சனி, 6 ஜூன், 2026

காஃபி வித் கிட்டு - 242 - மூதாட்டி - திருநங்கை - இறந்த பின்னும் வித்தியாசம் - Friendship - Banno Ki Rasm - நிலவின் நிழல் - இது என்ன?


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Lahaul Spiti Circuit Trip - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ஓவியம் :  மூதாட்டி



கண்ணன் சித்ராலயா என்ற முகநூல் பக்கத்தில் தனது அருமையான ஓவியங்களைப் பகிர்ந்து வருகிறார் ஒருவர். அவர் பக்கத்திலிருந்து எனக்குப் பிடித்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு.  இந்த ஓவியத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் எழுதி அனுப்பலாமே!


******

 

இந்த வாரத்தின் ரசித்த பகிர்வு : திருநங்கை



படம்: இணையத்திலிருந்து...

இந்த வாரம் படித்து ரசித்த ஒரு முகநூல் இற்றை - போகன் சங்கர் அவர்களின் எழுத்தில்… பேருந்தில் பார்க்கும் காட்சிகளை பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்காமல் இப்படி சின்னதாய், மனதைத் தொடும் விதமாக எழுதி விட முடியும் என்று சொல்ல வைக்கும் பகிர்வு. படித்துப் பாருங்களேன் - உங்களுக்கும் பிடிக்கும் விதமாக இருக்கலாம்! 


கொடைக்கானல் பேருந்தில் 

ஒரு பெண்ணை விடவும் பேரழகியாய் இருந்த 

முன்னிருக்கை திருநங்கை 

'மன்னவன் பேரைச் சொல்லி 

மல்லிகை சூடிக்கொண்டேன்'

என்ற வரி வரும்போது

ஏன் திடீரென்று விம்மினாள்

என்று பேருந்தில் யாருக்கும் தெரியவில்லை.

அல்லது

எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

'மன்மதன் பாடல் ஒன்று 

நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்.

சொல்லத்தான் எண்ணியும் 

இல்லையே பாஷைகள் 

என்னவோ ஆசைகள்.."

யாரோ ஒருவர் பாட்டை நிறுத்தச் சொன்னார்.

யாரோ ஒருவர் பாட்டை தொடரச் சொன்னார்.

பேருந்து

வளைவில் திரும்பும் போது 

குளிர் காற்று ஒன்று 

காத்திருந்தது போல்

உள்ளே ஏறி வந்து 

கட்டியிருந்த மௌனத்தை ஊடறுத்துச் சென்றது.

பாட்டு தொடர்ந்தது.

' மேனிக்குள் காற்று வந்து  மெல்லத்தான் ஆடக் கண்டேன் .

மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்.'

அவள்  இப்போது 

கண்ணைத் துடைத்துக் கொண்டு 

ஒளிரும் முகத்துடன்

உடன் பாடிக் கொண்டிருந்தாள்.

யாரோ இந்த உலகை

ஒரு கணம்

முற்றிலுமாக வாடச் செய்துவிட்டு

மறுகணம்

முற்றிலுமாக

மலரச் செய்து கொண்டும் இருந்தார்.


என்ன நண்பர்களே, இந்த இற்றை பிடித்திருந்ததா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன் - இங்கேயும் அவரது முகநூல் பக்கத்திலும்!


******


பழைய நினைப்புடா பேராண்டி : இறந்த பின்னும் வித்தியாசம்.....



2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - இறந்த பின்னும் வித்தியாசம்..... - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


இம்ஃபால் நகரின் மத்தியில் இருக்கும் ட்யூலாலாண்ட் எனும் பகுதியில் அமைந்திருப்பது போர் வீரர்களுக்கான இடுகாடு. 1600 வீரர்களின் உடல்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன.  வீரர்கள் எனும்போது நிச்சயம் போரும் நடந்திருக்க வேண்டுமே.....  நடந்தது. கடுமையான போர்.


