சனி, 2 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - பாவன் கஜ் கா தாமண் - ஓவியக் கவிதை


காஃபி வித் கிட்டு - 92


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன் - நேற்றைய பதிவு வழி சொல்லி இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லையே!.  இந்த புத்தாண்டில் நம் அனைவருக்குமே பிரச்சனைகள் விலகி நல்லதே நடக்க எது பிரார்த்தனைகள். 


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும்போது அமைதி அவ்விடத்தினை விட்டு அகன்று விடுகிறது - மாக்ஸிம் கார்க்கி


******


நட்பு - தவறாக பயன்படுத்தப்படும் போது!


பல சமயங்களில் நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் நட்பு, அந்த நட்பின் மரியாதையால் காட்டப்படும் அன்பு ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படும் போது நமக்கு ஏற்படும் வலி கொஞ்சம் அதிகம் தான்! பலமுறை நான் இந்த விஷயத்தினை உணர்ந்திருக்கிறேன்.  நட்பு கெட்டு விடக்கூடாதே என அமைதியாக இருந்தால் இன்னும் இன்னும் அதிக அளவில் என்னைப் பயன்படுத்திக் கொண்ட நட்புகள் உண்டு!  அவர்கள் செய்வது தவறு என எடுத்துச் சொல்ல நினைத்தாலும், நட்பு முறிந்து விடுமே என்ற ஒரே காரணத்திற்காக, பொறுமை காத்திருக்க, அவர்கள் நம்மை இன்னும் இன்னும் அதிகமாக, அவர்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும் போது, “போங்கடா நீங்களும் உங்க நட்பும்!” என்று தோன்றிவிடுகிறது!  இப்படி உங்களுக்கும் நடந்திருக்கலாம்! பலரும் சந்திக்கும் பிரச்சனை தான் - இருந்தாலும் இங்கே பகிர்ந்து கொள்வது ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே! வேறு ஒன்றும் பெரிதாக செய்து விடப் போவதில்லை!  என்னைப் பொறுத்த வரை நட்பு முக்கியம்!  - பல சமயங்களில் எனக்கு இழப்பு ஏற்பட்டாலும்! 


புத்தாண்டு கொண்டாட்டங்கள்: 


வீட்டின் அருகே இருக்கும் கன்னாட் ப்ளேஸ் பகுதி புத்தாண்டு இரவில் (31 டிசம்பர்) அன்று கோலாகலமாக இருக்கும்.  இரவு ஒன்பது மணிக்கு மேல் வாகனங்கள் அப்பகுதியில் தடை செய்யப்படும் - எல்லோருமே நடந்து தான் செல்ல வேண்டும் - பார்க்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டு - அவர்கள் தெரிந்தவர்களாக இல்லாத பட்சத்திலும், அன்பை பரிமாறிக் கொள்வதுமாக இருக்கும்!  தீநுண்மி பயம் காரணமாக இந்த வருடம் எந்தவிதக் கொண்டாட்டங்களுக்கும் அனுமதி மறுத்து விட்டார்கள்.  தில்லி நகரம் முழுவதுமாக இரண்டு நாட்களுக்கு (டிசம்பர் 31, ஜனவரி 1) இரவு வேளைகளில் 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து விட்டார்கள்!  ஒரு விஷயத்தில் இந்த உத்தரவு நல்லது என்றாலும், இந்த உத்தரவினை அமல்படுத்துவது கொஞ்சம் கடினமே என்று தோன்றியது எனக்கு - தலைநகரின் கொண்டாட்டங்கள் அப்படி! பொதுவாகவே இப்படியான கொண்டாட்டங்களில் நான் பங்கு கொள்வதில்லை - இந்த வருடம் செல்லலாம் என திட்டமிருந்தது எனக்கு! :)  எனக்காகவே தடை உத்தரவு போட்டிருப்பார்களோ? ஹாஹா...


குளிர் குறைவோ? - தவறான எண்ணம்: 


இந்த வருடம் குளிர் குறைவோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது.  அறுபது ஆண்டுகளில், எழுபது ஆண்டுகளில் மிகக் குறைவான நவம்பர் மாதம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாலும், எனக்கென்னமோ குளிர் தெரியவே இல்லை!  ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நல்ல குளிர்! தண்ணீரில் கை வைத்தால் வலிக்கும் அளவிற்கு!  சில்லென்ற காற்றும் சேர்ந்து கொள்ள நல்ல குளிர் வந்து விட்டது!  அலுவலகம் வீடு என உள்ளேயே இருந்தாலும், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு என சென்று வரும்போது அடிக்கும் காற்றில் குளிர் அதிகம் தெரிகிறது. புத்தாண்டு தினமான நேற்று காலை தில்லியில் பதிவான குறைந்தபட்ச அளவு (Minimum Temperature) 1.1 Degree Centigrade! இதிலிருந்தே கடும் குளிர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருக்கும் நமக்கே குளிர் அதிகமாக தெரிகிற போது, வீடில்லாமல், சாலைகளில் தங்கி வாழ்க்கை நடத்தும் பலரைப் பற்றி யோசிக்கும்போதே மனதில் வலி! வாழ்க்கையை வாழ்ந்து தானே தீர்க்க வேண்டியிருக்கிறது பலருக்கும் - அடைமழையாக இருந்தாலும், கடுங்குளிராக இருநாலும் இல்லை கொடுமையான கோடையாக இருந்தாலும்!


