வியாழன், 23 ஏப்ரல், 2020

கதம்பம் – நளதமயந்தி – க்ராஃப்ட் – ஃப்ரைட் இட்லி – துளசி பாட்டி


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்… நீண்ட தூரம் வராது சிபாரிசு… எல்லா பொழுதும் கிட்டாது உதவி… எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை!

நளதயமயந்தி: 11 ஏப்ரல் 2020:

நேந்திரங்கா உப்பேரி பண்ணியதிலிருந்தே மாதவன் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். "இந்த நேந்திரங்கா உப்பேரி மட்டும் இருந்தா ______ ______ கூடச் சாப்பிடலாம் என்று என் பாட்டி சொல்வா" என்று சொல்லியிருப்பார் :)

மகளிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். வழக்கமாக, கதை என்ன? சொல்லு? என்பாள். அன்றும் அதையே சொன்னாள். கதை சொன்னதோடு இல்லாமல் மகள் இதுவரை பார்த்திராததால் நேற்று இருவரும்  இணையத்திலும் பார்த்து ரசித்தோம்.

2003ல் வெளிவந்த திரைப்படம் இது. அப்போது நான் டெல்லியில் இருந்ததால் நானும், என்னவரும் சிடியில் தான் பார்த்தோம். ராம்ஜியாக மாதவனும், தமயந்தியாக கீது கோவிந்தும், தங்கை பாக்யமாக விஜய் தொலைக்காட்சி டிடி யும்  நடித்திருக்கின்றனர்.

பாலக்காட்டில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மாதவன் தன் தங்கைக்கு வரதட்சணை கொடுப்பதற்காக ஆஸ்திரேலியாவில் சமையல் வேலைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார். முதல் விமானப் பயணம். வேலை இல்லாமல் போவது; பாஸ்போர்ட், விசாவை தொலைப்பது; நிர்பந்தத்தில் நடக்கும் திருமணம்; என்று பல அனுபவங்கள்; நகைச்சுவைக்கு இதில் பஞ்சமில்லை.

கமலின் தயாரிப்பிலும், மெளலியின் இயக்கத்திலும் வெளிவந்த இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்து ரசிக்கலாம்.

ரோஷ்ணி’ஸ் கார்னர் – 12 ஏப்ரல் 2020:


Multipurpose rack!

இந்த மாதிரி மூன்று தட்டு அலமாரி அநேகமாக எல்லோர் வீட்டிலுமே இருக்கும். டெல்லியில் நான் ஒன்பது வருடங்கள் இந்த மாதிரி மூன்று தட்டுகளை வைத்து தான் குடித்தனமே செய்தேன். அங்கு அடுக்களையில் சமையல் மேடைக்கு மேலே ஒரே ஒரு slab தான் இருக்கும். அதிலேயே பாதியை பூஜையறையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

திருமணமாகி டெல்லிக்கு வந்த அன்றே என்னவர், 'இங்கிருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அவர்களின் சமையலறையை பார்த்து நீயும் உனக்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்' என்றார்.

மொத்தம் பதினோரு வீடுகள் கொண்ட  எங்கள் ப்ளாக்கில் அப்போது ஐந்து குடும்பங்கள் தமிழர்கள். அப்படி எங்கள் நெருங்கிய நட்புவட்டத்தில் ஒருவரான மாறனும், மகியும் எங்கள் ப்ளாக்கிலேயே வசித்தவர்கள். அவர்களின் வீட்டைப் பார்த்து நானும் மூன்று தட்டுகள் கொண்ட அலமாரியை அப்போது 100 ரூக்கு வாங்கி சமையல் மேடையில் வைத்தேன். உப்பு, புளி, பருப்புகள், பொடி வகைகள், டபரா டம்ளர்கள் என்று சகலமும் அதில் தான்.

அப்படியொரு அலமாரி தான் இதுவும். இதில் மகள் தன்னுடைய பொருட்களை வைத்துக் கொள்வாள். அந்த தட்டுகளில்  அட்டைகளை வெட்டி வைத்து, வண்ணம் தீட்டி அலங்கரித்திருக்கிறாள்.

ஆதியின் அடுக்களையிலிருந்து:  ஃப்ரைட் இட்லி - 13 ஏப்ரல் 2020



மீந்து போன இரண்டு இட்லிகளை எப்படியாவது மாலை நேர நொறுக்கில் காலி செய்ய வேண்டும் என்பதே டார்கெட் :) இணையத்தில் தேடினேன். சில்லி சாஸ், சோயா சாஸ் எல்லாம் இல்லை. வீட்டில் இருந்த டொமேட்டோ கெட்சப் உடன் மிளகுத்தூள், கறிவேப்பிலை தாளிதத்துடன். பிரமாதமாக இருந்தது.

