அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…
சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று
சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு
தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.
அன்னதானக் கூடங்கள்:
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வதுண்டு. மஹாபாரதத்தில் இதற்கான சில கதைகள் உண்டு. Bபோஜராஜ குறித்த அன்னதானக் கதை ஒன்றும் நீங்கள் அறிந்திருக்கலாம். சதுரகிரி மலையடிவாரத்தில், மலைக்கு மேலும் (கோவில் அருகே) சில அன்னதானக் கூடங்கள் இயங்கி வருகின்றன. மலையடிவாரம் தொடங்கி மலைக்கு மேலேயும் அன்னதானம் செய்யும் மடங்கள், அன்னதானக் கூடங்கள் இருக்கிறது. நூறு வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் கஞ்சி மடம் மிகவும் பிரபலமாம். காலை நேரத்திலேயே வந்து இறங்கிய பக்தர்களை அன்னதானம் சாப்பிட வாருங்கள் என அனைத்து மடங்களிலும் அழைத்தபடியே இருந்தார்கள். பக்தர்கள் விரும்பினால், ஏதேனும் பொருள் உதவி, அல்லது பண உதவி அன்னதானத்திற்காகச் செய்யலாம் - ஆனால் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை! நான் மலையடிவாரத்தில் இருந்த அன்னதானக் கூடங்களில் சாப்பிடவில்லை. மலையேற்றம் முடிந்து இறைவனை தரிசித்த பிறகே உணவு உட்கொள்ளலாம் என முடிவு எடுத்தேன்.
சதுரகிரி மூலிகை சாம்பிராணி:
சதுரகிரி மலைப்பகுதியில் நிறைய மூலிகைச் செடிகள் இருக்கின்றன. மலையடிவாரத்தில், மலைக்கு மேலும் சில கடைகள் இருக்கின்றன. அவற்றில் சுத்தமான மூலிகை சாம்பிராணி கிடைக்கிறது. கிலோ 200/- ரூபாய் என்றார் எங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த வீ. கல்யாணசுந்தரம் எனும் கடை உரிமையாளர். நீங்கள் மலைக்குச் செல்ல முடியவில்லை என்றாலும், உங்களுக்குத் தேவை என்றால், அவரை அலைபேசியில் (+91 8903638410 மற்றும் +91 7010278542) அழைத்துச் சொன்னால் போதுமாம்! அவரிடம் கிடைக்கும் சாம்பிராணி, மூட்டு வலித் தைலம், தலைவலித் தைலம் போன்றவை Courier-இல் உங்கள் வீடு தேடி வந்து விடும் என்கிறார்! தவிர கீழே இருக்கும் கடைகளிலேயே அன்னதானத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு போன்றவையும், காவி வேட்டி, துண்டு போன்றவையும் விற்பனை செய்கிறார்கள். அன்னதானக் கூடங்களுக்கு நீங்கள் விரும்பினால் காசாகக் கொடுக்காமல் இப்படி அரிசி, பருப்பு போன்றவையும் வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வராமல் இங்கேயே வாங்கிக் கொடுத்துவிடலாம். இந்தக் கடையில் கிடைக்கும் இன்னுமொரு பொருள் உங்களுக்கு மலையேற்றத்தில் உதவும் - அது கைத்தடி - ரூபாய் 20 கொடுத்தால் ஒரு கைத்தடி உங்களுக்குத் தருவார்கள். மலையேற்றத்தின் போது அது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மலையேற்றத்திற்கான நுழைவாயில்….
தாணிப்பாறை கிராமம் மலையடிவாரத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும்! இதற்கு சரியான அளவுகோல் இல்லை - சிலர் 12 கிலோமீட்டர் என்றும் சொல்கிறார்கள். பலமுறை இங்கே சென்றிருக்கும் நண்பர் சரவணன் மா.பா. அவர்கள் சொன்னது 10 கிலோ மீட்டர்! எனவே அதையே நானும் இங்கே சொல்லி இருக்கிறேன். கோவில் அமைந்திருக்கும் மலைப்பகுதி மற்றும் வழியில் இருக்கும் வனப்பகுதி முழுவதுமே தமிழ்நாடு அரசு வனத்துறை வசம் இருக்கிறது. அதனால் மலையேற்றத்திற்கு முன்னர் இருக்கும் நுழைவாயில் திறப்பது வனத்துறையின் கையில். அந்த நுழைவாயில் மேலே “சாம்பல் நிற அணில் சரணாலயம், திருவில்லிபுத்தூர்” என்ற பதாகையும் இருக்கிறது.
