புதன், 24 ஜூன், 2026

Lahaul Spiti Circuit Trip - பகுதி பத்து - சங்கிலி எதற்கு - ஸ்ரீகண்ட் கைலாஷ் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடரின் சென்ற பகுதியில் பீமாகாளி மந்திர் வளாகத்தில் இருந்த நீண்ட சங்கிலி குறித்தும் அது எதற்காக என்பதை அங்கே இருந்த காவலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம் என்றும் எழுதி இருந்தேன்.  அந்தச் சங்கிலி எதற்கு என்பதை சென்ற பகுதியில் எழுதாமல் ஒரு சஸ்பென்ஸுடன் முடித்திருந்தேன். இந்தப் பகுதியில் அந்தச் சங்கிலி தொங்குவதற்கான காரணம் என்ன என்பதையும் அந்தக் காவலரிடம் பேசியபோது கிடைத்த மற்ற தகவல்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  வாருங்கள் பதிவிற்குள் போகலாம்! 



ஆலயத்தினுள்ளே நுழையுமுன்னர்...


ஆலய வளாகத்தில் ஒரு பூ...





ஆலயத்தினை பாதுகாப்பது நம் கடமை என்று சொல்லும் பதாகை...


இந்தப் பகுதியில் இருக்கும் ஆலயம் மற்றும் சில வீடுகள் பல வருடங்கள் முன்னர் கட்டப்பட்டவை.  குளிர்காலம், பனிப்பொழிவுக் காலம் போன்றவற்றை மனதில் வைத்து கட்டுமானங்களை கட்டும் போதே இரண்டு அல்லது மூன்று தளங்களாகவே கட்டியிருக்கிறார்கள்.  கீழ் தளத்தில் இருக்கும் கதவு போன்ற அமைப்பு சிறிய அளவில் இருந்திருக்கிறது. கால்நடைகள் - மாடு, யாக், ஆடுகள் போன்றவை கீழ்/தரைத் தளத்தில் இருக்க, முதலாம் மாடியில் அவற்றுக்கான உணவு வகைகளைச் சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தி இருக்கிறார்கள்.  அதற்கு மேல் தளத்தில் தான் அவர்கள் வசிக்கும் வீடுகள் அமைத்திருக்கிறார்கள்.  பெரும்பாலும் மனிதர்கள் மேல் தளத்தில் இருப்பதால், கீழே இருக்கும் பகுதியில் வெளி மனிதர்கள் யாரேனும் வந்து வீட்டினரை அழைக்க வேண்டும் என்றால் எப்படி அழைப்பது - அந்தக் காலத்தில் இப்போது போல மின்சாரத்தில் இயங்கும் Calling Bell வசதிகள் இல்லையே! கதவுகளில் நாதாங்கி அல்லது வளையங்கள் மாட்டி அதனைத் தட்டுவார்கள் என்றாலும் தரைத் தளத்தில் தட்டினால் இரண்டாம் தளத்தில் இருப்பவர்களுக்குக் கேட்காது.



ஆலய வளாகத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு முன்னே...


ஆலயத்தினுள்ளே நுழையுமுன்னர்...



ஆலயம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து வெளியே எடுத்த படம்...

இதனைக் கருத்தில் கொண்டு தான் இப்படி இரண்டாம் தளத்திலிருந்து நீண்ட சங்கிலியைக் கட்டி வைத்திருப்பார்கள். கீழே வரை அந்தச் சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கும். விருந்தாளிகள் வந்தால் அந்தச் சங்கிலியைப் பிடித்து ஆட்டினால், அதன் மறு புறத்தில் இருக்கும் ஒரு அமைப்பு சத்தம் எழுப்ப, மேலே இருப்பவர்களுக்கும் அந்தச் சத்தம் கேட்டு,மேலிருந்து எட்டிப் பார்த்து விருந்தினரை அடையாளம் கண்டபின்னர் கீழே வந்து கதவைத் திறந்து விடுவார்களாம்.  அதற்காகவே இப்படியான வசதியை அந்தக் காலத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்களாம்.  இந்தத் தகவல் மட்டுமல்லாது வேறு சில தகவல்களையும் அவரிடம் நாங்கள் பேசித் தெரிந்து கொள்ள முடிந்தது.  அவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதோடு ஹிமாச்சலப் பிரதேசத்தின் காவல்துறையில் பணி கிடைத்ததோடு அவரது ஊரிலேயே பணிபுரிய வாய்ப்பும் கிடைத்தது காளி மாதாவின் அனுக்ரஹம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் ஊர் குறித்தும், ஆலயம் குறித்தும் செய்திகள் கேட்டபோது மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.



