அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட யானை மேலே புண்ணு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அலைபேசிகள் தற்போது அத்தியாவசியத் தேவை ஆகிவிட்டது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் முன்பு போல நிறைய நிறுவனங்கள் இல்லாமல் மூன்று நான்கு நிறுவனங்கள் மட்டுமே இந்த அலைபேசி தொடர்புக்கான சேவைகளைத் தருகின்றன. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் தங்களது வாடிக்கையாளர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை. சில வருடங்களாக என்னிடம் இருக்கும் இரு எண்களையுமே ஒரு தனியார் நிறுவன சேவையாகத் தான் வைத்திருக்கிறேன். விதம் விதமான தனியார் நிறுவன சேவைகளை பயன்படுத்தி பார்த்தாகிவிட்டது. அத்தனை பேருமே ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனைகளைத் தரும் விதமாகவே சேவைகளைத் தருகிறார்கள். எங்களது வீடு இருக்கும் பகுதியில் பெரும்பாலான சேவை நிறுவனங்களின் சேவை கேவலமாக இருக்கிறது.
Signal பிரச்சனைகள் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு நிறுவன சேவையாக மாற்றும்போது இந்த இடத்தில் எங்கள் நிறுவனத்தின் Signal நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள் என்றாலும் நிறைய பிரச்சனைகள். அதனால் இதோடு மூன்று நான்கு நிறுவனங்களின் சேவைக்கு, ஒரே எண்ணை மாற்றியிருக்கிறேன். தற்போது இருக்கும் நிறுவனத்தின் சேவை ஓரளவுக்குப் பரவாயில்லை என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் இருக்கும் ஒரு எண்ணை திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் மாற்றினார்கள் - மொத்தமாக Signal இல்லாமல் போக, அந்த நிறுவனத்தின் Exclusive Centre சென்ற போது உங்கள் எண்ணில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. மீண்டும் தொடர வேண்டுமெனில் ஆதாரங்கள் தேவை எனக் கேட்டார்கள். எல்லாவற்றையும் கொடுத்தபிறகு, இதனை மாற்றுவதற்கு முதலில் Pre-paid-லிருந்து Post-paid ஆக மாற்ற வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லாமல் அவர்களாகவே மாற்றிவிட்டார்கள்.
பிறகு தான் ஆரம்பித்தது தொல்லை. அந்த எண் எனது பிரதான எண் அல்ல, வேறு சில தேவைகளுக்காக மட்டுமே அந்த எண்ணை பயன்படுத்துகிறேன். அதன் பயன்பாடு மிகவும் குறைவு. முன்பெல்லாம் குறைந்த அளவில் மட்டுமே, அதாவது மாதத்திற்கு ஒரு முறை (அதாவது 28 நாட்களுக்கு ஒரு முறை - எல்லா அலைபேசி சேவை நிறுவனங்களுக்கும் ஒரு மாதம் என்றால் 28 நாட்கள் தான்! இதுவும் ஒரு வித கொள்ளை!) 198 ரூபாய் என்ற அளவில் ரீசார்ஜ் செய்வேன். ஆனால் Pre-paid-லிருந்து Post-paid ஆக மாற்றிய பிறகு ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்ச கட்டணமே 532/- அளவில் வர ஆரம்பித்தது. ஏன் அப்படி என்று கேட்டபோது “அது அப்படித்தான்” என்று விட்டேத்தியாக ஒரு பதில். சரி, எனது எண்ணை மீண்டும் Pre-paid ஆக மாற்றி விடுங்கள் என்று கேட்டபோது, அப்படியெல்லாம் உடனடியாக மாற்ற முடியாது. குறைந்த பட்சம் மூன்று மாதமேனும் Post-paid ஆகவே தான் இருக்க வேண்டும் என்றார்கள்.