இரண்டாம் உலகப் போர் சமயம் – ரங்கூனிலிருந்து [தற்போதைய மியான்மார்] ஜப்பானியர்கள் படை ரென்யா முடாகுச்சி தலைமையில் இந்திய எல்லை நகரமான மணிப்பூர் வழியாக பிரம்மபுத்திர சமவெளியான அசாம் வரை கைப்பற்றும் எண்ணத்தோடு உள்ளே நுழைந்தது. மணிப்பூர் பகுதியில் இருந்த ஆங்கிலேய-இந்திய படை வீரர்களின் திறமையை, போராடும் குணத்தினை, குறைவாக எடை போட்ட ஜப்பானிய படை வெகு விரைவில் தங்களது தவறை உணர்ந்தது.  மூன்று மாதங்கள் கடுமையான சண்டைகள் நடக்க, இரு பக்கத்திலும் பலத்த உயிர் சேதங்கள் – ஜப்பானியர்கள் பக்கம் ஆயிரக் கணக்கில்…


சில வாரங்களில் மணிப்பூர் வீழ்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இந்தியா வந்த ஜப்பானியர்களுக்கு பலத்த சேதம். அவர்கள் கொண்டுவந்திருந்த உணவு மற்றும் தளவாடங்கள் தீர்ந்து போக, இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வந்த போது ரங்கூனை நோக்கி திரும்பியது ஜப்பானிய படைகள்.  இரு பக்கத்திலும் பலர் உயிரிழக்க, ஜப்பானியர்கள் அல்லாதவர்களின் உடல்களை இந்த இடத்தில் தான் புதைத்து அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைத்தார்கள்.  முதலில் 950 போர் வீரர்களுடைய கல்லறைகள் இருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகப் போர் காலத்தில் [1939 முதல் 1945 வரை], உயிரிழந்த, இம்ஃபால் நகரின் மற்ற இடங்களில் இருந்த கல்லறைகளும் இங்கே கொண்டு வரப்பட்டு இப்போது மொத்தம் 1600 போர் வீரர்களுடைய கல்லறைகள் இங்கே இருக்கின்றன.


மேலே உள்ள சுட்டி வழி வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்ற பயணம் குறித்தான தொடரின் பகுதியாகிய இந்தப் பதிவினை முழுவதுமாக படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


பெரியம்மா கார்னர்  : Friendship


பெரியம்மா பல சமயங்களில் சற்று முன்னர் நடந்த விஷயத்தினைக் கூட மறந்து விடுவார். ஆனால் பழைய சம்பவங்கள் நினைவில் இருக்கும்.  அவ்வப்போது பழங்கதைகள் பலவும் கூறுவார் - சில சமயம் அவை Repeat Telecast ஆகக் கூட இருக்கலாம. ஆனாலும் கேட்பதற்கு சுவையான நினைவுகள் தான்.   சென்ற வாரத்தின் ஒரு நாள் காலை - பெரியம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். “இன்னிக்கு என்ன சமையல்?” என்றவரிடம் முள்ளங்கி சாம்பார் - உருளைக்கிழங்கு கறி” என்று பதில் தந்தேன்.  அதற்கு அவர் சொன்னது தான் இந்த இற்றையின் சாராம்சம்.  “உருளைக்கிழங்குக்கும் முள்ளங்கிகும் நல்லதொரு Friendship! முள்ளங்கி சாம்பார் நா உருளைக்கிழங்கு கறி தான் combination! இப்படி நிறைய ஃப்ரெண்ட்ஷிப் இருக்கே!” என்று சிரித்தார்.  அதிகம் படித்ததில்லை என்றாலும் அவரது பரந்து பட்ட விஷய ஞானம் பல சமயங்களில் பிரமிக்க வைக்கும்.  வயது மூப்பின் காரணமாக பல விஷயங்கள் மறந்து போனாலும், எப்போதாவது இப்படிப் பேசிவிடுவார்.  


