திங்கள், 5 ஜனவரி, 2015

ஏற்காடு – அண்ணா பூங்கா – மிளகாய் பஜ்ஜி!



ஏழைகளின் ஊட்டி – பகுதி 5  

ஏழைகளின் ஊட்டி – பகுதி 1 2 3 4


பூங்காவின் நுழைவாயில்....

சென்ற வாரத்தில் ஏற்காடு நகரின் PAGODA POINT பற்றி பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த வாரம் நாம் பார்க்கப்போவது ”தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை” பராமரிப்பில் இருக்கும் அண்ணா பூங்கா.  ஏற்காடு ஏரியின் எதிரிலேயே அமைந்திருக்கும் இந்தப் பூங்காவில் தான் வருடா வருடம் Flower Show மற்றும் கோடை விழா நடத்துவார்கள். நாங்கள் சென்றதற்கு சில நாட்களுக்குப் பிறகு தான் Flower Show நடக்கப்போகிறது என்றாலும் பூங்காவில் அத்தனை பூக்கள் இல்லை. வேறு இடங்களிலிருந்து மலர்களைக் கொண்டு வந்து அலங்கரிப்பார்கள் போலும்!

  
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ!

பூங்காவிற்குள் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு.  பெரியவர்களுக்கு ரூபாய் பதினைந்தும், சிறியவர்களுக்கு பத்து ரூபாயும், காமிராவிற்கு ரூபாய் இருபத்தி ஐந்தும் வசூலிக்கப்படுகிறது. உரிய கட்டணங்களை செலுத்தி உள்ளே செல்லும் நம்மை எதிரில் இருக்கும் குழலூதும் கிருஷ்ணர் சிலையும் ஒரு பெண்மணியின் சிலையும் வரவேற்கின்றன.  கூடவே கூந்தல் பனை, பாவாடை பனை போன்ற பல்வேறு மரங்களும் பூங்காவிற்குள் நிறையவே உண்டு.


 பாவாடைப் பனை

பூங்காவிற்குள் அப்போது இருந்த சில மலர்களை ரசித்தபடியே சுற்றி வந்தால், மனதுக்குள் மகிழ்ச்சி.  பூக்கள் இன்னமும் அதிகமாய் இருந்திருந்தால் ஒரு பாங்கரா நடனமே ஆடியிருப்பேனோ என்னமோ! பெரிய பெரிய மரங்கள் – அதுவும் பல மரங்கள் வைத்து நூறு வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம். அதனால் பூங்காவிற்குள் நல்ல குளிர்ச்சி.  மே மாதத்திலும் கோடையின் கடுமை தெரியவில்லை என்பதற்கு இங்கிருக்கும் மரங்களும் காரணமாக இருக்கலாம். 




ஜப்பானியப் பூங்கா - சில வடிவங்கள்
 
பூங்காவிற்குள் சில வருடங்கள் முன்னர் ஒரு ஜப்பானிய பூங்காவும் அமைத்திருக்கிறார்கள். கற்களைக் கொண்டு அழகிய வடிவங்களையும், ஆமை, தவளை போன்ற உருவங்களையும், சிற்றோடையினைக் கடக்க மரப்பாலம் போன்றவற்றையும் அமைத்து மாலை நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் ஒளியூட்டுகிறார்கள்.  நாங்கள் சென்றது மதிய நேரம் என்பதால் விளக்குகள் இல்லாது பார்த்தோம்.  அவையும் நன்றாகவே இருந்தன.



பெயர் தெரியாவிட்டால் ரசிக்க முடியாதா என்ன! கண்களைக் கவர்ந்த பூக்கள்!
 
பூங்காவினைச் சுற்றி வரும்போது அவற்றைப் பராமரிக்கும் பல்வேறு பெண்களையும் பார்க்க முடிந்தது. பூந்தொட்டிகளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு மாற்றிக் கொண்டும், சில செடிகளை நடுவதுமாக தங்கள் பணியில் மும்மரமாக இருந்தார்கள்.  விற்பனைக்கு சில செடிகளையும் வைத்திருந்தார்கள்.  சில பூக்கள் மிகவும் அழகாய் இருந்தன என்றாலும் பெயர் தெரியாத பூக்கள்! வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பெயரைக் கேட்க, அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை – “தெரிஞ்சுட்டு என்ன பண்ணப் போற!” என்றார்!  பெயரைத் தெரிந்து கொண்டால் தான் ரசிக்க முடியுமா என்ன!



இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களின் சாபக்கேடு இங்கே இருக்கும் கழிப்பறை வசதிகள். அண்ணா பூங்காவும் இந்த விஷயத்தில் குறை வைக்கவில்லை – மகா மோசமான கழிப்பறை வசதிகள். பயணிக்கும் மனிதர்களும் அதை இன்னும் அசிங்கப் படுத்தியபடியே இருக்கிறார்கள்! சுத்தம் என்பது பற்றி எத்தனை சொன்னாலும் நாம் திருந்தப் போவதில்லை என்று சபதம் செய்து இருப்பார்கள் போலும்!

 என்ன அழகு எத்தனை அழகு!

இப்படி பூங்காவினுள் இருக்கும் பல்வேறு பூக்களையும், மரங்களையும் ரசித்தபடியே வெளியே வந்தால் சாலைக்கு எதிர்புறத்தில் ஏற்காடு ஏரி. சாலை ஓரத்தில் பல்வேறு தள்ளுவண்டி கடைகள். கடைகளில் விற்கும் விதம்விதமான பஜ்ஜி வகைகள் சுற்றுலாபயணிகளைக் கவர்கின்றன. மிளகாய், வாழைக்காய் பஜ்ஜிகள் “என்னைக் கொஞ்சம் கவனி!”  என்று விளம்பரம் செய்யாத குறை தான்!

 பறக்கும் படகு பறக்கும்! ஏரிக்கரையிலிருந்து ஒரு பார்வை!

இருந்தாலும், பயணத்தின் போது எத்தனைக்கு எத்தனை உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கிறோமோ அத்தனை நல்லது என்பதால் எந்த வித பஜ்ஜியையும் வேண்டாம் என்று மனதை கட்டுப்படுத்தியபடியே ஏரியை நோக்கிச் சென்றோம்.  அண்ணா பூங்காவின் எதிரிலும் ஒரு வழி உண்டு அங்கேயும் ஒரு சிறிய பூங்காவும், ஏரியைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க சில இருக்கைகளும் உண்டு.  இயற்கையின் எழிலை நீங்களும் சற்று நேரம் ரசிக்கலாமே!

அடுத்த பதிவில் ஏற்காடின் எழிலைத் தொடர்வோம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

முதுமை – இனிப்பா கசப்பா? – சில படங்கள்



ஞாயிற்றுக் கிழமைகளில் எனது பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  ஒரு சில மாதங்களாக அதில் ஏதோ விதத்தில் தடை வந்து விட்டது. இந்த வாரத்திலிருந்தாவது தொடங்கலாம் என்று எண்ணம்.  இந்த ஞாயிறில் சமீபத்தில் நான் எடுத்த சில புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

“நாளைய பாரதம்” என்ற தலைப்பில் வருங்கால சந்ததியினரான குழந்தைகளை நான் புகைப்படம் பிடித்து பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இன்று முதல் முறையாக நான் படம் பிடித்த பெரியவர்களின் படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  சமீபத்தில் நான்கு நாள் பயணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனா, காங்க்ரா, பாலம்பூர் போன்ற மாநிலங்களுகுச் சென்றிருந்தபோது அந்த இடங்களில் பார்த்த சில பெரியவர்களின் புகைப்படங்கள் தான் அவை. 

படங்களைப் பார்க்கலாமா?


எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன்...  எனக்குத் தெரியாதா?  கிலோ ஐம்பது ரூபாய்க்கு கொடு என்று பஞ்சாபி மொழியில் மிரட்டிய மூதாட்டி....
 


 வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை விற்கும் வியாபாரி..... யாராவது வாங்க வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்திருந்த பெரியவர்!


  
ஒரு வேளை நமக்குத் தான் அதிகமா குளிருதோ என்று யோசனையுடன் அமர்ந்திருப்பாரோ இந்த பெரியவர்.....



”இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை” என்று சொல்லும் மூதாட்டி...



குடும்பத்தினருக்காக காத்திருக்கும் பெரியவர்....  “எப்போ வருவாரோ எந்தன் கலி தீர?” என்ற பாட்டு ஏனோ நினைவுக்கு வருகிறது....



