திங்கள், 13 ஏப்ரல், 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - தடங்கலுக்கு வருந்துகிறேன் - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி அறுபத்தி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  பயணங்கள் செய்வதும், அதைக் குறித்து எழுதுவதும் எனக்குப் பிடித்தமான விஷயம் தான்.  ஆனாலும் பல சமயங்களில் நினைத்த விஷயங்களை நினைத்த மாதிரி செய்ய முடிவதில்லை.  கடந்த ஃபிப்ரவரி 2025-இல் ஒன்றிரண்டு நாட்களில் திட்டமிட்டு, உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் மூன்று சிகரங்களுக்கு மூன்றே நாட்களில் பயணம் செய்தோம் - அதிலும் கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் மொத்த நடைப்பயணமாக இருந்தது!  அற்புதமான அனுபவங்களைத் தந்த பயணம் அது.  ஃபிப்ரவரி 2025-இல் பயணித்து, மார்ச் 2025-இல் பயணம் குறித்து எழுத ஆரம்பித்தாலும் என்னால் தொடர்ந்து எழுத இயலாமல் ஒரு பெரிய இடைவெளி.  அம்மாவின் உடல் நிலை காரணமாக திருவரங்கத்தில் இருக்க நேரிட்டது.  மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பிக்க, மீண்டும் தடங்கல்.


சென்ற செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி கடைசியாக இந்தத் தொடரின் ஏழாம் பகுதி வெளியிட்டேன்.  அதன் பிறகு தொடர்ந்து எழுத இயலவில்லை.  அம்மாவின் மறைவு, மற்ற பிரச்சனைகள், இடமாற்றம் என ஏதோ ஒன்று எழுதுவதற்குத் தடையாகவே இருந்து வந்தது.  கடந்த மூன்று மாதங்களாகத் தான் தினம் ஒரு பதிவு என்கிற பழைய நிலைக்கு வந்திருக்கிறேன்.  ஆனாலும் அந்தத் தொடரை கைவிட்டது விட்டபடியே தான் இருக்கிறது. எழுதுவதைக் கைவிட்டு இத்தனை மாதங்கள் ஆகிவிட்டதே, இனிமேல் தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்கிற கேள்விகள் கூட எனக்குள்ளே உண்டு.  ஆனாலும், சென்று வந்த பயணத்தினை பதிவு செய்து வைப்பது எனக்கு ஒரு மீள் நினைவாக இருப்பதோடு, அதனைப் படிக்கும் ஒரு சிலருக்கேனும் பதிவுகள் உதவியாக இருக்கலாமே என்கிற எண்ணமும் வந்தது.  சரி தொடர்ந்து எழுதலாம் - ஆனால் வெளியிடு முன்னரே அனைத்து பகுதிகளையும் எழுதி முடித்து விட்டு அதன் பிறகு ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என்று நினைத்து எழுதத் தொடங்கினேன்.  


தொடர்ந்து எழுதுவதற்கு முன்னர் இது வரை எழுதியிருக்கும் பகுதிகளில் என்ன எழுதினோம் என்பதை ஒரு Re-cap ஆகக் கொடுத்து விடுவோம் என்று தோன்ற, அதைத் தான் இந்தப் பகுதியில் செய்ய இருக்கிறேன். இந்தப் பயணத்தில் இதுவரை என்ன தகவல்கள் வெளியிட்டு இருக்கிறேன் என்பதைப்  பார்க்கலாம் வாருங்கள்!


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஒன்று:



2025 பிப்ரவரி மாதம் ஒரு புதன் கிழமை மாலை நண்பர் இந்தர்ஜீத் சிங் சனி, ஞாயிறு வருகிறதே எங்கேயாவது சென்று வரலாமா என என்னிடமும் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட்-இடமும் கேட்க, பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.  அடுத்த நாள் அதாவது வியாழன் மதியம் வரை எந்தத் திட்டமும் இல்லை.  எப்போதும் போல எப்படிச் செல்ல வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்பதை எல்லாம் அனுபவமிக்க நண்பர் Bபிஷ்ட் இடம் விட்டுவிட்டோம். மூன்று நாட்களில் மூன்று சிகரங்கள் என்ற ஒரு திட்டத்தினைச் சொன்னார். சென்ற முறை ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து டேராடூன், முசோரி வழி பந்த்வாடி சென்று சேர்ந்தோம் என்றால், இந்த முறை ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து தடம் மாறி தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் ஆகிய இடங்களைக் கடந்து கேதார்நாத் செல்லும் பிரதான சாலை வழியே குண்ட், ஊக்கிமட் ஆகிய இடங்களைக் கடந்து சாரி எனும் கிராமத்தினைச் சென்று சேர வேண்டும். 


