வெள்ளி, 29 மே, 2026

ஊர் சுத்தி - அடுத்த பயணம் - முன்னுரை - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Plastic உபயோகம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



என் இல்லத்தரசி, என்னைச் சீண்ட நினைக்கும்போது ஒரு வார்த்தை பயன்படுத்துவார் - அந்த வார்த்தை - “ஊர் சுத்தி!”  - ஊர் ஊராகச் சுற்றுவது எனக்குப் பிடித்தமான விஷயம் என்பதால் இப்படி ஒரு பெயர் எனக்கு வைத்திருக்கிறார்.  உண்மை தானே! ஊரைச் சுற்றுவதில் - அதுவும் தொடர்ந்து பல நாட்கள் என்றாலும் கூட ஊர் சுற்றுவது என்பது எனக்குப் பிடித்தமான விஷயம் தானே! அதுவும் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறேனே - அதனால் அந்தப் பெயர் எனக்குப் பொருத்தம் தானே!   தலைநகரிலிருந்து திருச்சி வந்த பிறகு நீண்ட பயணங்கள் செய்வதற்கு அத்தனை வாய்ப்புகள் இல்லை.  தமிழகத்திற்குள் வார இறுதிகளில், விடுமுறை நாட்களில் மாநிலத்திற்குள் இருக்கும் ஏதோ ஒரு இடத்திற்குச் சென்று வந்ததுண்டு - நெய்வேலி, சதுரகிரி பயணங்கள் போல!  அதைத் தவிர பெரிதாக சுற்றுலா என்ற பெயரில் ஊர் சுற்றவில்லை.  அது ஒரு மனக்குறையாகவே இருந்து கொண்டிருந்தது.  


அப்படியான ஒரு சமயத்தில் நண்பர் பிரமோத் அவர்களின் அழைப்பு - கேரளத்திலிருந்து!  என்னதான் தொடர்ந்து பேசிக்கொண்டு இல்லை, தொடர்பிலும் இல்லை என்றாலும் சில நட்புகள் முறிவதே இல்லை… நண்பர் பிரமோத் உடனான எனது நட்பு அப்படியான ஒன்று. பதினைந்து வருடங்களுக்கு முன்னதாக ஒரு பயிற்சிப் பட்டறையில் நானும் அவரும் சந்தித்தோம். கேரள அரசின் பணியாளராக அவரும், மத்திய அரசுப் பணியாளர்களில் ஒருவராக நானும் அந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கு கொண்டோம். ஒன்பது வார பயிற்சி அது. அப்போது தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. இன்னமும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. எனது அப்பா மறைந்த போது திருவனந்தபுரத்திலிருந்து காரில் திருச்சி வரை வந்து விசாரித்த பண்பாளர் அவர். இதிலிருந்து எங்கள் நட்பின் ஆழம் உங்களுக்குப் புரியலாம். 


இந்த கால கட்டங்களில் நானும் அவருமாக பல பயணங்களை மேற்கொண்டு இருக்கிறோம். சில பயணங்களில் அவரது நண்பர்களும் வருவதுண்டு. சில பயணங்கள் நானும் அவரும் மட்டுமே கூட சென்றதுண்டு. ஒரு பயணம் இருவரும் குடும்பத்தினருடன் செய்தோம். இனிமையான நட்பு அவருடையது. தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு வட கிழக்கு மாநிலங்களில் பயணித்தோம். அது ஒரு சுகானுபவம். அந்த பயண அனுபவங்களை எனது வலைப்பூவில் எழுதினேன். அது நான்கு மின்னூல்களாகவும் அமேசான் தளத்தில் உள்ளது. இதோ இப்போது மீண்டும் ஒரு பயணம் அவருடன்… சில நாட்கள் முன்னர், அவரிடமிருந்து அழைப்பு! வேண்டாம் என்று சொல்ல மனது வரவில்லை. கேட்டவுடன் சரி என்று சொல்லி விட்டேன்…