ஒரிஜினல் ரெசிபி இங்கே.


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க – 23 ஏப்ரல் 2013:

கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்த போது, 2013-ஆம் வருடம் இதே நாளில் எழுதிய ஒரு பதிவு – கதம்பம் பதிவாக இருந்திருக்கிறது. அந்தப் பதிவிலிருந்து ஒரு பகுதி…
துளசி பாட்டி: வாரா வாரம் எனக்கு பூ கொண்டு வந்து தரும் இந்த பாட்டிக்கு வயது எப்படியும் 70க்கு மேல் தான் இருக்கும். குழந்தை போன்று மென்மையான குரல். உரிமையோடு காபி போட்டுத் தாடா செல்லம் என கேட்டு வாங்கி குடித்து விட்டு செல்வார். திருமணம் முடிந்து ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே ஒரு குழந்தையை தந்து விட்டு கணவன் இறந்து விட, வீடு வீடாக சென்று பூ விற்று தான் மகனை ஆளாக்கியிருக்கிறார். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு  பேத்தியையும் திருமணம் செய்து வைக்க, குடிகாரக் கணவனோடு இனி வாழ முடியாது என அவளும் மூன்று வயது மகனை எடுத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாளாம். இப்போது தையல் வேலையும், பூக்களும் கட்டி தருவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். ஏழ்மை ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டி தான் போடுகிறது.

அந்தப் பதிவினை இதுவரை படிக்காதவர்கள் வசதிக்காக, அப்பதிவின் சுட்டி கீழே!


கைகொடுத்த சேமிப்பு: – 15 ஏப்ரல் 2020

ஊரடங்கை நீட்டித்திருப்பதால் அடுத்த மாதம் சம்பளம் வருமா? செலவுகளுக்கு என்ன செய்வது? மாதத் தவணைகளை வேண்டுமானால் மூன்று மாதம் கழித்து கட்டிக் கொள்ளலாம்!! ஆனால் மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது? என்று யோசிக்கிறோம் அல்லவா! நோய்த் தொற்று பரவாமல் இருக்கவே இந்த ஊரடங்கு..நம் நன்மைக்காகத் தான். இந்த ஊரடங்கால் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பலவித கஷ்டங்கள் இருக்கும். அன்றாடக் கூலி  வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தரும் நிலை தான். ஆனால் அதை விட உயிர் பெரிதல்லவா! நாம் நலமோடு இருந்தால் பணத்தை பிற்பாடு சம்பாதித்துக் கொள்ளலாம். சிக்கனமாக வாழ்வது எப்போதுமே நல்லது. சிக்கனமாக இருப்பவர்களுக்கு இந்த நிலையை கடப்பதில் சிரமம் சற்று குறைவாக இருக்கும். மாதச் சம்பளத்தில் சிறிதேனும் மிச்சம் பிடித்து வைத்திருந்தால் இப்போது உதவியாக இருக்கும்.

சிறுவயதிலிருந்தே சேமிக்கும் பழக்கம் எனக்குண்டு. இப்போதும் மாதாமாதம் என்னவர் அனுப்பும் தொகையில் நிச்சயம் சிறிதேனும் மிச்சம் பிடித்து விடுவேன். அதை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லமாட்டேன். சேமிப்புக்கு சென்று விடும். அடுத்த மாதம் எடுக்கும் தொகையில் தான் கணக்கு எழுதத் துவங்குவேன்எங்கள் வீட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் தான் .டி.எம் உள்ளது. நானும் வெளியில் செல்வதில்லையே. இந்த சமயத்தில் தான் என் சேமிப்பு எனக்கு  உதவியது. .டி.எம் இயந்திரங்களை உபயோகிப்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பலரும் உபயோகிப்பதல்லவாகைகளை உடனே சானிடைசரால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாங்கி வைத்த மளிகைப் பொருட்களையும் தேவைக்கு ஏற்றவாறு சிக்கனமாக செலவு செய்வது நலம். மீண்டும் பழைய நிலைக்கு வர சற்றே தாமதமானாலும் சமாளிக்கலாம் அல்லவா!

வீட்டிலேயே இருப்போம். அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்ல நேர்ந்தாலும் தக்க பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைபிடித்துச் சென்று வருவோம். இதுவும் கடந்து போகும்!

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட். 

36 கருத்துகள்:

  1. நல்ல கருத்தைச் சொல்லும் வாசகம். நளதமயந்தி பார்த்து ரசிக்க நல்ல படம். ரோஷ்ணியின் கற்பனைகளும், கைவண்ணமும் பாராட்டத் தக்கவை. ஆம், சிக்கனமாக இருந்து கொள்வதே சாலச் சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நளதமயந்தி - நல்ல படம். எனக்கும் பிடித்திருந்தது.

