சனி, 20 ஜூன், 2026

காஃபி வித் கிட்டு - 244 - மெல்லப்போ… மெல்லப்போ… - சிறு பயணம் - இன்றைய காந்திகள் - யானைகளின் கடைசி தேசம் - முதுமை - வீட்டு வேலை - வறுமை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சராஹன் தங்குமிடம் - சில அனுபவங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது - ஒரு அனுபவம் :  மெல்லப்போ… மெல்லப்போ…






இன்று (07-06-2026) ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை மெதுவாகவே எழுந்தேன். கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கத்தானே செய்கிறது. அதனால காலை நேர நடை இன்றைக்கு மிஸ்ஸிங்.... அதற்கு பதிலாக மாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு கொள்ளிடக்கரை வழியே நடந்து கொள்ளிடம் பாலம் வரை சென்று வீடு திரும்பினேன். மொத்த நடை 6.13 km. 


காவிரியிலேயே தண்ணீர் குறைவாகதான் இருக்கிறது. கொள்ளிடத்தில் ஒரு ஓரத்தில் மட்டும் தண்ணீர் இருக்க மற்ற இடங்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது. இப்போது பெரும்பாலான சமயத்தில் இப்படி வறண்டு கிடக்கும் ஆற்றையே பார்க்க முடிகிறது. தண்ணீர் பற்றாக்குறை எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்றைக்கு காலை ஒரு சோகமான செய்தி படிக்கக் கிடைத்தது. சஹாரா பாலைவனத்தில் 50 நபர்களுடன் சென்ற லாரி பழுதடைந்து மாட்டிக்கொண்டதில் வேறு யாருக்கும் தகவல் சொல்ல முடியாமல் போக, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் ஐம்பது பயணிகளும் இறந்து போயிருக்கிறார்கள். எவ்வளவு வேதனையான விஷயம்…


மாலை நேரம் என்பதால் ஆற்றங்கரையில் சூரிய அஸ்தமனம் பார்த்து ரசிக்க முடிந்தது. அழகான காட்சி தான் என்றாலும் ஆற்றில் முழுக்க தண்ணீர் வரத்து இருந்தால் சூரிய அஸ்தமனக் காட்சி இன்னும் அதிகமாக ரம்மியமாக இருக்கும். இருக்கும் கொஞ்சம் தண்ணீரில் மக்கள் குளிப்பதோடு, உள்ளூர் Dhobi Wala - கள் நிறைய பேர் துணியும் தோய்க்கிறார்கள். அவர்களுக்கு பிழைப்பு நடப்பதற்கும் தண்ணீர் அவசியம் தானே. 


போகும்போதும் திரும்ப வரும்போதும் ஒரு பெரியவரைப் பார்த்தேன். தனக்குத் தானே பேசிக் கொண்டும், அவரை மற்றவர்கள் கடக்கும்போது பாடல் ஒன்றை பாடிக்கொண்டும் இருந்தார். அவ்வப்போது சில வசவுகளும் சர்வ சாதாரணமாக வாயிலிருந்து விழுந்தது. ஒன்று மன நிலை பிறழ்ந்தவராக இருக்க வேண்டும் இல்லை எனில் டாஸ்மாக் சரக்கு உள்ளே சென்று இருக்க வேண்டும். ஒரு நபர் அவரை கடக்கும்போது பாடிய பாடல் மிகவும் பழைய பாடல் - திருடாதே பாப்பா திருடாதே.... திரும்பி வரும் வழியில் மீண்டும் அவரைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும், கைகளை ஆசி தருவது போல வைத்துக் கொண்டு, பாடிய பாடல் - "மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ" என்ற பாடல்.


சிரித்தபடியே அவரைக் கடந்தேன். அவருக்கு என்ன பிரச்சனையோ? அரங்கன் அவருக்கு நல்லதை அருளட்டும் என்று நினைத்தபடி வீடு திரும்பினேன்.


******

 

