புதன், 22 ஜூலை, 2015

வண்டி வேணுமா? மிஸ்ட் கால்!





நேற்று அலுவலகத்தில் இருக்கும்போது அலைபேசியில் ஒரு அழைப்பு. இரண்டு முறை மணி அடித்து எடுப்பதற்குள் நின்று விட்டது! யாருப்பா அது மிஸ்ட் கால் கொடுப்பது? என்று யோசித்துக் கொண்டே திரையைப் பார்த்தால், தெரியாத எண். பொதுவாகவே தெரியாத எண் என்றால் முதல் முறையே எடுத்துப் பேசுவதில்லை.  தேவையில்லாத பல அழைப்புகள் வருகிறதே என்பதால்.  சரி தேவையெனில் மீண்டும் அழைப்பார்கள் என வேலையில் மூழ்கினேன். இரண்டு நிமிடங்களுக்குள் மீண்டும் ஒரு மிஸ்ட் கால்! அதே எண்ணிலிருந்து!

சரி என்ன தான் அவருக்கு பிரச்சனையோ, கேட்டுவிடுவோமே என அந்த எண்ணுக்கு நானே அழைத்தேன்.  என்னப்பா, யாரு நீ, பேசணும்னா, பேச வேண்டியது தானே? எதுக்கு மிஸ்ட் கால்?என்றுதான் ஆரம்பித்தேன்!

மறுமுனையில் வந்த பதில் – நீங்க தானே முதல்ல மிஸ்டு கால் கொடுத்தீங்க! அதனால தான் நானே கூப்பிட்டேன்! 

அட என்னப்பா இது, “இன்னிக்குக் காலையிலிருந்தே நான் யாரையும் அலைபேசி மூலம் அழைக்கவில்லையே?என்று சொல்லி விட்டு, இது என்ன குழப்பம்? என யோசித்தேன். சரி, பேசுவது தான் பேசுகிறோம், அவர் யாரென்பதைத் தெரிந்து கொள்வோமே என்று பேச்சைத் தொடர்ந்தேன். 

“சரி, நீங்க யாரு? எங்கேயிருந்து பேசறீங்க?என்று கேட்க, அவர் சொன்ன பதில் – “Shahid Bhagad Singh Seva Dal”  அலுவலகத்திலிருந்து பேசுகிறேன் எனச் சொல்லி, உங்கள் மிஸ்ட் கால் பார்த்து தான் “உங்களுக்கு ஏதோ வண்டி வேண்டும் போல இருக்கிறது. அவசரமாக இருக்கும் என்று தான் நான் உங்களை அழைத்தேன்என்று மீண்டும் சொன்னார்.

இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது. Shahid Bhagad Singh Seva Dal  என்பது Shunty என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சர்தார்ஜி ஒருவர் நடத்தும் சேவை மையம்.  பல சேவைகளைச் செய்து வந்த இவர், கடந்த தில்லி தேர்தலில் BJP சார்பாக போட்டியிட்டவர். நிறைய பொதுச் சேவைகள் செய்து வந்த இவர் நிச்சயம் ஜெயித்து விடுவார் என பலரும் நினைத்திருக்க, பாவம் தில்லியில் அடித்த ஆம் ஆத்மி அலையுடன் போட்டி போட முடியாது இவர் மூழ்கிவிட்டார்!

திரும்பவும் நேற்று நடந்த விஷயத்திற்கு வருவோம்!  உங்க கால் பார்த்துட்டு நான் கூப்பிட்டேன், மயானத்துக்குப் போகணுமா? இல்லை ஆஸ்பத்திரிக்கா என்று மீண்டும் கேட்டார். 

என்ன நடந்திருக்கும் என யோசித்தபோது விஷயம் புரிந்தது. கடந்த வாரத்தில் நண்பரின் அப்பா தனது 85-ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.  மீசை மாமாஎன்று நாங்கள் கூப்பிடுவோம்! சின்னதாய் ஹிட்லர் மீசை வைத்திருப்பார்.  பொதுவாகவே இப்படிப்பட்ட நேரங்களில் நான்கு பேராக தூக்கிக் கொண்டு மயானத்திற்கு போவது தான் வழக்கம். ஆனால் அன்றோ நல்ல மழை. அதனால் Shahid Bhagad Singh Seva Dalசவ ஊர்தி சேவையை பயன்படுத்தினோம். என்னுடைய அலைபேசியிலிருந்து அழைத்தபோது அந்த ஓட்டுனர் எடுக்கவில்லை. வேறு ஒரு ஓட்டுனருக்கு அழைக்க, அவர் வண்டியை கொண்டுவந்தார்.  கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து தான் நான் அழைத்த முதலாமவர் தனது அலைபேசியில் இருந்த மிஸ்ட் கால் பார்த்திருப்பார் போலும்!