இந்த வாரத்தின் பாடல்: 52 கஜ் கா தாமண்


இந்த வாரத்தின் பாடலாக ஒரு ஹரியானா பாடல் - இந்தப் பாடலும் சமீப நாட்களில் மிகவும் பிரபலமான பாடலாக இருக்கிறது.  மொழி புரியவில்லை என்ற கவலை வேண்டாம் - பாடலைக் கேட்டுப் பாருங்களேன்! இந்தப் பாடல் ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பது புரியாத புதிர்!


பின்னோக்கிப் பார்க்கலாம் - ஓவியக் கவிதை





2014-ஆம் ஆண்டு இதே நாளில் பகிர்ந்து கொண்ட பதிவு ஒன்று - பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவாக! திரு ராஜன் அவர்களின் ஓவியம் ஒன்றினை வெளியிட்டு கவிதைகள் எழுத அழைப்பு விடுத்தபோது வந்த கவிதை ஒன்றினை பதிவாக வெளியிட்டு இருந்தேன் - அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள்!


என்னவனே என்னை மயக்கிய மன்னவனே


கண்ணாளனே என்னை களவாடிய கள்வனே


உன்னோடு நான் கொண்ட காதல் பசலையில்


என் மேனியும் குருதியாய் திகைக்கிறதே


மோகத்தீயில் நான் எரிய மேகமாய் உன் காதல் மழை பொழிய‌


யாருமில்லா நந்தவனத்தில் மன்னவனே


 நீ சூடிய மலரினில் உன் வாசம் வீச‌


முழுக் கவிதையும், பதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே…


ஓவியக் கவிதை – 7 –காயத்ரி


என்ன நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!  மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

புது தில்லி


30 கருத்துகள்:

  1. நன்றி, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா. காப்பி வித் கிட்டு அருமையாக இருந்தது. நட்பை ஆதாயத்திற்குப் பயன்படுத்துவது வலி தருவது தான்.
    பாடல் அருமை, இசையும், நடனமும் வண்ணமயமாக.கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குளிர் என்று சொன்னீர்கள், டேக் கேர். வீடில்லாதவர்கள் பாவம். இங்கும் தான், ஆனால் இங்கு மிகக் கொடிய ஐஸ் நாட்களில் வீடில்லாதவர்கள் தங்குவதற்கென்றே சிறப்பு விடுதிகள் திறக்கப்படும். நம்மூரில் இருக்கா தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியிலும் குளிர் காலத்தில் வீடில்லாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் திறக்கப்படுவது உண்டு. ஆனால் அப்படியான முகாம்கள் திறந்தாலும் நடைபாதையில் தங்கும் அனைவருக்கும் இடம் போதாது! இந்தியாவின் மக்கள் தொகை அப்படி! இன்னும் பல முகாம்கள் திறக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  3. நட்பைப் பயன் படுத்திக் கொள்பவர்கள் போலவே கொச்சைப் படுத்துபவர்களும் என் அனுபவத்தில் உண்டு.

    சென்னையில் 'இயல்பு வாழ்க்கை' வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது.  மாஸ்க் என்றால் என்ன என்று கேட்கிறார்கள்.  போடச்சொல்லி அறிவுறுத்தினால் சண்டைக்கு வருகிறார்கள், வாதம் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பைக் கொச்சைப் படுத்துபவர்களும் உண்டு - உண்மை. பல சமயங்களில் அனுபவித்திருக்கிறேன் ஸ்ரீராம்.

      இயல்பு வாழ்க்கை - பல ஊர்களில் இப்படித்தான் இருக்கிறது. தில்லியைப் பொறுத்தவரை மாஸ்க் பயன்பாடு ஒழுங்காகவே இருக்கிறது. சண்டைக்கு வருபவர்களும், வாதம் செய்பவர்களும் - ஒன்றும் செய்வதற்கில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. டெல்லி குளிர் பற்றி செய்தியில் பார்த்தேன்.  எதுவுமே அங்கு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்போல!

    அந்தப் பழைய பதிவில் நான் ஏதாவது முயற்சித்திருந்தேனா என்று சென்று பார்த்தேன்.  ஊ...ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதுவுமே அங்கு கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும்போல!// ஹாஹா... உண்மை தான் ஸ்ரீராம்.

