வியாழன், 6 பிப்ரவரி, 2014

கட்டில் சப்ஜி!



 பட உதவி: கூகிள்

பல சமயங்களில் நாம் நினைப்பது ஒன்றாக இருக்க, பேசுவது வேறாக இருக்கும். சொல்ல வந்த வார்த்தைக்கு ஒத்துப் போகும், அதே மாதிரி ஒலிக்கும் வார்த்தைகளைச் சொல்லி, கேட்பவர்களை குழப்பி விடுவோம் – “என்ன சொல்ல வராங்க, ஒண்ணுமே புரியலை, மறை எதும் கழண்டுச்சா?என நினைக்கவும் வைத்து விடுவது வழக்கம். அப்படி நான் குழம்பிய சில விஷயங்களை இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  முதலில் வருவது – ஸ்காட்ச் ப்ரைட்..

ஸ்காட்ச் ப்ரைட்:

தில்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அதே வண்டியில் எனக்கு தெரிந்த ஒருவரும் பயணம் செய்தார். அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தோம்.  உணவு சாப்பிடும் போது இருவருமாக சேர்ந்து சாப்பிட்டோம்.  நாக்பூர் சமீபத்தில் வரும்போது அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது – நாக்பூரில் ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கும், சாப்பிடுங்க!என. நாக்பூர் ரயில்நிலையத்தில் நடைமேடையில் இறங்கி ஐஸ்க்ரீம் விற்பனை செய்யும் தள்ளுவண்டி அருகே சென்றோம். அவரிடம் என்னுடன் வந்தவர் கேட்டது – “இரண்டு ஸ்காட்ச் ப்ரைட் கொடுப்பா”. ஐஸ்க்ரீம் வியாபாரி பலமாக முழித்தார் – ஐஸ்க்ரீம்ல இந்த பெயர்ல ஒண்ணும் இல்லையே என முழித்து, என்ன வேண்டும் எனக் கேட்க, மீண்டும் அதே “ஸ்காட்ச் ப்ரைட்கேட்க, அவர் முகத்தில் குழப்ப ரேகைகள் அதிகரித்தது! அதற்குள் சுதாரித்த நான் “அட அவங்க கேட்டது பட்டர் ஸ்காட்ச்எனும் கோன் ஐஸ்க்ரீம் எனப் புரிய வைத்தேன்.

உடன் வந்தவருக்கும் அவரது தவறு புரிய, “எப்பவும் பாத்திரம் தேய்க்கற நினைவு!என்று சொல்லிக் கொண்டார்! சிரித்தபடியே “ஸ்காட்ச் ப்ரைட்”-ஐ அட அதாங்க “பட்டர் ஸ்காட்ச்”-ஐ சுவைத்தோம்!

இரண்டாவது நிகழ்வு எனது அலுவலகத்தில் – அது சக்ரீன் டச்

சக்ரீன் டச்:

அலுவலகத்தில் ஒரு ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர் இருக்கிறார். ஒரு நாள் காலை என்னிடம் வந்து என் மகள் சக்ரீன் டச் வேணும்னு அடம் பிடிக்கிறா. எவ்வளவு விலை ஆகும்?எனக் கேட்க என்னிடம் பதில் இல்லை! அவர் என்ன கேட்கிறார் என்பது புரிந்தால் தானே பதில் சொல்ல!  கொஞ்சம் சமாளித்துக் கொண்டு பார்த்து சொல்றேன், என்ன வேணும்னு சொன்னீங்க?என்று திரும்பவும் கேட்டேன். அதற்கு அவரும் “அதாம்பா, சக்ரீன் டச்! அந்த மாடல் மொபைல் தான் வேணுமாம்!என்று சொல்ல, அப்போது தான் எனக்குப் புரிந்தது, அவர் கேட்டது டச் ஸ்க்ரீன்வசதி கொண்ட மொபைல் என்பது.  இணையத்தில் தகவல்கள் தேடி அவருக்குச் சொன்னேன்.  இப்போதும் “டச் ஸ்க்ரீன்விளம்பரங்களைப் பார்க்கும்போது அவர் நினைவு தான் வரும்!

சரி மூன்றாவதாக இந்தப் பதிவின் தலைப்பாக வைத்திருக்கும் விஷயத்திற்கு வருகிறேன்....