இந்த வாரத்தின் தகவல் : ஒரு சிறு பயணம்








கடந்த சனிக்கிழமை அன்று எனது இரு சக்கர வாகனத்தில் நீண்டதொரு பயணம் சென்று வந்தேன்.  அலுவலகத்தில் இருக்கும் சிலர் எங்கேனும் சென்று வரலாமே என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  காலையில் புறப்பட்டு மாலையில் திரும்பிவிடுவதாக ஒரு சிறு பயணம் செய்யலாம் என்று சொல்ல, வியாழன் - வெள்ளியில் முடிவு செய்து ஐந்து பேர் மூன்று இரு சக்கர வாகனங்களில் பயணித்தோம்.  நல்லதொரு அனுபவம் இது. காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் பாதைகளில் பயணித்து, கிராமத்து வழிகளில் உலவி இரவு வீடு திரும்பியபோது நேரம் 09.00 மணி.  சின்னச் சின்னதாய் சில சிக்கல்கள் இருந்தாலும், இனிதான ஒரு பயணமாக அமைந்தது - புதிய குழுவுடன் பயணிப்பது கொஞ்சம் சவாலான விஷயம் என்றாலும் நல்லபடியாகவே பயணம் முடிந்தது.  எங்கே சென்றோம், என்ன செய்தோம் போன்ற தகவல்களை விரைவில் இங்கே எழுதுகிறேன். இப்போதைக்கு ஒரு சில படங்கள் மட்டும் மேலே இணைத்திருக்கிறேன். 


******


பழைய நினைப்புடா பேராண்டி : இன்றைய காந்திகள்


2022-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - இன்றைய காந்திகள் - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


மானுட வாழ்வின் நிலைப்புத்தன்மைக்கும், முன்னேற்றத்திற்குமான அடிப்படையான காரணியாகப்  பொருளாதாரமே எப்போதும் இருந்து வருகிறது.


அத்தகைய பொருளாதாரத்தின் செழிப்பிற்கு, சுதந்திர சந்தை என்னும் திறந்த பொருளாதாரம் தேவையா? அல்லது அரசின் கட்டுப்பாடு அவசியமா என்னும் விவாதம் எப்போதும் இருந்து வருகிறது. 


மேற்குறிப்பிட்ட பொருளியல் வடிவங்கள் அனைத்தும், பொதுமக்களை வெறும் நுகர்வோராகவே பார்ப்பதால், சுரண்டல், ஏற்றத் தாழ்வுகள், பணவீக்கம் போன்ற பிரச்சனைகள், தீராத நோய்களாக  அச்சுறுத்துவதோடு, கலவரங்களும், போர்ச்சூழலும் மிகுவதை நம் அண்டை நாடுகளிலேயே காண முடிகிறது. 


இவற்றிற்கு மாற்றாக, அடித்தட்டு மக்களின் பங்கேற்பு என்னும் காந்தியப் பொருளாதார அடிப்படையில், தொலைநோக்குப் பார்வையுடன், நம் தேசத்தில் பல அரும்பணிகளாற்றி, எண்ணற்ற சாதனைகள் புரிந்த பதினோரு ஆளுமைகளின் வாழ்வனுபவங்களே, திரு பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் 'இன்றைய காந்திகள்' நூல்.


மேலே உள்ள சுட்டி வழி நண்பர் அரவிந்த் எழுதிய வாசிப்பனுபவம் ஒன்று - முன்பெல்லாம் அவர் தொடர்ந்து இந்தப் பக்கம் வாசிப்பனுபவங்களை எழுதி வந்தார். இப்போது எழுதுவதே இல்லை.  வேறு வேலைகளில் Concentrate செய்கிறார் என்று தெரிந்தது. பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக நினைவூட்டிய இந்தப் பதிவினை நீங்கள் முழுவதுமாக படி(பார்)க்கலாமே - இது வரை படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


படித்ததில் பிடித்தது  : யானைகளின் கடைசி தேசம்



IAS அதிகாரியாக இருந்த டாக்டர் மு. ராஜேந்திரன் அவர்கள் எழுதிய “யானைகளின் கடைசி தேசம்” எனும் பயண நூலை சமீபத்தில் படித்தேன்.  இந்தோனேசியாவிற்குப் பத்து நாட்கள் பயணம் செய்த போது கிடைத்த அனுபவங்களை எழுதி இருக்கிறார். இந்திய விடுதலைக்காகப் போராடிய பெண் அரசி - அதுவும் ஜான்சி ராணிக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே - வேலு நாச்சியார் உடன் தொடர்புடையது இந்தோனேசியா என்று படித்த போது - ஆர்வம் மேலிட்டது.  தொடர்ந்து படித்தபோது வேலு நாச்சியாரின் மருமகனும் சிவகங்கையின் கடைசி  அரசனுமான வெங்கம் பெரிய உடையணத் தேவர் சுமித்ரா தீவிலுள்ள பென்கோலனில் உள்ள மால்பரோ கோட்டையில்தான் சிறைக் கைதியாக இருந்து, தனது முப்பத்து நான்காவது வயதில் இறந்தார் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.  பயணத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார்.  முடிந்தால் இந்த யானைகளின் கடைசி தேசம் நூலை அமேசான் தளத்தில் தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன். 