      பழைய பதிவில் உங்கள் முயற்சி எதுவும் இல்லை. இப்போது கூட முயற்சி செய்யலாமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உடன் பழகுபவர் சரியில்லை எனில் விலகி விடுவேன்... சின்ன வயதில் இருந்தே இப்படியாகி விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலகி விடுவதும் நல்லது தான். என்னால் அப்படி யாரிடமிருந்தும் சட்டென விலகி விட முடிவதில்லை துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. //கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருக்கும் நமக்கே குளிர் அதிகமாக தெரிகிற போது, வீடில்லாமல், சாலைகளில் தங்கி வாழ்க்கை நடத்தும் பலரைப் பற்றி யோசிக்கும்போதே மனதில் வலி!//
    இந்த 1 டிகிரி குளிரிலும் 30 நாட்களுக்கு மேல் ரோட்டில் அமர்ந்து போராடும், எத்தனையோ விவாசாயிகள் உயிரிழந்த போதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இரக்கமற்ற, ஆணவமிக்க இந்த அரசை என்ன சொல்வது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  8. காஃபி வித் நட்புடன் சிறப்பு... இதற்கென 50 குறள்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பிற்கான குறள்கள் ஐம்பது - மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமையான பதிவு. நட்பை தவறாக பயன் படுத்துவது வேதனையான விஷயம். டெல்லியில் கடந்த ஒரு வாரமாக குளிர் மிகவும் அதிகம்.ஒவிய கவிதை பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாகப் பயன்படுத்தப்படும் நட்பு - வேதனை தான் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இனிய புத்தாண்டு நல்🎊வாழ்த்துகள். வயது குறைவாக இருக்கும் பொழுது குளிர் கடுமையாக தெரியவில்லை. இப்போது சௌகரியம் அதிகரித்து உள்ளது. ஆனால் கஷ்டமும் அதிகமாக தெரிகிறது. தம்மின் மெலிந்தோரை நினைத்து கொள்வேன். சிரமம் light ஆகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கயல் இராமசாமி மேடம். வயது ஆக ஆக, குளிர் அதிகமாகத் தெரிவது இயல்பு தானே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி VIC.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. காலையில் கருத்துரை போடவில்லையோ... ?

    உண்மையான நண்பர்கள் நட்பை கொச்சை படுத்தமாட்டார்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரை எதுவும் வந்த மாதிரி தெரியவில்லை கில்லர்ஜி.

      உண்மையான நண்பர்கள் - அரிதாகிக் கொண்டே வருகிறார்கள் இந்த மாதிரி நண்பர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    நட்பைப்பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள் வெங்கட்! உண்மையான நட்பில்கூட சுயநலம் திடீரென்று குறுக்கே வரும்போது அது வரை இருந்த நட்பு பொய்யாகி விடுகிறது!
    ஓவியக்கவிதை நன்றாக உள்ளது. ஓவியரின் முழுப்பெயர் நடராஜன். சின்ன வயதிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஓவியர். நிறைய‌ பேருக்கு ஆதர்ஸ குரு எனக்கும் உள்பட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மனோம்மா.

      சுயநலம் புகுந்து விட்டால் நட்பு பொய்யாகி விடுகிறது என்பது உண்மை தான். பல முறை இதனை உணர்ந்திருக்கிறேன்.

      ஓவியர் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்.
    நட்பை தவறாக பயன்படுத்துபவர்களிடமிருந்து நானும் சிலசமயம் விலகியதுண்டு.
    நட்பைவிட காதலில் இளம் வயதில் விழுந்தால் அவர்கள் பயன்படுத்தப்படும் விதம் பார்க்க மிகவும் சுவையாக இருக்கும்.
    அது குறித்து நீங்கள் பார்த்த அணுபவங்கள்/சுய அணுபவங்கள் இருப்பின் அதை ஒரு தொடராக சுவாரசியமாக எழுதலாம்.
    மழை அதிகம் பெய்தால், சற்று பனி குறையும், அதிக நீர் இருப்பால் கோடையும் தாங்கும் அளவு இருப்பதுண்டு.
    கவிதை அருமை, பதிவை படித்துவிட்டு வருகிறேன் சார்.
    சீக்கிரம் தீனுண்ணி குறைந்து மக்களின் பொருளியல் மேன்படும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டு வாழ்த்துகள் அரவிந்த். பதினேழு நாட்கள் கழித்து இப்போத்தான் சொல்றேன்! ரொம்ப தான் சீக்கிரம்! ஹாஹா...

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. நட்பைத்தவறாகப் பயன்படுத்தியவர்களே அதிகம், எனக்கு! அதையும் கடந்தே வர வேண்டி இருக்கு. குளிர் எப்போவுமே தில்லியில் அதிகம் தானே! இந்த வருஷமும் அதிகமாக இருப்பதாகச் சொல்கின்றனர். இங்கே மழை/குளிர் என வாட்டுகிறது. சூரியன் லீவு எடுத்துக்கொண்டு 2,3 நாட்கள் ஆகிவிட்டன. நேற்றுக் கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டு உடனே ஓடிவிட்டான்.இன்னிக்கு இன்னும் வரவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பைத் தவறாகப் பயன்படுத்தியவர்களே அதிகம் - உண்மை தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....