செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

பணம் என்னடா பணம் - கதை மாந்தர்கள் - அலுவலக அனுபவங்கள் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட செல்வத்துள் எல்லாம் தலை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


பணம் - அது தானே எல்லாம் என்கிற விதத்தில் தான் பல மனிதர்களின் கண்ணோட்டம் இருக்கிறது.  பணம் இருப்பது பெரிய விஷயமல்ல, அதனை சரியான விதத்தில் பயன்படுத்துவதும் ஒரு கலை! அது எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை.  சரியாகப் பயன்படுத்தாமல் இருந்தால் அது எப்படி கையை விட்டுப் போகும், எங்கே போகும் என்பதற்கு உதாரணம் தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் கதை மாந்தரின் கதை.


தலைநகர் தில்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான கடை நிலை ஊழியர்கள் தில்லியைச் சுற்றியிருக்கும் கிராமத்தினராகவே இருந்தார்கள்.  அதிலும் ஆரம்ப காலத்தில் தினக்கூலியாகச் சேர்ந்து பின்னர் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் கடை நிலை ஊழியர்களாகவே இருந்தார்கள் - பியூன் என்று முன்னர் அழைக்கப்பட்ட ஊழியர்கள் - தற்போது MTS என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.  அரசில் இப்படி கடை நிலை ஊழியர்களாக இருந்தாலும் அவர்களின் பெரும்பாலானவர்கள் அவர்களது ஊரில் நிலபுலன்களோடு விவசாயம் பார்த்து சம்பாதித்தவர்கள் தான்.  ஆனாலும் “கால் காசு ஆனாலும் கவர்மெண்ட் காசு” என்று இங்கே தமிழகத்தில் சொல்வது போல அங்கேயும் அரசாங்க வேலை மீதான மோகம் உண்டு.  ஒரு காலத்தில் அவர்களது நிலங்கள் எல்லாம் பராமரிக்காமல் போனாலும் அவற்றுக்கான மதிப்பு அதிகமாகவே இருந்தது. 


இங்கே கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்தாலும், நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகம்.  அதிலும் குருகிராமம் என்று தற்போது அழைக்கப்படும் குட்காவ்ன் (Gurgaon) பகுதிகளில் சொத்து இருந்தால், அவை தற்போது கோடிக் கணக்கில் விலை போகும்! அத்தனை கோடி சொத்துக்கள் இருந்தாலும் தொடர்ந்து அரசாங்கத்தில் கடை நிலை ஊழியராகவே பணியில் இருப்பார்கள்.  அப்படி ஒருவர் தான் சந்தீப் (வசதிக்காக இந்தப் பெயரை வைத்துக் கொள்வோம் - உண்மையான பெயர் அல்ல!)  அவரது மூதாதையர் சொத்து முன்னேற்றப் பணிகளுக்காக அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரது பங்காக அவருக்குக் கிடைத்த பணம் நான்கு கோடி - நான் சொல்வது 1990-களின் கடைசி!  அப்போது அந்த நபருக்கான மாத சம்பளம் நான்காயிரம் கூட இல்லை! எனில் அந்த நான்கு கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைக் கவனியுங்கள். 



சந்தீப் - அப்படி ஒன்றும் திறமைசாலியல்ல! நான்கு கோடி பணம் கிடைத்ததும் அவரைச் சுற்றி வளைத்தவர்கள் நிறையவே - அலுவலகத்திலிருந்த சக ஊழியர்கள், சொந்தங்கள் என ஒவ்வொருவரும் பணத்திற்காகவே அவரைச் சுற்றியிருந்தார்கள்.  ஆனாலும் அதீத பணம் இந்த விசயங்களைக் கவனிக்கவிடாமல் செய்து விடும் என்பது நிஜம் - அவர் விஷயத்தில் நேரிடையாகவே பார்த்திருக்கிறேன்.  புதியதாக சில நிலங்கள், பெரிய வண்டிகள் என வாங்கிச் செல்வழித்த பிறகும் அவரிடம் பணம் நிறைய இருந்தது.  அந்தப் பணத்திற்காகவே வேண்டாத சகவாசங்கள் நிறைய வந்து சேர்ந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக போதையின் பிடியில் சிக்கினார்.  போதைக்குப் பிறகு விலைமாதர்கள் சகவாசம் - எல்லாவற்றிலும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் இருந்தார்கள்.  அவரை எல்லோருமே மதிக்கிறார்கள் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை அவரிடம் இருந்தது. 



