அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சராஹன் - அரண்மனை - காலை உணவு - பயணத்தில் தடங்கல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் விளம்பரம் : Father’s Day
சென்ற வாரத்தின் ஞாயிறு - அதாவது 21-ஆம் தேதி Father’s Day! அதனைக் கொண்டாடும் விதமாக பல விளம்பரங்கள் பார்க்க முடிந்தது. அவற்றில் ஒன்று தான் இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக உங்களுக்காக! ஒரு வருடம் முன்னர் Zomato வெளியிட்ட விளம்பரம் இது! எத்தனை அழகாக விளம்பரம் எடுக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. நீங்களும் பாருங்களேன்!
******
இந்த வாரத்தின் வாசகம் : வறுமையும் வசதியும்
இந்த வாரம் என் முன்னே சென்ற ஒரு இருசக்கர வாகனத்தின் பின்னர் எழுதி இருந்த வாசகம் கவர்ந்தது. ஒரு பெரிய தத்துவத்தை இரண்டே வரிகளில் சொல்லி விடுகின்ற வாசகம் அது.
வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
காலை அலுவலகம் செல்லும்போது பார்த்தது… பயணம் முழுவதும் அந்த வாசகத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன். அலுவலகம் சென்றபிறகும் கூட இந்த வாசகம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும், இந்த வாசகம் சொல்லும் விதத்தில் நடந்து கொள்வது கடினம் தான். வறுமை வந்தும் வாடாமல் இருப்பது - அதிலும் வசதியுடன் இருந்தவர்கள் வறுமை வந்தால் அதிகம் வாடுவது இயல்பு. அதே போல வசதி திடீரென்று ஒருவருக்கு வந்துவிட்டால், என்ன ஒரு ஆட்டம் போடுகிறார்கள்! பலரையும் நாம் தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறோமே… இந்த வாசகம் குறித்த உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : காட்டுக்குள் ஹரி-ஹரன்
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - காட்டுக்குள் ஹரி-ஹரன் - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
இன்றாவது புலியைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் குளிர் கடுமையாகத் தெரிந்தது. வெளியே வந்தால் பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ளும் அளவுக்குக் குளிர். குளிரிலிருந்து காத்துக்கொள்ள தலையில் குல்லாய், காலுறை, ஸ்வெட்டர், லெதர் ஜாக்கெட் என்று போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஐந்து கிலோ எடை கூடியிருந்தோம்!
அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாகனங்களில் ஏறி அமர்ந்து சரியாக 5.45 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். ஜீப் மெதுவாகச் சென்றாலும், அடிக்கும் குளிர்க்காற்று அத்தனை உடைகளையும் தாண்டி நரம்புகளில் அதிர்ச்சியை உண்டாக்கிற்று. நேற்று சென்றதை விடஇன்று சென்ற வனப்பகுதி இன்னும் அடர்த்தியானதும், மலைகள் அதிகம் கொண்டதுமாகும்.
வனத்தினை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பதாக முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அந்த நான்கு பகுதிகள் கிதோலி, மகதி, பான்பத்தா மற்றும் தாலா எனப் பெயர் கொண்டவை. இந்த நான்கில் மிக முக்கியமானது தாலா எனப்படும் பகுதி தான். இங்கே தான் கோட்டையும் இருக்கிறது. 32 மலைகள் சூழ்ந்த காடுகளை இந்தப் பகுதியில் சென்றால் நன்கு ரசிக்கலாம். மேலும் இந்தப் பகுதியில் தான் புலிகள் உங்கள் கண்களுக்கு தட்டுப்பட வாய்ப்புகள் அதிகம். மேலே செல்லுமுன் சில உபயோகமான தகவல்களைப் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது என்ற பெயரில் நான் எழுதிய ஒரு பயணத்தொடரின் ஒரு பகுதியிலிருந்து சில வரிகள் மேலே… முழு பதிவும் படிக்க விரும்பினால் மேலே இருக்கும் சுட்டியைச் சொடுக்கி படிக்கலாம்! படித்துப் பாருங்களேன் - இது வரை படித்திருக்காவிட்டால்!