******


இந்த வாரத்தின் ஓவியம் - முதுமை :



முகத்தில்/உடம்பில் தெரியும் ஒவ்வொரு சுருக்கமும் சொல்லும் பல அனுபவக் கதைகளை…  ஊட்டி ரவீந்தர் அவர்களின் ஓவியங்களை அவ்வப்போது பார்த்து ரசிப்பதுண்டு. அப்படி ரசித்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு. என் அம்மாவின் அத்தை - இப்படி பல சுருக்கங்களுடன் இருப்பார்.  அந்த மெலிதான தோலை எழுத்து விளையாடியது இன்னமும் பசுமையாய் நினைவில்.  


******


இந்த வாரத்தின் விளம்பரம் :  வீட்டு வேலை


ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு வேலை என்றால் அம்மாவினுடையது மட்டுமே என்ற எண்ணம் அந்த வீட்டின் ஆணுக்கும், பிள்ளைகளுக்கும் மற்ற பெரியவர்களுக்கும் இருப்பது சரியல்ல என்று சொல்லும் ஒரு நல்லதொரு விளம்பரம்… இந்த விளம்பரத்தில் வரும் மூத்த நடிகை நல்ல நடிகர்.  இவரது சில விளம்பரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விளம்பரம் ஹிந்தியில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சப் டைட்டில் உள்ளது என்பதால் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். பாருங்களேன்.


******


இந்த வாரத்தின் நிழற்படம் - படமும் எண்ணங்களும்:



சமீபத்தில் எதையோ இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட நிழற்படம் இது.  கொடிது கொடிது இளமையில் வறுமை என்று சொல்வதுண்டு - இளமை, முதுமை என்று பாகுபாடில்லாமல் வறுமை எப்போதுமே கொடியது தான்.  இந்தப் பெரியவர் வாழ்க்கையில் என்ன கஷ்டமோ? படத்தைப் பார்த்ததும் என்னென்னமோ சிந்தனைகள்…  எதைச் சொல்ல, எதை விட! படம் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றிய எண்ணம் என்ன? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

20 ஜூன் 2026



17 கருத்துகள்:

  1. வாசகம் நன்று. ஒரு சில நொடிகளைக் கூட முடியாது இல்லையா.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நடைப்பயிற்சி - படங்கள் சூப்பர்.

    இந்த முறை எப்போதும் போலல்லாமல் மழை ரொம்பவே குறைவாக இருக்குமாமே இந்த முறை பசிஃபிக் பெருங்கடலில் எல் நினோவாமே.

    பெரியவர் - டாஸ்மாக்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தோப்பும் பம்ப்செட்டும் பார்த்ததும் அப்படியே லயித்துவிட்டேன். சிறு, இளம் வயதிற்கு இழுத்துச் சென்றுவிட்டது.

    சிறுபயணம் - படங்கள் எல்லாம் அட்டகாசம் ஜி. இப்படி இயற்கையை நேரில் பார்த்து சில காலமாகிவிட்டது

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பழைய நினைப்புடா பேராண்டி வாசிக்கவில்லை என்று தெரிந்தது.

    நல்லதொரு நூல் மற்றும் அது சொல்லும் கருத்து. இக்கருத்து குறிப்பாக கிராமங்களிலிருந்து ட்தொடங்க வேண்டும் முன்னேற்றம் என்பது என் அடிமனதிலும் உண்டு கல்லூரியில் என் படிப்பு பொருளாதாரம் என்பதால். grass root level முன்னேற்றம் என்பது முக்கியம் அதுவும் நம்மைப் போன்ற நாடுகளுக்கு. ஆனால் கருத்துகளில் நான் அதைப் பற்றிப் பேசுவதில்லை...முன்பு சொன்ன போது பல எதிர்க்கருத்துகள் வந்ததால் விவாதத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. யானைகளின் கடைசி தேசம் சுவாரசியம் என்று தோன்றுகிறது. Noted.

    ஒவியம் முதுமை பிரமாதம்! ரசித்துப் பார்த்தேன் அந்த strokes ஐ

    ஒருவர் கஷ்டப்பட்டுத் தன் திறமையால் வரையும் ஓவியம் இப்போது AI யால் வரைந்து கொடுக்கப்படுவட்தும் ஒன்றுபோல் ஆவதால் ஒருவரின் திறமையும் அந்த உழைப்பும் அடிபட்டுப் போகிறதோ? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அழகான காணொளி. எல்லா வீடுகளிலும் இது பின்பற்றப்பட வேண்டும்.

    பொதுவாக ஆண் குழந்தைகள் என்றால் வீட்டில் வேலை செய்யக் கூடாது என்று சில வீடுகளில் வளர்ப்பதைப் பார்க்கலாம். பெண்குழந்தைகளையும் தான் செல்லத்தின் பேரில். ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல.

