புதன், 6 மே, 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பனிச்சிகரங்களில் மலையேற தயாராவோம் - பகுதி பதினேழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் என்ற இந்தத் தொடரின் வழி நாங்கள் செய்த மலையேற்றம் குறித்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து வருகிறேன். இதற்கு முந்தைய பதிவு வரை இரண்டாம் நாள் மலையேற்றம் வழி எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து இருந்தேன்.  இந்தப் பதிவு முதல் மூன்றாம் நாளில் கிடைத்த மலையேற்றப் பதிவுகள் வர இருக்கின்றன. முந்தைய பதிவில் சொன்னபடி, சோப்தா எனும் சிற்றூரில் இருந்த ஒரு தங்குமிடத்தில் இரவு தங்கினோம்.  நல்ல குளிர்.  இரவு இரண்டு மணிக்கு எழுந்தபோது அலைபேசியில் பார்த்தால் -6 டிகிரி என்று காண்பித்துக் கொண்டிருந்தது.  ஊரே உறங்கும் வேளையில், ஜன்னலின் திரையை விலக்கிப் பார்க்க வெளியே பனிமூட்டம் - கண்ணாடிகளில் பரவியிருக்க ஒன்றுமே தெரியவில்லை.  நண்பர்கள் உறங்கிக் கொண்டிருக்க, நான் மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன் - பற்கள் கிடுகிடுக்க ஆரம்பித்தன - அத்தனை குளிருக்கான உடைகளையும் தாண்டி! சப்தமில்லாமல் கதவை மூடி இயற்கை அழைப்பை முடித்துக் கொண்டு மீண்டும் ரஜாய்க்குள் புகுந்து படுத்துக் கொண்டேன்.  இந்தக் குளிரில் காலையில் எப்படி குளிப்பது, மற்ற வேலைகளை முடிப்பது என்ற எண்ணம் வர, அதனை அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு உறங்குவோம் என உறக்கத்தினைத் தொடர்ந்தேன். 


காலை ஐந்து மணிக்கே ஒவ்வொருவராக எழுந்து காலைக்கடன்களை முடிக்க தலைப்பட்டோம்.  குழாயைத் திறந்தால் நீர் வராது - அத்தனையும் உறைந்து கிடக்கிறது. வெளியே இருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து சிறு வாளிகளில் தண்ணீரைக் கொண்டு வந்து குளியலறை வாளிகளில் நிரப்பிக் கொண்டோம்.  சுடுநீர் வேண்டுமெனில் கீழே குறுகிய படிக்கட்டுகளில் இறங்கிச் சென்று சுடுநீரை பக்கெட்டுகளில் தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்றார் தங்குமிடச் சிப்பந்தி.  அதனைக் கொண்டு வந்தாலும் இருந்த குளிருக்கு ஒரு சில நிமிடங்களில் சில்லென்று ஆகிவிடும் என்று அவரே சொல்லிக் கொண்டார்!  குளிப்பதா வேண்டாமா என்ற கேள்விகள் எங்கள் அனைவருக்கும்! கடும் குளிரில் குளிப்பது என்பது உடல் நலனைப் பாதிக்கும் என்றும் அதனால் முடிந்த வரை சுத்தமாவோம் என கை, கால்களை சுத்தம் செய்து வேறு உடைகளை அணிந்து கொண்டோம். கோடைக் காலம் என்றால் நிச்சயம் குளிக்காமல் இருக்க முடியாது! ஆனால் நாங்கள் சென்ற நாட்கள் நல்ல குளிர்காலம் என்பதால் ஒரு நாள் குளிக்காவிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று எங்களுக்கு நாங்களே சமாதானம் செய்து கொண்டோம்.  