ஆம் நண்பர்களே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்தச் சரணாலயம் உள்ளது. சாம்பல்நிற அணில்களை 'நரை அணில்' (Grizzled Squirrel) என்று சொல்கிறார்கள். இந்த அணில்கள் சாம்பல் நிற முதுகுப் பகுதி, இளஞ்சிவப்பு மூக்கு, அடர்த்தியான முடியுடன் கூடிய நீண்ட வால் என பார்க்க மிகவும் அழகாக இருக்குமாம். எங்கள் பயணத்தில் நாங்கள் இவற்றை பார்க்க முடியவில்லை - பொதுவாகவே இந்த அணில்கள் மரங்களின் உச்சியில் கூடு கட்டி வாழ்பவை என்பதோடு கீழே வெகு அரிதாகவே இறங்கும் என்பதால் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சரணாலயம் நுழைவாயிலில் இருக்கும் வனத்துறை அலுவலகத்தில் நுழைவுக்கட்டணம் (ரூபாய் 10 மட்டும்!) செலுத்திய பின்னரே நம்மால் மலையேற்றத்தினைத் தொடங்க முடியும். இந்த முறை நாங்கள் மொத்தம் எட்டு பேர் பயணித்தோம்.
மலைப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்ப்பது நலம். நீங்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு சென்றால், வனத்துறையினர் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுப்பார்கள். அதனை திரும்பி வரும்போது காண்பித்தால் 10 ரூபாய் திரும்பித் தந்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் நாங்கள் சென்ற சமயம் அப்படி சோதனை செய்யவும் இல்லை, ஸ்டிக்கர் ஒட்டவும் இல்லை. நான் வீட்டிலிருந்தே ஸ்டீல் பாட்டில் எடுத்துச் சென்று விட்டேன். நம்மால் முடிந்த வரை இயற்கை எழிலை பாதுக்காக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் மலையில் பார்த்தபோது அப்படியான எண்ணம் பலருக்கும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது - எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக் கிடந்தன. நம் மக்களிடம் எவ்வளவு சொன்னாலும் திருந்தப் போவதில்லை என்று கங்கணம் கட்டிக்க கொண்டு இருக்கிறார்கள் - என்ன செய்ய! கடுமையான தண்டனைகள் இருந்தால் மட்டுமே இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியும் என்றே தோன்றுகிறது.
கோவில் திறக்கும் நாட்கள்:
மாதத்தின் எட்டு நாட்கள் மட்டுமே சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் மட்டுமே இந்தக் கோவிலுக்குச் செல்ல அனுமதி. அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டு நாட்களுக்கு முதல் நாளும், அடுத்த நாளும் அனுமதி உண்டு. அதே போல பிரதோஷ நாளும் அடுத்த நாளும் அனுமதி. ஆக மொத்தம் எட்டு நாட்கள் மட்டுமே இங்கே செல்ல அனுமதி. மற்ற நாட்களில் கண்டிப்பாக அனுமதி கிடையாது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் அங்கே பூஜை செய்பவர்கள் எல்லா நாட்களும் அங்கேயே தங்கி விடுகிறார்கள். அவர்களது சொந்த வேலைகளுக்காக கீழே இறங்கி வந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு அனுமதி உண்டு. இது தவிர சிபாரிசுகளுடன் வருபவர்களும் வந்து கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. தனியே இந்தப் பகுதிகளில் பயணிப்பது சரியல்ல என்பதால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே இங்கே பயணிப்பது நல்லது. அதே போலவே இந்த எட்டு நாட்களிலும் மலையேற்றத்திற்கு அனுமதிப்பது காலை 06.30 மணி முதல் மதியம் 12 மணி வரை (03.00 மணி வரை அனுமதிக்கலாம் - சில சமயங்களில்!) மட்டுமே என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
எங்கும் ஒலிக்கும் சிவநாமம்….