******


இந்த வாரத்தின் விளம்பரம் - Banno Ki Rasm :



Breast Cancer - நம் நாட்டில் பலரையும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் இந்த கொடுமையான அரக்கனுக்கு.  இதற்கு அவ்வப்போது Self Examination செய்து கொண்டு டாக்டரையும் சந்திக்கச் சொல்லும் விளம்பரம் - மேதாந்தா மருத்துவமனை வெளியிட்ட ஒரு விளம்பரம் தான் இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம். பல பெண்கள் சொல்ல வெட்கப்படும் ஒரு விஷயத்தினை, அதற்கான தீர்வை இவ்வளவு சிறப்பாகச் சொல்ல முடியும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இந்த விளம்பரம். பாருங்களேன்.  ஹிந்தியில் இருந்தாலும் புரியும் என்றே நினைக்கிறேன் - தமிழ் அல்லது ஆங்கில Sub Title கிடைக்கிறதா என்று தேடினேன். கிடைக்கவில்லை.



******


இந்த வாரத்தின் சிறுகதை :  நிலவின் நிழல்


1960-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு தெலுகு மொழிக் கதையின் தமிழாக்கம் - சொல்வனம் தளத்திலிருந்து… ஒரு சில பாராக்கள் மட்டும் இங்கே. 


ஆறு வருடங்களுக்கு முன்பு… அவன் தன்னைப் பார்க்க வந்தபோது தான் பதினேழு வயது நிரம்பிய கன்னிப்பெண். ஸ்கூல் பைனல் பாஸ் செய்து விட்டாள். இன்டர் முடித்து டிகிரி  படிக்க வேண்டும் என்பது அவளின் எண்ணம். கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது பெரியவர்களின் நோக்கம். மெஜாரிட்டி முடிவு வெற்றிபெற்றது.


அப்போது அவனுக்கு இருபத்திரண்டு வயசு இருக்கும்போலும்! சம்பங்கி நறுமணம் நிறைந்த நிலவின் ஒளி போன்று மயக்கத்தை தருகின்ற அழகு அவனுடையது. வட்டமான முகத்தில் எனக்கென்ன வேலை என்று பின்னால் ஓடி ஒளிந்துகொண்ட கிராப்பு. எடுப்பாகத் தெரியும் மூக்கு. நடுவில் குழி விழுந்த மோவாய்க்கட்டை. பெயருக்கேற்றபடி மனோகரமாக இருக்கிறான் என்று தான் நினைத்தது, பார்த்தது தனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. “பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அப்படி கண்ணிமைக்காமல் பார்த்தால் அவன் என்னவாகிப் போவான்?” என்று தாய் மாமன் கிண்டல் செய்தபோது, பத்து பேருக்கு நடுவில் சொல்ல முடியாத வெட்கம் சூழ்த்து கொண்டது.


என்னதான் படித்தவனாக இருந்தாலும் சொத்து இல்லாதவனுக்கு தர வேண்டாம் என்று அம்மா வழி பாட்டி சொன்னாள். எம்.ஏ. பாஸ் பண்ணியும், தாலுகா ஆபீசில் குமாஸ்தா வேலைக்குத் தயாராகி விடுகிறார்கள் என்று அப்பா எண்ணினார். வரதட்சணை வேண்டாம் என்று அவர்கள் சொன்னதால் மற்ற எல்லோருக்கும் இளப்பமாகத் தெரிந்தார்கள். “டிப்டி கலெக்டர் மகனாக இருந்தால் மட்டும் என்ன? இப்போ ஓய்வு  பெற்று விட்டார். என்னவோ போகட்டும். இத்தனைக்கும் பொண்ணுக்கு அப்படி என்ன வயசு ஆகி விட்டது! இன்னொரு வரன் வராமலா போய் விடுவான்?” என்றார் மாமா.


முழுக்கதையையும் சொல்வனம் தளத்தில் படித்துப் பாருங்களேன். 