முதல் பகுதியில் எழுதிய முழு விவரங்களும் இங்கே படிக்கலாம்!


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி இரண்டு:



dhதாரி தேவி ஆலயம். பெயரைப் படிக்கும்போதே கம்பீரமாக இருக்கிறது அல்லவா? தேவியும் கம்பீரமானவள் தான்.  இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரியமானவளும் பிடித்தமானவளும் கூட. தேவி உக்கிர ரூபம் கொண்டு ரக்த்பீஜன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை அழித்த போது அவளது உக்கிரத்தினை கண்டு அனைவருக்கும் பயம் உண்டாகிறது - அவளை சாந்தமாக்குவது என்பது யாராலும் முடியாத காரியமாக இருந்தது.  தீமைகளை ஒழித்து விட்டாலும் அவளது கோபம் அடங்காமல் இருக்க, சிவபெருமானே அதற்கு ஒரு வழி தேடவேண்டியிருந்தது. அதன் பிறகு உக்கிர ரூபத்திலிருந்து சாந்த ரூபியாக மாறுகிறார்.  அப்படி சாந்தி ரூபம் கொண்ட இடம் தான் தலைப்பகுதி வைக்கப்பட்டு இருக்கும் இந்த dhதாரோ என்ற பெயர் கொண்ட இடம்.  அதனால் தேவியின் பெயர்  dhதாரி தேவி. 


இரண்டாம் பகுதியில் எழுதிய முழு விவரங்களும் இங்கே படிக்கலாம்!


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி மூன்று:



ஃபிப்ரவரி மாதங்களில் உத்திராகண்ட் மாநிலத்தில் மலைப்பிரதேசங்கள் முழுவதும் மரங்களில் ஒரு வகை பூ பூத்துக் குலுங்கும்.  ஆங்கிலத்தில் Rhododendron என்றும் ஹிந்தியில் (உள்ளூர் பாஷையில்) Bபுரான்ஸ் (बुरांस) என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்தப் பூக்கள் பார்க்கவே வெகு அழகு.  பார்ப்பதற்கு மட்டுமல்லாது இந்தப் பூக்களை பல விதங்களில் பயன்படுத்தவும் முடியும்.  பூக்கள் பூத்துக் குலுங்கும் காலங்களில் பூக்களை எடுத்து, காய வைத்து அதிலிருந்து திரவம் எடுத்து பருகுவதற்கு உகந்த பானமாகவும் தயாரிக்கிறார்கள். மருத்துவ குணங்களும் உடையது என்கிறார்கள் அங்கே இருக்கும் நண்பர்கள்.  திரவத்தினை குப்பிகளில் அடைத்து விற்பனையும் செய்வதுண்டு.  நாங்கள் அங்கேயே சில இடங்களில் இந்தப் பானத்தினை அருந்தினோம். அந்த இடத்தினை விட்டு நகரவே மனதில்லை என்றாலும் அங்கேயிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று அடைந்த இடம் சாரி எனும் கிராமம்.  அங்கே சென்றடைந்த போது நேரம் சுமார் 02.40 மதியம்!


மூன்றாம் பகுதியில் எழுதிய முழு விவரங்களும் இங்கே படிக்கலாம்!


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி நான்கு :



சிறு கிராமங்களில் ஒரு வசதி. சின்னச் சின்ன இடங்களாக இருந்தாலும், அங்கே இருக்கும் மனிதர்களின் மனம் விசாலமாக இருக்கிறது.  நாங்கள் வண்டியிலிருந்து எங்கள் உடமைகளை எடுத்து ஒரு சிறிய பையில் வைக்க வேண்டியிருந்தது. அங்கே இருந்த ஒரு உணவகத்தில் யாருமே இல்லை. திறந்திருந்த அந்த உணவகத்தின் உரிமையாளர் இல்லை. பணியாளர்களும் இல்லை. அங்கே எங்கள் பொருட்களை வைத்து தேவையானவற்றை மட்டும் ஒரு சிறிய முதுகுப் பையில் வைத்துக் கொண்டிருந்தோம்.  கேட்பார் யாரும் இல்லை! அப்படியே வந்தால் கூட ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நண்பர் Bபிஷ்ட் சொல்லிக் கொண்டிருந்தார்.  தேவையான உடைகள், கைத்தடி, டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என அனைத்தும் ஒரு சிறுபையில் மாற்றிக் கொண்டு மற்றவற்றை மீண்டும் சரி பார்த்து வாகனத்திலேயே மீண்டும் கொண்டு வைத்தோம்.  சாலையோரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல வழி விட்டு ஓரமாக நிறுத்திவிட்டு செல்லலாம் - திருடு போய்விடுமோ என்ற கவலையில்லாமல்.  உள்ளூர் மக்கள் “தைரியமாக விட்டுச் செல்லுங்கள், கவலை வேண்டாம்” என்று சொல்லவும் சொல்கிறார்கள்.