அலுவலகத்தில் எங்கே சென்றாலும் அவரைச் சுற்றி சிலர் இருந்து கொண்டே இருப்பார்கள்.  தேநீர், சிகரெட், சாராயம் என அனைவருக்கும் அவரது செலவு தான்.  இதைத் தவிர சிலர் கடனாகப் பெற்றுக் கொண்டு அதனைத் திருப்பித் தராமல் இருந்ததும் நடந்தது.  பணம் என்னடா பணம், என்னிடம் தான் நிறைய இருக்கிறதே என்று ஊதாரித்தனமாகவே இருந்தார்.  "குந்தித் தின்றால் குன்றும் கரையும்" என்கிற பழமொழிக்கு ஏற்ப அவரிடம் இருந்த பணம் - மூதாதையர் சொத்தை விற்றதில் கிடைத்த பணம் - கரைந்த வண்ணமே இருந்தது.  அடித்த கூத்தில் உடல் நலமும் பாதிக்கப்பட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக பணம் கரைய, உடல் நலம் குன்றிப்போக பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்தது.  பிரச்சனைகள் ஆரம்பித்த பிறகு அவரைச் சுற்றியிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தது.  கடைசி காலகட்டத்தில் பணம் அத்தனையும் இழந்து, வாங்கும் அரசாங்கச் சம்பளம், அவரது புதிய பழக்க வழக்கங்களுக்குப் போதாமல் போக வாங்கிய நில புலன்களும் கைவிட்டுப் போனது. 



அவரது ஊரில் இருக்கும் மற்ற ஆண்கள் போலவே இவரும் தனது மனைவியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  பெண் என்றால் சாணி சுமக்கவும், மாடு மேய்க்கவும், பிள்ளை பெறவும் மட்டுமே தான் லாயக்கு என்கிற போக்கில் இருந்த சந்தீப் மனைவியையும் கலந்தாலோசிக்கவில்லை.  மொத்தமாக பணம் போனதோடு, உடல் நலமும் குன்றிப்போய், ஒரு காலகட்டத்தில் அவரைப் பார்க்கவே பரிதாபமாக ஆனது.  எப்படி இருந்தவர் இப்படி ஆய்விட்டாரே என்கிற எண்ணம் தோன்றினாலும், இது அத்தனையும் அவராகவே தேடிக்கொண்டது என்பதையும் மனது யோசித்தது.  இது ஒரு தனிமனிதரின் கதை மட்டும் அல்ல.  இப்படி பலரும் திடீரென பணம் வந்து விட்டால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் “ஆடிய ஆட்டமென்ன?” என்று கேட்கும் விதமாக நடந்து கொண்டு சொத்து முழுவதையும் இழந்தது தான் நடந்தது. நடக்கிறது.  நடக்கும்! 


சில வருடங்கள் முன்னர் அவரை பார்த்தபோது அஞ்சுக்கும் பத்துக்கும் கை நீட்டிக் கொண்டிருந்தார் - அவரிடம் பணம் இருக்கும்போது அவருடன் இருந்தவர்கள் எவருமே அவருக்கு உதவவில்லை என்பது தான் வேதனையான நிதர்சனம். தகாத சகவாசம், பழக்கவழக்கங்கள் விதம் விதமான உடல் உபாதைகளைப் பரிசாகத் தர ஒரு காலகட்டத்தில் மண்ணோடு மண்ணாகிப் போனார்.  பணம் என்னடா பணம் என்று நாம் நினைத்தாலும், அந்தப் பணத்தினை வைத்து எல்லோராலும் சிறப்பாக வாழ்ந்துவிடமுடியாது. அதிகம் ஆடிய காலங்களில் அவருக்கு புத்திமதி சொன்னவர்களை எல்லாம் “நான் சந்தோஷமா இருக்கறதப் பார்த்து உங்களுக்கெல்லாம் பொறாமை!” என்று சொல்லி துரத்திய சந்தீப் எப்படி வாழக்கூடாது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

24 ஃபிப்ரவரி 2026


12 கருத்துகள்:

  1. படம் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.

    நான்கு கோடி கிடைத்தும் தெருக்கோடிக்கு வந்தவரை என்னவென்று சொல்ல.. 

    விதி. 

