அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்டோன்ஸ் - உழைப்பாளிகள் - மதிய உணவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
புரிதல் - 25 ஜூன் 2026 :
கணவன் மனைவி இடையே புரிதல் என்பது இருக்குமானால் அவர்களின் இல்வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சொல்வது போலவே இந்தப் புரிதல் என்பது நம் நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள் என்று சகலரிடத்திலும் இருந்தால் அது என்றுமே நன்மையே உண்டாக்கும்!
அதுபோல் முகநூல் உலகிலும் ஒருவருக்கொருவர் புரிதல் எப்படியிருக்கு என்று மார்க் தம்பி சில நாட்களாக டெஸ்ட் செய்து பார்க்கிறார்…:) ஆமாங்க! ஒவ்வொரு நாளும் மெமரீஸ்ல போய் நம்முடைய பழைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, கடைசியாக ஏதேனும் ஒரு படத்துடன் கூடிய கமெண்ட்டை கொடுத்து இதை யார் சொல்லியிருப்பார்கள் என்று நாலு ஆப்ஷனைக் காண்பிக்கிறது!
நம்முடைய பதிவுகளுக்கு கிடைக்கும் கருத்துகளில் உரிமையோடு அல்லது குறிப்பிட்ட ஸ்டைல் என்று இப்படி கமெண்ட் செய்பவர் இவர்களில் யாரென சொல்ல வேண்டும்! ஒருவிதத்தில் இது ஒரு விளையாட்டு போல தான் இருக்கிறது. நம் நட்புவட்டத்தை பற்றி நாம் எப்படி புரிந்து வைத்திருக்கிறோம் என்பது தான் டெஸ்ட்…:) அந்த விதத்தில் இதுவரை நான் சரியாகத் தான் பதிலளித்திருக்கிறேன் என்று பெருமைப்படுகிறேன்…:)
உங்களுக்கும் இப்படி வருகிறதா என்று பாருங்கள்..🙂
******
என் அன்புக் கணவருக்கு…. - 27 ஜூன் 2026 :
இவரைப் பற்றி நான் சொல்லாமல் யார் சொல்லுவாங்க சொல்லுங்க! வாழ்வின் எந்த நிலையிலும் தன்னலம் தவிர்த்து பிறர் நலனில் அக்கறை செலுத்தும் ஒரு மனிதர்! பணத்தின் பின்னே செல்லும் உலகில் இவர் சற்று வித்தியாசமானவர்! நெறி தவறாத வாழ்வில் கடமையின் பின்னே செல்பவர்! அப்பா அம்மாவுக்கு ஏற்ற பிள்ளை! நேர்மையான அரசு அதிகாரி! பயணக்காதலன்! பரோபகார குணம் கொண்டவர்! தயாள குணம் கொண்டவர்! உழைப்பாளி!
திருமணமாகிய இந்த 24 வருடங்களில் இவரைப் பற்றி தெரிந்து கொண்டதும், புரிந்து கொண்டதும் நிறையவே! இவரின் மைண்ட் வாய்ஸைக் கூட என்னால் கேட்ச் பண்ண முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..🙂 ஒரு விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பார்! என்ன சொல்வார்! எது பிடிக்கும்! எது பிடிக்காது! எதற்கு சிரிப்பார்! எதற்கு கோபம் கொள்வார்! என்று சொல்லிக் கொண்டே போகலாம்..🙂 சரி! எதுக்கு இதெல்லாம் சொல்றம்மா! என்று நீங்கள் சொல்ல வருவதும் எனக்குப் புரிகிறது…:)
இன்றைய நாள் இவருக்கான நாள்! ஆமாம்! இன்று என்னவரின் பிறந்தநாள்! இவரைப் பற்றி உருகி உருகி பக்கம் பக்கமாக புத்தகத்திலும் பதிவுகளிலும் நிறைய எழுதியிருக்கிறேன்! அதில் எல்லாம் எந்த மாற்றுக் கருத்துகளும் இல்லை! உயரத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த இந்த மனிதரின் வாழ்வில் எங்களால் எந்தவித கஷ்டங்களும் வந்துவிடக்கூடாது என்பதில் என்றுமே கவனமாக இருப்பேன்!
மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக நீண்ட நெடுங்காலம் வாழ என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! பல வருடங்களுக்குப் பிறகு இம்முறை நேரில் வாழ்த்துச் சொல்ல வாய்ப்பு அமைத்துத் தந்திருக்கிறார் இறைவன்! உங்களோடு சேர்ந்தும் என் அன்புக் கணவருக்கு ஒருமுறை வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
******
அன்பு சூழ் உலகு - 29 ஜூன் 2026:
என்னவரின் பிறந்தநாளுக்கு தங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு வாழ்த்துகளை அள்ளித் தெளித்த அன்பான நட்புகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்துகளால் அன்றைய நாள் மிகவும் இனிமையாக மாறியது!
******
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
30 ஜுன் 2026




அடடே.. இப்படி ஒரு மெமரி நினைவூட்டலா? இதுவரை எனக்கு எதுவும் அப்படி வரவில்லை! சி நே சி ம பதிவில் என் பெயரும் அது சரியாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலும் மகிழ்ச்சி அளிக்கின்றது!
பதிலளிநீக்குஇங்கும் மறுபடியும் வெங்கட்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குபதுவும் அருமை.
புரிதல் அருமை.
வெங்கட் படங்கள் எல்லாம் அருமை.
//மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக நீண்ட நெடுங்காலம் வாழ என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! பல வருடங்களுக்குப் பிறகு இம்முறை நேரில் வாழ்த்துச் சொல்ல வாய்ப்பு அமைத்துத் தந்திருக்கிறார் இறைவன்! உங்களோடு சேர்ந்தும் என் அன்புக் கணவருக்கு ஒருமுறை வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்! //
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வெங்கட், நானும் சொல்லிக் கொள்கிறேன். முகநூலிலும் சொன்னேன்.
முதல் படங்கள் முதலில் புரியவில்லை அப்புறம் உங்க வரிகளை வாசித்ததும் புரிந்துவிட்டது.
பதிலளிநீக்குநட்புகளைப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கும் அப்பாற்பட்டு அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதும் பெரிய விஷயம் இல்லையா!
கீதா
வெங்கட்ஜி க்கு மனமார்ந்த வாழ்த்துகள்! எப்போது ஆரோக்கியத்துடன், வயது தடையில்லாமல் சந்தோஷமாகப் பயணித்துக் கொண்டே (இது இருவகைப் பயணங்களுக்கும் பொருந்தும்!!!!!!!!) இருக்கவும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமுதல் படமும் நான்காவது படமும் ரொம்பப் பிடித்தது...மற்றவை கொஞ்சம் ஃபார்மல் இல்லையா!!! ஹாஹாஹா....
கீதா
ஓ! ஜூன் 27 பிறந்தநாள்!
பதிலளிநீக்குகீதா