தள்ளாத வயதிலும் உழைக்கும் பெரியவர் - “பைஜ்நாத் கோவில் வெளியே பிரசாதம் விற்பவர்....



என்னை யாரும் ஏமாத்த முடியாதுலே... இது ஐம்பது ரூபா நோட்டு தான் என்று சொல்கிறாரோ? சாலையோரத்தில் உணவகம் வைத்திருக்கும் பெரியவர். 


 நிலத்தில் விளைந்த கரும்புகளை வெல்லமாக்கும் பெரியவர்......  கண்களில் என்னவொரு சக்தி!

சில பெரியவர்களைப் பார்க்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், சில பெரியவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமாகவும் இருந்தது. முதுமை இனிப்பாகவோ கசப்பாகவோ இருப்பது அவரவர் கையில் தான் என்று தோன்றுகிறது.  உங்கள் கருத்து என்ன என்பதையும், படங்களை ரசித்தீர்களா என்பதையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



வெள்ளி, 2 ஜனவரி, 2015

ஃப்ரூட் சாலட்–120: சுத்தம் நம் கையில் – ஆதார் – தில்லியில் வடிவேலு



இந்த வார செய்தி:


காரைக்குடி: கடந்த 50 ஆண்டுகளாக "ஊழியம்' என்ற பெயரில், ஆண்டுக்கு நான்கு முறை ஊரை சுத்தம் செய்தும், வரத்துக் கால்வாய், கண்மாய் தூர் வாரி வருகின்றனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி ஊர்மக்கள்.

சாக்கடை ஓடுகிறது, ரோடு சரியில்லை, குப்பை அள்ள வருவதில்லை, புதர்களை அகற்றுவதில்லை என புகார்கள், இன்றைய நவீன அவசர உலகில் வாழும் மக்களின் பிரதான புகார் வாக்கு மூலம். வீட்டின் முன்பு ரோட்டில் பள்ளம் கிடந்தால் அதில் தினமும் நடந்து செல்லும் நாம் ஒருநாளாவது, நம்மால் முடிந்த அளவு அதை மூட நினைப்பதில்லை. இதற்கு விதிவிலக்காக செயல்பட்டு வருகின்றனர் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி ஊர் மக்கள்.தட்டட்டி ஊராட்சிக்குட் பட்டது கொரட்டி. 200 குடும்பத்தில் 350 புள்ளிகள் உள்ளனர். ஒரு குடும்பத்தில் ஒருவர் திருமணம் முடித்தால் அவர் ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப்படுகிறார். பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்தாலும், கடந்த 50 ஆண்டுகளாக ஊர் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். செயலாளர், பொருளாளர் பதவிக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஒவ் வொரு சமூகத்தை சார்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த ஊர் மக்கள் ஆண்டுக்கு நான்கு முறை "ஊழியம்' என்ற பெயரில் ஊர் சுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொங்கல், தீபாவளி, இந்த ஊரின் சிந்தாமணி அம்மன் கோயில் விழா, மழைக்காலம் முடிகின்ற காலங்களில் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.ஒரு புள்ளிக்கு ஒருவர் கண்டிப்பாக இப்பணியில் ஈடுபட வேண்டும், என்ற கட்டுப்பாடு உண்டு. குண்டும் குழியுமாக கிடக்கும் ரோட்டை சீரமைப்பது, குடிதண்ணீர் ஊரணியை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

முழுக்கட்டுரையும் இங்கே!

இந்த வார முகப்புத்தக இற்றை:

இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதுக்குப் பிடித்தவரை மறக்காது – காரணம், இதயத்துக்கு நடிக்கத் தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்!

இந்த வார குறுஞ்செய்தி:

நான் ரொம்ப அழகு என்று கர்வமா உங்களுக்கு? ஒரே ஒரு முறை உங்கள் ஆதார் அட்டையைப் பாருங்கள் – உண்மை தெரிந்து விடும்!

இந்த வார சாலைக்காட்சி:

சென்ற ஆண்டின் கடைசி சில மணி நேரங்கள் பாக்கி இருக்கையில் இரவு உணவு முடித்து சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன். எதிரே இரண்டு குடிமகன்கள் சாலையை அளந்து பார்த்தபடியும், நடப்பதற்கு உரிம்ம் வாங்க எட்டு போட்டபடியும் வந்து கொண்டிருந்தார்கள். 