ரொம்பவும் சுறுசுறுப்பாக என்னை அழைத்து “வண்டி வேண்டுமா? மயானத்துக்கு போகணுமா, இல்லை ஆஸ்பத்திரிக்கா?என்று கேட்டிருக்கிறார்! நானும் பதிலுக்கு.....

“முதல் இடத்துக்குப் போக இன்னும் அழைப்பு வரலை! மருத்துவமனைக்குப் போகற அளவுக்கு உடம்புக்கு ஒண்ணும் கேடு இல்லை!என்று சொன்னேன்!

என் பதில் கேட்டு சிரித்தபடியே அவர் இணைப்பைத் துண்டிக்க, நானும் சிரித்தபடியே அலைபேசியை மேஜையில் வைத்தேன்.

 



திங்கள், 20 ஜூலை, 2015

கதவைத் தட்டிய பேய்....



மனச் சுரங்கத்திலிருந்து...

பேய்க்கதைகள் கேட்பது ரொம்பவே ஸ்வாரஸ்யமான விஷயம் தான். நெய்வேலியில் இருந்த வரை இப்படி நிறைய பேய்க்கதைகள் கேட்டதுண்டு. அதில் ஒன்று எனது பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறேன். படிக்காதவர்களின் வசதிக்காக இங்கேயும் அதன் சுட்டி!


சரி.. சரி... ஊஞ்சலாடிய பேய் கதையை படிச்சீங்களா? இன்றைய கதைக்கு போகலாம் வாங்க!

கதைக்கு போறதுக்கு முன்னாடி நெய்வேலி வீடு பற்றி கொஞ்சம் சொல்லிடறேன். கதை சொல்லும்போது அது உதவும். திருச்சி சாலை [இப்போதைய சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் சாலை]யில் தான் எங்கள் வீடு. வாசலில் ஒரு பக்கம் கல்யாணமுருங்கை மரம், மற்றொரு பக்கத்தில் புளியமரம். 20-30 அடி நடந்தால் படிக்கட்டு. மூன்று படிக்கட்டுகள் ஏறினால், ஒரு சின்ன தாழ்வாரம் – அதில் பக்கவாட்டில் ஒரு திண்ணை. திறந்தே இருக்கும் கதவுகள் வழியே நுழைந்தால் வரவேற்பறை/ஹால். இடது பக்கத்தில் ஒரு படுக்கையறை. 

வரவேற்பறை/ஹால் தாண்டியதும், அடுப்பறை. அடுப்பறை/ஹால் வழியே வெளியே செல்ல இரண்டு கதவுகள். அவற்றின் வழி சென்றால் முற்றம், குளியலறை/கழிப்பறை. முற்றத்தில் ஒரு கதவு – அதன் வழியே தோட்டத்திற்குச் செல்ல முடியும்.  ஆக வீட்டிற்கு இரண்டு கதவுகள் – முன் வாயில் ஒன்று, தோட்ட வாயில் ஒன்று! ஒவ்வொரு அறையிலும் ஜன்னல்கள். பேய் கதைக்கு வரும்போது இந்த விளக்கத்திற்கான அவசியம் தெரியும்.

பெரும்பாலான இரவுகளில் வீட்டினுள் தான் படுக்கை. விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும் நாட்களில் நாங்கள் வெளியே திண்ணையிலும்/தாழ்வாரத்திலும் படுத்துக் கொள்வதுண்டு.  அப்படி ஒரு நாள், வெளியே படுத்துக் கொண்டிருந்தபோது நடந்த கதை தான் இப்போது கேட்கப் போறோம். இந்தக் கதை நடந்த போது எனக்கு ரொம்ப சின்ன வயசு! அதுனால இது நடந்தது எல்லாம் எனக்கு நினைவில்லை என்றாலும் அவ்வப்போது அம்மா/பெரியம்மா ஆகியோர் சொன்னது நினைவில் இருக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல வீட்டு வாசலில் இருந்த புளியமரத்திலிருந்தோ, வேறு மரத்திலிருந்தோ ஒரு பேய் இறங்கி வந்திருக்கிறது. நானோ நல்ல தூக்கத்தில். பக்கத்தில் பெரியம்மா படுத்திருக்க, அவர்களுக்கு ஏதோ சலசலப்பு கேட்டு இருக்கிறது. பார்த்தால் மங்கலாக ஒரு உருவம் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் நின்று கொண்டிருப்பது போல தெரிந்திருக்கிறது.  கூடவே ஒரு சத்தமும்.....