******
படித்ததில் பிடித்தது : மழைக்காலச் சிறுமி
மாலதி மைத்ரி எனும் கவிஞரின் கவிதை ஒன்று முகநூலில் படிக்கக் கிடைத்தது. கவிதை கீழே…
மழையை விட, கடலை விட
நதியை விட, குளத்தை விட
அதிமர்மமானதும்,
அதிரகசியமானதுமான நீர்
கண்ணீர்!!
எனக்கு இந்தக் கவிதை பிடித்திருக்க, அவரது வேறு சில கவிதைகளை படிக்கலாம் என்று இணையத்தில் தேடியபோது கிடைத்த இன்னுமொரு கவிதையும் பிடித்திருந்தது - அந்தக் கவிதையும் கீழே!
மழைக்காலச் சிறுமி
வரிசை தப்பிய எறும்பு ஒன்று
வருகிறது தலையணை மேல்
அச்சுவார்த்த உடல்
சிறு அசைவுடன் நகர்கிறது
தலை தூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு
மீண்டும் தேடி எடுத்துக்கொண்டு போகிறது
மடியில் கட்டிவரும் என் அம்மாவின்
மரவள்ளிக் கிழங்கு வாசனையுடன்
- மாலதி மைத்ரி
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - வேகம் :
நேற்று மாலை கீதா சாம்பசிவம் அவர்களை பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அம்மா மண்டபம் சாலையில் வந்து கொண்டிருக்க எதிரே ஒரு பெரியவர் கீழே விழுந்து கிடக்க, அவர் மீது அவர் ஓட்டி வந்த வாகனம் கிடைக்கிறது. பக்கத்தில் இன்னுமொரு பைக் கீழே கிடக்கிறது. பைக் அசுர வேகத்தில் வந்து ஓரமாகச் சென்ற பெரியவர் மீது இடிக்க கீழே விழுந்து இருக்கிறார். எதற்காக இத்தனை வேகம் - அதுவும் இருட்டு சமயத்தில், ஒரு பரபரப்பான சாலையில்? நெடுஞ்சாலை, அகலமான சாலை என்றால் கூட பரவாயில்லை, சிறு சந்துகளில் கூட 60-70 களில் பறக்கும் எண்ணம் ஏன் வருகிறது இவர்களுக்கு? விழுந்தவரைத் தூக்கக் கூட ஆள் இருப்பதில்லை. தூக்கி விட்டு, ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் உட்கார வைத்து, எதிர் கடையிலிருந்து தண்ணீர் வாங்கிக் கொடுத்து, கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு போங்க என்று சொன்னேன். இடித்தவர் பார்த்துப் போங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டார். ஏன் இந்த வேகம்? வேகம் என்னதான் தந்து விடப் போகிறது? தன் வாகனம் தன் கட்டுப்பாடில் மட்டுமே இருக்கிறது என்கிற எண்ணம் பல சமயங்களில் தப்பி விடுகிறது. எந்த ஒரு விபத்தும் சில நொடிகளில் நடந்து விடக்கூடும்! விபத்து நடப்பது நொடிகளில் என்றாலும் அதன் தாக்கமும் விளைவுகளும் பல மாதங்கள், ஏன் வருடங்கள் கூட நீடிக்கக்கூடும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் இவர்கள்… என்னவோ போடா மாதவா! ஒண்ணும் சொல்வதற்கில்லை!
******
இந்த வாரத்தின் குறும்படம் : மனிதர்கள்
Covai Express என்று ஒரு ஒரு Facebook பக்கமும் Youtube சானலும் இருக்கிறது. எப்போதாவது அதிலிருந்து சில காணொளிகள் ஸ்க்ரோல் செய்யும் போது வருவதுண்டு. சமீபத்தில் அப்படி வந்ததில் பார்த்த ஒரு காணொளி - மனிதர்கள் என்ற தலைப்புடன் (கீழே எளிமை என்றும் இருந்தது…) எனும் காணொளி. மனதைத் தொட்டது. முடிந்தால் பாருங்களேன்! பார்க்க சுட்டி கீழே தந்திருக்கிறேன்.
