வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தில்லி அலுவலகம் இனி இல்லை - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட திருச்சி புத்தகத் திருவிழா - 2026 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


1991 - கல்லூரி தேர்வுகள் முடிந்த பத்து-பதினைந்து நாட்களுக்குள் தலைநகர் தில்லியில் உள்ள மத்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தேன்.  தமிழ், ஆங்கிலம் தவிர அரைகுறை தெலுகு/மலையாளம் மொழி அறிவுடன் Hindi Heartland என்று சொல்லக்கூடிய பகுதியில் இருக்கும் தலைநகர் தில்லிக்குச் சென்று சேர்ந்தபோது ஹிந்தி என்பது ஒரு மொழி என்பதைத் தவிர அதனைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது! ஆனால் எந்த தைரியத்தில் அங்கே சென்று சேர்ந்தேன் என்பது இன்று வரை எனக்கு புரியாத புதிர்.  இரயில் நிலையத்திற்கு வந்து என்னை அழைத்துச் சென்ற நபர் திரு முத்துமாறன் - இந்தியன் வங்கியின் தில்லியிலுள்ள கரோல் Bபாக்g கிளையில் அதிகாரியாக பணிபுரிந்தவர் - அவர் இருக்கும் தைரியத்தில் தான் நான் தில்லிக்குச் சென்று சேர்ந்தேன்.  அவரது வீட்டிற்குச் சென்று தயாரான பிறகு அவரே என்னை அழைத்துச் சென்றது சுகாதாரத் துறை அலுவலகம் இயங்கிவந்த நிர்மாண் Bபவன் எனும் கட்டிடத்திற்கு!



24-04-1991 - அன்று நான் பணியில் சேர்ந்த அலுவலகம் இயங்கிவந்த அந்த கட்டிடம் குறித்த எனது நினைவுகள் தான் எத்தனை எத்தனை? சற்றேறக்குறைய - இதுவரையான 35 வருடங்கள் அலுவலக வாழ்க்கையில் 26 வருடங்களுக்கும் மேலாக இதே அலுவலகக் கட்டிடத்தில் தான் பணிபுரிந்திருக்கிறேன்.  கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு தளத்திலும் ஒரு சில மாதங்களேனும் பணிபுரிந்திருக்கிறேன்.  அதில் இருக்கும் நூற்றுக்கணக்கான அறைகள் ஒவ்வொன்றிற்கும் அலுவல் சம்பந்தமாக சில முறையேனும் சென்று வந்திருக்கிறேன்.   அப்படியான கட்டிடத்துடன் ஆன எனது தொடர்பு கடந்த 31 ஆகஸ்ட் 2025 - உடன் தீர்ந்து போனது.  எனது பணிமாற்றத்தின் காரணமாக தில்லியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கர்த்தவ்ய Bபவன் ஒன்றில் பணிக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்குப் பிறகு மொத்தமாக தில்லியிலிருந்து விடுபட்டு தமிழகம்/திருச்சிக்கு வந்து விட்டேன்.  




கர்த்தவ்ய பத் (Kartavya Path) என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் முந்தைய ராஜ்பத் (Rajpath) சாலையின் இருபுறமும், பக்கத்திற்கு ஐந்து என மொத்தமாக பத்து கர்த்தவ்ய Bபவன் கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றன.  ஏற்கனவே மூன்று கர்த்தவ்ய Bபவன் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு அவற்றில் சில அமைச்சகங்கள் செயல்பட ஆரம்பித்து விட்டன - நான் பணியில் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சகம் உட்பட! அப்போது முதலில் இருந்த கட்டிடமான நிர்மாண் Bபவன் என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்?  ஆம்…. அந்த கட்டிடம் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் இருக்கும் உத்யோக்g bபவன், ஷாஸ்த்ரி bபவன், க்ருஷி bபவன் போன்ற கட்டிடங்களும் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கே புதிய கர்த்தவ்ய bபவன் கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றன.  எங்கள் அலுவலகம் இயங்கிவந்த நிர்மாண் Bபவன் கட்டிடம் இடிப்பதற்கான பணிகள் துவங்கி விட்டார்கள் என்பதை தில்லி நண்பர்கள் தகவலாகச் சொன்னபோது அந்தக் கட்டிடம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என பலதும் நினைவில் வந்து போனது. 