கட்டில் சப்ஜி:

தில்லியில் இருக்கும் நண்பர் ஒருவர் ஒரு நாள் அவரது வீட்டிற்கு உணவு உண்ண அழைத்திருந்தார்.  நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்று சில நிமிடங்கள் பேசியதும், “அண்ணே, சாப்பிட வாங்கண்ணே!, உங்களுக்காக ‘கட்டில் சப்ஜி’ செய்து வைத்திருக்கேன்!எனச் சொன்னதும் எனக்குள் அதிர்ச்சி.  கட்டில் காலை கொஞ்சம் கொஞ்சமா நறுக்கி சப்ஜி செய்து இருப்பாரோ? எனக்கு மரக்கறி சாப்பிட்டு பழக்கம் இல்லையேஎன யோசித்தபடி, சரி வருவது வரட்டும் பார்த்து விடலாம்! என மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ”கொஞ்சம் போகட்டும், சாப்பிடலாம்எனச் சொல்லிவிட்டு என்னவாக இருக்கும் என யோசித்தபடியே பேசிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் அழைக்கவே, சரி வந்தது வரட்டும் என சாப்பிட அமர்ந்தேன். வந்தது கட்டில் சப்ஜி!அட இது தானா என யோசிக்க வைத்தது அந்த உணவுப் பண்டம் – கட்டல் கா சப்ஜி! ஹிந்தியில் பலாவினை ‘கட்டல்என்று அழைப்பார்கள். பலாப்பிஞ்சு போட்டு சப்ஜி செய்வார்கள். அதைத்தான் நண்பரின் மனைவி “கட்டில் சப்ஜிஎன்று சொல்லி என்னைக் குழப்பி விட்டார்கள்!

என்ன நண்பர்களே, பதிவினை ரசித்தீர்களா?

வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....

புதன், 5 பிப்ரவரி, 2014

தொடர்ந்து வந்த பேய்!



உங்களுக்கு பேய், ஆவி, பூதம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டா? பயம் இருக்கிறதா? இல்லை இந்த விஷயங்களில் ஏதேனும் அனுபவம் இருக்கிறதா? இதுவும் ஒரு விதமான பேய் அனுபவம் தான்! ஆனால் இது எனக்கேற்பட்ட அனுபவம் அல்ல! எனது நண்பர் பத்மநாபன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் இது.  அவர் சில நாட்களுக்கு முன்னர் அவருக்குக் கிடைத்த அனுபவத்தினை சுவை படச் சொல்லிக் கொண்டிருந்தார் – அவர் ஒரு நல்ல கதை சொல்லி!


 பட உதவி: கூகிள்

அவர் சொன்ன கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்திருந்தேன். அதற்கு இப்போது வேளை வந்துவிட்டது. நேற்று நெய்வேலி சென்றிருந்தபோது நாங்கள் இருந்த வீட்டின் முன்புறம் இருந்த புளியமரம் பார்த்தபோது பத்மநாபன் அண்ணாச்சி சொன்ன கதையும் நினைவுக்கு வந்தது. புளியமரம் என்றாலே பேய் இருக்கும் எனச் சொல்வது வழக்கமில்லையா? சரி இனி பத்மநாபன் சொன்ன அனுபவம் – என் வார்த்தைகளில்!


கல்லூரியில் படிப்பு முடித்து சில நாட்கள் ராஜாக்காமங்கலத்தில் சும்மா இருக்க வேண்டாமென விவேகானந்தா கேந்திராவில் பணி புரிந்த சமயம். கேந்திராவில் இருந்ததால் பக்கத்து ஊர்களில் எந்த கோவிலில் திருவிழா என்றாலும் எங்களையும் அழைப்பார்கள். ஒரு சில நிகழ்ச்சிகளை கேந்திரா சார்பாக நானும் நடத்தியதுண்டு. பல இடங்களில் விதம் விதமான சுவையான அனுபவங்கள் கிடைத்தது.  ஒரு சமயம் 7 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பள்ளியில் என்னையும் நண்பர் ஒருவரையும் அங்கே நடந்த விழாவில் பேச்சாளர்களாக அழைத்திருந்தார்கள்.  