நான்காம் பகுதியில் எழுதிய முழு விவரங்களும் இங்கே படிக்கலாம்!


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஐந்து :



ஆலயத்தின் பிரதான தெய்வம் சிவன் என்றாலும் உள்ளூரில் இந்த ஆலயத்தினை நாகதேவதையுடன் சம்பந்தப்படுத்தி நாக தேவதை ஆலயம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.  அழகான கர்பக்கிரஹத்தின் உள்ளே சிவபெருமான் லிங்க ரூபத்தில் குடிகொண்டிருக்கிறார்.  ஆலயத்தினை நெருங்கும்போதே மெல்லிய ஒலியில் சிவபெருமானின் புகழ் சொல்லும் பாடல்களும் மந்திரங்களும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிகிறது.  லிங்காஷ்டகம் கூட SPB குரலில் ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்டபோது ஆஹா, இங்கேயும் அவரின் குரல் கேட்கிறதே என உள்ளுக்குள் மகிழ்ச்சி.  அது மட்டுமல்லாது நான் கடவுள் படத்திலிருந்து “ஓம் சிவோஹம்” பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது.  எங்கேயிருந்தோ எங்கோ வந்து அங்கேயும் இப்படியான நமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதிலும் ஒரு மகிழ்ச்சி உண்டாகத் தான் செய்கிறது அல்லவா? மெல்ல பாடல்களைக் கேட்டபடியே ஆலயத்தில் பிரவேசிக்க இருக்கும் படிகளில் நடந்தோம்.  ஆலயத்தின் வாசலில் இருந்த கற்களில் அமர்ந்து காலணிகளைக் கழற்றி, கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தின் அருகே சென்றோம்.


ஐந்தாம் பகுதியில் எழுதிய முழு விவரங்களும் இங்கே படிக்கலாம்!


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஆறு :



Watch Tower-லிருந்து எங்களுக்குக் காணக் கிடைத்த காட்சியை என்னென்பது? வார்த்தைகளால் விவரிக்க முடியாத இயற்கையின் பேரெழில்.  ஒரு சில விஷயங்களை நேரடியாக அனுபவிக்கும்போது தான் அதன் முழுமையான வீச்சு நமக்குக் கிடைக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.  அப்படியான விஷயங்களில் இயற்கையும் ஒன்று.  என்னதான் வார்த்தைகளால் நான் கண்ட காட்சிகளை விவரித்தாலும், அங்கே எடுத்த நிழற்படங்களை இங்கே இணைத்தாலும் நேரடியாக நம் கண்களால் காணும்போது கிடைக்கும் அனுபவம் நிச்சயம் வேறானது என்பதை நீங்களும் உணர முடியும்.  சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள், மலைச் சிகரங்கள் என படர்ந்து விரிந்த பேரின்பம்.  அங்கே காணக்கிடைக்கும் ஒவ்வொரு சிகரத்திற்கும் பெயர் உண்டு என்றும் அவற்றின் பெயர் இது இது எனவும் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் Bபிஷ்ட். அந்த இடத்திலிருந்து காணக்கிடைக்கும் ஒரு மலைச்சிகரம் Chசௌக்கம்பா! நான்கு (Chசௌ) கம்பங்களை (கம்bhபா) நிற்க வைத்தார் போல, நான்கு சிகரங்கள் அங்கே இருப்பதால் இந்தப் பெயர் அந்த மலைக்கு! 


ஆறாம் பகுதியில் எழுதிய முழு விவரங்களும் இங்கே படிக்கலாம்!