    வாய்ப்பு கிடைத்தும் உபயோகிக்க, அனுபவிக்கத் தெரியவில்லை, கொடுத்து வைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் - ஆம்.... பார்த்ததும் பகிரத் தோன்றியது.

      விதி - வேறென்ன? அப்படியென்றாலும், மதி இருந்திருந்தால் கொஞ்சமேனும் யோசித்திருப்பார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கடைநிலை ஊழியர்கள் என்று சொல்கிறோம் இல்லையா, ஜி. ஆனால் அவங்கள்ல சிலர் எல்லாம் வீடு, நிலம், நகைகள் என்ற அந்தஸ்துடன் இருக்கிறார்கள். என்ன படிப்பு என்று பெரிதாக இருக்காது. அவர்களின் முதலீடு வித்தியாசமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நிறைய சொத்து இருந்தாலும், சர்க்காரி உத்யோக் என்று கடை நிலை ஊழியராகச் சேர்ந்த நபர்களை அறிவேன். பல அதிகாரிகள் கூட அந்த கடை நிலை ஊழியர்களிடம் சொத்தில் ஈடு கொடுக்க முடியாது. அதிகாரி சாதாரண இரு சக்கர வாகனத்தில் வர, கடை நிலை ஊழியர் ஃபார்ச்சூனர் வாகனத்தில் வருவார்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. குருகிராமம் என்று தற்போது அழைக்கப்படும் குட்காவ்ன் (Gurgaon) பகுதிகளில் சொத்து இருந்தால், அவை தற்போது கோடிக் கணக்கில் விலை போகும்!//

    ஆமாம் ஜி!

    நான் முதல் கருத்தில் சொன்னதை அடுத்து வாசித்த போது நீங்களும் சொல்லியிருப்பதை வாசித்தேன். இது வாசிக்கும் முன்னரே அக்கருத்து!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... இந்தப் பகுதிகளில் இப்படித் தான் - நிறைய சொத்து இருக்கும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. இது அத்தனையும் அவராகவே தேடிக்கொண்டது என்பதையும் மனது யோசித்தது. //

    கண்டிப்பாக அவர் தேடிக் கொண்டதுதான். Life is full of choices. We have to choose wisely என்பதுதான். அந்த அறிவு வேண்டும். இதுதான் life skill! இது கடைநிலை ஊழியருக்கு மட்டுமல்ல, எல்லா வகையினருக்கும் பொருந்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லைஃப் ஸ்கில் - உண்மை தான். எல்லோருக்கும் இது அமைந்து விடுவதில்லை. வங்கியில் பெரிய அதிகாரியாக இருந்த நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாந்து போனார். பணத்தை மீட்க ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று அழைத்தபோது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. என்ன சொல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. வாசகம் அருமை.
    படங்களும் கதையும் பாடம்.

    //பணம் இருப்பது பெரிய விஷயமல்ல, அதனை சரியான விதத்தில் பயன்படுத்துவதும் ஒரு கலை!//

    முன்னோர்களால் கிடைத்த பணத்தை பத்திரமாக பாதுகாத்து நல்ல வழியில் செலவு செய்யாமல் இப்படி தொலைத்து விட்டு அவரும் தொலைந்து போனாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      முன்னோர்களால் கிடைத்த பணத்தினை பத்திரமாகப் பாதுகாப்பதும் ஒரு வித கலை தான். எல்லோருக்கும் வந்து விடாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. என்னத்தச் சொல்ல. என் செக்சன்-ல் ஒரு கான்ட்ராக்ட் basis MTS ஆபீஸ் ஐடி கார்ட் - ஐ காட்டியே கல்யாணம் பண்ணினான். கல்யாண மண்டபம் வாசலில் பெண் வீட்டில் கொடுத்த மாருதி பெரிய மாலையும் கழுத்துமா மின்னிக் கிட்டுருந்தது.

    பதிலளிநீக்கு
  7. எனக்கு அந்தப் பய சந்தீப்பையும் ( அவன் உண்மை பெயர் எனக்கு மறந்து போச்) அவன் கூட ஒருத்தன் சுத்துவானே ரண்டு பேரையும் பார்த்தாலே பிடிக்காது.
    பாவம் அவன் வீட்டு பெண்கள். அவனுக்கு ஒண்ணோ ரெண்டோ பெண் குழந்தைகள் கூட உண்டு. ஒழுங்கா கல்யாணம் பண்ணி கொடுத்தானா தெரியல்ல.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....