 படம்: இணையத்திலிருந்து.....

“டக்...டக்...டக்......  கதவைத் தட்டும் ஓசை......

உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.  அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்திருப்பார்கள் போலும்!

மீண்டும்  “டக்...டக்...டக்...... 

கூடவே ஒரு குரலும்..... “மல்லிகாம்மா.. கதவைத் திற.....   மல்லிகாம்மா.... கதவைத் திற.....  உள்ளே இருக்கும் அம்மாவிற்குக் குரல் கேட்டு “யாரது எனக் கேட்க, இங்கே நிசப்தம்...

மீண்டும் சிறிது நேரம் கழித்து “மல்லிகாம்மா.. கதவைத் திற.....   மல்லிகாம்மா.... கதவைத் திற.....  என்ற குரல் கேட்க, பெரியம்மா சத்தமாக அம்மாவிடம் கதவைத் திறக்காதே என்று சொன்னதோடு, தாழ்வாரத்தில் கிடந்த ஒரு துடப்பம் எடுத்து தரையில் அடி அடி என அடிக்க, குரலும் உருவமும் நகர்ந்து விட்டதாம்.

வாசல் கதவை விட்டு அகன்ற பேய் அடுத்ததாக ஜன்னல் வழியாக வந்துவிடுமோ என அவசரம் அவசரமாக எல்லா ஜன்னல் கதவுகளையும் மூடிவிட [பொதுவாகவே நெய்வேலியில் எல்லா ஜன்னல்களும் காற்றோட்டத்திற்காக, திறந்தே தான் இருக்கும்], ஜன்னல்களிலும் “டக்....டக்....டக்....  ஓசை. அதற்கும் உள்ளே இருந்து பதில் வராது போக, தோட்டக்கதவிற்கு தாவியது கதவைத் தட்டிய பேய்.

தோட்டக் கதவில் தட்டியும் மீண்டும் மீண்டும் குரல் கேட்டுக்கொண்டே இருக்க, வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து விட்டார்களாம். தொடர்ந்து ஒரு குரல் மட்டும் வந்து கொண்டு இருக்க, உள்ளே இருந்து பேயோடு பேச்சு வார்த்தை நடத்த முயற்சி நடந்திருக்கிறது! இவர்கள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை! சற்றே நிசப்தமாக இருந்தால், மீண்டும் கதவைத் தட்டும் ஓசையும், “மல்லிகாம்மா.... கதவைத் திற.....குரலும் கேட்க, அனைவரும் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.... இப்போது படிக்கும் போது சிரிப்பாக இருந்தாலும், அந்த நேரத்தில் நிச்சயம் பயமாக இருந்திருக்கும்! வீட்டில் உள்ள எல்லா விளக்குகளையும் போட்டு விட்டாலும், கதவை மட்டும் திறக்கவே இல்லையாம்.

அதற்குள் வாசலில் இருந்த பெரியம்மாவிற்கு அப்படி ஒரு வேகம் வந்து வாயில் கதவுக்கருகில் வந்து நின்றுகொண்டு “இனிமே இங்கே வருவியா, வருவியா.... ஓடிப்போயிடு... இல்லைன்னா நடக்கறதே வேற....என்று மிரட்டியபடி துடப்பத்தினால் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். பேயை அவர் தான் அடித்து விரட்டிவிட்டதாகச் சொல்வார்கள். இத்தனை களேபரங்களில் நானும் எழுந்து விட, கண்ணில் கண்டது பெரியம்மா துடப்பத்தினால் அடித்துக் கொண்டிருந்ததை போலும்!

பயத்தில் நான் உளர ஆரம்பிக்க, வீட்டில் ஒரே களேபரமும் குழப்பமும்.  எங்கள் வீட்டில் கேட்ட சப்தங்களினால் அடுத்த வீட்டில் இருந்த ட்ரைவரூட்டம்மா குடும்பத்தினரும் எழுந்து விட அன்று இரவு முழுவதும் விளக்குகளை போட்டுக்கொண்டே தூங்காமல் கழித்திருக்கிறார்கள்.  கதவைத் தட்டிய பேயை பெரியம்மா ஓட்டி விட்டார்கள் என்று சொன்னாலும், எனக்கு தான் அந்த வயதில் அதிர்ச்சி விலகவில்லை போலும். அடுத்த நாள் காலையில் எனக்கு பயங்கர ஜூரம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் ஜுரம் இறங்கவே இல்லை.