இரண்டு பேருமே அப்படி ஒரு பரவச நிலையில் இருந்தார்கள்.  “உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை” என்று பேசிக் கொண்டு ஒருவரை மற்றொருவர் பிடித்து கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். 

ஒரு நிலைக்கு மேல் அவர்களால் நடக்கக்கூட முடியவில்லை.  அங்கேயே நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பிடித்தபடி நின்று கொண்டிருக்க, அந்த நேரத்தில் தான் நான் அவர்களை கடந்தேன். ”எஷ்க்யூஷ் மீ!” என்று ஒரு குரல் கேட்க, குழப்பத்துடன் அவர்களை நோக்கினேன்! இரண்டு பேரும் கோரஸாக “எங்களை அந்த முக்கு வரைக்கும் ட்ராப் பண்ண முடியுமா” என்று கேட்க, மயில்சாமி வடிவேலு ஜோடி தான் நினைவுக்கு வந்தது! அவருக்காவது ஒரு மயில்சாமி – இந்த வடிவேலுவுக்கு இரண்டு மயில்சாமிகள்!

இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த வழியா தில்ல் போலீஸோட இனோவா கார் வரும் – அதுலேயே உங்களைக் கொண்டு விடுவாங்க! என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்! எனக்குப் பின்னால் ”நாங்களே நடந்து போயிடுவோம், நீ எதுக்கு எங்களுக்கு என்று சொல்லியபடியே நடப்பது தெரிந்தது. பிறகு “தொப் தொப்” என்று சத்தம் – சாலையில் இருவரும் மல்லாக்க கிடந்தார்கள்! – தெளிந்தபின் எழுந்து போவார்கள் என நானும் நகர்ந்தேன்.

இந்த வார காணொளி:

”முயற்சி திருவினையாக்கும்” என்று மற்ற புலிக்கு சொல்கிறதோ இப்புலி! பாருங்களேன்....




இந்த வார புகைப்படம்:

கிறிஸ்துமஸ் தொடர்ந்த நான்கு நாட்களில் ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஊனா, காங்க்ரா மாநிலங்களுக்கு ஒரு பயணம் சென்றேன்.  அங்கே எடுத்த ஒரு படம் உங்கள் ரசனைக்கு!



படித்ததில் பிடித்தது:

என்னை மணலில் வைத்து  
உன்னைக் கடலில் வைத்துக்  
கடமை முடித்துக்
காணாமல் போனான் கடவுள்!
 
வருவதும் போவதுமாய் நீ!

துறையில் படகைக் கட்டி
துடுப்பை நதியில் வீசி  
கடமை முடித்துக்  
காணாமல் போனான்  
கடவுள்!!
 
நதியின் போக்கில்  
துடுப்பின் ஓட்டம் !

சிப்பியில் என்னை வைத்து  
முத்துக்குள் உன்னை வைத்து  
கடமை முடித்துக்  
காணாமல் போனான்  
கடவுள் !

ஏதோ ஒரு கிரீடத்தில் நீ !

உன்னைச் சூரியனாக்கி  
என்னை மலராக்கி  
கடமை முடித்துக்  
காணாமல் போனான்  
கடவுள் !


உன்னுடைய திசை தேடித்  
திரும்பும் என் முகம் !

குளிர் நிலவின் ஒளி நெசவில்    
இளம் மனதின் உணர்விழைகள்  
அறுந்தும் சேர்ந்தும்  
அழுகை ஜரிகையாகிறது !

ஸ்வரங்களின் உச்சத்தைத் தொட  
ஏங்கிய இந்த மௌனராகம்  
மறக்கப்படவே  
மீட்டப்படுகிறது !!!

"ஸ்ரீ"

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 1 ஜனவரி, 2015

மகிழ்ச்சி பரவட்டும்....





அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

இந்த நாளிலிருந்து உங்கள் வீட்டில் மூன்று விருந்தாளிகள் நிரந்தரமாக தங்கட்டும் என வாழ்த்துகிறோம் – அட எங்க மூன்று பேரையும் சொல்கிறோம் என நினைத்து பயந்து விடாதீர்கள்!








ஆகிய மூன்று விருந்தாளிகளைத் தான் சொன்னோம்!

மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.



நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்