******


இந்த வாரத்தின் கேள்வி - இது என்ன? :



ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயணித்த போது சாலையோரங்களில் பல இடங்களில் இது போன்ற பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அவற்றில் இருப்பது என்ன? எதற்காக சாலையோரங்களில் கேட்பாரற்று இந்த பெட்டிகள் கிடக்கின்றன? எனக்குத் தெரியும் என்றாலும் உங்களுக்குத் தெரியுமா என்று தெரிந்து கொள்வதற்காக இந்த படத்தினை இங்கே பகிர்ந்து கொண்டேன்.  தெரிந்தால் சொல்லுங்களேன் - பின்னூட்டத்தில்!


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

6 ஜூன் 2026


48 கருத்துகள்:

  1. மூதாட்டி ஓவியம் நன்றாக இருக்கிறது.

    போகன் சங்கர் கவிதை அருமையாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் மற்றும் கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பழைய பதிவு சென்று படித்து ரசித்து வந்தேன். வாழ்க்கையின் தத்துவம் பற்றிய என் கமெண்ட்டையும் நானே ரசித்தேன்!!!

    பெரியம்மாவின் சுவை ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவு, பெரியம்மாவின் சுவை - இரண்டும் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. விளம்பரம் நன்று.

    சிறுகதை... இப்போது படிக்க நேரமில்லை. பின்னர் படிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. சிறுகதை - முடிந்த போது படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அந்தப் பெட்டிகள் எதற்காக என்று நீங்கள் விடை சொல்லும் நேரத்துக்காகக் காத்திருக்கிறேன்.  வேறு எங்கோ நானும் இதுபோல பார்த்ததாக நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்டிகள் எதற்கு? கீதா ஜி சொல்லி இருக்கிறார் ஒரு பதில்! அது சரியான பதில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மூதாட்டி ஓவியம் பிரமாதம்! தத்ரூபமாக வரைந்திருக்கிறார்.

    வாசகம் ரொம்ப உண்மை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் மூதாட்டியின் ஓவியமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. போகன் சங்கர் அவர்களின் கவிதை மனதை என்னவோ செய்தது...அந்த வரிகள் திருநங்கையைப் பற்றிய வரிகள். 'மன்னவன் பேரைச் சொல்லி

    //மல்லிகை சூடிக்கொண்டேன்'

    என்ற வரி வரும்போது

    ஏன் திடீரென்று விம்மினாள்//

    நான் சுருதிபேதராகங்கள் என்று திருநங்கை திருநம்பி என்ற தலைப்பில் நெடுங்கதை - குறும்புதினம்? எழுதியிருக்கிறேன். ஒரு போட்டிக்கு அனுப்பியதில் தேர்வாகவில்லை. காரணம் தெரிந்திருந்தால் யோசித்திருக்கலாம். உதவியாகவும் இருந்திருக்கும்.

    அந்த வகையில் இக்கவிதையை மிகவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகன் சங்கர் கவிதை குறித்த தங்களது எண்ணங்களையும் உங்கள் கதை குறித்த தகவல்களையும் இங்கே குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. படத்தைப் பார்த்ததுமே, பதிவு ஏழு மாநில சகோதரிகள் நினைவும் வந்தது.....இறந்த போர்வீரர்களின் இடுகாடு என்பதும்....இருந்தாலும் மீண்டும் போய் பார்த்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் குறிப்பிட்ட ஏழு மாநில சகோதரிகள் பதிவினை படித்து வந்ததற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. பெரியம்மாவின் உரையாடலை ரசித்தேன். உருளைக்கிழங்கு முள்ளங்கி நட்பு!!!!!!!!!!!! புன்சிரிப்பும் வந்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியம்மாவின் உரையாடலை நீங்களும் இரசித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  9. பரந்துபட்ட அறிவிற்கு ஏட்டுப் படிப்பை விட அனுபவங்களே காரணம் என்பது பெரியம்மா போன்ற பல மூதானவர்களிடம் அறியலாம். என் பாட்டி உட்பட. அவரும் இப்படி நிறைய பேசிக் கொண்டிருந்தார் இருந்தவரை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதியவர்கள் - அவர்களது நினைவிலிருந்து சொல்லும் விஷயங்கள் மிகவும் ஸ்வாரசியமாக இருக்கும் - சில சமயங்கள் ஒரே விஷயத்தினை திரும்பச் சொன்னாலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. கொடிய அரக்கன் இந்த நோய் அதற்கான விளம்பரம் மிக அருமை சந்தோஷமாகச் சொல்லி கடைசியில்...நுணுக்கமான ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் புரியலைனாலும் பொதுவாகப் புரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடிய அரக்கன் - உண்மை! அழிவில்லா அரக்கனாக இருப்பது வருத்தம் தருகிறது.

      வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் - ஓ... ஆங்கில சப்டைட்டில் உடன் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனாலும் சொல்ல வரும் விஷயத்தினை புரிந்து கொள்ள முடியும் என்பதால் அப்படியே பகிர்ந்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. சொல்வனம் கதைப் பகுதியை எடுத்து வைத்திருக்கிறேன் வாசிக்க.

    அந்தப் பெட்டிகள் - ஒன்று உணவுப் பொருட்களாக இருக்கும் மலையில் உள்ள கடைகளில் விற்க இல்லைனா ஆப்பிள் பழங்களாக இருக்கும். இப்படி இரண்டாவது முறை மணாலிக்குப் பயணித்த போது ஆப்பிள் fest பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

    சில வண்டிகளில் ஏற்றப்படுவதையும் பார்த்தேன் அதனால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்வனம் கதை - முடிந்த போது வாசியுங்கள்.

      ஆப்பிள்கள் வைப்பதற்கான பெட்டிகள் இல்லை. அவை எல்லாம் தற்போது அட்டைப் பெட்டிகளில் தான் வருகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. எதற்காக சாலையோரங்களில் கேட்பாரற்று இந்த பெட்டிகள் கிடக்கின்றன? //

    ஓ! கேட்பாரற்று ....யோசிக்கிறேன். ஒரு வேளை இப்பலாம் கார்கள் பேட்டரியில் இயங்குகின்றனவே அதற்கான சார்ஜிங்? பெட்டிகளா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்ஜிங் பெட்டிகளும் அல்ல! அதற்கு தனியான அமைப்புகள் இருக்கின்றன கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. தேனீ வளர்ப்பு? படத்தைத் தனியாகப் பெரிது படுத்திப் பார்க்க முயற்சி செய்தேன்...ம்ஹூம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேனீ வளர்ப்பு - அது தான் சரி. இது போன்று பெட்டிகளில் சாலையோரங்களில் தேனீ வளர்க்கிறார்கள். பக்கத்தில் சில இடங்களில் அவற்றிலிருந்து எடுத்த தேனை பாட்டில்களில் வைத்து விற்பனையும் செய்கிறார்கள். ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களில் இப்படியான தேனீ வளர்ப்பு பார்க்க முடிந்தது - அதுவும் சாலையோரத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  14. சொல்வனம் கதையை வாசித்தேன். நன்றாக இருக்கிறது. அக்காலத்துக் கதை. கீழே குறிப்பும் இருக்கிறது பரிசு பெற்ற கதை என்று வருடமும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்வனம் கதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  15. அந்தப் பெட்டிகளுக்கு இன்னொரு கருத்தும் கொடுத்திருந்தேனே வரலையோ?