பூஜாரிகளிடம் மந்திரித்துப் பார்த்தும் ஜுரம் அவ்வப்போது வந்துகொண்டே இருக்க, பெரியம்மாவும், பெரியப்பாவும் அவர்கள் ஊரான விஜயவாடா செல்லும்போது என்னையும் அழைத்துக் கொண்டு போனார்களாம். அங்கே என்னை ஒரு தர்காவிற்கு அழைத்துச் சென்று மந்திரித்து தாயத்து கூட வாங்கிக் கட்டி விட்டிருக்கிறார்கள். சில நாட்கள் விஜயவாடாவில் தங்கியிருந்து பிறகுதான் நெய்வேலி அழைத்து வந்தார்களாம்.

நான் வளர்ந்த பிறகும், எனக்கு என்னமோ ஒவ்வொரு முறை பெரியம்மா/பெரியப்பா, அல்லது அம்மா அன்றைக்கு நடந்ததைச் சொல்லும் போதும் அந்தப் பேய் மீண்டும் வந்து கதவைத் தட்டுமோ என்று தோன்றும்! எனக்கு நினைவு தெரிந்து அந்தப் பேய் கதவைத் தட்டியதில்லை.  “அடப் போங்கய்யா.... எவ்வளவு தட்டினாலும், மல்லிகாம்மாவுக்கு காது கேட்கல போல...என்று அந்தப் பேய் அங்கிருந்து டேராவை கிளப்பி விட்டது என நினைக்கிறேன்.

இந்தப் புளிய மரம் இல்லாட்டி வேற ஒரு புளியமரம்என்று புறப்பட்டு விட்டதோ என்னமோ....  பேய்க்கே வெளிச்சம்!

எதுக்கும் இன்னிக்கு ராத்திரி தூங்கும்போது கதவை நல்லா மூடிட்டு தூங்கணும்!நு நான் முடிவு பண்ணிட்டேன்.... நீங்க!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 17 ஜூலை, 2015

ஃப்ரூட் சாலட் – 138 - தில்லியில் ”அம்மா” உணவகம் – சங்கு - வைரம்


இந்த வார செய்தி:

 படம்: இணையத்திலிருந்து....

தமிழகத்தில் செயல்பட்டு வரும் “அம்மாஉணவகம் தில்லி அரசாங்கத்தினையும் கவர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மலிவு விலை உணவகங்களைப் போலவே தலைநகர் தில்லியிலும் உணவகங்கள் திறக்க திரு அர்விந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டமாக 10 உணவகங்கள் திறக்கப்பட உள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

அங்கே அம்மா உணவகம் என்றால் இங்கே பெயர் மட்டும் வித்தியாசம் – “ஆம் ஆத்மி உணவகம்”.  முதல் கட்டமாக 10 இடங்களில் தொடங்கப்படவுள்ள இவை, படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  அங்கே ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்தால், அதையே இங்கே கொடுக்க முடியாது. இங்கே அதிகமான மக்கள் உண்பது சப்பாத்தி என்பதால், சப்பாத்தி, சப்ஜி கொடுக்கப் போகிறார்கள். 

ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விலையில் உணவுகள் வழங்கப்பட இருக்கின்றன.  முந்தைய அரசாங்கத்தினால் “ஜன் ஆஹார்என்ற பெயரில் 20 ரூபாய்க்கு உணவு சில இடங்களில் வழங்கப்பட்டாலும் அவற்றின் தரம் பற்றிய எந்த கட்டுப்பாடும் இல்லாது இருந்தது. ஆம் ஆத்மி உணவகங்களில் தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு, தரமான உணவு வழங்கப்படப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.  கூடவே இந்த உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் [RO] கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வெகு விரைவில் திறக்கப்படவுள்ள இவ்வுணகங்கள் தொடங்குமுன்னர், தமிழகத்தின் அம்மா உணவகங்களையும் ஒடிசா மாநிலத்தில் அரசு நடத்தும் உணவகங்களையும் சென்று பார்த்து அதன் பின்னரே இம்முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. 