பல நாட்களாக நாம் திட்டமிட்டபடி ஒரு பயணம் செய்யலாமா? என்று கேட்டார்.  எப்போது பயணிக்க வேண்டுமென்றாலும் எனக்கு அழைப்பது அவரது வழக்கம்.  வடகிழக்கு மாநிலங்களில் ஆறு மாநிலங்களில் பயணம் செய்த பிறகு ஏழாம் மாநிலமாக விட்டுவைத்திருந்த மிசோரம் மாநிலம் பயணிக்க திட்டமிட்டபோது வீட்டுச் சூழல் என்னை பயணம் செய்ய விடவில்லை. அம்மா-அப்பா என இருவரும் உடல்நிலை சரியில்லாதபோது, தொலைதூர பயணங்கள் செய்ய வாய்ப்பு கிடைத்தபோதும், அப்படிச் சென்று வர மனது இல்லை. பயணிக்கும்போது ஊரில், வீட்டில், ஏதேனும் ஆகிவிட்டால், அங்கிருந்து திரும்புவது கடினமாயிற்றே என்று நினைத்து பயணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.  அவர் ஏற்கனவே முன்பதிவுகள் செய்து வைத்ததால், அவர் மட்டும் Solo பயணமாக சென்று வரச் சொன்னேன். அதற்குப் பிறகு இன்னுமொரு முறை அழைத்தபோதும் என்னால் பயணிக்க முடியவில்லை. அதனால் அந்தப் பயணத் திட்டத்தினையே வேண்டாம் என விட்டுவிட்டார்.  இந்த முறை அழைத்தபோது உடனடியாக போகலாம் என்று சொல்லி விட்டு, அந்த பயண நாள் வர காத்திருந்தேன்.  ஏற்பாடுகள் சிலவற்றை அவர் செய்ய, எனது பயணத்திற்கான முன்பதிவுகளை நான் செய்தேன்.  எங்கே பயணம்? எந்த மாநிலம்? எவ்வளவு நாட்கள் பயணம்? காத்திருங்கள்…  காத்திருக்கும் வேளையில் ஒரு முன்னோட்டமாக சில படங்களும உங்கள் பார்வைக்கு! 























என்னதான் பயணத்திற்கான திட்டங்களை நாம் வகுத்துக் கொண்டாலும், பயணம் சிறப்புறுவதும், திட்டமிட்டபடி பயணம் முடிப்பதும் இறைவன் கையில் தானே! நாங்கள் திட்டமிட்டபடியே பயணம் செய்ய முடிந்ததா? இல்லையா? இயற்கையின் பேரெழில் சிறப்பு தான் என்றாலும், சில இடங்களில் இயற்கையின் சக்தியை மீறி மனிதர்களால் செய்ய முடியும் காரியங்கள் ஏதேனும் உண்டா? என்பதையெல்லாம் உணர்த்திய பயணமாகவும் அமைந்தது. என்ன தான் மனிதர்கள் தம் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தாலும், சில சமயங்களில் அது அசட்டு நம்பிக்கை என்ற அறிவை நமக்குத் தந்து கொண்டேயிருக்கிறது இயற்கை. மனிதர்கள் செய்யும் சில காரியங்கள் தங்களுக்குத் தாமே வைத்துக் கொள்ளும் வெடிகுண்டு என்பதை உணராத வரை இயற்கைப் பேரிடர்கள் இங்கே தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கப் போகிறது என்கிற உணர்வையும் எனக்குத் தந்த பயணம் இது. வரும் வாரங்களில் எனது பயண அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுகிறேன். சற்றே அதிகமான பகுதிகள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன் - ஒரு நாள் பயணம் என்றாலே ஒன்பது பகுதிகளாக எழுதுபவனாயிற்றே என்று சில குரல்கள் ஒலிக்கலாம்! :) ஹாஹா... விவரங்கள் தருவதில் தப்பில்லையே! வரும் பகுதிகளில் சந்திக்கும் வரை...


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

29 மே 2026


11 கருத்துகள்:

  1. உங்கள் பதிவிலேயே ஒரு உற்சாகம் தெரிகிறதே...   நீண்ட நாட்களுக்குப்பின் வாகான ஒரு பயணம் சென்று வந்த உவகை!

    பதிலளிநீக்கு
  2. படங்களை பார்த்தால் வறட்சியும் தெரிகிறது, வளமையும் தெரிகிறது. வெயிலும் தெரிகிறது, பசுமையும் தெரிகிறது. காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. படத்துக்குப் பின்னான பாராவில் பயணம் பற்றி நிறைய "க்' வைத்து எழுதி இருப்பதால் என்ன தடைகளோ, என்ன நினைத்து என்ன மாறியது என்றெல்லாமும் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அந்த மாடு உள்ளே இறங்கி மாட்டிக் கொண்டதா? இல்லை அப்படி அனுப்பி இருக்கிறார்களா?  எப்படி வெளியே வரும்?  வழி இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அவ்வளவு ஆழமில்லையே...சின்ன பள்ளம் தான். இடப்பக்கம் பாருங்க ஒரு ஆள் இறங்கிச் செல்லலாம் போன்ற ஒரு இடைவெளி கல் இருக்கு..கயிறும் கழுத்தில் இருக்கு கட்டிப் போட்டிருக்காங்களோ என்று தோன்றுகிறது. ஏறியும் விடலாம் என்று நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
  5. ஊர் சுத்தி ஓடுகாலி! என்பது என் பட்டப் பெயர்கள். ஹாஹாஹாஹ...ஊரில் இருந்தப்ப, நாகர்கோவில் போய்வருவதே எனக்குப் பிடித்தமான விஷயம் வீட்டில் எல்லாம் விட மாட்டாங்களே. ஒரு சில சமயங்களில் வீட்டில் சண்டை போட்டு, தோழிகளுடன் கன்னியாகுமரி, திற்பரப்பு என்று கல்லூரிக்காலத்தில் போய் வந்ததுண்டு. வந்த பிறகு டின் கட்டப்படும் என்பது வேறு விஷயம்....எனவே அப்பெயர்! அதன் பின் வீட்டில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன் எங்கேயாவது போலாமா என்று. இதே பெயர்! உனக்கு எப்பவும் ஊர் சுத்தறதுதான் ...இப்படி

