அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - மண்டல் கிராமத்திலிருந்து சோப்தா வரை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : என்ன கொண்டு போகப் போறோம்
சமீபத்தில் இணையத்தில் உலவிக் கொண்டு இருந்த போது ஏதோ சில வரிகள் மட்டும் ஒரு சிறு காணொளியாக பார்க்கக் கிடைத்தது. கேட்டபோதே மனதுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது அந்த வரிகள்….
என்ன கொண்டு போக போறோம்…
எத்தனை நாள் வாழ போறோம்…
எதைக் கட்டி ஆள போறோம்… யாருக்கும் தெரியாதே….
சொத்து சுகம் கூட வருமா….
சொந்தம் இன்றி நீ தனி மரமா….
நிக்கும் வரை உனக்கது புரியாது…
எத்தனை அர்த்தம் உள்ள வரிகள்… ஆனால் நாம் பார்க்கும் பலருக்கு இந்த உண்மை புரிவதே இல்லை! சமீபத்தில் பார்த்த நபரின் அதிகாரத் தோரணையும், அவர் பேச்சும், பேச்சின் வீச்சும் இந்த வரிகளைப் புரியாத நபர்களில் ஒருவராகவே அவரை என்னால் பார்க்கத் தோன்றியது! இப்படி ஒருவரல்ல, நிறையவே இங்கே இருக்கிறார்கள்! போகும்போது எதையும் கொண்டு போகப்போவதில்லை என்பதை எப்போது தான் உணர்வார்கள்?
சரி இந்தப் பாடல் வரிகள் வந்த பாடல் எது? படம் எது? தெரியாததால் மகளிடம் கேட்க, அவள் சொன்ன பதில் “சிவகுமாரின் சபதம்” என்கிற படத்தில் வரும் பாடல் என்றாள்! பாடல் கேட்க விரும்பினால் கீழேயுள்ள சுட்டி வழி கேட்கலாம்!
Ore Punnagai Video Song | Sivakumarin Sabadham | Hiphop Tamizha | Sathya Jyothi Films
******
இந்த வாரத்தின் இசை : போகாதே….
வலையுலகின் பிரபலமான துளசி கோபால் எனும் துளசி டீச்சர் அவர்கள் வசிக்கும் நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் அம்ரிதா கௌர் எனும் பாடகி. சமீபத்தில் இவரது சில பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். இவர் சில வருடங்களுக்கு முன்னர் பாடிய ஒரு சிறப்பான பாடல் - ஆஜ் ஜானே கி ஜித் நா கரோ எனும் பாடல்! அதாவது இன்றைக்கு போகிறேன் என அடம் பிடிக்காதே என்று சொல்லும் பாடல்! கேட்டுப் பாருங்களேன் - நன்றாகவே இருக்கிறது பாடல்… பாடல் வரிகளுக்கான ஆங்கில அர்த்தமும் கீழே ஓடிக் கொண்டிருக்கிறது என்பதால் பாடலையும் புரிந்து கொள்ள முடியும்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : தேனிலவை விட்டு ஓடிய தம்பதி...
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தேனிலவை விட்டு ஓடிய தம்பதி... - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. இந்தப் பதிவு சுஜாதாவின் நூல் ஒன்றிற்கான வாசிப்பனுபவம்! கிழக்கு பதிப்பக வெளியீடான இந்த நூலை வடிவமைத்தது நண்பர் பால கணேஷ் என்பது கூடுதல் தகவல்!
இரண்டாம் முறையாக நான் போன போது, கொண்டு வந்ததை எல்லாம் திருப்பி எடுத்து போக வேண்டாம் என்று விற்கத் தொடங்கியிருந்தார்கள். வாத்தியார் எழுதிய புத்தகங்களில் “ஓடாதே” மட்டும் தான் கடையை விட்டு வாசகரோடு ஓடாமல் இருந்தது. உடனே வாங்கி விட்டேன். தலைப்பு மட்டும் தான் ”ஓடாதே” ஆனால் கதை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் – ஒரு தம்பதியர் தேனிலவைக் கூட விட்டு விட்டு…
இது ஒரு க்ரைம் நாவல். படிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்க மனம் வரவில்லை. அவ்வளவு சுவாரசியம். கதையின் நாயகன் – நாயகி, புதுமணத் தம்பதியினர். அவர்கள் தேனிலவு செல்ல, ஒரு கும்பல் துரத்துகிறது அவர்களை. எதற்கு? அது நாயகன் – நாயகி, மற்றும் படிக்கும் நமக்கும் புரியவில்லை. படிக்கப் படிக்கத் தான் தெரிகிறது. துரத்திக்கொண்டு இருக்கும் நபர்கள் திடீரென துரத்துவதை நிறுத்தி விடுகிறார்கள்.
