வெள்ளி, 29 நவம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 69 – அடி மாடுகள் – Sei Bhalo Sei Bhalo - கூகிள் விளம்பரம்



இந்த வார செய்தி:

நாகர்கோவில்/திருநெல்வெலியிலிருந்து கேரளம் செல்லும்போது கவனித்தது உண்டா? பல வாகனங்களில் மாடுகள் ஏற்றப்பட்டு கேரளத்திற்குக் கொண்டு செல்லப் படுவதை கவனித்து இருக்க முடியும். எனது சமீபத்திய கேரளப் பயணத்தின் போது கூட இப்படி வண்டிகளில் கொண்டு செல்லப்படுவதை பார்த்தேன். தவிரவும், கேரளத்தின் எல்லை அருகே இருக்கும் தமிழக கிராமங்களில் நிறைய மாடுகளைக் கட்டி வைத்திருப்பதை கவனித்தேன்.

அனைத்தும் அடிமாடுகளாக விற்கப்பட காத்திருப்பவை. கேரளத்தில் மாட்டு இறைச்சிக்காக தமிழகத்திலிருந்து மாடுகள் கொண்டு செல்லப்படுவதைப் பார்க்கும் போது மனதுக்குள் தோன்றும் – “அவற்றிடமிருந்து கறக்கும் வரை கறந்து விட்டு இப்போது இப்படி இறைச்சிக்காக விற்க எப்படி மனசு வருகிறது?

இந்த எண்ணம் எப்போதும் இருக்க, நேற்றைய தி இந்துவலைபக்கத்தில் இருந்த இந்த செய்தி மனதைத் தொட்டது. அதை இங்கே உங்களுடன் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி “தி இந்து”.


வசதியான வீட்டில் பிறந்தவர்கள் செல்லப்பிராணிகளாக நாய், பூனைகளை வளர்ப்பது வாடிக்கை. வயதான, பால் சுரப்பு நின்றுபோன அடிமாடுகளை, வீடு நிறைய வளர்த்தால் வித்தியாசம் தானே? ஜீவகாருண்யத்தோடு இப்பணியில் ஈடுபட்டுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த சசிகலா, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்.

நாகரீக மாற்றத்தால், சொந்த பந்தங்களையே உதறித் தள்ளி விட்டுப் போகும் இன்றைய உலகில், அடிமாடுகளின் நலனுக்காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமல், அவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா.

பொதுவாகவே கால்நடை வளர்ப்போம்... காசை குவிப்போம்என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். சசிகலா வீட்டில் 50க்கும் மேற்பட்ட அடிமாடுகள் நிற்கின்றன. அவற்றை பராமரிக்க மாதம் ரூ. 35,000 வரை நஷ்டப்படுகிறார் சசிகலா. இதுபற்றி, சசிகலா சொல்வதைக் கேட்போம்.

57 மாடுகள்:

எங்கள் தாத்தா காலத்துல வீடு நிறைய கால்நடை நிற்கும். அக்காலத்தில் எங்க வீட்டுல நிற்கும் மாடுகள்தான், கால்நடைப் போட்டியில் பரிசு வாங்கும். என் அப்பாவும் நிறைய மாடுகள் வச்சுருந்தாங்க. அப்பா காலமானதும், டீச்சர் வேலை பார்த்த அம்மாவால மாடுகளை பராமரிக்க முடியல. வள்ளியூர்ல ஒருத்தருக்கு மாடுகளை கொடுத்துட்டாங்க. வீட்டுல மிஞ்சுனது என்னவோ 3 மாடுங்க தான். அதோட வாரிசுகள், தெருவோரமா வயசாகி சுத்துற மாடுங்க எல்லாம் சேர்த்து, 57 மாடுகளை வளர்க்கிறேன்.

கறிக்கடையில் மீட்பு பணி:

பொதுவாக மாடு வளர்க்குறவங்க, பால் கொடுக்கும் வரைதான் பசு மாட்டை வளர்ப்பாங்க. உழைக்கும் வரைதான் காளை மாட்டை வளர்ப்பாங்க. அதன்பின், கறிக்கடைக்கு வித்துருவாங்க. அப்படிப்பட்ட அடிமாட்டைத்தான் நான் வளர்க்குறேன். சில சமயம் கறிக்கடையில் நிற்கும் மாட்டைக் கூட பேரம் பேசி வாங்கிட்டு வந்திருக்கிறேன்.

கரிசனம் ஏன்?