    கீதா

    பதிலளிநீக்கு
  6. படங்கள் வெகு அழகு

    பல்வேறு காலநிலைகள் இடங்கள் போன்று தெரிகிறது

    உணவு.. ஹா ஹா இத்தகைய பயணங்களில் ரோட்டி குல்சா ஊறுகாய் தயிர் புலாவ் சாயா தவிர வேறு புதிதாகக் கிடைத்ததா?

    பதிலளிநீக்கு
  7. பயணம் என்றால் அனுபவம்

    இருந்தாலும் எதிர்பாரா சிக்கல்கள் வரலாம்

    பிரமோத்தை உங்கள் பதிவுகள் வழியே சந்தித்திருக்கிறோம்

    வாழ்க்கையில் நட்பு என்பதற்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.

    மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மூன்றும் வெவ்வேறு உறவுகள். எல்லாமே உயர்வானவை அவசியமானவை தனித்துவம் கொண்டவை

    பதிலளிநீக்கு
  8. நட்பிற்கு அடிக்கடி பேச வேண்டும் என்றில்லைதான் ஜி அது அந்த vibe ஆழமான ஒன்று, அதிகம் பேசாமலேயே கூட ஆழமான நட்பைத் தொடர முடியும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லைனா..

    நீங்களும் அவரும் வடகிழக்குப் பகுதியில் பயணித்தது நினைவிருக்கிறது.

    Solo பயணமாக// இதுவும் செமை அனுபவமாக இருக்கும் ஜி! அது நம் மனம் அமைதியாக...அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. பெரும்பாலும் ஏதேனும் நிகழ்வு நிமித்தமாக ஒரு சில ஊர்களுக்குச் செல்வது தனியாகத்தான்.

    2021 ல் ஊருக்குச் சென்ற போதும் ரொம்ப தூரம் இல்லைனாலும், ஓரிரு இடங்களுக்குத் தனியாகச் சென்று வந்தேன். வெள்ளம் வந்ததால் நான் திட்டமிட்டபடி இன்னும் சில இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. அது ஒரு தனி அனுபவம் ஜி. மனம் நிச்சலனம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. உற்சாகமான பயணம் அதுவும் இப்படிப் பயணங்களை நேசிக்கும் நட்பு!!!

    முதல் படம் வாவ்! போட வைத்தது. அந்தப் பாலம் அமைப்பதற்காக மலை வெட்டப்பட்டதோ அதன் வடிவங்களா? டிசைன் செய்தது போன்று இருக்கிறது.

    4 வது படம் பிரமிப்பு. என்ன ஒரு இயற்கை வடிவம்!! செம!!

    பனி சூழ் மலைகள், நதி, வளைந்து செல்லும் சாலைகள் மாடு எல்லாமே அழகு,

    புத்த விஹார், அமைதியான பசுமைச் சூழல்!

    ஆனால் மலைகள் வெட்டப்பட்டிருப்பதும் தெரிகிறது.

    மனிதர்கள் செய்யும் சில காரியங்கள் தங்களுக்குத் தாமே வைத்துக் கொள்ளும் வெடிகுண்டு என்பதை உணராத வரை இயற்கைப் பேரிடர்கள் இங்கே தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கப் போகிறது //

    உறுதியாகச் சொல்லலாம் ஜி!

    எழுதுங்க ஜி! அதிகமானால் என்ன?

    ஒரு நாள் பயணம் என்றாலே ஒன்பது பகுதிகளாக எழுதுபவனாயிற்றே என்று சில குரல்கள் ஒலிக்கலாம்! :)//

    ஹாஹஹா ஜி இது எனக்கும் பொருந்தும்...நான் எழுதும் போதும் கருத்தில் சொல்லப்பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இயற்கை படைப்பின் அதிசயங்கள் நிறைந்த இடமாக படங்கள் மூலம் தெரிகிறது .

    வருகிறோம் உங்கள் பயணத்தில்.......

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....