      சிக்கனம் எப்போதுமே நல்லது தான்.

      நீக்கு
  2. பழைய பதிவு படித்த நினைவு இருக்கிறதே என்று பார்த்தேன். என் கமெண்ட்டும் இருக்கக் கண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவு - ஆமாம் ஸ்ரீராம் - உங்கள் கருத்துரையும் உண்டு அங்கே.

      நீக்கு
  3. //அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்… நீண்ட தூரம் வராது சிபாரிசு… எல்லா பொழுதும் கிட்டாது உதவி… எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை!//

    இந்த வாசகங்கள் எனக்கு தூக்கு தூக்கி பட வாசகங்களை நினைவு படுத்தியது 
    வாசகங்கள் 
     
    கொண்டு வந்தால் தந்தை 
    கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் 
    சீர் கொடுத்தால் தங்கை 
    கொலையும் செய்வாள் பத்தினி
    உயிர் காப்பான் தோழன். 

    இந்தவாசகங்கள் மெய்ப்பிக்கும் படி கதை செல்லும். 

    அதுபோன்று "அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம் .."என்று வரிசையாக கேட்டு வாங்கி போடும் கதை எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்” என்று வரிசையாக கேட்டு வாங்கி போடும் கதை எழுதலாம்! - கேட்டு வாங்கி போடும் கதை - எங்கள் பிளாக் பாணி! ஸ்ரீராம் உங்கள் கருத்தினைப் பார்த்திருக்கலாம் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  4. பொன்மொழி அருமை
    கதம்பம் வழக்கம்போல் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் கதம்பத்தின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பொன்மொழி மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியது...கதம்பமணம் வழக்கம்போல் அருமை...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழியும், கதம்பத்தின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. காலையில் சுட்ட இட்லி நாலு இருக்கு. மாலையில் இதுபடி செய்து பார்த்துவிடவேண்டியதுதான். என்ன சாஸ், கெட்ச் அப்ன்னு எதுமில்லை. இருந்தாலும் செய்து பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள் ராஜி. நன்றாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது! :)

      நீக்கு
  8. நளதயமயந்தி மிகவும் ரசித்த படம்... எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் பார்க்கலாம்...

    Multipurpose rack மிகவும் கற்கிறது... செல்லத்திற்கு பாராட்டுக்கள்...

    ஃப்ரைட் இட்லி ஸ்ஸ்ஸ்...

    // ஏ.டி.எம் இயந்திரங்களை உபயோகிப்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் //

    இதைப்பற்றி தான் யோசனை... எப்படியும் இந்த மாதம் சமாளிக்கலாம்....

    பதிலளிநீக்கு
  9. நளதமயந்தி - ஆமாம் தனபாலன். ஒன்றிரண்டு முறை பார்த்த போது மிகவும் ரசித்த படம்.

    தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

    ஏ.டி.எம். இயந்திரங்கள் - கடினம் தான் - விரைவில் சூழல் சரியாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. கதம்பம் அருமை.

    Fried Idliயா? ம்... பார்க அழகா இருக்கு. இட்லி சாப்பிடறதே அதன் எண்ணெய் இல்லாத தன்மைக்குத்தான்.

    மல்டிபர்பஸ் rack - இதைப் பார்த்த உடன், துபாய் சேர்ந்த புதிதில் வாங்கின அலமாரி நினைவுக்கு வந்துவிட்டது. அதுவும் தட்டுகளோடு, சுத்திவர பிளாஸ்டிக் உறைகள். Zip போட்டு மூடலாம், திறக்கலாம். 5 அடி உயரம்.. வேற வீட்டுக்குப் போனால், கழற்றி எடுத்துக்கொண்டு அங்க போய் அசம்பிள் பண்ணிக்கலாம்.

    நளதமயந்தி படம் பார்த்த நினைவு இல்லை.

    அது சரி..இன்னுமா அத்தி பாகங்கள் படித்துமுடிக்கலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      ஃப்ரைட் இட்லி - எப்போதாவது இப்படி சாப்பிடலாமே!

      இங்கே தில்லியில் நிறைய இது மாதிரி வந்து கொண்டிருந்தது. இப்போது அவ்வளவாக இல்லை.

      அத்தி - மகள் முடித்துவிட்டாள்.

