வெள்ளி, 15 மே, 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பயணத்தின் முடிவு - பகுதி இருபத்தி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஏப்ரல் மாதத்தில்... பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



சென்ற பகுதியில் துங்க்நாத் சிவாலயத்தின் மேலே இன்னும் பயணித்து சந்த்ரஷீலா சிகரம் வரை சென்றது குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  இந்தப் பகுதியில் அந்தச் சிகரத்திலிருந்து இறங்கி வரும் போது கிடைத்த அனுபவங்கள் குறித்தும், தில்லி திரும்பியது குறித்தும் பார்க்கலாம். 2025-ஆம் ஆண்டின் ஃபிப்ரவரி மாதம் 15 முதல் 17 வரை மொத்தம் மூன்று நாட்கள் பயணம் - அதில் மூன்று சிகரங்கள் ஏறி இருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி.  சரி தொடர்ந்து அனுபவங்களைப் பார்க்கலாம். மலையேற்றத்தின் போதே பல இடங்களில் மிகவும் கஷ்டப்பட்டு, எப்போது வழுக்கிவிடுமோ என்ற எண்ணத்துடன் தான் மலையேற்றம் செய்ய வேண்டியிருந்தது.  பல இடங்களில் சக பயணிகள் விழுவதைப் பார்த்தோம் - சரியான விதத்தில் கால்களை அழுத்தி வைக்காமல் இருந்தால் வழுக்கி விழுவதையும் எங்களால் பார்க்க முடிந்தது.  சரியான காலணிகள், Crampons அணியாமல் இருந்தது என பல காரணங்கள் சொல்லலாம்! அதனால் நாங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவே ஏறிச் சென்றோம்.  


பனிபடர்ந்த அந்த மலைப்பாதையில் ஏறிச் செல்வதை விட இறங்கி வருவது இன்னமும் அதிக கவனம் கொள்ள வேண்டிய விஷயமாக இருந்தது. ஒவ்வொரு அடி வைத்ததும் கீழே வழுக்கி விழுந்த சிலரைப் பார்க்கும்போது எங்களுக்கு இன்னமும் அதிக எச்சரிக்கை உணர்வு வந்தது.  ஒரு சில இடங்களில் உட்கார்ந்து தான் கீழே இறங்கினோம்.  பனிப்பொழிவு அதிகமாக இருந்த இடங்களில் பனிச்சறுக்கு செய்தோம்.  அது ஒரு விதத்தில் உற்சாகம் தந்தாலும், அந்தப் பனிக்குக் கீழே என்ன இருக்கிறது - கூரான வேர்கள் இருந்தாலும் இருக்கலாம் என்பதை எல்லாம் எங்களால் யோசிக்க முடியவில்லை.  சில இடங்களில் தடுக்கும்போது தான் தெரிந்தது பனியின் கீழே கூர்மையான ஏதோ ஒன்று இருக்கிறது என!  இரண்டு மூன்று இடங்களில் பனிச்சறுக்கு செய்தே கீழே வந்தோம்.  ஒவ்வொருவராக பனிச்சறுக்கு செய்யும்போது கீழே இருந்து முதலில் இறங்கிய நண்பர் உற்சாகம் தர, அந்தப் பனிச்சறுக்கு விளையாட்டு நன்றாகவே இருந்தது.

ஆனால் ஒரு விஷயம் - இப்படிப் பனிச்சறுக்கு செய்வதிலும் ஆபத்துகள் உண்டு.  சரியான இடத்தில் பனிச்சறுக்கு செய்யாவிட்டால் அதலபாதாளத்தில் விழுந்து விடக் கூடும்! அதனால் முதலில் நண்பர் பிஷ்ட் கீழே செல்ல, அவரைத் தொடர்ந்து மற்றவர்கள் ஒவ்வொருவராக கீழே சறுக்கிக் கொண்டு சென்றோம்.  பலர் தாங்கள் போட்டிருக்கும் உடை அழுக்காகிவிடக்கூடும் என்று நடக்க, அவர்கள் பல இடங்களில் கீழே விழுந்தார்கள்.  எங்களைப் பார்த்த அவர்களும் பிறகு சறுக்கிக் கொண்டு கீழே வர ஆரம்பித்தார்கள்.  அப்படி கீழே சறுக்கிக் கொண்டு வந்த ஒரு யுவதி - “ஹையா ஜாலியா இருக்கு! இன்னும் ஒரு முறை சறுக்கட்டுமா?” என்று அவருடைய நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.  சில இடங்களில் நடந்தும் சில இடங்களில் சறுக்கியும் இறங்கிக் கொண்டிருந்தோம்.  பனி இல்லாத பகுதிகளை அடைந்த பிறகு எங்கள் நடையில் ஒரு வேகம் வந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக நடந்து நான்கரை கிலோ மீட்டர் தொலைவினைக் கடந்து, இந்த மலையேற்றத்தின் தொடக்க இடமான சோப்தா வரை வந்து விட்டோம்.  