அப்போதெல்லாம் அத்தனை பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் சைக்கிளில் தான் பயணம் செய்ய வேண்டும். என்னைப் போன்று சொந்த சைக்கிள் இல்லாதவர்கள், வாடகைக்கு சைக்கிள் எடுத்து பயணிப்பது வழக்கம். ஆனால் அன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் நாங்களே உங்களை அழைத்துச் செல்கிறோம் எனச் சொல்லிவிட்டதால் அவர்களுடனே பயணித்தோம். இரவு எட்டுமணிக்கு அந்த ஊரில் உள்ள கோவில் அருகில் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

குத்துவிளக்கு ஏற்றுவது, வரவேற்புரை, பேச்சாளர்களுக்கு மரியாதை செய்வது, என படிப்படியாக முடித்து எனது நண்பர் பேச ஆரம்பித்தபோது இரவு 09.00 மணி. அரை மணி நேரத்திற்கு மேல் அவர் பேசிய பிறகு நான் பேச ஆரம்பித்தேன். எனக்குக் கொடுத்திருந்த தலைப்பில் பேசி முடித்த போது இரவு பத்து மணிக்கு மேல். பார்வையாளர்கள் கொடுத்த பலத்த வரவேற்பில் திளைத்த நாங்கள், மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தோம்.

சரி நேரம் ஆகிவிட்டது, வீடு திரும்பலாம் என எங்களை சைக்கிளில் அழைத்து வந்தவர்களை கூட்டத்தில் தேடினால், அவர்களைக் காணவில்லை. நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்களும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்களும் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்து விடவே, உள்ளூர்காரர்கள் ஒரு சிலரே அங்கே இருந்தனர். யாரிடமும் சைக்கிள் இல்லாததால், நடந்தே வீடு திரும்ப வேண்டிய கட்டாயம்! சரி ஏழு கிலோ மீட்டர் தொலைவு தானே, பேசிக்கொண்டே நடந்து விடலாம் என நடக்க ஆரம்பித்தோம்.

நாங்கள் சென்ற ஊருக்கும் எங்கள் ஊருக்கும் நடுவே இருந்த தூரம் முன்னர் சொன்னபடி ஏழு கிலோ மீட்டர். அதைக் கடப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என நாங்கள் நடந்தாலும் உள்ளூர ஒரு பயம் – காரணம், வழியில் ஒரு சுடுகாடு உண்டு! பொதுவாக இரவு நேரங்களில் மனித நடமாட்டம் சுத்தமாக இருக்காது. ஆனால் அங்கே பேய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனவும், அவற்றிடம் மாட்டிக்கொண்ட மனிதர்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது கேட்டதுண்டு. இருந்தும் பயத்தினை வெளியே காட்டாது நடந்து கொண்டிருந்தேன். நண்பர் சும்மா இருக்காது, “ஏலே, பேய் நடமாட்டம் இங்கே உண்டுலே... கொலுசு சத்தமோ, மல்லிகை வாசமோ வந்தா திரும்பிப் பார்க்காதேலேஎனச் சொல்லவே மனதில் கிலி அதிகமானது!

சுடுகாடு சமீபத்தில் வந்து கொண்டிருந்தபோது ‘வெரசா நடப்போம்....  வழியிலே மாடன் கோவில் இருக்குல்லா, அதுவரைக்கும் நடந்துட்டா அவர் பார்த்துப்பார்என்று சொல்லி நடையை விரைவாக்க, பின்னாலே “சரசரவென சத்தம். கூடவே காற்றில் மல்லிகை வாசம் வர இரண்டு பேருக்கும் கிலி! ஓட்டமும் நடையுமாக மாடன் சாமி கோவில் வரை வந்துவிட்டோம். ஆனாலும் எங்களுக்கு பின்னால் திரும்ப தைரியமில்லை. ஏனெனில் மாடன் சாமி கோவிலைத் தாண்டிய பிறகும் மல்லிகை வாசம் தொடர்ந்து கொண்டிருந்தது!

மாடன் சாமிக்கும் பயப்படாத இந்த பேய், நிச்சயம் அடுத்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுடலைமாடனுக்கு நிச்சயம் கட்டுப்படும், ஆகவே இன்னும் வேகமாக நடப்போம் எனச் சொல்லிக் கொண்டே, திரும்பி மட்டும் பார்க்காதலே, ஒரே அப்பு அப்பினா, ரத்தம் கக்கிடுவோம்!” என நடந்தோம் – அதாவது நடப்பதாக நினைத்து ஓடினோம்.