ஒரு அலுவலக கட்டிடத்தில் தொடர்ந்து இத்தனை வருடங்கள் பணிபுரிந்து விட்டால், அந்தக் கட்டிடம் மீது ஒரு வித ஈர்ப்பு வந்துவிடுவது வாடிக்கை தானே…  1965-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும், ஏதோ ஒரு வித Attachment அங்கே பணிபுரிந்த, பணிபுரியும் ஒவ்வொரு அலுவலருக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தினை இந்தக் கட்டிடத்தில் தான் போக்கியிருக்கிறோம் - அந்தக் கட்டிடமே இனி இருக்கப் போவதில்லை என்னும் போது, ஏதோ, நாம் இருந்த வீட்டினையே அஸ்திவாரத்துடன் பிடுங்கி எறிந்து விட்டது போல ஒரு வலி மனதுக்குள் ஒவ்வொரு அலுவலருக்கும் தோன்றும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.  இரண்டு நாட்கள் முன்னர், என்னுடன் பணிபுரிந்து, ஓய்வுபெற்று, தற்போது கொல்கத்தாவில் இருக்கும் நண்பர் மஜும்தார் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது நினைவுகளை, அந்தக் கட்டிடமே இனி இருக்கப்போவதில்லை என்ற எண்ணமே மனதுக்கு உகந்ததாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  


மீண்டும் தில்லிக்குச் சென்று அந்தப் பகுதியில் உள்ள அலுவலகம் பார்க்க வேண்டும் என நினைத்தால் கூட பார்க்கமுடியாது என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  ”மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது” என்று அவருக்கு அப்போதைக்கு ஆறுதல் சொன்னாலும் அவருடனும் வேறு அலுவலக நண்பர்களுடனும் பேசும்போதும் நாங்கள் பணிபுரிந்த அலுவலகத்தின் கட்டிடம் இனிமேல் இல்லவே இல்லை என்பதைப் பற்றியே நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம்.  பொதுவாக தனியார் அலுவலகங்கள் பல்வேறு கட்டிடங்களில் செயல்பட்டாலும், பொதுவாக அரசு அலுவலகங்கள் செயல்படும் இடங்களில் மாறுபாடு இருப்பது இல்லை.  அதிலும் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் இடம் மாறுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு தான். பழைய கட்டிடங்களில் நிறைய பிரச்சனைகள், அதன் வலிமை குறித்த சந்தேகங்கள் - குறிப்பாக உத்யோக் பவன் போன்ற கட்டிடங்கள் Fire Safety பிரச்சனைகள் நிறையவே இருப்பவை என நிறைய காரணங்கள், கட்டிடங்களை மொத்தமாக, இந்தக் காலத்திற்குத் தகுந்தமாதிரி மாற்றுவதற்கு உண்டு.  


இப்படியான முடிவுகள் எடுக்க பின்புலத்தில் நிறைய காரணங்கள் இருக்கிறது.  பல அரசு அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களில் செயல்படுகின்றன. அவற்றுக்கான வருட வாடகை கோடிகளில் இருக்கும்.  இத்தனை வருடங்களாக எத்தனை கோடிகள் அரசுப் பணத்திலிருந்து செலவாகியிருக்கும் என்பதற்கு நிறைய தகவல்கள் உண்டு.  அப்படிச் செலவு செய்த பணத்தில் புதியதாக கட்டிடங்கள் கட்டி இருக்கலாம் என்றாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதாகவே இத்தனை வருடங்கள் கழிந்திருக்கின்றன.  தற்போது மணி கட்டியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.  இது குறித்த பல்வேறு கருத்துகள் இருக்கலாம் - அது குறித்து இங்கே பேசவேண்டிய அவசியமில்லை.  இந்தப் பதிவு - நாங்கள் பணிபுரிந்த அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடம் இனி இல்லை என்பதில் எங்களுக்கு இருக்கும் வருத்தத்தினை மட்டும் இங்கே பகிர மட்டுமே!


என்ன இருந்தாலும், நாம் பல வருடங்கள் இருந்த வீடு நம்மை விட்டுப் போகும்போது நமக்கு ஒரு வருத்தம் இருக்குமல்லவா? அது போலவே பல வருடங்கள் பணிபுரிந்த அலுவலகத்தினை விட்டுப் பிரிந்தாலே வருத்தம் இருக்கும் - அதிலும் அந்த அலுவலகம் இயங்கி வந்த கட்டிடமே மண்ணோடு மண்ணாகப் போகப்போகிறது எனும்போது மனதின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும் அல்லவா? இதுவும் கடந்து போகும் என்று தேற்றிக்கொள்ளத்தான் வேண்டும்! வேறு வழியில்லை.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

20 ஃபிப்ரவரி 2026


1 கருத்து:

  1. அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் போது தரப்பப்டும் வாடகை இயல்பை விட கூடுதலாக இருக்கும்.  "வாடகை சோபா இருபது ரூபா..  விலைக்கு வாங்கினா முப்ப்பதே ரூபா" என்ற பாடல் வரிகள் போல சொந்தக் கட்டிடம் கட்டி அங்கு அலுவலகங்கள் அமைவது வரவேற்கத்தக்கதே...  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....