    தேனீ வளர்ப்பு பெட்டியோ? படம் தெளிவாகத் தெரிய தனியாக ஓப்பன் செய்து பார்த்தேன். பெரிசு பண்ண முடியலை ஆனால் அப்படிப் பார்த்தப்ப அதுவாக இருக்குமோன்னும் தோன்றியது ம்ஹூம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியிட்டு விட்டேன். தேனீ வளர்ப்பு பெட்டிகள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  16. கிட்டத்தட்ட இதே போல துளசி வீட்டில் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். தேனீ வளர்ப்பு செய்வதால் அங்கு இப்படி இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    சென்ற முறை இங்கு வந்தப்ப கூட ஒரு லிட்டர் பாட்டில் தேன் கொண்டுவந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! துளசி ஜி வீட்டில் ரப்பர் மரங்கள் இருப்பது போல, தேனீ வளர்ப்பும் செய்கிறாரோ... தகவல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  17. இன்னைக்குஇந்த இரண்டு பேரும் எப்படி தளத்துக்கு வந்தார்கள்? நான் பழைய (அதாவது முந்தைய) இடுகையில் என்ன பதில் வந்திருக்கு என்று பார்ப்பதற்காக வந்தால், புதிதாக ஒரு பதிவு காட்டியது. எங்கள் பிளாக் பக்கத்தில் அப்டேட் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களாக எனக்கு எங்கள் பிளாக் பக்கம் அப்டேட் ஆவதில்லை. எப்படியும் பதிவு வந்திருக்கும் என்று தான் சென்று பார்க்கிறேன். எனது இன்றைய பதிவும் அவர்கள் தளத்தில் அப்டேட் ஆகவில்லை! எல்லாம் பிளாக்கருக்கே வெளிச்சம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. /'மன்னவன் பேரைச் சொல்லி
    மல்லிகை சூடிக்கொண்டேன்'
    என்ற வரி வரும்போது
    ஏன் திடீரென்று விம்மினாள்//

    சில இளையராஜா பாடல்கள் நம் ஆழ்மனத்தில் உள்ள ஏதேனும் நினைவுகளைக் கிளறிவிடும். சில நேரங்களில் எனக்கு கண்களில் நீர் வந்திருக்கிறது.

    ஆனால் திருநங்கை என்ற தலைப்பில் எழுதியிருந்த இந்தப் பகுதி என்னை மிகவும் நெகிழச் செய்துவிட்டது. ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ சோதனைகள் சோகங்கள். அந்தப் பெண்ணுக்கு என்ன வருத்தமோ... நினைக்கவே என்னையும் சோகம் அப்பிக்கொள்கிறது. இவர்களை சக மனிதர்களாக நினைத்து நடந்துகொண்டாலே போதுமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளையராஜாவின் பாடல்கள் ஆழ்மனதில் உள்ள நினைவுகளைக் கிளறிவிடும் - உண்மை. எனக்கும் பல சமயங்களில் இப்படி நிகழ்ந்தது உண்டு.

      திருநங்கை, திருநம்பிகளை சக மனிதர்களாக மதித்து நடந்தால் போதுமானது - உண்மை. ஆனால் அப்படி நடப்பதில்லை என்பதே சோகமான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  19. அரசாங்கம் திருநங்கைகளுக்கு ஏதேனும் வேலை போட்டுத்தரலாம். அல்லது அவங்களுக்கு உரிமைத் தொகை என்று (அவங்களுக்குத்தான் கொடுக்கணும்) மாதம் 5000 ரூ போன்று தரலாம். அது அவங்களை அடாவடியா சிக்னல்கள்ல பணம் இரப்பதைத் தடுக்கலாம். இப்போ அம்மா கேண்டீன் சரி செய்யப்படும்போது அவங்களுக்கு மாத்திரமே பணி என்று அரசு அறிவிக்கலாம். முன்போல் இல்லை, இப்போ மக்கள் அதனை ஏற்றுக்கொள்வர்.

    முதல்ல நாம் எல்லோரும் அவங்களை மனிதர்களாக நடத்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கம் இப்படியானவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது சரியான விஷயம். தந்தால் அவர்களுக்கும் ஒரு மதிப்பு உண்டாகும். போலவே சக மனிதர்களும் அவர்களை மனிதர்களாக நடத்தவும் வேண்டும். இதெல்லாம் சாத்தியம் தான். ஆனால் செய்வது எப்போது என்பது ஒரு கேள்விக்குறி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  20. அந்த ஓவியம் வாழ்க்கையின் கடமைகளைச் செய்து, நல்ல நிலையில் பெருமிதமாக இருக்கும் ஒரு பெண், தன்னுடைய பேத்தி திருமணத்தில் பெருமிதமான மகிழ்ச்சியான முகத்தைக் காண்பிப்பதுபோல இருக்கிறது. இவர் வடநாட்டைச் சேர்ந்தவர் என்று ஓவியம் சொல்கிறது. மிக நல்ல ஓவியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  21. பெரியம்மாவின் கார்னர்... இன்றுதான் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மோர்க்குழம்புன்ன பருப்பு உசிலி, பருப்பு குழம்புனா தேங்காய் அரைத்த கூட்டு , கத்திரிக்காய் என்றால் பாசிப்பருப்பு கூட்டு அல்லது புளிவிட்ட கூட்டு செய்கிறோமே தவிர தேங்காய் அரைத்த கூட்டு செய்வதில்லை...இப்படி அறிவியல்பூர்வமா முன்னோர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் நாம் அதனைத் தொடர்கிறோம் என்று.

