திங்கள், 23 பிப்ரவரி, 2026

செல்வத்துள் எல்லாம் தலை - காலச்சக்கரம் நரசிம்மா - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய “செல்வத்துள் எல்லாம் தலை” என்கிற குறுநாவல் குறித்து தான்.   ஆரம்பகாலத்தில் குபேரவனக்காவல், ரங்கராட்டினம், காலச்சக்கரம் போன்ற சிறப்பான படைப்புகளை படித்த பிறகு அவரது ஒவ்வொரு நூலையும் வாங்கி (இல்லை எனில் இணைய வழி) படிப்பது  என்று அவரது நூல்களை வாசிக்கும் பழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது.  அவ்வப்போது அவரது சில சமீபத்திய ஆக்கங்களை வாசிக்கும்போது, வாசகர்களின் தொடர் எதிர்பார்ப்பு காரணமாக அதிகமாக எழுதுகிறாரோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.  அதிலும் முகநூலில் தொடர்ந்து எழுதும் சில விஷயங்கள் அப்படியான எண்ணத்தினை அதிகரிக்கச் செய்கிறது.  இது பொதுவான ஒரு விஷயமே என்றாலும், அவரது தொடர் வாசகன் என்கிற வகையிலிருந்து அவரிடமிருந்து இன்னமும் நிறையவே எதிர்பார்ப்புகள் உண்டு - குறிப்பாக குபேரவனக்காவல் போன்ற படைப்புகள்!



சரி இன்றைய வாசிப்பனுபவத்திற்கு வருகிறேன்.  அமேசான் கிண்டில் வழி வாசித்த அவரது குறுநாவல் தான் செல்வத்துள் எல்லாம் தலை என்கிற புத்தகம். மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட ஒரு குறுநாவல். பெயர் மாற்றம் குறித்த ஒரு நாளிதழ் வெளியீட்டு தகவலில் ஆரம்பிக்கிறது கதை.  அவனது தாத்தா சுந்தர காண்டம் படித்துக் கொண்டிருந்த வேளையில் பிறந்ததால் அந்த நபருக்கு “சுந்தர ஜானகிராமன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  நண்பனின் தங்கை இது என்ன நீட்டி முழக்கி சுந்தர ஜானகிராமன் என்று ஒரு பெயர் - இப்போதெல்லாம் எல்லோரும் இப்படி நீண்ட பெயர்களை நாகரீகமாக சுருக்கி வைத்துக் கொள்கிறார்கள் - நீங்கள் கூட இந்தப் பெயரை சுருக்கி - சுந்தர என்கிற வார்த்தையிலிருந்து “சு”, இரண்டாம் பெயரின் தொடக்க எழுத்தும், கடைசி எழுத்தும் சேர்த்து “சுஜன்” என்று வைத்துக் கொள்ளுங்கள் என்கிறாள். 


சுந்தர ஜானகிராமன் என்கிற கதையின் நாயகன் சுஜன் ஆகிறான்.  அதற்காக விளம்பரம் ஒன்றையும் நாளிதழில் தருகிறான்.  வேலை தேடிக்கொண்டிருக்கும் அவன் தனது Biodata-வில் சுஜன் என்று பெயர் மாற்றம் செய்ததற்கான நாளிதழின் படிவத்தினையும் சேர்த்தே தருகிறான். அவனுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும்போது ஒரு ஜோதிடர் அவனுக்கு விபரீத ராஜயோகம் கொண்ட ஜாதகம் என்கிறார். வேலை கிடைக்காமல் திண்டாடும் அவனுக்கு, அவனது குடும்ப டாக்டர் மூலம் ஒரு பணக்காரரை பார்த்துக்கொள்ளும் Male Nurse வேலை கிடைக்கிறது. படித்த படிப்பிற்கும், இந்த வேலைக்கும் சம்பந்தமே இல்லை. அவனுக்கு வேலை வாங்கித் தருவதில் அந்த மருத்துவருக்கும் தனிப்பட்ட காரணம் இருக்கிறது - அந்தக் காரணம் பணக்காரரிடம் இருக்கும் 80 கோடி ரூபாய் புதையல் ரகசியம்! எப்படியாவது அந்தப் புதையலை தான் அடைய வேண்டும் என்று விரும்புகிறார்.  சுஜனுக்குக் கொடுக்கப்படும் வேலைக்கான காரணம், எப்படியாவது சுஜன் அந்தப் பெரியவரின் நம்பிக்கையைப் பெற்று, புதையல் ரகசியத்தினை கண்டுபிடிக்க வேண்டும் - அப்படி கிடைத்தால் அதனை அபகரிக்க வேண்டும் என்கிற நோக்கம் அந்த மருத்துவருக்கு!


மருத்துவர் மட்டுமல்ல, அந்தப் புதையல் மீது பலருக்கும் கண் - பெரியவர் மீது அக்கறை இருக்கிறதோ இல்லையோ, அவரின் அனைத்து வாரிசுகளுக்கும் அவரது புதையல் மீது அதீத அக்கறை.  வேறு யாரேனும் எடுத்துக் கொண்டு விடுவார்களோ என அத்தனை வாரிசுகளும் தனது மகன், மகள், மனைவி என யாரோ ஒருவரை அந்தப் பெரியவரின் பங்களாவில் தங்க வைத்திருக்கிறார்கள். வீட்டில் பணிபுரியும் நபர்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் அந்தப் புதையல் ரகசியத்தினை தெரிந்து கொள்ள ஈடுபாடுடன் இருக்கிறார்கள்.  சுஜனை அந்தப் பெரியவர் வேலைக்கு வைத்துக் கொள்ளக் காரணமாக இருப்பது அவனது பெயர் மாற்றம் குறித்த விளம்பரம் வந்த பத்திரிக்கையில் இருக்கும் ஒரு செய்தி. பெரியவருக்கு அவரைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களும் அவரது சொத்திற்காக என்பது தெரிந்தே இருக்கிறது. 