மனிதர்கள் #story #emotionalstory #scene #shortfilm #kadhai #covaiexpress - YouTube
******
இந்த வாரத்தின் சுற்றுலா தகவல் - Charak முனிவரும் Charekh Danda வும் :
ஆயுர்வேதத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ரிஷி முனிவர் சரக். அவரது ஆஷ்ரம் உத்திராகண்ட் மாநிலத்தின் கோட்த்வார் அருகே அமைந்திருக்கிறது. அந்த இடத்தின் பெயர் Charekh Danda. Garhwali மொழியில் Danda என்றால் மலை! (நன்றி: நண்பர் பிஷ்ட்) அவரது காலத்தில் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியாக இருக்கும் அங்கே இருக்கும் மூலிகைகள், வேர், செடி, இலை என அனைத்தையும் வைத்து வைத்தியம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. தற்போது மலைகளில் சூழல் மாறியிருக்கலாம் என்றாலும் இன்னமும் பசுமை அங்கே இருக்கிறது. நண்பர் இந்த வாரம் (மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் அடுத்த பயணத்தினை தொடங்கி இருக்கிறார். நேற்றைய தினம் இந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார். சில படங்களை அனுப்பி இருந்தார். பயணம் முடிந்ததும் அவரது Youtube Channel-இல் தகவல்களும் காட்சிகளும் வெளியிடுவார். அப்போது பார்த்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்போதைக்கு இந்தத் தகவல் மட்டும்! உங்களில் எத்தனை பேருக்கு அந்த முனிரிஷி பெயரில் ஒரு இடம் இருப்பது தெரியும்? தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தகவல் சொல்லுங்களேன்! கோட்த்வார் ஹரித்வார் அருகே இருக்கிறது. அந்த வழியாக நான் பயணித்து Lansdowne என்கிற இடத்திற்குச் சென்றிருக்கிறேன். அது குறித்து எனது பக்கத்திலும் எழுதி இருக்கிறேன் என்பது உங்களில் சிலருக்கு நினைவில் இருக்கலாம்!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
27 ஜூன் 2026









வாசகம் எச்சரிக்கிறது.
பதிலளிநீக்குவிளம்பரம் நன்று. ரசித்தேன்.
வாகனத்தின் பின் வாசகம் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்கு"வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே" பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. கூடவே இன்னொரு பாடல் வரிகளும்.. "பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா..."
பழைய நினைப்புடா பேராண்டி பார்த்தேன் "பன்னி கூட்டமாத்தான் வரும்னு தலைவர் சொன்னாரு..... இங்க தனியா இருக்கு! ஓ... காட்டுப் பன்றி தனியாத்தான் வருமோ....!"
பதிலளிநீக்குமைத்திரியின் கவிதைகளை ரசித்தேன். முதல் கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குவேகம் பற்றிய உங்கள் சிந்தனை எனக்கும் ஏற்புடையதுதான். எனினும் நாம் கண்ணால் பார்க்காத அந்தக் காட்சியில் யார் மீது தவறு என்று சொல்வது கடினம்.
பதிலளிநீக்குமதுரையில் ஒருமுறை டூ வீலரில் அலுவலகம் விட்டு வீடு சென்று கொண்டிருந்தபோது சற்றே முன்னால் ஒரு பெண் என் இடது பக்கம் சென்று கொண்டிருந்தவர் சட்டென ஏதோ அவர் மட்டும்தான் அந்தச் சாலையில் வந்து கொண்டிருப்பவர் போல வலது பக்கம் ஒடித்து சாலை மாற முயன்றார். பக்கத்தில் இருந்ததால் பிரேக் பிடித்தும் சற்றே இடித்து விட்டது. என்னை விளக்கம் சொல்லக்கூட விடவில்லை கூட்டம். அவர் பெண் என்பதாலும் நான் ஆண் என்பதாலும் யார் குற்றவாளி என்று முடிவு செய்து விட்டார்கள். அந்தப் பெண் மட்டும் மெல்லிய குரலில் 'ஸாரி' சொன்னது ஆறுதல்!
நான் போலீஸ்காரர் வருவதற்கு முன் அழுவினேன். என்னிடம் அப்போது(ம்) லைசன்ஸ் கிடையாது!
அந்தக் குருடர் விற்பனை நானும் முன்னரே பார்த்தேன்.
பதிலளிநீக்குரிஷி முனிவர் சரக்.பற்றிய தகவல்களும் படங்களும் பார்த்தேன், படித்தேன்.