சரி மூன்று மாதம் எப்போது முடியும் என்று காத்திருந்து, மீண்டும் அவர்கள் Exclusive Centre சென்ற போது எப்படியாவது தட்டிக்கழிக்க வேண்டும் என்று எதையெதையோ காரணம் சொல்கிறார் அங்கே இருந்த பெண். Billing Cycle முடிந்த பிறகு வாருங்கள் - மாற்றிவிடலாம் என்றார். நான் முடியவே முடியாது - இப்போதே மாற்றவேண்டும் என்று சத்தமாகச் சொன்ன பிறகு சிறிது நேரம் அமருங்கள் என்று சொல்லி குறுக்கும் நெடுக்கும் சென்று கொண்டிருந்தார். பிறகு எனது அலைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பி காத்திருக்கச் சொன்னார். இப்படியே 15 நிமிடங்கள் கடந்த பிறகு மீண்டும் குரலை உயர்த்தி பேசியபிறகு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி - அனுப்பிய அடுத்த நிமிடமே பதில் வந்தது. சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்களில் வேலைகள் எல்லாம் முடிந்து புதிய சிம் கார்டு கிடைத்து விட்டது. முதலில் முடியாது என்று சொன்னவர்களிடம் சற்றே குரலை உயர்த்திப் பேச அந்த வேலையைச் செய்து முடித்தார்கள்.
மாதத்திற்கு 198/218 எங்கே, 532 எங்கே? இத்தனைக்கும் எனது பயன்பாட்டிற்கு 198/218 வாங்குவதே அதிகம். இதில் ஒரு வித சேவையையும் பெறாமல் இருந்தால் கூட 532 ரூபாய் மாதத்திற்கு வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை எவரும் சொல்வதில்லை. இதில் நீங்கள் தொடர்ந்து அதே Post-paid வசதியை பயன்படுத்தினால் உங்களுக்கு மட்டும் Exclusive ஆக மாதத்திற்கு 100 ரூபாய் Off தருகிறோம் என்ற Carrot dangling வேறு! ஆணியே பிடுங்க வேண்டாம், எனக்கு Pre-paid தான் வேண்டும் என்று முரண்டு பிடித்து மாற்ற வேண்டியிருந்தது. எந்தந்த விதத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க முடியுமோ அந்தந்த விதத்தில் தொடர்ந்து வசூலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களது குறிக்கோளாக இருக்கிறது.
BSNL/MTNL சேவைகளை நான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் தரும் சேவையின் தரம் மோசமாகிக் கொண்டே போக வேறு வழியில்லாமல் தான் இந்த தனியார் நிறுவன சேவையை பயன்படுத்தவேண்டிய கட்டாயம். இது தெரிந்து கொண்டதால், எப்படிப் பார்த்தாலும் எங்களில் ஒருவர் சேவையைப் பயன்படுத்தியே தீர வேண்டும் - அது உங்கள் தலையெழுத்து என்பது போல இந்த தனியார் நிறுவனங்கள் அனைத்துமே நடந்து கொள்கிறது. இதற்கு முடிவு என்ன? ஒன்றுமே இல்லை என்பது தான் நிதர்சனம். உங்களுக்குத் தேவையான சேவையைப் பெறுவதற்குக் கூட இவர்களிடம் போராட வேண்டியிருக்கிறது! வேறென்ன சொல்ல?
இதற்கு முன்னரும் இப்படி ஒரு Post-paid சிக்கலில், தில்லியில் மாட்டியிருக்கிறேன் - அப்போதும் இதே போல போராட வேண்டியிருந்தது! Post-paid என்பது ஒரு வித கொள்ளை என்பதை இந்த விஷயங்கள் புரிய வைக்கிறது! இது போன்ற விஷயங்களில் உங்கள் அனுபவம் என்ன? சொல்லுங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
13 ஃபிப்ரவரி 2026


Carrot dangling நல்ல உவமை!