தகவல்கள் நடுநடுவே தருவதற்காக சில விஷயங்களை மேலே சொல்லி இருக்கிறேன். எங்கள் பயணம் குறித்து இன்னும் பார்க்கலாம் வாருங்கள். நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு மலையேற்றத்தினைத் தொடங்கினோம். அன்று மாலை பிரதோஷம் என்பதாலும், அன்றைய நாள் ஞாயிறு விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மலையேற்றத்தில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்ததால் மலையேற்றம் கடினமாக இருக்காது என்று தோன்றியது. பல சிவனடியார்கள், காவி உடை அணிந்து பத்துப் பதினைந்து ருத்திராக்ஷ மாலைகள் தரித்தும், சிறு லிங்கங்களையே கழுத்தில் அணிந்தும் அமைதியே உருவாக்க நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலரை பார்க்கும் போதே முகத்தில் அப்படி ஒரு பொலிவு. மலையேற்றத்தில் பலரும் “ஓம் நமசிவாய” எனும் நாமத்தினை தொடர்ந்து சொல்லிக் கொண்டே மலையேறிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமல் நம் வாயும் சிவ நாமத்தினை உச்சரிக்கத் தொடங்குகிறது. மலையேற்றம் முழுவதிலும் இப்படியே சிவ நாமம் எங்கும் ஒலிக்க அந்த சூழலே சிறப்பாக இருக்கிறது. என்றாலும் சில இளைஞர்கள் அந்தச் சூழலை குலைக்கும் வண்ணம் சினிமா பாடல்களை அவர்களது அலைபேசி நீலப்பல் (Bluetooth) வழி சிறு Speaker-களில் அலற விட்டுக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த மலையேற்றம் - பக்தி சம்பந்தப்பட்டது அல்ல என்றே தோன்றியது. இந்தப் பயணம் குறித்த தகவல்கள் இன்னும் தொடரும்.
******
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
பக்திக்காக அல்லாமல் ஒரு த்ரில்லுக்காக வருபவர்கள் நிறைய உண்டு. என் மாமனார் இந்த மலையேற்றம் செய்து வேறு வகையில் அவதிப்பட்டார். கூடச் சென்ற அவர் மைத்துனர் மட்டும் மறுநாள் அவரைக் காணோம் என்று திரும்பி வந்து விட, பதட்டம் மாமனார் வரும் வரை நீடித்தது. அவர்கள் அப்போது மதுரையில் இருந்தார்கள்.
பதிலளிநீக்குபக்திக்காக அல்லாமல் ஒரு த்ரில்லுக்காக வருபவர்கள் - ஆமாம், இப்படி வரும் நிறைய பேரை எனது பயணத்தில் பார்க்க முடிந்தது ஸ்ரீராம். உங்கள் மாமனார் அங்கே காணாமல் போனது குறித்த தகவல் - அடடா... பதட்டம் உண்டாகும் விஷயம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தகவல்கள் சிறப்பு ஜி
பதிலளிநீக்குநீலப்பல் ஹா. ஹா.. ரசித்தேன்
பதிவும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குசுத்தத்துக்கும் நம்மூர் சனங்களுக்கும் (99 சதம்) எந்த ஒரு சம்பந்தமும் இல்லை 😡 இந்த அநாமதேயம் துளசி கோபால்
பதிலளிநீக்கு//சுத்தத்திற்கும் நம்மூர் சனங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை - வேதனையான உண்மை துளசி டீச்சர். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குபயண விளக்கம் அருமை...
பதிலளிநீக்குஓம் நமசிவாய...