சுடலை மாடன் கோவில் அருகே கொஞ்சம் நின்றோம். இனிமேல் பயமில்லை என நடையைத் தொடர்ந்தால் மீண்டும் தொடர்ந்தது அந்த மல்லிகை வாசம்! இது என்னடா சுடலைமாடனுக்குக் கூட பயப்படலையே இந்த பேய் என விரைவாக நடந்து கிராமத்தின் எல்லையில் இருக்கும் துர்க்கையம்மன் கோவில் அருகே வந்துவிட்டோம். துர்க்கைக்கு கட்டுப்படும் என நினைத்த பேய் எங்களை இன்னும் மல்லிகை வாசத்துடன் தொடர்ந்து பயமுறுத்தியது!

எங்கள் ஊரான ராஜாக்கமங்கலம் வரை ஒன்றாக வந்த நாங்கள், ஒரு இடத்தில் அவரவர் வீட்டிற்குச் செல்ல பிரிய வேண்டிய நேரம் வந்தாயிற்று. இரண்டு பேராக வந்தபோதே பயந்த நாங்கள் தனித்தனியாக செல்ல வேண்டுமே என நினைக்கும்போதே மனதில் பீதி இன்னும் அதிகமாக வீட்டிற்கு இருக்கும் 500 மீட்டர் தொலைவை ஒரு ஓட்டமாக ஓடிக் கடப்பது என முடிவு செய்து அவரவர் திசையில் ஓடினோம். நான் எனது வீட்டிற்குள் நுழைந்து கைகால்களை கழுவிக்கொண்டு படுத்தேன். திக் திக்பயணம் மனதில் கொடுத்த கிலியுடனே கொஞ்சம் தூங்கினேன்.

காலையில் கண் விழித்தபோது வீடெங்கிலும் மல்லிகை வாசம்! ஏதடா இது வம்பாப்போச்சு, என சுற்றும் முற்றும் நோக்கியபோது எனது தமக்கை தலை நிறைய மல்லிகைப் பூச்சரத்தினை வைத்துக் கொண்டிருந்தார். ஏம்மா, காலங்காத்தாலே பூ வாங்கிட்டியா?எனக் கேட்க, “என்னண்ணே தெரியாத மாதிரி கேட்கறீங்க, ராத்திரி நீங்க கொண்டு வந்த பையிலே தான் மல்லிகைப் பூ இருந்தது!என்று சொல்ல, அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது!

பேச்சாளராக சென்றிருந்த எங்களுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அணிவித்த மல்லிகை மாலை! முதன்முதலாக கிடைத்த மாலை மரியாதை என்பதால் பத்திரமாக கையோடு கொண்டுவந்த அந்த மாலையிலிருந்து வந்த வாசம் தான் பேய் எங்களைத் தொடர்ந்து வந்தது என எண்ண வைத்துவிட்டது! அப்படி பயந்து போனதை வீட்டில் சொன்னால், நிச்சயம் நம்மை ‘பயந்தாங்கொள்ளிஎன நினைத்து விடுவார்களே என மாலை மரியாதை கிடைத்ததை பெருமையாக சொல்லிக்கொண்டேன்!


என்ன நண்பர்களே, நண்பர் பத்மநாபன் அவர்களுக்கு கிடைத்த பேய் அனுபவத்தினை ரசித்தீர்களா? நெய்வேலியில் எங்கள் வீட்டு புளியமரம் பார்த்தவுடன் எனக்கு கிடைத்த அனுபவம் ஒன்றும் நினைவுக்கு வந்தது! அது பற்றி முன்பு நான் எழுதிய பதிவு ஊஞ்சலாடிய பேய்! படிக்காதவர்கள் படிக்கலாமே!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....


திங்கள், 3 பிப்ரவரி, 2014

மரணத்தை நேசிப்பவர்கள்


ஒரு நாள் பயணமாக இந்த சனிக்கிழமை அன்று இரவு தில்லியிலிருந்து சென்னை வந்திருந்தேன்.  இரவு தங்க கீழ்க்கட்டளை செல்வதாக முடிவு செய்திருந்தேன். அதற்காக பூங்கா ரயில் நிலையத்திலிருந்து மவுண்ட் ரயில் நிலையம் செல்வதற்காக காத்திருந்தேன். நடைமேடையில் எதிர்பக்கத்தில் அப்போது தான் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் – தாய்க்கு 30 வயதிருக்கலாம், 10 வயது பெண் 5 வயது ஆண் குழந்தை மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேர்ந்தார்கள்.