அனைவரும் தயாரான பிறகு எங்கள் உடமைகளை எல்லாம் சரிபார்த்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினோம்.  அவற்றை எங்கள் வண்டியில் வைத்துப் பூட்டிய பிறகு தங்குமிட உரிமையாளரை அழைத்து கணக்கை முடிக்கலாம் என்றால் அவர் அழைப்பை ஏற்கவில்லை.  அவருக்குத் தரவேண்டிய பணத்தினை அலைபேசி வழி செலுத்தி விட்டு, அவருக்கு அந்தத் தகவலையும் அனுப்பி விட்டு, எங்களது அன்றைய நடையை, மலையேற்றத்தினை தொடங்க நினைத்தோம்.  இன்றைய மலையேற்றம் பனி படர்ந்த சிகரங்களை நோக்கி மட்டுமல்ல, Black Snow என்று அழைக்கப்படும் நாள் பட்ட பனி உறைந்த பாதைகள் வழி செய்யப்போகும் மலையேற்றமும் கூட! அதற்குத் தகுந்த காலணிகள் இல்லை என்றால் வழுக்கி விழும் அபாயம் நிறையவே உள்ள பாதைகள் அவை.  நாங்கள் நால்வருமே சரியான காலணிகள் அணிந்திருந்தாலும் கூடுதல் Grip தேவை என்பதால் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க, நண்பர் பிஷ்ட், பக்கவாட்டில் இருந்த கடைகளைக் காண்பித்தார்.  முதலில் குளிருக்கு இதமாக கொஞ்சம் தேநீர் அருந்துவோம். பின்னர் மலையேற்றத்தினைத் தொடங்குவோம் என்றார்.  அதுவும் சரி தான் என எதிர் புறம் இருந்த ஒரு கடைக்குச் சென்றோம். 



நாங்கள் தேநீர் அருந்திய கடை...


இந்தப் படத்தில் ஒரு ஆர்ச் தெரிகிறதா? அதன் வழி தான் மலையேற்றத்தினைத் தொடங்க வேண்டும்...
அதற்கு நேர் மேலே நாங்கள் தங்கிய அறை....



காலை நேர குளிருக்கு நிச்சயம் சூடான தேநீர் தேவை.  அது தயாராவதற்குள் மலையேற்றத்தின் போது நாக்கு வரளாமல் இருக்க புளிப்பு மிட்டாய், பிஸ்கெட்டுகள், சாக்லேட் போன்றவற்றை வாங்கி எங்களது சிறு பைகளில் வைத்துக் கொண்டோம். கீழேயே இவற்றை வாங்கிக் கொள்வது நல்லது.  குளிர் காலம் என்பதால் மலையேற்றப் பாதையில் வழக்கமாக இயங்கும் கடைகளில் முக்கால்வாசி கடைகள் மூடிவிடுவார்கள்.  ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்பதோடு எல்லா பொருட்களும் அங்கே கிடைக்காது என்பதால் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு.  தேநீர் சொல்லி நீண்ட நேரம் ஆனபிறகே எங்களுக்கான தேநீர் வந்து சேர்ந்தது.  அப்போது தான் கடையைத் திறந்தார்கள் என்பதால் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.  பிறகு அடுப்பைப் பற்ற வைத்து தேநீர் தயார் ஆவதற்கு நேரம் ஆனது என்று தெரிந்தது. அந்தக் காலை நேரத்திலேயே சில பயணிகள் Stuffed Paratha வை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு உணவு தேவையாக இருக்கவில்லை - அதுவும் காலை 05.45 மணிக்கு நிச்சயம் தேவையாக இல்லை! 



Crampons - என அழைக்கப்படும் சங்கிலிகள்...