    முள்ளங்கி சாம்பார் சுடச் சுட, உருளை ரோஸ்ட் காரம் தூக்கலா, நல்ல சூடான சாதம்... ஆஹா.. ஊட்டிக்கு என் அப்பாவைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அவர் அந்தக் குளிரில் ஒரு நாள் சாதம், முள்ளங்கி சாம்பார் பண்ணிப்போட்டார்.... ரொம்ப அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களிடம் இருக்கும் பல விஷயங்கள் நமக்கு பொக்கிஷம். ஆனால் பல சமயங்களில் இது போன்ற பொக்கிஷங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதும் இல்லை. அவர்கள் சொல்வதற்கு தயாராக இருந்தாலும், நம்மில் பலருக்குக் கேட்க பொறுமை இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  22. வயதானவர்களோடு பேசும்போது நிறைய தகவல்கள் கிடைத்தாலும், அவர்கள் காலம் ஒரு இடத்தில் நின்றுவிடுகிறது. அதனால் சொன்னதையே பல முறை சொல்வார்கள். அதான் நிறைய தடவை சொல்லிட்டீங்களே என்று இடைவெட்டிப் பேச முடியாது. அந்தச் சமயங்களில் எல்லாம், அவர்கள் நமக்கு அளித்த நல்ல நினைவுகளை நம் மனதில் கொண்டுவந்து அவங்களை நம் குழந்தை போல எண்ணணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கேட்பதற்கு நமக்கு பொறுமை வேண்டும். ஆனால் பலருக்கும் இந்த பொறுமை இருப்பதில்லை. ஏற்கனவே சொல்லிட்டீங்களே என்று சொல்லி விட்டால் அப்புறம் பேசாமலேயே இருந்துவிடுவதும் பார்த்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  23. எனக்குச் சட் என்று பெட்டிகளைப் பார்த்தவுடன் சொல்லத் தெரியலை. ஹிமாச்சல் என்ற வார்த்தையைப் பார்த்திராவிட்டால் மீன்கள் விற்கும் பெட்டிகளோ என்று கேட்டிருப்பேன் (அருகில் அப்படி தெர்மாகூல் பெட்டிகளில் வைத்துத்தான் விற்பனை செய்கிறார்கள்).

    எனக்கு தேன் மீது ஒரு அப்சஷன். வீட்டில் ஸ்டாக் இருந்தாலும் வாங்கிவருவேன். வாழைப்பழத்தில் தேன் விட்டு விட்டுச் சாப்பிடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ஆமாம் அங்கு தேன் கிலோ என்ன விலை (ஹிமாச்சலில்). தேன் பெட்டி என்பதை கீதா ரங்கன் பின்னூட்டத்தில்தான் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலையில் பயணிக்கும்போது பார்த்ததால், படம் மட்டுமே எடுத்ததால் விலையைக் கேட்கவில்லை. தேன் மீது அப்சஷன் - :)

      மீன் பெட்டி - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  24. ஓவியம் மிகவும் அருமை.

    கவிதை நன்று.

    கதை பிடித்திருந்தது. பகிர்வுக்கு நன்றி.

    சாலை ஓரங்களில் தேனீ வளர்ப்பு பெட்டி . இங்கு மலை நாட்டு வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....