 பட உதவி: கூகிள்

செங்கல்பட்டு வரை செல்லும் ஒரு தொடர் மின்வண்டி வந்ததும், அந்த பெண் குழந்தை, ”அம்மா வண்டி வந்துடுச்சு, வா கீழே இறங்கி சீக்கிரம் போகலாம் வா” எனச் சொல்ல, ஒரு முறை மறுத்த அம்மா, பெண் மீண்டும் சொல்லவே, மூன்று பேரும் கீழே குதித்து விட்டார்கள்.  அம்மா மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் மேலே ஏறிவிட, அந்தப் பெண்ணும், ஐந்து வயது மகனும் ரயில் பாதையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அதற்குள் பீச் செல்லும் வண்டி அந்தப் பாதையில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. நடைமேடையில் நின்று கொண்டிருந்த அனைவரும், ”சீக்கிரம், சீக்கிரம் மேலே ஏறு!” என கத்தியபடியே அந்த இடத்திற்கு ஓட, அம்மா தவிக்க, அந்த 10 வயது பெண், மேலே தாவி ஏற முடியாத தனது தம்பியை ஏற்றி விடுகிறார்.  அதற்குள் பீச் செல்லும் ரயில் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது – பெண்ணுக்கும் ரயிலுக்கும் 500 மீட்டர் இடைவெளி மட்டுமே…..

அனைவரும் வேகமாக முன்னேறி அந்த பெண்ணுக்கு கையை நீட்ட தட்டுத் தடுமாறி அந்தப் பெண் மேலே தாவி நடைமேடையில் ஏறி உட்காரவும் அந்த மின்சார தொடர்வண்டி அந்த இடத்தினைத் தாண்டி நிற்கவும் சரியாக இருந்தது.  சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட மரணம் சம்பவித்து இருக்கும் அபாயம். அனைவரும் அந்த தாயைத் திட்டிக்கொண்டிருக்க, அவரோ, குழந்தைகளை இழுத்துக் கொண்டு நிலையத்திலிருந்து நகரத் துவங்கிய ரயிலில் தாவிக் கொண்டிருந்தார்.

அப்படி என்ன அவசரமோ? இப்படிச் செய்வது ஆபத்தில் முடியலாம் என்ற எண்ணம் கூட இருப்பதில்லையே இவர்களுக்கு. :(

அடுத்த நாள் சென்னையில் நடந்த நண்பர் வீட்டு புது மனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதியம் பல்லவனில் திருவரங்கம் நோக்கிச் செல்ல வேண்டும். 02.30 மணி அளவில் எழும்பூர் நோக்கி மீண்டும் மின்சார ரயில் பயணம். அங்கே பார்த்த இன்னுமொரு நபர் – அவரும் மரணத்தை நேசிப்பவர் தான்! தண்டவாளத்தினை தாண்டவில்லை – ஆனால் ரயில் வண்டிக்குள் உட்கார்ந்திருந்தார். வண்டிக்கு வெளியே காலை தொங்க விட்டபடி!

பக்கத்திலே ஒரு பொதிமூட்டை – ஆதிகாலத்தில் மூட்டை கட்டி தோளில் மாட்டிக்கொண்டு செல்வதை இப்போது கொஞ்சம் நவீனப்படுத்தி முதுகில் சுமக்க வசதியாக வந்துவிட்டதே – பலரும் இது போன்ற ஒரு பொதியை முதுகில் கட்டி அலைந்து கொண்டிருக்கிறோம் – என்னையும் சேர்த்து! அந்த மூட்டையில் ஒரு 7 UP குளிர்பான குப்பி – குப்பியில் இருந்தது குளிர்பானம் மட்டுமல்ல என்பது சிறிது நேரத்தில் புரிந்தது!