கீழே வரும்போது உத்திராகண்ட் மாநிலத்தின் பறவையான, வண்ணமயமான மோனல் பறவைகளை நிறைய இடங்களில் பார்க்க முடிந்தது.  அவற்றைப் பார்த்து ஒரு சில படங்களும் எடுத்துக் கொண்டே நடந்தோம்.  ஒரு வழியாக சோப்தா வந்து, எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து உடமைகளை பின்பக்கம் சேர்த்து, உடைகளை மாற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்படத் தயாரானோம்.  என்னதான் எங்களுக்கு உடம்பில் அசதி இருந்தாலும், புறப்பட்டு விட்டோம்.  தொடர்ந்து பயணித்தால் நள்ளிரவிற்கு முன்னர் தில்லி சென்று சேர்ந்து விடலாம் என்று நண்பர் பிஷ்ட் சொன்னார்.  நண்பர் எங்களுடன் மலையேற்றமும் செய்து, வாகனமும் செலுத்த வேண்டும் என்பதால் அவரிடம் முடிந்த வரை பயணிப்போம் இல்லையேல்  ரிஷிகேஷ் அல்லது ஹரித்வார் வரை சென்று அங்கே தங்கிவிட்டு அதிகாலையில் புறப்படலாம் என்று சொல்ல அவர் பார்த்துக் கொள்ளலாம் வாருங்கள் என பயணத்தினைத் தொடங்கி விட்டார்.  இத்தனை தூரம், அதுவும் மூன்று நாட்களும் தொடர்ந்து மலையேற்றம் செய்த பிறகு அசதி நிச்சயம் இருக்கும் தானே.  நான் விழித்துக் கொண்டு இருக்க, மற்ற இரு நண்பர்களும் தூங்கிக் கொண்டிருக்க, நண்பர் பிஷ்ட் தொடர்ந்து வாகனத்தினை இயக்கிக் கொண்டிருந்தார்.  


ஹரித்வார் வந்து சேர்ந்ததும், மீண்டும் நண்பரிடம் தங்கி விட்டுப் போகலாம் என்று சொல்ல, இல்லை தொடர்ந்து பயணித்தால் நள்ளிரவிற்குள் வீடு சேர்ந்து விடலாம் என்று வாகனத்தினை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார்.  வழியில் ஒன்றிரண்டு இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தினோம்.  ஒரு இடத்தில் உணவு உண்டோம். சில நிமிடங்கள் இடைவெளி தந்து மீண்டும் பயணத்தினை தொடங்கி விட்டார் நண்பர் பிஷ்ட்.  தனக்கு ஓய்வு தேவை எனில் நிச்சயம் சொல்கிறேன் என்று தொடர்ந்து வாகனத்தினை சீரான வேகத்தில் இயக்கி நாங்கள் தில்லி எல்லை - அவரது வீடு இருக்கும் நோய்டா பகுதிக்கு வந்து சேர்ந்தபோது இரவு 11.30 மணி!  சுமார் எட்டு மணி நேரத்தில் 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவினைக் கடந்து வந்திருக்கிறோம்.  அதிலும் இடையே சில இடங்களில் நிறுத்தி ஓய்வெடுத்திருக்கிறோம். அதிலிருந்தே அவர் வாகனம் ஓட்டிய வேகம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.  திறமையான ஓட்டுனர் என்றாலும், இது போல தொடர்ந்து பயணிக்க வேண்டாம் - அடுத்த பயணங்களில் ஒரு நாள் அதிகம் எடுத்துக் கொண்டு நின்று நிதானித்து வருவோம் என்றெல்லாம் பேசிக் கொண்டே வந்தோம். 