ஆலயத்தினுள்ளே நுழையுமுன்னர் சாலையிலிருந்து எடுத்த படம்...



ஆலயவளாகத்தில் ரோஜாக்கள்...

அவர் சொன்ன மற்றுமொரு தகவல் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்ததோடு நல்லதொரு விஷயமாகவும் இருந்தது.  கைலாஷ் என்று சொன்னால் ஒரே ஒரு கைலாஷ் மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கும்.  கேதார்நாத் என்றாலே உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஒரு கேதார் மட்டுமே பலருக்கும் தெரியும். ப்ரயாக், கேதார் மற்றும் கைலாஷ் என மூன்றிற்குமே ஐந்து எனும் எண் சேர்த்து பஞ்ச் ப்ரயாக், பஞ்ச் கேதார் மற்றும் பஞ்ச் கைலாஷ் என இடங்கள் ஐந்து ஐந்தாக உண்டு. அவற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் விதமாக இங்கே தருகிறேன்.


பஞ்ச் ப்ரயாக் - தேவ் ப்ரயாக், ருத்ர ப்ரயாக், கர்ண ப்ரயாக், நந்த் ப்ரயாக் மற்றும் விஷ்ணு ப்ரயாக் - அனைத்துமே உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. 


பஞ்ச் கேதார் - கேதார்நாத், துங்க்நாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கல்பேஷ்வர் - பஞ்ச் ப்ரயாக் போலவே பஞ்ச் கேதார் என அழைக்கப்படும் ஐந்து கேதார்களும் உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. 


பஞ்ச் கைலாஷ் - கைலாஷ் (திபெத், சைனா), ஆதி கைலாஷ் (உத்திராகண்ட்), கின்னோர் கைலாஷ், மணிமஹேஷ் கைலாஷ் மற்றும் ஸ்ரீகண்ட் கைலாஷ் (கடைசி மூன்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ளன) ஆகிய ஐந்து கைலாஷ். 



ஸ்ரீகண்ட் மஹாதேவ் - ஸ்ரீகண்ட் கைலாஷ்...
(படம்: இணையத்திலிருந்து...)



ஸ்ரீகண்ட் கைலாஷ்... - ஒரு தூரப் பார்வை...
(படம்: இணையத்திலிருந்து...)


கின்னர் கைலாஷ்...
(படம்: இணையத்திலிருந்து...)


நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த பீமாகாளி மந்திர் வளாகத்திலிருந்து எதிரே பார்த்தால் தெரியும் மலைச் சிகரங்களைக் காண்பித்து, இங்கேயிருந்தே நீங்கள் ஸ்ரீகண்ட் கைலாஷ் மஹாதேவை காண முடியும் என்று சொல்லி, எங்களிடம் அலைபேசியில் இருக்கும் Zoom வசதியைக் காண்பிக்கச் சொல்ல, நண்பர் Pramod இடம் இருந்த அலைபேசியான Samsung S23 - ஐ கேட்டு வாங்கிக் கொண்டு , அதில் இருக்கும் 100 X Zoom வசதியினால் நன்கு Zoom செய்து அலைபேசி வழி எங்களுக்கு அந்த மலைச்சிகரத்தினை காண்பித்தார்.  இந்த ஸ்ரீகண்ட் கைலாஷ் என்பது தரைமட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 17150 அடி (5227 மீட்டர்) உயரத்தில் இருக்கும் ஒரு மலைச்சிகரம் - 75 அடி உயரம் இருக்கும் அந்தச் சிகரத்தினை தான் சிவபெருமானாக - ஸ்ரீகண்ட் மஹாதேவ் என போற்றி வழிபடுகிறார்கள்.  மிகவும் கடினமான ஒரு மலையேற்றம் அது. Base Camp எனச் சொல்லப்படும் Jaon கிராமத்திலிருந்து ஒரு வழி மலையேற்றம் சுமார் 35 கிலோ மீட்டர் - ஆக மேலே சென்று மீண்டும் திரும்ப மொத்தம் 70 கிலோ மீட்டர் நடைப் பயணம். இந்த நடைப் பயணத்தினை முடிக்க ஆறிலிருந்து எட்டு நாட்கள் ஆகலாம். 