அவ்வப்போது அந்த குப்பியிலிருந்து கொஞ்சம் குடித்து முகத்தினை அஷ்டகோணலாக்கி, தனது முகத்தினை விகாரமாக ஆக்கிக் கொண்டார். கடிக்கவோ, பக்க உணவு எதுவும் இல்லாத காரணத்தினால் சப்புக் கொட்டிக் கொண்டார்! குப்பியில் கலந்திருந்த சோமபானம் வேலை செய்ய, மின்சார வண்டி பயணிக்கும்போது கடந்து செல்லும் மின்சார கம்பங்களை கையால் பிடிக்கவோ, காலால் உதைக்கவோ முயற்சித்துக் கொண்டிருந்தார். 

அவ்வப்போது குடிப்பதும் தொடர்ந்தது! அவரது சேஷ்டையும் தான். எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடக் கூடிய வாய்ப்பு – பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் அவரிடம், “பார்த்துப்பா, கீழே விழுந்துடப் போறே” என்று சொல்ல, குப்பியிலிருந்து இன்னும் கொஞ்சம் சோமபானம் குடித்து “எல்லாம் எனக்குத் தெரியும் பெரிசு! உன் வேலையைப் பார்த்துகிட்டு கம்முனு குந்து!” என சில அடைமொழிகளோடு சொல்ல அவரும், கூட இருந்த மற்றவர்களும் ”கப்! சிப்!”

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தினை வண்டி தாண்டியதும் அவரது பாதி உடல் ரயிலின் வெளியே தொங்க, தடுமாறி மீண்டும் உள்ளே வந்தார் – “என்ன ஆனாலும், எவ்வளவு அடித்தாலும் நான் ஸ்டடியா இருப்பேன்” என்று குடிப்பதைத் தொடர்ந்தார் அந்த இளைஞர்.

அடுத்த ரயில் நிலையமான எழும்பூரில் நான் இறங்கிக் கொள்ள, அந்த குடிமகனுடன் வண்டி நிலையத்தினை விட்டு அகன்றது.  குடிமகன் ஒழுங்காக வீடு போய்ச் சேர்ந்தாரா இல்லை அவரது பூத உடல் வீடு சேர்ந்ததா என்பது அவருக்கே வெளிச்சம்!
எதற்காக இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? முதல் நிகழ்வில் அவசரத்தினால் மரணம் நேர இருந்தது – இரண்டாவதில் அலட்சியமான போக்கினால்! எதற்கு இவர்களைப் போன்றவர்கள் இப்படி இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. ஒரு வேளை இவர்கள் மரணத்தினை நேசிக்கிறார்களா? கேள்வி மட்டும் மனதில்…..  விடை கிடைக்காத கேள்விகள்…..

வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்……

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து……

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

குடியரசு தினம் – சில காட்சிகள்



ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் வந்துவிட்டாலே இந்தியாவின் தலைநகர் தில்லியில் குடியரசு தினத்திற்கான முஸ்தீபுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும். டிசம்பர் மாத கடைசி/ஜனவரி முதல் தேதியிலிருந்தே அணிவகுப்புக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். விஜய் சௌக் பகுதியில் இருக்கும் அலுவலகங்கள் முழுவதிலும் விளக்குத் தோரணங்கள் கட்டுவது, வெளிப்புறச் சுவர்களில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது என, பார்வையாளர்கள் அமர்ந்து கொள்ள இருக்கைகள் அமைப்பது என இது மிகப்பெரிய வேலை.

குடியரசு தின நாளிலோ, மூன்று நாட்கள் கழித்து விடைபெறும் [Beating Retreat] நாளிலோ இந்த இடங்களில் பாதுகாப்பு காரணமாக புகைப்படக் கருவி எடுத்துச் செல்ல முடியாது.  அதனால் பயிற்சி செய்து கொண்டிருந்த நாட்களில் இந்த இடங்களில் அவ்வப்போது எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.....


பாராளுமன்றமும் நீர்நிலையும் – பகலில்......


விளக்குத் தோரணம் – சௌத் பிளாக் ஒரு பகுதி.
 


இயற்கை வரைந்த ஓவியம்....


அணிவகுப்பில் பயணம் செய்யக் காத்திருக்கிறோம் நாங்களும்....


பார்வையாளர்களுக்காக காத்திருக்கும் இருக்கைகள்!


பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் தூண்... குடியரசு தினம் முடிந்த பிறகு எடுத்தது!



 பாராளுமன்றம் – விளக்குகளின் ஒளியில்....



விளக்குகளின் ஒளியில் North Block, South Block பகுதிகள் – எடுத்த சமயம் இரவு 09.30 – அடர்ந்த பனி மூட்டத்தில்!