பொதுவாகவே வாகனம் வைத்திருப்பவர்கள், தனது வாகனத்தினை அடுத்தவர் செலுத்தக் கொடுப்பதில்லை. அடுத்தவர் ஓட்டுகிறேன் என்று சொன்னாலும் அதனை விரும்புவதில்லை.  நண்பர் இந்தர்ஜீத் அவர்களும் கார் வைத்திருக்கிறார், தான் ஓட்டுகிறேன் என்று சொன்னபோதும் பிஷ்ட் அனுமதிக்கவில்லை.  அவரவர் வாகனத்தினை அவரவரே செலுத்துவது தான் சரி என்பது அவரது எண்ணமாக இருந்தது.  அடுத்த பயணத்தில் இந்தர்ஜீத் தனது வாகனத்தினை எடுத்து வருகிறேன் என்றும் அப்போது நானே ஓட்டுகிறேன் என்றும் பேசிக் கொண்டு வந்தார்.  ஆனால் அப்படி ஒரு பயணம் செய்ய எனக்கு வாய்ப்பில்லாமல் போனது!  ஆம் நான் திருச்சிக்கு வந்து பணியில் சேர்ந்துவிட, இப்போது பிஷ்ட் மற்ற நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவரால் பயணிக்காமல் இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு பயண விரும்பி அவர்! இதோ இந்த மே மாதம் கூட உத்திராகண்ட் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்.  எனக்கும் அழைப்பு வந்தது என்றாலும் என்னால் பயணிக்க இயலவில்லை! நவம்பர் மாதம் ஒரு திட்டம் சொல்லி இருக்கிறார் - முடிந்தால் அந்தப் பயணத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.  


இன்னும் ஒரு விஷயம் - என்னதான் அவரிடம் என்னால் இந்த மாதம் உத்திராகண்ட் பயணிக்க முடியாது என்று சோகத்துடன் மறுத்தாலும், வேறு விதத்தில் பயணிக்க வாய்ப்பு அமைந்து விட்டது. இதுவும் ஒரு மலைப்பிரதேச பயணம் தான். எங்கே பயணம்? யாருடன் பயணிக்கிறேன்?  தகவல்கள் என்ன என்பதை எல்லாம் விரைவில் சொல்கிறேன்.  அந்தப் பயணம் குறித்த அனுபவங்கள் விரைவில் ஒரு தொடராக எழுதுவேன்! எழுதலாம் தானே?  ஒரு பயணம் செல்லும்போது அதில் பயணிக்கும் மனிதர்கள் சம எண்ண அலைகள் கொண்டவர்களக இருப்பது மிகவும் அவசியம்.  இதுவரை எனது பெரும்பாலான பயணங்கள் அப்படி சம எண்ண அலைகளைக் கொண்டவர்களுடன் தான் நடந்திருக்கிறது.  ஒன்றிரண்டு நிகழ்வுகள் பிடிக்காதவையாக இருந்திருந்தாலும், மொத்தத்தில் பயணங்கள் அனைத்துமே நல்ல அனுபவங்களையே தந்திருக்கின்றன.  ஆதலால் எப்போது நினைத்தாலும், எப்போது நண்பர்கள் அழைத்தாலும் பயணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்து விடுகிறேன்.  சூழல்கள் சரியாக இருந்தால் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசையாக இருக்கிறது - வேறு எதற்கும் நான் பெரிதாக ஆசைப்படுவதில்லை! மீண்டும் வேறொரு பயணத் தொடர் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…. 


பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வீர்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

15 மே 2026


7 கருத்துகள்:

  1. பனிச்சறுக்கில் வரும் பாடல் காட்சிகக்ள் நினைவுக்கு வந்தன.  ஆ கலே லக் ஜா தேரா முஜ் ஸே  , உன்னால் முடியும் தம்பி இதழில் கதை எழுதும் நேரமிது,... 

    சர்தாரைவிட நீங்கள் எளிதாக சறுக்கி வந்ததது போல தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  2. இறங்குவதில் இருக்கும் சிரமம் யூகிக்க முடிகிறது.  ஆனாலும் திறமையாக சமாளித்து விட்டீர்கள்.  சறுக்குவதற்கு ஆபத்தில்லாத இடம் என்று நண்பர் எதை வைத்து தீர்மானிக்கிறார்?

    பதிலளிநீக்கு
  3. ஓ.... மோனல் என்பது வண்ணமயமான பறவையா? சிம்ரன் தங்கை நினைவு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. பயணம் இனிது நிறைவுற்றது குறித்து மகிழ்ச்சி.  அடுத்து ஒரு மலைப்பயணமா?  வடமலையா, தென்மலையா?!!

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பயணம் பிரமிப்பாக இருக்கிறது.

    அதிலும் பிஷ்ட் அவர்கள் முனைந்து எட்டு மணி நேரம் ஓட்டி தில்லி வந்து சேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பயணம் மிகவும் ரிஸ்க்தான்.

    சறுக்கி இறங்குவது சாகசம் மாத்திரமில்லை, மிகவும் கஷ்டமான ஒன்று.

    யாருக்கும் எந்தவித அபாயமும் இல்லாமல் வந்து சேர்ந்தீர்களே.

    பதிலளிநீக்கு
  7. பனிச்சறுக்கு படங்கள், காணொளி எல்லாம் அருமை. உங்கள் நண்பர் வழிகாட்ட நீங்கள் பின் தொடர்ந்தது அருமை. மோனல் பறவைகள் படம் பகிர்ந்து இருக்கலாம் வெங்கட்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....