ஓடிக் கொண்டே இருக்கும் இவர்களை ஒரு கட்டத்தில் கணேஷ் – வஸந்த் காப்பாற்றுகிறார்கள். அத்துடன் நில்லாது எதற்காக துரத்துகிறார்கள் என்பதையும் ஆராய்ச்சி செய்வது தான் இந்த விறுவிறுப்பான கதை. நடுநடுவே சுஜாதாவின் அடையாளச் சின்னங்கள் வரும்போது தன்னையறியாமல் சிரிக்க வைக்கிறது. பெண் பார்க்கச் சென்ற நாயகன், நாயகியைப் பார்த்து “ஒரு நிமிஷம் பேசலாமா?” எனப் பேசியது கீழே!
“மீராவை ‘தனியாக’ பால்கனிக்கு அழைத்துச் சென்றபோது, அவள் தம்பி தங்கைகள் அடைகாக்க, ஜன்னல் வழியாக மீராவின் பாட்டி பார்த்துக் கொண்டிருக்க, தமாஷாக நிகழ்ந்தது அந்த உரையாடல்.
உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா… ரொம்ப… இந்த வருஷம் வெயிலா?.... இல்லை. நீங்க எந்த காலேஜ்? நான் லயோலா, அப்புறம் விவேகானந்தா….
இவ்வாறு பற்பல கேள்விகளுக்குப் பின் மீரா இறுத்த ஒரே பதில் – ‘உங்க காலர்ல கட்டெறும்பு ஊர்றது.’”
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் பகிர்வு : வேரின் அளவு
யாரிடம் எந்த வேலை தருவது என்பதையும், அந்த வேலையை செய்வது எப்படி என்று சொல்லத் தெரியாவிடினும் இப்படித்தான் நடக்கும் என்பதைச் சொல்லும் ஒரு கதை… இணையத்தில் படித்தது - உங்களுக்காகவும் இங்கே! படித்துப் பாருங்களேன்.
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. தண்ணீர் ஊற்றாமல் செடிகள் வாடிவிடுமே என்ற கவலை அவனுக்கு வந்தது. அச் சமயம் தோட்டக்காரனுக்கு மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சினை… எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. தோட்டக்காரனிடம் கேட்டன.
''அது ஒண்ணும் பெரிய பிரச்சினையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான் தோட்டக்காரன்.
மன நிம்மதியோடு அயல் ஊருக்கு அவன் அன்றே பயணமாகிப் போய்விட்டான்.
வெளியூர் போய் திரும்பி வந்து, தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கா என்று பார்ப்பதற்காக, செடிகளையெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள் ஒருமித்த குரலில்!
******
இந்த வாரத்தின் செய்தி - தமிழகத்தில் முதல் வாக்கு :
1991-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் நான் தலைநகர் தில்லிக்குச் சென்று விட்டேன். தில்லிக்குச் செல்லும் முன்னர் தமிழகத்தில் எனக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தாலும் வாக்காளர் அட்டை இல்லை. 1993-இல் தான் நாடு முழுவதற்குமான வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியது. 1989-ஆம் ஆண்டு தான் வாக்களிக்க தகுதியான வயது 21-லிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் வரை நான் ஒரு முறை கூட வாக்களித்ததில்லை! தேர்தல் நடந்ததாகவும் நினைவில் இல்லை. தில்லி சென்று சில வருடங்களுக்குப் பின்னரே எனக்கு முதன் முதலாக வாக்காளர் அட்டை கிடைத்தது. ஒன்றிரண்டு முறை தில்லி நகரில், வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்கும் அளித்திருக்கிறேன். ஒரு சில தேர்தல்களில், தேர்தல் பணியில் நான் இருந்ததால், எங்களது வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க இயலவில்லை. தற்போது தமிழகம் திரும்பியதும் S.I.R. செய்யப்பட்ட சமயத்தில் எனது வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து, தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னர் எனது தமிழக வாக்காளர் அட்டை கிடைத்தது - தமிழகத்தில் எனக்குக் கிடைத்த முதல் வாக்காளர் அட்டை! அதனைக் கொண்டு, கடந்த 23-ஆம் தேதி முதன் முறையாக தமிழகத்தில் வாக்களித்து எனது ஜனநாயகக் கடமையினை செய்து முடித்தேன்!
