் என்பதால் ம்ஹூம் எங்கள் தளத்தில் விஷயங்களைப் பகிர முடியவில்லை. காஃபி பற்றி மட்டும் எங்கள் தளத்தில் எழுதிய நினைவு. இவர்களின் தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. அங்கு மண்ணின் வளத்தைச் சொல்லி முடியாது. அங்கு வளர்பவை எல்லாம் அத்தனை செழிப்பாக, வளமாக இருக்கும். பெரியதாகவும் இருக்கும். இவர்கள் ரொம்பவே பழமையானவங்க இப்படித்தான் சாயம் டிசைன் எல்லாம் செய்து கொண்டு ஒரு வித டிசைன் உடம்பில் தழும்பு போன்றும் இருக்கும்....இன்னும் பழமையை விடாமல்....இவர்களில் பிரிவுகள் உண்டு. டோங்கா கம்புச்சண்டையில் பெரிய ஆளுங்க இவங்க மற்றும் முர்சி பழங்குடியினர்.
பதிலளிநீக்குகீதா
உங்கள் வீட்டார் அங்கே இருந்ததால் நீங்களும் அறிந்திருக்கிறீர்கள்... எத்தியோப்பியா குறித்து வாசித்திருக்கிறேன் என்றாலும் இந்தக் கட்டுரை சிறப்பாக இருந்தது என்பதால் இங்கே பகிர்ந்தேன். இவர்களது சில பழக்கங்கள் குறித்தும் படித்த நினைவு.
நீக்குதங்களது கருத்தின் வழி மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
மகிழ்ச்சி என்பதற்கான படமும் அந்த வரிகளும் மிகவும் அருமை. உண்மைதானே! மகிழ்ச்சி என்பது நம் மனதில். வெளியில் அல்ல!
பதிலளிநீக்குரிஷபன் அண்ணாவின் கதைகளை வாசிக்க நான் முகநூலில் இருக்க வேண்டுமே!
கீதா
மகிழ்ச்சி என்பதற்கான ஓவியமும் வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ரிஷபன் அண்ணாவின் கதைகள் - நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியவை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
கவிதையை ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நல்லாத்தான் நடனக் காணொளியைப் பகிர்ந்தீர்கள் போங்கள். உங்களை நம்பிப் பார்த்தால், எனக்கு கால் ரொம்பவே வலிக்குது. பார்க்கும் எனக்கு வலித்தால், ஆடுபவர்களுக்கு?
பதிலளிநீக்குஹாஹா... நடனம் பார்த்தாலே கால் வலிக்கும்! உண்மை தான். எனக்கும் அப்படித் தோன்றியது. ஆனாலும் பார்த்தேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
சந்தோஷம் ஓவியம் சிறப்பு. பணமோ இல்லை ஆடம்பரமோ சந்தோஷமாக இருக்க, தேவையான அம்சங்கள் இல்லை. நிம்மதி ஒன்றே போதுமானது
பதிலளிநீக்குநிம்மதி ஒன்றே போதுமானது - உண்மை. ஆனால் பலருக்கும் இந்த எண்ணம் இருப்பதில்லை என்பதே நிதர்சனம். எதையோ தேடி ஓடிக்கொண்டேயிருக்கிறோம். எதைத் தேடுகிறோம் என்ற சிந்தனை இல்லாமலேயே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
பழங்குடிப் பெண்ணில் ஒரு அழகி புகைப்படம். நன்று. அழகியா என்றால் எனக்கு சூரி பழங்குடியினரின் கண்கள் இல்லையே
பதிலளிநீக்குஹாஹா... பழங்குடியினரின் கண்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
அலுவலக அனுபவங்கள் எப்போதுமே ரசனையானவைதாம். பகிருங்கள்
பதிலளிநீக்குவிரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஅனுபவங்களை எழுதுங்கள்.
பதிவு முழுவதும் அருமை.
நடனம் காணொளி , கவிதை , பழைய விருது நினைவுகள் அனைத்தும் அருமை.
ரிஷபன் அவர்கள் தரிசனம் படித்து வருகிறேன்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குஅனுபவங்கள் - எழுதுகிறேன் அம்மா.
பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சந்தோஷம் படம் அழகு. வீடு பழது அடைந்து இருக்கு, கட்டில் கால் உடைந்து இருக்கு, ஆனாலும் அதைபற்றி கவலை படாமல் நிம்மதியான தூக்கம் இறைவன் கொடுத்த வரம். அவர்கள் வளர்க்கும் நாயும் நிம்மதியாக தூங்குகிறது.
பதிலளிநீக்குஆங்கில பகிர்வும் அருமை.
சந்தோஷம் குறித்த தங்கள் எண்ணங்கள் நன்று.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய காஃபி வித் கிட்டு பகிர்வு அருமை. வாசகமும் நன்றாக உள்ளது.
உங்கள் அனுபவங்களை பகிருங்கள். உங்கள் எழுத்து வாசகர்களை ரசிக்கும்படி கட்டிப்போடுவது .
கண்கவர் நடனம் மிக அருமை. எத்தனை வேகம் நடனமாடும் கால்களில். பிரமிப்பு வருகிறது.
விருது வாங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆம் அப்போது இந்த வைபவம் மனதிற்கு இனிமையாகவும், மகிழ்வை தருபவையாகவும் வலையுலகில் சுற்றி வந்தது.
பழங்குடி பெண்ணின் அலங்காரங்களை ரசித்தேன்.
சந்தோஷம் தரும் பொருளை உணர்ந்து கொண்டேன். மனதில் நிம்மதி இருந்தால், சந்தோஷமும் தானாகவே வரும் என்பதை காட்டும் படம் அருமை. நிம்மதியுடன் வரும் அருமையான தூக்கம் மன உற்சாகத்தையும் தரும்.
ரிஷபன் சகோதரர் கதைகள் என்றுமே அருமை. படித்திருக்கிறேன்.
படத்திற்கேற்ற கவிதை நன்றாக உள்ளது. ரசித்தேன். நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் எழுதிய கவிதையும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வாங்க! தில்லி அனுபவங்களை தாங்க! காத்திருக்கோமுல்ல.
பதிலளிநீக்குவாங்க அண்ணாச்சி.... நீங்களும் எழுதலாமே! - குறிப்பாக உங்கள் அனுபவங்கள்! நாங்களும் காத்திருக்கிறோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....