குளிருக்கு இதமாக இருந்த தேநீரை உட்கொண்ட பிறகு மலையேற்றத்திற்குத் தேவையாக இருந்த சங்கிலிகள் - காலணிகளில் மாட்டிக் கொள்ளும் விதமாக இருக்கும் - அந்தச் சங்கிலிகளின் கீழே கூர்மையான பற்கள் போன்ற விஷயம் இருக்கும் - அவை பனிப்பாறைகள் மீது நாம் கால் வைக்கும்போது Grip தரும் விதத்தில் இருக்கும் என்பதால் வழுக்கி விடாமல் இருக்க, அந்தச் சங்கிலிகளை இரண்டு காலணிகளிலும் மாட்டிக் கொண்டால் போதும்.  இது மட்டும் போட்டுக் கொண்டால் போதுமா என்றால் நிச்சயம் இல்லை - இவை ஒரு பாதுகாப்பு மட்டுமே - மலையேற்றத்தின் போது நிச்சயம் கவனமாகவே இருக்க வேண்டும். கொஞ்சம் தவறினால் கூட, இந்தச் சங்கிலிகளையும் தாண்டி நாம் வழுக்கி விழுந்துவிட வாய்ப்பு உண்டு. அதனால் பாதுகாப்பிற்காக அந்தச் சங்கிலிகளை வாடகைக்கு வாங்கிக் கொண்டு அவற்றை காலணிகளில் பொருத்திக் கொள்ள தயாராக வைத்திருந்தோம்.  பனி இல்லாத இடத்தில் இவற்றைப் பொருத்திக் கொள்ளக் கூடாது! 


இந்த வித முன்னேற்பாடுகளுடன் எங்கள் மலையேற்றப் பயணத்தினைத் தொடங்க நாங்கள் தயாரானோம்.  எங்கள் தங்குமிடத்திற்கு பக்கத்திலேயே மலையேற்றத்திற்கான பாதை தொடங்கியது என்பதால் எங்களுக்கு வசதியாக இருந்தது.  தொடரின் முந்தைய பகுதியில் தேவரியா தால் செல்லும்போது வனத்துறைக்கு கட்டணம் தர வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.  அதே போல இந்த மலையேற்றம் செய்ய வேண்டிய இடமும் கூட வனத்துறையினரில் கண்காணிப்பில் தான் இருக்கிறது. அதனால் இங்கேயும் வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கிறார்கள் - எவ்வளவு கட்டணம் வசூலித்தார்கள் என்பது இப்போது நினைவிலில்லை.  காலை நேரத்திலேயே மலையேற்றம் செய்ய நாங்கள் தயாராகி இருந்தாலும், அந்த நேரத்திலேயே மற்ற சக மலையேற்றம் செய்ய வந்த நபர்களும், அங்கே இருந்தார்கள்.  முந்தைய நாளின் மலையேற்றத்தில் ஏகாந்தமாக நாங்கள் மட்டுமே இருந்தோம் என்றால் இந்த மலையேற்றம் அப்படி இருக்கப் போவதில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்! 


மலையேற்றம் தொடங்கிய சில அடிகளிலேயே முந்தைய நாளின் பனிப்பொழிவு காண முடிந்தது.  குறுகிய பாதைகளின் ஓரங்களில் இருந்த பனிப்பொழிவு பார்த்ததும் நண்பர் பிஷ்ட் மேலே நிறைய பனிப்பொழிவு இருக்கவோ, அல்லது மழை வரவோ கூட இருக்கலாம் என்றார்.  கூடவே பாதை முழுவதும் பனிப்பொழிவு காரணமாக கடினமான மலையேற்றமாக இருக்கலாம் என்றும் சொல்லிக் கொண்டு வந்தார்.  எப்படி இருக்கப் போகிறது இந்த மலையேற்றம், என்ன அனுபவங்கள் எங்களுக்குக் கிடைக்கப் போகிறது என்ற எண்ணங்களுடன் நாங்கள் எங்கள் மலையேற்றத்தினைத்  தொடங்கினோம். மறக்க முடியாத அனுபவங்களுடன் அந்த மலையேற்றம் இருக்கப் போகிறது என்பதை ஒரு விதமாக உணர ஆரம்பித்திருந்தோம்.  மலையேற்றம் எப்படி இருந்தது, அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை எல்லாம் அடுத்த பதிவில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

6 மே 2026


2 கருத்துகள்:

  1. Crampons வகை காலணிகள் பற்றி அறிந்தேன்.  ரொம்ப ரிஸ்க்கான, திகிலான மலையேற்றம் என்றும் தெரிகிறது.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. காலணிகளில்்சங்கிலியா? மலையேற்றம் நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

    நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கு. இப்படீல்லாம் இடங்கள் உண்டு, மலையேறும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....