தில்லியில் இருக்கும் பல ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கூலித் தொழிலாளர்கள், நடைபாதையில் வசிக்கும் பல ஏழைகள் ஆகிய அனைவருக்கும் இத்திட்டம் மூலம் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  உணவகங்கள் திறந்த பிறகு தான் அவற்றில் கிடைக்கும் உணவின் தரம் எப்படி இருக்கும் என்று தெரியும்.

பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என!

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை. ஆனால் எல்லா பிள்ளைகளுமே, இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் வளர்க்கப்படுகிறார்கள்...

இந்த வார காணொளி:

சின்ன முதலீடு பெரிய லாபம்!

窩心小狗哪裡找! - 鍾意請廣傳/Please SHARE
<窩心小狗哪裡找!> - 鍾意請廣傳/Please SHARE//Very Sweet Puppy Dog...//那麼體貼,小編想要呀!Source: Kiatnakin Bank#dog #pet #bestfriend #love #happypeople“The best way to cheer yourself is to try to cheer someone else up” - Mark Twain
Posted by 開心快活人 on Thursday, May 21, 2015



ஒரு கவிதை......

சங்கு
°°°°°°°°



அலை ஒதுக்கிய சங்கு அறியும்
பிறப்பும் இறப்பும்
உடலின் வடிவத்துக்கு தான்
உயிரின் உருவத்துக்கு அல்ல என்று !

அடியாழத்தில் உணர்ந்த
பிரபஞ்சத்தின் அமைதியும்
அலை ஆர்ப்பரிக்கும்
அண்டத்தின் ஓசையும்
ஒரே மூலத்திலிருந்து
உதித்தவை தான் !

சூரியச் சுள்ளலும்
நிலவின் தண்மையும்
ஒரே நிகழ்வின் இரு
தன்மைகள் தான் !

கடலிலே பிறந்து
கடலிலே அழியும்
அலையை வேடிக்கை பார்க்கிறது
கரை ஒதுங்கிய சங்கு !!!

~~~~~
ஸ்ரீ ~~~~~

அருமையான கவிதை. எழுதிய தோழி ஸ்ரீமதிக்கு வாழ்த்துகளும் பூங்கொத்தும்!

படித்ததில் பிடித்தது:

மலைகளினூடே பயணம் செய்து கொண்டிருந்தார் ஒரு மூதாட்டி. அங்கே ஒரு அருவியின் அருகே அவருக்கு விலைமதிப்பில்லாத உயர்ந்ததோர் வைரக்கல் கிடைக்க, அதை எடுத்து தனது துணி மூட்டைக்குள் வைத்துக்கொண்டார். அடுத்த நாள், அவரது பயணத்தில் பசியோடிருந்த ஒரு மனிதரைக் கண்டார். அவர் மூதாட்டியிடம் ஏதாவது கொடுக்கச் சொல்லிக் கேட்க, தனது துணி மூட்டையிலிருந்து தேடி அந்த வைரக்கல்லைக் கொடுத்தாராம். 

என்கிட்ட இது மட்டும் தான் இருக்கு.... எடுத்துக்கோ..... இதை வைத்து உன் வாழ்வில் முன்னேறு....” 
வைரக்கல்லை, அதிலிருந்து வீசும் ஒளியைக் கண்ட அந்த வழிப்போக்கர், தனக்குக் கிடைத்த வைரம் கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்க முடியும் என்று சந்தோஷத்தோடு மூதாட்டியிடம் விடை பெற்றுச் சென்று விட, மூதாட்டி எந்த வித உணர்வுகளும் இல்லாது தன் வழியே சென்று கொண்டிருந்தார். 
சில நாட்களுக்குப் பிறகு, அந்த வழிப்போக்கர், மூதாட்டியிடம் வந்து, “தாயே...  இந்த விலைமதிப்பில்லாத வைரத்தினை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து வாங்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு யோசித்துப் பார்க்கும்போது இந்த கல்லின் விலையை விட, அதன் விலை தெரிந்தும், மிகச் சாதாரணமாக எடுத்து என்னிடம் கொடுக்க உங்களால் முடிந்ததே...  அந்த குணத்தினை எனக்கும் கொடுங்கள். அது தான் இந்த கல்லின் விலையை விட பல மடங்கு உயர்ந்தது. எனக்கும் அந்த ஈகை குணத்தினையும், அறிவையும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

 ஓவியம்: ரோஷ்ணி.

அனைத்து நண்பர்களுக்கும் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.