ஒரு தடவை, நாகர்கோவிலில் பஸ்ல போயிட்டு இருந்தேன். அப்போ நான் பார்த்த காட்சியை, இப்போ நினைச்சாலும் பயம் தொத்திக்குது. கறிக்காக, ஒரு காளை மாட்டை நடு முதுகுல அடிச்சுக் கொன்னாங்க. அதற்கு பிறகுதான், பராமரிக்க முடியாம விற்கப்படும் அடிமாடுகளை விலைக்கு வாங்கி பராமரிப்பதுன்னு, முடிவு செய்தேன்.

ஒரு காலத்தில், வயசான மாடுகளை ஊரிலேயே ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பராமரிப்பாங்க. ஆனால், இன்னிக்கு வயசான மாடுகளை கறிக் கடைக்குதான் அனுப்பி வைக்குறாங்க. அவற்றை விலை கொடுத்து வாங்கி, பராமரிப்பதை வேள்வியாக செய்கிறேன் என்று, தாயுள்ளத்தோடு சொன்னார் சசிகலா.


நல்ல மனம் கொண்ட இந்தப் பெண்மணியை வாழ்த்துவோம்....

இந்த வார முகப்புத்தக இற்றை:


சஞ்சய் தத் சிறையிலிருந்து பரோலில் வந்ததைப் பற்றி படித்த ஒரு தாய், தனது மகனிடம்: “நீ அப்படி எங்க தான் வேலை செய்யற, சிறையில் இருக்கறவங்களுக்கு கூட 14 நாள் லீவ் கிடைக்குது உனக்கு லீவே கிடைக்காதா?

இந்த வார குறுஞ்செய்தி

ஒரு தோட்டத்தினை பராமரிக்கும் தோட்டக்காரர் மரங்களுக்கு தினம் தினம் தண்ணீர் பாய்ச்சினாலும், அதற்கான காலங்களில் மட்டுமே பழம் தரும். போலவே நல்லது அதற்கான நேரத்தில் நிச்சயம் நடக்கும்.  நம்பிக்கை கொள்!

இந்த வார புகைப்படம்: 



இந்த புகைப்படம் சமீபத்தில் நான் எடுத்தது. பார்த்தால் ஏதோ கோலம் போல தெரிகிறதல்லவா? இதில் ஒரு சிறப்பு இருக்கிறது – இது வரையப்பட்டது சமதளத்திலோ, தரையிலோ அல்ல! இது வரையப்பட்டிருப்பது ஒரு கட்டிடத்தின் கூரையில்! எத்தனை நுணுக்கமாக வரையப்பட்டிருக்கிறது. அப்பப்பா....  அந்த கலைஞர்களுக்கு ஒரு பூங்கொத்து!

படம் எடுக்கப்பட்டது எந்த இடம், என்ன கட்டிடம் என்பது வரும் நாட்களில் “தலைநகரிலிருந்துபகிர்வாக வரும்!
  

ரசித்த பாடல்:

இந்த வாரம் ரசித்த பாடலில் ஒரு வங்காள மொழி பாடல் – Sei Bhalo Sei Bhaloபாடியவர் ஜயதி சக்ரபோர்த்தி. மொழி புரியவில்லையெனிலும் கேளுங்கள்....  மனதிற்கு ரம்யமான இசையும் குரலும்....  நான் ரசித்த Sei Bhalo Sei Bhalo பாடல் இதோ உங்கள் ரசனைக்கு!




ரசித்த விளம்பரம்:

கூகிள் நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஒரு தேடியந்திரம். நாம் பதிவுகள் எழுதப் பயன்படுத்தும் பிளாக்கர் கூட கூகிள் தந்த வரம் தானே.  இந்த மாதம் 13-ஆம் தேதி கூகிள் ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது பார்த்தீர்களா? பார்க்கவில்லையெனில் உடனே பாருங்கள். கூகிள் வெளியிட்ட விளம்பரம் இதோ உங்கள் பார்வைக்கு!




படித்ததில் பிடித்தது!:

அ முதல் ஔ வரை!
அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
அவ்வ்வ்வ்!
-          தமிழன் என்ற இந்தியன்

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா..

    பதிவு அருமை முதலில் வாழ்த்துக்கள் ஐயா...

    பலதடவை ஏமாற்றம்
    நீங்கள் எழுதும் பதிவை ரசித்து படிப்பவன் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன்.. ஏன் என்றால் நான் .wordpress.com.இல் எழுதுவதால் உங்கள் பதிவை பார்த்து படிக்கத்தான் முடியும் Googleகணக்கு உள்ளவர் மட்டுமே கருத்துப் போட முடியும் தயவு செய்து select frofileபகுதியில் மாற்றம் செய்யுங்கள் இது என்னுடைய தாழ்மையான ..மடல்.. தங்களுக்கு....