      நீக்கு
  11. ஏற்கெனவே முகநூலிலும் படிச்சேன். ஆனால் ஓவியமும் மூன்றடுக்கு ராக்கும் படங்கள் இதில் வரவில்லை. சில பதிவுகள் இப்படித் தான் இருக்கு! ஃப்ரைட் இட்லிக்கு தோசை மிளகாய்ப் பொடி மட்டுமே போதும்! தயிரோடு சாப்பிட அருமை! இன்னும் கொண்டா, கொண்டா எனக் கேட்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  12. இல்லைனா சும்மா வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு கொஞ்சம் போல் உப்புச் சேர்த்து இட்லியை எண்ணெயில் உசிலிக்கலாம் உப்புமாவாக! அதுவும் பிடிக்கும். ஆனால் எப்போவானும் தான் பண்ணுவது! அவருக்கு அவ்வளவாப் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உசிலிக்கலாம் உப்புமாவாக - இது செய்வது உண்டு கீதாம்மா. ஆனால் இங்கே அல்ல! இங்கே தோசை மட்டுமே செய்கிறேன் - சில நாட்கள்!

      நீக்கு
  13. நளதமயந்தி பார்த்துவிட்டேன், நன்றாக இருக்கும்.

    முகநூலில் படித்தேன் இங்கும் படித்தேன். ரோஷ்ணியின் திறமைகள் வாழ்க! வளர்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நளதமயந்தி படம் நன்றாகவே இருக்கும் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகங்கள் அருமை. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.

    நளதமயந்தி படம் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். படம் நன்றாக இருக்கும். இதில் மாதவன் அழகாய் பாந்தமாய் நடித்திருப்பார்.

    ரோஷ்ணியின் கை வேலைகள் அழகாய் உள்ளது. அவருக்கு என் பாராட்டுக்கள்.

    இட்லி உசிலி நன்றாக உள்ளது. இதில். கடுகு, மோர் மிளகாய் தாளித்து அதில் இட்லியை பிய்த்துக் போட்டு நன்கு உதிர்த்துக் சாப்பிட்டால், இட்லி பிரியையான எனக்கு ரொம்பவும் பிடிக்கும். தொட்டுக் கொள்ள ஏதுவுமின்றி இப்படியே ஆறேழு இட்லிகளை விழுங்கி விடலாம்.

    துளசி பாட்டியின் கதை மனம் கனத்தது.

    சேமிப்பு என்றுமே நமக்கு நல்லதைதான் தரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நளதமயந்தி எனக்கும் பிடித்த படம்.

      மகளை பாராட்டியதற்கு நன்றிம்மா...

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  15. அன்பு வெங்கட் முக நூலிலும் படித்தேன். ரோஷ்ணியின் ஆர்வம்
    மகிழ்ச்சியாக இருக்கிறது.
    ஆதியின் சமையல் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.
    அன்பு வாழ்த்துகள்.
    நளதமயந்தியும் பார்த்திபன் கனவும் ஒரே நேரத்தில் வந்தன. துபாயில் பார்த்து ரசித்தேன்.
    மாது,கீது ஜோடி சூப்பர்.
    நல்ல நினைவுகளுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்திபன் கனவு படமும் எனக்கு பிடிக்கும் மா...

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      நீக்கு
  16. வாசகம் அருமை. தன்னம்பிக்கை மிக மிக முக்கியம்

    ரோஷினியின் கைவண்ணத்திற்குப் பாராட்டுகள்.

    துளசி பாட்டியப் போன்று பலர் இருக்கின்றனர். பாவம்.

    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் வருகை - நன்றி துளசிதரன் ஜி.

      வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  17. வாசகம் சூப்பர்.

    நளதமயந்தி படம் பார்த்திருக்கிறேன். ரசித்த படம். நல்ல ஜாலியான படம்.

    ஃப்ரைட் இட்லி சூப்பரா செஞ்சுருக்கீங்க ஆதி. நம்ம வீட்டு ஃபேவரைட்.

    ரோஷிணி ஆல்வேஸ் ராக்ஸ்! ரொம்ப அழகாசெஜ்ருக்கா. கலர்ஃபுல்!

    துளசி பாட்டி பாவம்..எத்தனை பேர் இப்படி வறுமை புரட்டிப் போடுகிறது. இதோ இப்போது இங்கு இலவச சாப்பாடு பெற வரும் கூட்ட்டத்தைப் பார்க்கும் போது இந்த சின்ன ஏரியாவிலேயே இப்படி நாடு முழுவதும் ? ரொம்ப வேதனையாக இருக்கிறது.

    எல்லாமே ரசித்தேன் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  18. ப்ரை இட்லி நமக்கும் பிடித்தமானது.
    ரோஷிணி கைவண்ணம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ரை இட்லி உங்களுக்கும் பிடித்ததா? மகிழ்ச்சி மாதேவி.

      மகளின் கைவண்ணம் - பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  19. நினைவைகளில் ஒரு சர்பிங்
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....