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஏழு :



எங்களுக்கே எங்களுக்காக குளமும் இயற்கை எழிலும் காத்திருந்தது.  இயற்கையின் பேரெழிலில் திளைத்து அங்கேயே நிறைய படங்கள் எடுத்துக் கொண்டும் குளத்தின் அருகே அமர்ந்து இயற்கையை ரசித்தபடியும் எத்தனை நேரம் அங்கே இருந்திருப்போம் என்பதற்கு கணக்கில்லை.  அந்தச் சூழலிலிருந்து விடுபட எங்களில் யாருக்குமே மனதில்லை.  முதல் நாள் சூரியாஸ்தமனத்தின் சமயம் தகதகவென தங்கமாக மின்னிய பனிபடர்ந்த மலைச்சிகரங்களைப் பார்த்தோம் என்றால் காலை நேரத்திலும் நாங்கள் கண்ட காட்சிகள் மனதை விட்டு அகலாத வண்ணம் நிறைந்திருந்தது.  எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று உரக்கச் சொல்லலாம் என்றால் இயற்கையின் அமைதியைக் குலைப்பது போல இருக்கும் என்பதால் மனதுக்குள் இறைவனைத் துதித்துக் கொண்டோம்.  இயற்கையின் கொடை தான் எவ்வளவு என்று எண்ணும்போது மனதில் மகிழ்ச்சி பொங்கி எழுகிறது.  சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள், நடுவே வனம், வனத்திற்குள் தேவரியா தால் எனும் தேவர்களின் குளம், குளக்கரையில் படர்ந்திருக்கும் பனி, ஒரு இலை விழுந்தால் கூட அதன் ஒலி நமக்குக் கேட்கும் அளவிற்கு ஒரு பேரமைதி, என திகட்டத் திகட்ட இயற்கையின் பேரெழிலை நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தோம்.


ஏழாம் பகுதியில் எழுதிய முழு விவரங்களும் இங்கே படிக்கலாம்!


வரும் பகுதிகளில் இந்தப் பயணத்தில் தொடர்ந்து பார்த்த இடங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

13 ஏப்ரல் 2026


5 கருத்துகள்:

  1. பழைய தொடரை நினைவு படுத்தும் முகமாக  முன்கதைச் சுருக்கம் மாதிரி முந்தைய பதிவுகளில் சுட்டி என்று அதை மட்டும் தராமல் சிறிய அறிமுகத்துடன் அந்தப் பகுதிகளைச் சொல்லி இருப்பது சிறப்பு.  ரசித்தேன்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல நினைவிருக்கிறது ஜி. இத்தொடர். படங்களும் மீண்டும் நினைவுக்கு வந்தன.

    இப்படி இடையில் தொடரை தொடர முடியாமல் நீண்ட இடைவெளி வந்த பிறகு தொடரும் போது இப்படிக் குறிப்புகள் கொடுப்பது நல்ல விஷயம் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நெல்லை எபியில் சமீபத்தில் பிலிபைன்ஸ் பயணம் அங்கு எரிமலை யின் பகுதியில் ஒரு பெரிய ஏரி பகிர்ந்திருந்தார் அதில் அதைப் பார்த்ததும், உங்களின் பதிவைச் சொல்லி தேவரியா தால் நினைவுக்கு வருகிறது என்றும் சொல்லியிருந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாசகம் அருமை.
    பயணக் க்ட்டுரைகள் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் உங்கள் பயணக் கட்டுரை தடை ஏர்பட்டு இருக்கிறது.
    மீண்டும் பதிவு செய்தது நல்லது. போக நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    //எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று உரக்கச் சொல்லலாம் என்றால் இயற்கையின் அமைதியைக் குலைப்பது போல இருக்கும் என்பதால் மனதுக்குள் இறைவனைத் துதித்துக் கொண்டோம். இயற்கையின் கொடை தான் எவ்வளவு என்று எண்ணும்போது மனதில் மகிழ்ச்சி பொங்கி எழுகிறது. சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள், நடுவே வனம், வனத்திற்குள் தேவரியா தால் எனும் தேவர்களின் குளம், குளக்கரையில் படர்ந்திருக்கும் பனி, ஒரு இலை விழுந்தால் கூட அதன் ஒலி நமக்குக் கேட்கும் அளவிற்கு ஒரு பேரமைதி, என திகட்டத் திகட்ட இயற்கையின் பேரெழிலை நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தோம்.//

    நீங்கள் சொன்னதை படிக்கும் போதே அழகான இடத்தை பார்க்க மனம் விரும்புகிறது.
    உங்கள் கட்டுரை மூலம் பார்த்து ரசிக்கிறேன். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....