    எனது வலைப்பூ முகவரி -https://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன், தங்களது முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி.

      முதலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லும்படி தான் வைத்திருந்தேன். சில காரணங்களினால் கூகிள் ப்ரொஃபைல் இருப்பவர்கள் மட்டுமே கருத்திடும்படி மாற்றம் செய்ய வேண்டியதாயிற்று.

      மாற்றிவிடுகிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். தொடர்ந்து சந்திப்போம்.....

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    என் பதிலுக்கு அதிரடியாக செவி சாய்த்து பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
    என் வருகை இனி தொடரும்....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. சுவைத்தேன் அருமை.
    அந்த அடிமாடுகளோடு அந்த வியாபாரியையும் உள்ளேயே வைச்சி பயணம் செய்து தண்டனை நிறைவேற்றினால் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  4. அருமையான ஃப்ரூட் சாலட்.
    கூகுள் விளம்பரம் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. நட்பின் ஆழத்தைக் கண்டு.
    தாயுள்ளம் கொண்ட சசிகலாவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      இந்த காணொளியை பலமுறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நெகிழ்ச்சி.....

      நீக்கு
  5. அடிமாடுகள், கூரை ஓவியம், அனைத்தும் அருமை. குறிப்பாக கூகிள் விளம்பரம் அருமையோ அருமை.ஒரு குறும்படமாய் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு

  6. சசிகலா. - தாயுள்ளத்தோடு நல்ல மனம் கொண்ட பெண்மணியை வாழ்த்துவோம்....

    காணொளிக் காட்சி ரசிக்கவைத்தது ..!
    நட்பின் ஆழமும் , வாரிசுகளின் முயற்சிகளும் இனிமை ..!

    பதிலளிநீக்கு
  7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

    பதிலளிநீக்கு
  8. வெள்ளிக்கிழமை என்றால் தலைக்குளியலும் கோவிலுமே
    ஞாபகத்திற்கு வரும். இப்போது அதனுடன் இன்னொன்று .....
    அது தான் உங்கள் ப்ரூட் சலாட் . அருமை. நம்பிக்கை கொள்
    என்று சொல்லும் குறுஞ்செய்தியை மிக ரசித்தேன்.
    சசிகலாவை இருகரம் கூப்பி வணங்குகின்றேன். இதே போன்று
    வயதான மாடுகளைப் பராமரிக்கும் பசுமடம் என்ற அமைப்பிற்கு
    அவ்வப்போது பொருள் உதவி செய்வதுண்டு. ஏதோ நம்மால் முடிந்தது
    அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      உங்களைப் போன்றவர்கள் தரும் ஆதரவும் உற்சாகமும் மட்டுமே ஃப்ரூட் சாலட் தொடர்ந்து வர ஒரு காரண்ம்...

      நீக்கு
  9. சசிகலா அவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்... வாழ்த்துக்கள் பல...

    மற்ற ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. விளம்பரமாகவே தோன்றவில்லை, அது தான் சிறப்பு. பழைய நட்புகளை எண்ணிக் கொஞ்சம் அழுது மனம் சேலானது. நன்றி வெங்கட்.

    அழகான போட்டோக்கு நடுவே ஒரு கோடு போட்டிருக்கீங்களே, ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நான் போட்ட கோடு அல்ல! அப்படியே தான் இருக்கிறது! ஒரு வேளை அம்பு போல எதோ வரைந்து இருப்பார்களோ என்னமோ புரியவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  11. மதுரை அழகர்கோயில் நிர்வாகம் தானமாய் வந்த பசுக்களைப் பராமரிக்க முடியாததால் ,இனி பசுதானம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளது .கோவிலே இப்படி கை விரித்தால் ?
    த.ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  12. சாலட்டில் ப்ரூட் அதிகம்...
    எல்லாம் சுவை...

    ஓவியம் சூப்பர்....

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் இன்னும் சில கோவில்களிலும் இது போன்ற ஓவியங்களைப் பார்க்கலாம்....

    பிள்ளையார் பட்டியில் ஒரு பிள்ளையாரை சுவற்றில் வரைந்திருப்பார்கள். நாம் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் நம்மளைப் பார்ப்பது போலவே இருக்கும். அந்தக் காலத்தில் எவ்வளவு நுணுக்கமாக வரைந்திருக்கிறார்கள்...

    பாடல், விளம்பரம் அருமை...

    மாடுகள் வருத்தமான விஷயம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்...

      நீக்கு
  13. தாயுள்ளத்தோடு சொன்ன சசிகலா அவர்களுக்கு நம் பாராட்டுக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  14. அருமையான ஃப்ரூட் சாலட். !