    நமக்கு முந்தைய தலைமுறையில் ரொம்பவே ஆண் குழந்தைகள் வீட்டு வேலை எதுவுமே தெரியாமல் வளர்க்கப்பட்டார்கள், ஏன் நம் தலைமுறையிலும் கூட சில வீடுகளில் ஆண் குழந்தைகள் வீட்டு வேலை தெரியாமல் வளர்ந்தார்கள் என்றாலும் மாற்றம் வந்தது. இப்போது இருவரும் செய்யும் நிலை வந்திருக்கிறது.

    காணொளி ரசித்துப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஜி. நீங்க முன்னர் கொடுத்திருட்ந்த படத்திற்குக் கதை எழுத நினைத்து நினைத்து....இன்னும் முடிந்தபாடில்லை. வரும்....ஆனா மெதுவாக ஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நான் அதிகபட்சம் ஐந்தரை கிலோமீட்டர் நடந்திருக்கிறேன்.  என்னிடம் ஒரு பழக்கம்.  எதையும் மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடைப்பிடிக்க மாட்டேன்.  சோம்பேறித்தனம் வந்து விடும்!  போதாதற்கு இரண்டு முழங்கால்களும் ரிப்பேர் வேறு!!

    பதிலளிநீக்கு
  9. சஹாரா பாலைவனச்செய்தி நானும் படித்தேன். 

    பெரிய பெரிய பிரம்மாண்டமான அபார்ட்மெண்ட் கூட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம் இத்தனை பேர்களுக்கு எப்படி தண்ணீர் வசதி செய்து கொடுப்பார்கள் என்றே எனக்கு முதலில் தோன்றும்!  அரசுக் குடியிருப்பில் வசித்தபோது நான்கைந்து வீடுகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் கஷ்டப் படுத்தினார்கள்.

    பதிலளிநீக்கு
  10. நான் அந்தப் பெரியவரைப் பார்த்திருந்தால் "மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்.." என்று பாடியிருப்பேனோ என்னவோ!  

    பதிலளிநீக்கு
  11. படங்கள் அழகு.  வயலில் நீர் பாய்ச்சும் அந்த பம்ப்செட் படம் என் சிறுவயது நினைவுகளைக் கிளறி விடுகிறது.  Force ஆகப் பாயும் அந்த பம்ப்செட் தண்ணீரில் இப்போதும் குளிப்பது போல உணர்வு.  

    "ஆ....   "  காலில் அப்போது குத்திய முள்ளின் நினைவு இப்போதும் பாதத்தில் உறுத்துகிறது!!

    பதிலளிநீக்கு
  12. அரவிந் அப்போதெல்லாம் இப்படி சில பகிர்வுகள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார்.  இப்போதும் வாட்ஸாப்பில் தொடர்பில் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  13. யானைகளின் கடைசி தேசம் படிக்க ஆர்வம் வருகிறது.  இவர் எழுதிய 1801 என்கிற புத்தகம் பற்றி கொஞ்ச நாள் முன்பு எபியில் பகிர்ந்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. முதுமை ஓவியம் வராதது எனக்கு மட்டும்தானா?  ஒரு கட்டம் மட்டுமே தெரிகிறது.    படத்தை தரவிறக்கி அப்புறம் பதிவில் சேர்த்தால் படம் தெரியும்.  நேரடியாக சேர்த்தால் அதாவது காபி பேஸ்ட் செய்தால் சமயங்களில் இப்படி ஆகும். 

    பதிலளிநீக்கு
  15. விளம்பரம் சொல்லும் கருத்து அருமையானது.  அறியாமலேயே புரியாமலேயே நாம் சில வார்த்தைகளை அர்த்தம் உணராமல் உபயோகித்து விடுகிறோம்!

    பதிலளிநீக்கு
  16. படத்தைப் பார்த்ததும் பாவம் பெரியவர் என்றுதான் தோன்றியது. "விடுங்க பெரியவரே... இன்னும் கொஞ்ச நாள்தான்!"

    பதிலளிநீக்கு
  17. முதியவரின் படத்தில் அவர் கண்ணாடியின் நிலை மனதை என்னவோ செய்கிறது. உற்றார் உறவினர் இல்லையா? இருந்தாலும் இதைச் சரி செய்து கொடுக்கும் மனம் இல்லையா? இல்லை யாருமில்லாமல் இருக்கிறாரா?

    நம் நாட்டில் இப்படியானோரைப் பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. தன்னிறைவு இருந்தால்தானே மிச்சத்தை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசிக்க முடியும் இல்லையா? இப்படியான நிலையிலும் பலர்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....