 வாத்தியம் இசைக்கும் ராணுவ வீரர்கள்.


மாலை வேளையில் நீரூற்று – வண்ணமயமாக....


என்ன நண்பர்களே, இந்த ஞாயிறின் புகைப்படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில புகைப்படங்கள் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

சனி, 1 பிப்ரவரி, 2014

அப்பள வியாபாரி! (சாலைக்காட்சிகள் – பகுதி 9)


[G]குட்கா மூதாட்டி – சாலைக்காட்சிகள் பகுதி 8 - இங்கே
(G)குட்கா மூதாட்டி! - சாலைக்காட்சிகள் பகுதி 8 இங்கே
சிகரெட்டா சாப்பாடா? – சாலைக்காட்சிகள் பகுதி 7 - இங்கே
தலைநோக்குப் பார்வை – சாலைக்காட்சிகள் பகுதி 6 - இங்கே
Bloody Indian - சாலைக் காட்சிகள் – பகுதி 5 - இங்கே
வெங்கலக் கடைக்குள் யானைசாலைக் காட்சிகள்பகுதி 4 - இங்கே
அலட்சியம் – சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே

இந்தியா கேட் பகுதியில் மாலை வேளைகள் மட்டுமல்லாது முழு நாளுமே மக்கள் வந்த வண்ணமும் போன வண்ணமுமாக இருப்பார்கள்.  அங்கே சுற்றுலா பயணிகளும் அதிகம் வருவதால், சின்னச் சின்னதாய் வியாபாரிகளும் அங்கே வந்து தங்கள் வியாபாரத்தினை கவனிப்பார்கள்.  ஐஸ்க்ரீம் வண்டிகள், பாப்கார்ன் பாக்கெட்டுகளில் விற்பவர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் என பலர் அங்கே செய்யும் வியாபாரத்தில் தங்களது வாழ்க்கையை நடத்துபவர்கள்.

இந்த வியாபாரிகளில் இன்னும் சில பொருட்களை விற்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருவரை இன்று சந்திக்கப் போகிறோம். அவர் அப்பள வியாபாரி. பொரித்த அப்பளம் கூட விற்பார்களா? பெரும்பாலும் திருவிழாக்கள் சமயத்தில், கண்காட்சிகள் சமயத்தில் நமது ஊரில் பாம்பே அப்பளம் என பெரியதாய் அப்பளம் விற்பவர்களை பார்த்திருப்போம். இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாய், வீட்டில்/தொழிற்சாலையில் தயாரித்து ஒரு பெரிய கூடையில் எடுத்து வந்து விற்பார்கள். 


சிலர் தாங்களே தயாரிப்பவர்கள், வேறு சிலர் தொழிற்சாலைகளில் வாங்கி வந்து விற்பவர்கள். தில்லியில் இருக்கும் மாதிபூர் எனும் இடத்தில் தான் இவர்களில் பலர் இருக்கிறார்களாம். மூன்று அப்பளங்கள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்.  ஒன்று வாங்கினால், நான்கு ரூபாய். இரண்டெனில் ஏழு ரூபாய்.  தில்லியின் வழக்கமான மசாலா தெளிப்பு இதிலும் உண்டு!  அப்பளத்தின் மேல் தாராளமாக மசாலா பொடி தூவி கொடுக்க அப்படியே கடித்து ருசித்தபடிச் செல்லும் பலரை இந்தியா கேட் பகுதியில் உங்களால் காண முடியும்.


பெரும்பாலான அப்பள வியாபாரிகள் பீஹார் அல்லது உத்திரப் பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள்.  நாள் ஒன்றுக்கு ஒரு கூடை நிறைய விற்பனை செய்தால் கொஞ்சம் லாபம் கிடைக்கும் என நினைக்கிறேன். இவர்களிடம் ஓசியில் அப்பளம் வாங்கி உண்ணும் சில காவல் துறையினரையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது – கிடைத்த வரை லாபம் எனும் நோக்கு!


இவர்களும் வாழத்தான் செய்கிறார்கள்..... வாழ வேண்டும் என்ற எண்ணமும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வாழ முடியும் என்பதை இந்த வியாபாரிகள் உணர்த்துகிறார்கள்.....

     
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.