இந்தப் பதிவினை வெளியிட்ட இன்றிலிருந்து இரண்டாம் நாள் தேர்தல் முடிவுகள் வெளியாகும்! முடிவு எப்படி இருக்கப் போகிறது, என் முதல் வாக்கு பலனுள்ளதாக இருந்ததா என்பதை இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும்!
******
இந்த வாரத்தின் வேதனை : நடிகர் மீதான ஈர்ப்பு
நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக, ஜோசப் விஜய் அவர்களை ஆதரித்தும், அவர் மீது அதீத அளவு ஈர்ப்பும் கொண்டு அவரைத் தேர்தலில் ஆதரித்தும், அவருக்காக விஷம் கூட பெற்ற பிள்ளைகளுக்குத் தருவேன் என்று சொல்லும் அம்மாவாக இருப்பதும், விதம் விதமான காணொளிகளை வெளியிடுவதுமாக இருக்கும் இளைஞர்கள், யுவதிகள் என பலரைப் பார்க்கும்போது மனதில் ஒரு வித வேதனை தான் மிஞ்சுகிறது. நடிகர் என்பதைத் தவிர வேறு எந்த விதத்தில் அவர் பொறுப்புள்ள ஒரு பதவிக்குத் தகுதியானவராக இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்த வித அரசியல் அனுபவமும் இல்லாமல் ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆக நினைக்கும் அவரையும், அவரை ஆதரிக்கும் மக்களையும் நினைத்தால் வேதனை தான் வருகிறது. சமீபத்தில் படித்த காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் முகநூல் இற்றை இந்த வேதனை சரி என்று சொல்லும்படி இருந்தது. முடிந்தால் அவரது முகநூல் பக்கத்தில் சென்று 25-04-2026 தேதியிட்ட பதிவினை படித்துப் பாருங்கள்.
******
இந்த வாரத்தின் கார்ட்டுன் - கிஸ்ஸா குர்சி கா :
கிஸ்ஸா குர்சி கா என்று ஹிந்தி மொழியில் 1978 - ஆம் வருடம் ஒரு சினிமா வெளியானது. படம் குறித்து இங்கே எதுவும் சொல்லப் போவதில்லை. குர்சி என்றால் நாற்காலி! இந்த ஆண்டு சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் வெற்றி யாருக்கு என்பதில் விவாதங்கள், கருத்து மோதல்கள் என எங்கே பார்த்தாலும் பார்க்கவும், படிக்கவும், கேட்கவும் முடிகிறது. எல்லாம் இரண்டு நாட்கள் வரை தான்! மே நான்காம் தேதி மாலை நேரத்திற்குள் எல்லா முடிவுகளும் தெரிந்து விடும்! நாற்காலியில் அமரப் போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ள இரண்டு மாநிலங்களுமே காத்திருக்கிறது. தேர்தல் நடந்த மற்ற மாநில முடிவுகள் குறித்து கூட அத்தனை எதிர்பார்ப்புகள் இல்லை என்று தோன்றியது! தமிழகத்தில் நடந்த இந்த வருடத்தின் தேர்தல் குறித்து ஹிந்து நாளிதழில் வெளி வந்த கார்ட்டூன் ஒன்று உங்கள் பார்வைக்கு!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
2 மே 2026



இதே பொருளில் வேறு சில பாடல் வரிகளும் நினைவுக்கு வருகின்றன..
பதிலளிநீக்கு"கொண்டு வந்தததென்ன கொண்டு செல்வதென்ன ஒன்றுமில்லையே முடிவிலே இதை உணர்ந்தபிள்ளை உன் மடியிலே..."
"கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல..."
'' பொன்னும் பொருள் போகும் வரும் அன்பு மட்டும் போவதில்லே தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டுப் போவதில்லே ..
இதே பொருளில் வேறு சில பாடல் வரிகள் - சிறப்பு. எனக்கும் இந்தப் பாடல்களில் ஒன்றிரண்டு நினைவுக்கு வந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
இன்று போக அடம் பிடிக்காதே பாடல் நன்றாய் இருக்கிறது.