அடர்ந்த காடு, பனிப்பாறைகள் (Glacier) மற்றும் பனி உருகியதால் உருவாகும் ஓடை/ஏரிகள் என பல பகுதிகளை நடந்து கடந்து தான் இந்த மலைச்சிகரத்தினை அடைய வேண்டியிருக்கும். அப்படி கடுமையான நடைப்பயணம் முடிந்து பார்க்க வேண்டிய ஸ்ரீகண்ட் கைலாஷ் மஹாதேவரை நாங்கள் சராஹன் கிராமத்திலிருந்து அலைபேசி வழிக் காண முடிந்தது - அந்த ஈசன் செயல்.  அந்தக் கிராமத்துக் காவலர் உதவியுடன் நாங்கள் தரிசனம் பெற்றோம்.  என்னதான் மலையேற்றம் எனக்குப் பிடித்தது என்றாலும், எல்லா சிகரங்களையும் இப்படி மலையேற்றம் செய்து பார்க்க முடியாது - அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா! முந்தைய ஹிமாச்சலப் பயணத்தில் கின்னோர் கைலாஷ் மஹாதேவரைக் கூட இப்படி எனது Canon DSLR Camera 250MM Zoom Lens வழி தான் கல்பா எனும் இடத்திலிருந்து பார்த்து ரசித்தேன். அதனை பகிர்ந்து கொண்டுமிருக்கிறேன். முடிந்தவரை பஞ்ச் ப்ரயாக், பஞ்ச் கேதார் மற்றும் பஞ்ச் கைலாஷ் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இது வரை பஞ்ச் ப்ரயாகில் தேவ் ப்ரயாக் மற்றும் ருத்ர ப்ரயாக் சென்றதுண்டு.  பஞ்ச் கேதாரில் துங்க்நாத் மட்டுமே சென்று பார்த்து வந்திருக்கிறேன். பஞ்ச் கைலாஷ் என அழைக்கப்படுவதில் இரண்டு கைலாஷ் - கின்னோர் கைலாஷ் மற்றும் ஸ்ரீகண்ட் கைலாஷ் - ஆகிய இரண்டுமே இப்படியான உபகரணங்கள் வசதியுடன் தான் பார்த்திருக்கிறேன். 


கின்னோர்/கின்னர் கைலாஷ் மற்றும் ஸ்ரீகண்ட் கைலாஷ் ஆகிய இரண்டு இடங்களுக்கும் மலையேற்றம் செய்ய உங்களுக்கு வழிகாட்டி தேவையாக இருக்கும். இந்த மலையேற்றப் பயணங்களை சில நிறுவனத்தினர் ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் நடத்துகிறார்கள். அவர்கள் உடன் பயணிப்பது நல்லது என்பதால் இப்படியான ஒரு நிறுவனத்தினை தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் வழியில், அவர்களது வழிகாட்டியுடன் பயணிப்பது தான் நல்லது.  இந்தப் பயணங்களுக்கெல்லாம் அதிக நாட்கள் தேவை என்பதால் தற்போதைய நிலையில் நிச்சயம் என்னால் செல்ல இயலாது. அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்து ஸ்ரீகண்ட் கைலாஷ் பார்க்க முடிந்ததே என்று த்ருப்தி அடைவதோடு, அதனைக் கொடுக்க நமக்கு உதவிய அந்த ஆண்டவனுக்கும் ஒரு வழியாக இருந்த அந்தக் காவலருக்கும் நன்றி சொல்வதே நல்லது. இப்படியான எண்ணங்கள் அந்த ஆலயத்தில் இருக்கும் நேரத்திலும் எனக்குள் இருந்தது.  தொடர்ந்து அந்தக் காவலருடன் ஆலயத்தில் வாசிக்கும் வாத்யம், கீழே அமைந்திருக்கும் சிறு சிவன் மற்றும் நரசிம்மர் ஆலயங்கள், பராமரிக்கும் அழகான பூஞ்செடிகள், அங்கே இருக்கும் கடைகள் போன்றவை குறித்து பேசிக் கொண்டிருந்த பிறகு அவருக்கு நன்றி சொல்லி, அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். அங்கிருந்து கிராமத்தில் உலா வந்தோம். கிராமத்தில் பார்த்த மற்ற இடங்கள் என்ன, தகவல்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

24 ஜூன் 2026


8 கருத்துகள்:

  1. முதல் படத்தில் இருக்கும் பூ படம்... அது பூவா மொட்டா?