    சசிகலா. - நல்ல மனம் கொண்ட பெண்மணியை வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  15. வாழ்க சசிகலா!

    அ முதல் ஔ வரை! இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....

      நீக்கு
  16. அந்த பெண்மணியை எம்புட்டு பாராட்டினாலும் தகும், மாடுகளும் உயிர்தானே ?

    பல்சுவை விருந்து அருமை அண்ணே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  17. கோமாதாக்களை காக்கும் தாய்க்கு வந்தனங்கள்! அழகான கலவைகளுடன் சுவையான ப்ருட் சாலட்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  18. வாழ்க சசிகலா.
    இற்றை - சிரிப்பு.
    ஃபோட்டோ - பிரமாதம்
    அ முதல் ஔ வரை பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  20. அன்புள்ள வெங்கட் நாகராஜ், பசு மாட்டை விற்பார்களா, அடிமாடு சந்தை என்று பலரும் பரிதாபப் படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் நாணயத்தின் இரண்டாம் பக்கமும் தெரிந்து கொள்வதுஅவசியம் என்று நினைக்கிறேன், சில நாட்களுக்கு முன் திரு.காஷ்யபன் வலைப் பூவில் ஒரு இடுகை படித்தேன். அதன் சுட்டியையும் தருகிறேன் படித்துப்பாருங்கள், விருப்பு வெறுப்பில்லாமல். நன்றி
    kashyapan.blogspot.in/2012/01/blog-post_16.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி......

      நாணயத்தின் இன்னொரு பக்கம் - நீங்கள் கொடுத்த சுட்டிக்குச் சென்று திரு காஷ்யபன் அவர்களது பதிவினையும் படித்தேன்.

      நீக்கு
  21. கலை நயம் மிகுந்த நம் இந்தியாவில் ஆழ்ந்து கவனித்தால் உங்களைப் போன்ற புகைபடக் காரகளுக்கு குறையாத புதையலே கிடைக்கும். திருச்சி தாயுமானவர் சந்நதி போகும் முன் இருக்கும் இடத்தில் கூரையில்( விதானத்தில் அற்புதமான ஓவியங்கள் இருக்கிறது. பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கூகிள் விளம்பரம் அட்டகாசம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்திருக்கிறேன். ஐந்து [ஆறு?] உடல்கள் ஒரு தலை கொண்ட குரங்கு - எந்தப் பக்கத்திலிருந்து பார்க்கிறோமோ அந்தப் பக்க குரங்கின் தலை போலவே தெரியும்...

      இன்னொரு ஓவியம் ஒரு மாடும் யானையும் வரைந்திருக்கும் - ஒரு பக்கத்திலிருந்து யானை மற்ற பக்கத்திலிருந்து மாடு - அருமையாக இணைத்திருப்பார்கள்.

      இன்னும் சில ஓவியங்கள்! முன்பெல்லாம் இவற்றை படம் எடுக்க அனுமதித்தார்கள். இப்போது அனுமதிப்பதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  22. சசிகலாவும் மனுஷி தான்... அந்த மாடுகளை வெட்டி தின்பவர்களும்....

    கூகுல் விளம்பரம் நெகிழ்வு.

    ஓவியத்தின் கனபரிமாணம் எல்லா திசையிலும் மாறாமல் உச்சியில் வரைவது திறன் நிறை பணியே!

    பகிர்ந்த ஆத்திச்சூடி எல்லா உணர்வுகளையும் சமன்செய்து சிரிப்பூட்டி விட்டது சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  23. கணோளி கண்களில் நீரை வரவழித்துவிட்டது.
    சிறப்பான பதிவு.
    வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  24. ரசித்தேன்!
    அபூர்வமான பெண்மணி சசிகலா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  25. அருமையான ப்ரூட் சாலட்... அந்த கூகுள் படமும் அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  26. சசிகலாவின் சேவை மிகப்பெரியது. எல்லோருக்கும் இந்த மனம் இல்லையே!
    அந்த போட்டோ " அக்ஷர் தாம் " இல் எடுத்தது என்றே நினைக்கிறேன். கூகுள் விளம்பரம் நெகிழ வைத்தது. வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  27. anpudan nagaraj avarkalukku
    inthavaara puhaipadam parthen athil ullathu ARABIC eluthanikkalai oviyam arabu moliyil ulla punitha vaasahankalai olonkamaithu eluthum kalai ithu kopura kuvi maadathin ulpurathil varayappattathaka irukkum
    nanri

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி alkan.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....