அவர் அத்தனை பேரையும் அவர்களது நோக்கத்தினையும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.  பணத்திற்காக எதையும் செய்வார்கள் என்பதை - அதிலும் தனது சொந்தமாகவே இருந்தாலும், யாராக இருந்தாலும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை விதம் விதமாக அலைக்கழிக்கிறார்.  எப்படியாவது அந்த ரகசியத்தினை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் அனைவரும் போட்டி போடுகிறார்கள். இரவு நேரத்தில் அவரைத் தொடர்ந்து சென்று எங்கே செல்கிறார் என்றெல்லாம் பார்க்கிறார்கள் - ஆனாலும் யாராலும் அவரது 80 கோடி புதையல் ரகசியம் தெரிந்து கொள்ள முடியவே இல்லை.  இறந்து விட்டதாக ஒரு முறை நாடகம் ஆடியபொழுதும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.  இப்படி இருக்கையில் அவர் ஒருநாள் மருத்துவமனையில் இறந்து போகிறார் - சுஜனிடம் “செல்வத்துள் எல்லாம் தலை” என்கிற குறளைச் சொல்லிவிட்டு. 


எப்படிச் சிந்தித்தாலும் பெரியவரின் உறவினர்கள், சுஜன், மருத்துவர் என யாராலும் அந்த 80-கோடிக்கான விவரத்தை சேகரிக்க முடியாமல் போகிறது.  பெரியவர் எழுதிய உயில் பத்திரம் படிக்கப் போடும்போது, தனது சொத்தினை உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கிறார்.  தன்னைப் பார்த்துக் கொண்ட சுஜனிற்கு அவர் தரும் பரிசு - தனது அறையிலிருந்த ஒரு படம் - அவரது மாளிகையில் இருந்த சட்டமிடப்பட்ட ஒரு நிழற்படம்! கூடவே ஒரு கடிதம்! அந்தக் கடிதம் என்ன? 80 கோடி புதையலுக்கும் கடிதத்திற்கும் என்ன சம்பந்தம்?  சுஜனுக்கு அதனால் ஏதேனும் லாபம் உண்டா, ஜோசியர் சொன்னது போல விபரீத ராஜயோகம் உண்டானதா போன்ற தகவல்களை எல்லாம் நூலைப் படித்து தெரிந்து கொள்ளலாம். செல்வத்துள் எல்லாம் தலை என்கிற இந்த நூலை நீங்கள் வாசிக்க விரும்பினால் அமேசான் தளத்திலும் புஸ்தகாவின் தளத்திலும் வாங்கி வாசிக்கலாம்.  இது ஒரு புஸ்தகா வெளியீடு.  விலை நூறு மட்டும். 


மீண்டும் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

23 ஃபிப்ரவரி 2026


5 கருத்துகள்:

  1. இந்தக் கதை முதலில் பாக்கெட் நாவலாக வந்தபோதே வாங்கிப் படித்து விட்டேன்.  இன்னொரு பாக்கெட் நாவலும் உண்டு.  வசீ வசு என்று வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசு, வாசு, வசி சமீபத்தில்தான் படித்தேன், ரசிக்கவில்லை.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன்.

    பதிவில் காலசக்கர நரசிம்மா அவர்கள் எழுதிய கதைப் பற்றிய விமர்சனம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது படிக்கும் போதே கதை முழுவதையும் படித்து விட வேண்டுமென்ற எண்ணம் வருகிறது. நன்றாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. கதையின் அடிப்படைக்கரு கொஞ்சம் வழக்கமானதோ என்று தோன்றுகிறது.

    //தன்னைப் பார்த்துக் கொண்ட சுஜனிற்கு அவர் தரும் பரிசு - தனது அறையிலிருந்த ஒரு படம் - அவரது மாளிகையில் இருந்த சட்டமிடப்பட்ட ஒரு நிழற்படம்! கூடவே ஒரு கடிதம்!//

    சட்டமிடப்பட்ட நிழற்படத்தில் இருக்கோ ரகசியம்!? அது கடிதத்தில் குறிக்கப்பட்டிருக்குமோ?

    சமீபத்தில்தான் சிறுகதைகள்.காம் ல சுஜாதா அவர்களின் கரையெல்லாம் செண்பகப்பூ கதை வாசித்தேன். அது கூட அடிப்படையில் கரு இப்படித்தான் வேறு வகையி கதை பயணித்தாலும்.
    இப்படி ஜமீன் செல்வத்துக்காக, பணக்காரரின் செல்வத்துக்காகப் போட்டியிடும் கரு கொண்ட கதைகள் ஒன்றிரண்டு வாசித்த நினைவு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வெங்கட் நலமா....

    கண்ணாடி பிரச்னையினால் வேறு எங்கும் வருவதைக் குறைத்துக் கொண்டேன்...

    பிழையாகக் கொள்ள வேண்டாம்

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....