    பதிலளிநீக்கு
  2. சங்கிலி பற்றிய விவரமும், கைலாஷ் கேதார் விவரமும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  3. அடடே..  நானும் சாம்சங் S 23 தான்.  ஸ்ரீகண்ட் மஹாதேவ் செல்லவேண்டும் என்னும் எண்ணம் உங்க மனதில் இந்நேரம் உதயமாகி இருக்க வேண்டுமே...

    பதிலளிநீக்கு
  4. ஓ.. எனக்கு பதில் அடுத்தடுத்த பாராக்களிலேயே இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. வாசகம் நல்லாருக்கு. புன்சிரிப்பும் வந்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது படம் விரியக் காத்திருக்கும் ரோஸ் மொட்டு!

    ஹிந்தி பதாகையை வாசித்தேன் பொத்தாம் பொதுவாகப் புரிந்தது. சில சொற்களுக்கு அர்த்தம் பார்க்கிறேன் இணையத்தில். இப்படிக் கத்துக்கலாமேனுதான்!

    சங்கிலி விஷயம் புரிந்தது. நல்ல யோசனை!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ப்ரயாக், கேதார் மற்றும் கைலாஷ் என மூன்றிற்குமே ஐந்து எனும் எண் சேர்த்து பஞ்ச் ப்ரயாக், பஞ்ச் கேதார் மற்றும் பஞ்ச் கைலாஷ் என இடங்கள் ஐந்து ஐந்தாக உண்டு//

    பாஞ்ச் ப்ரயாக் - நீங்க சொல்லிருந்தீங்க முன்னர். தேவப்பிரயாகையில் நீராடியது? ருத்ரப்ர்யாக்... பற்றியும் சொன்ன நினைவு...என் நினைவுத் திறனைப் பரிசோதித்தல்தான்...அது போல பஞ்ச கேதாரில் துங்கநாத் நீங்க போய் வந்தீங்களே அப்ப இது சொன்ன நினைவு.

    பஞ்ச் கைலாஷில் ஸ்ரீகண்ட் கைலாஷ், கின்னர் கைலாஷ் யம்மாடியோவ்! பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதே

    //அதில் இருக்கும் 100 X Zoom வசதியினால் நன்கு Zoom செய்து அலைபேசி வழி எங்களுக்கு அந்த மலைச்சிகரத்தினை காண்பித்தார். //

    வாவ்!

    கின்னோர் முன்ன இப்படிப் பார்த்திருக்கீங்களோ?

    அட! அடுத்து வரும் வரிகளில் வந்துவிட்டது...நான் பாஸ்!

    விவரங்கள் அறிந்து கொண்டேன்...ஹூம் கிட்ட இருக்கும் இடங்களுக்கே போக முடியலை. ஹிமாச்சலுக்கும் உத்ர்காண்டிற்கும் பயணம் செய்ய ஆசைதான்...எல்லாத்துக்கும் ஆசைப்படுவோம்!!! என்று..ஹிஹிஹி

    என் நினைவுக்கு பாஸ் மார்க் போட்டுக் கொண்டேன் ப்ர்யாக் நீங்க சொல்லியிருப்பது பார்த்ததும்...

    விவரங்களும் படங்களும் அருமை வெங்கட்ஜி! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அழகான புகைப்படங்கள்,வர்ணனை. நீ camera வழியாக ஈஸ்வரனை தரிசனம் செய்தாய்.நாங்கள் உன் படங்கள் வழியாக! நன்றி🙏🏻
    உனக்காகவே யாரோ எழுதியிருக்கிறார்கள்(இன்றைய வாசகம்)
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....