பதிலளிநீக்குநீங்கள் உபயோகிப்பது ஏர்டெல் என்று நினைக்கிறேன். BSNL சேவைகள் எப்போதோ தரமிழந்து விட்டன. இவர்களை விட்டு விலகவும் முடியாது. அவர்களுக்கு மாதத்தில் 28 நாட்கள்தான் என்பது கொடுமை.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்ததற்கு நன்றி. நீங்கள் சொன்ன சேவை நிறுவனம் அல்ல - முன்பு இதை வைத்திருந்தேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
சென்னையில் வெள்ளம் வந்தபோது எந்த அலைபேசி நெட் வொர்க்கும் வேலை செய்யவில்லை, உதவவில்லை. மீண்டு வர ஒரு வாரம் ஆனது. அந்நாட்களுக்கு நாம் கட்டிய பணம் எக்ஸ்டெண்ட் செய்து உபயோகப்படுத்தப் படும் என்று எதிர்பார்த்தோம். ஒரு கொள்ளைக்காரன் கூட அதைச் செய்யவில்லை.
பதிலளிநீக்குபல பகுதிகளுக்கு பயணம் செய்யும்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருக்க நேரிடும் - குறிப்பாக மலைப்பிரதேசங்களில். ஆனால் எல்லா இடங்களிலும் எங்கள் நெட்வொர்க் கிடைக்கும் என்பார்கள் - மலைப்பிரதேசங்களை விட்டு விடுங்கள் - எங்கள் வீடு இருக்கும் இடத்தில் கூட கிடைப்பதில்லை என்பதை தான் சொல்லியிருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நிறைய அத்யாவசிய விவரங்களை நானும் ஒரு எண்ணில்தான் வைத்திருக்கிறேன். ஆனால் நான் உபயோகிப்பது இன்னொரு எண். அந்த எண்ணிலிருந்து எல்லா வசதி, விவரங்களையும் இந்த எண்ணுக்கு மாற்ற வேண்டுமென்றால் பெரிய அவஸ்தை என்பதால் விட்டு வைத்திருக்கிறேன். அதற்கான ரீசார்ஜ் வேறு வழியின்று தொடர வேண்டி உள்ளது. அதுவும் முதலில் போஸ்ட் பெய்ட், அதிலும் C U G யாக இருந்து அப்புறம் மாற்றிக் கொண்டது.
பதிலளிநீக்குஆமாம் இப்படி சில விஷயங்களை தவிர்க்க முடியாமல் செய்கிறோம். என்னிடமும் இப்படி இரண்டு எண்கள் வேண்டியதாக இருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
எங்களது வீடு இருக்கும் பகுதியில் பெரும்பாலான சேவை நிறுவனங்களின் சேவை கேவலமாக இருக்கிறது. //
பதிலளிநீக்குஎனக்கும் இது போன்று ஆனது ஜி முந்தைய பகுதியில்.
இப்ப ஓகே. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் வழிமொழிகிறேன். கொள்ளைனா கொள்ளைதான். அதுவும் பகல் கொள்ளை நாம் அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல்...
கிட்டத்தட்ட monopoly யாக மாறுவதால் இருக்குமோ? அவங்களை விட்டா வேற யாரும் இல்லையென்ற ரீதியில்?
கீதா
Monopoly - அது இன்னமும் அதிகமாக கொள்ளை அடிக்க வழிவகுக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
ஆம்..நானும் அவதிப்பட்டிருக்கிறேன்.குறிப்பாக ஏர்டெல்...
பதிலளிநீக்குதங்களது அனுபவங்களும் இப்படி இருப்பது வேதனை தான். பெரும்பாலனவர்கள் இந்த வேதனையை அடைந்திருக்கிறோம் என்பதே உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி ஜி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குதனியார் சேவைகள் எல்லாம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது, பிறகு அதுவும் சரியில்லை .
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா..
நீக்குமுதலில் சரியாக இருப்பதைப் போல இருந்தாலும் போகப் போக மோசம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
எல்லாருமே கொள்ளையர்களாக ஆகி பல வருடங்களாச்சு... ஆனால் அந்தக் கொள்ளையர்களைக் கேட்டால், எந்தக் கொள்ளையருக்கு கப்பம் கட்டணும் என்று சொல்வார்களா?
பதிலளிநீக்குஎந்தக் கொள்ளையருக்கு கப்பம் கட்டணும் என்று சொல்வார்களா? வாய்ப்பில்ல ராஜா! :)
நீக்குஎல்லாம் கொள்ளை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.