பதிலளிநீக்குபாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குபழைய பதிவில் சுருக்கமான விமர்சனம் கண்டேன். இப்போது மறுபடி ஒருமுறை படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குசுருக்கமான விமர்சனம் - நூலும் சிறிய நூல் தான்! மீண்டும் படிக்க இருப்பது அறிந்து மகிழ்ச்சி. அவரது சில நூல்கள் மீண்டும் மீண்டும் படிக்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
தோட்டக்காரனின் குரங்குகள் புன்னகைக்க வைத்தன. கண்ணீர்க் கதை!
பதிலளிநீக்குகண்ணீர்க் கதை - உண்மை தான். யாரிடம் என்ன வேலை தரவேண்டும் என்பது தெரியாவிட்டால் கண்ணீர் சிந்த நேரிடும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
என்ன....? தமிழகத்தில் முதல் வாக்கே இப்போதுதானா?
பதிலளிநீக்குஆ...
ஹாஹா... ஆமாம் இப்போது தான் முதல் வாக்கு! 1991-இல் தில்லி சென்று விட்டேனே! அதன் பிறகு வாக்களிக்க வாய்ப்பிருந்ததில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
இன்றைய வாசகத்திற்கு உட்பொருள் இருக்கோ? அரசியல் ரீதியாக!!!
பதிலளிநீக்குகீதா
உட்பொருள் - இருக்கலாம்! நான்காம் தேதி தெரிந்து விடும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
முதல் பகுதி - பாட்டு இப்பதான் ஜி கேட்கிறேன். இது திரைப்படப் பாடலா? ஹிப் ஹாப் ஆதியின் இசையோ? இசை பரவாயில்லை நல்லா தொடங்கி இடையில் கொஞ்சம் வேறாகிப் போனாலும்...வரிகளும் . கீதையின் சாராம்ஸம் பாடலாக....
பதிலளிநீக்குகீதா
நானும் பாடலை முதல் முறை தான் கேட்டேன். பொருள் பிடித்திருந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
அம்ரிதா கௌர் கேட்டிருக்கிறேன் ஜி. அருமையான குரல், மிக நன்றாகப் பாடுவார்.
பதிலளிநீக்குஇந்தப் பாடலும் கேட்டிருக்கிறேன். யமன் கல்யாண் ராகம் அருமையான பாடல் இப்பவும் கேட்டுக் கொண்டே டைப்பிங்
கீதா
உங்கள் பதிவையும் பார்த்துவிட்டேன் ஜி
பதிலளிநீக்குகையிலெடுத்ததிலிருந்து படித்து முடிக்கும் வரை கீழே வைக்காத வகை நான்//
அதே நானும்...
அந்தப் பெண் பார்ர்கும் படலம் என்னவோ டக்கென்ற்னு ரோஜா படத்தை நினைவூட்டியது. ஓடாதே கதை என்னிடம் இருக்கிறது என்று நினைவு பார்க்கிறேன்.
வாக்களிப்பு தமிழகத்தில் முதல் முறை!!!....
எப்ப நீங்க //1991-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் நான் தலைநகர் தில்லிக்குச் சென்று விட்டேன். // இப்படிச் சொன்னாலும் உடனே எனக்கு, நான் 1987 அக்டோபர் நவம்பரில், எல்லாம் நான் நினைத்தபடி நடந்திருந்தால் தில்லி போயிருக்க வேண்டும் என்ற நினைவு வந்துவிடும்.
கீதா
தோட்டக்காரன் குரங்குகள் - சிரிப்பு வந்துவிட்டது ஆனால் கதையை ஊகிக்க முடிந்திருந்தாலும்.
பதிலளிநீக்குகீதா
நடிகர் மீதான ஈர்ப்பு உங்கள் கருத்தே என்னுடையதும் ஜி. நீங்க அக்காணொளிகளின் கீழ் இருக்கும் கருத்துகளைப் பார்த்திருப்பீங்க அதாவது நம்மைப் போல் இது சரியல்ல வேதனை தரும் விஷயம் என்று பேசும் காணொளிகளின் கீழ், தவறு என்று சொல்பவர்களைக் கன்னாபின்னான்னு திட்டி.
பதிலளிநீக்குகீதா
ஆமாம் இந்த முறை குர்சி யாருக்கு என்ற போட்டியின் காரணம் இருமுனைப்போட்டி போய் இந்த முறை மும்முனைப் போட்டி என்பதால் தமிழகம் தான் அதிகம் பேசப்படுகிறது. காரணம் விஜயின் என்ட்ரி! இதிலும் மாஸோ!!!!!!? ஹாஹாஹ
பதிலளிநீக்குகீதா