பயணம் குறித்த தகவல்கள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஓ செண்பகத் தோப்பு வழியாகவா? நான் 2004ல் ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஓரிரண்டு கிமீ எங்கள் பேருந்தில் வந்து காட்டிலிருக்கும் கோவிலில் தெய்வ தரிசனத்துக்காக 2 மணி நேரம் காட்டுப் பாதையில் நடந்தோம். வழியில் இந்த பறக்கும் அணில்களைப் பார்க்க முடிந்தது. கோவிலுக்கு இன்னுமொரு 200 படிகள்னு நினைவு. வழியில் யானை லத்திகளும், எருதின் மண்டையோடும் இது வன விலங்குகள் நடமாடும் பகுதி எனச் சொல்லாமல் சொன்னது.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்தது சிறப்பு. காட்டுப்பாதையில் நடப்பது கொஞ்சம் த்ரில்லான அனுபவம் தான் நெல்லைத் தமிழன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குபக்திக்காக அல்லாமல் ஒருவகையான அலம்பலுக்காக வருபவர்கள் நிறைய உண்டு...
பதிலளிநீக்குநாம் தான் நமது சிந்தனையை ஈசனிடம் வைத்துக் கொள்ள வேண்டும்..
சிறப்பான பதிவு.. மகிழ்ச்சி..
பதிவு குறித்த தங்களது என்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குதகவல்கள் அனைத்தும் மிக அருமை சார்.
பதிலளிநீக்குஅன்னதானம் குறித்து படிக்கையில் மஹாபாரதத்தில் கூறப்பட்ட கீரி கதை நியாபகம் வந்தது.
தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குஆனால் மலையில் பார்த்தபோது அப்படியான எண்ணம் பலருக்கும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது - எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக் கிடந்தன.//
பதிலளிநீக்குஇது எல்லா இடங்களிலும் ஜி. நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க. அரசு விதிமுறைகளை இன்னும் வலுவாக்க வேண்டும். கூடவே அபராதம் என்று போட வேண்டும் இல்லை என்றால் திருந்த மாட்டாங்க....ப்ளாஸ்டிக் குப்பைகள் மட்டுமில்லை, குப்பிகள், துணிகள் என்று. ரொம்ப மோசம்.
கீதா
சரியான விதத்தில் அபராதம் விதிக்க வேண்டும் - இல்லை எனில் திருந்த வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஅருமையான பயணம்.
பதிலளிநீக்குஆமாம் இறை நாமம் சொல்லிக் கொண்டே ஏறுபவர்களைப் பார்க்கும் போது நமக்கும் அது தொற்றிக் கொண்டுவிடும் நல்ல விஷயம். அது கூடுதல் சக்தியைத் தரும். காட்டு வழியில் செல்லும் போது பொதுவாக இரைச்சல் தரும் பாடல்கள் போட்டுக் கொண்டு செல்வது நல்லதில்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கு.
இந்த அணில் அங்கு நிறைய உண்டு ஜி. மேற்குத் தொடர்ச்சி மலையின் அப்பக்கம் போனால் இதைப் பார்க்கலாம் என்று சொல்லிக் கேட்டதுண்டு. அணில் ப்ற்றிய குறிப்புகள், எல்லாமே சிறப்ப்பு.
மலையேற்றத்தில் இடையில் ஆறு வருமே பாறையில் உருண்டு ஓடி...அந்த இடம் ஜாக்கிரதையாகச் செல்ல வேண்டும் என்று சொன்னாங்க ஆனால் கடைசியில் முழுமையாடையாமல் போனதே...
இப்போது எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று ஆவல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
மலையேற்றம் அறிய ஆவலுடன் இருக்கிறேன் ஜி உங்கள் படங்கள் தகவல்களை அறிய
கீதா
பயணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. அணில் குறித்த மேலதிகத் தகவல்கள் நன்று. உங்களுக்கும் விரைவில் ஒரு வாய்ப்பு அமைந்திட வாழ்த்துகள் கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குபடங்கள் அழகு அதிலும் குறிப்பாக அந்த லிங்கம் போன்று இருக்கும் மண் விளக்கு கவர்கிறது
பதிலளிநீக்குகீதா
லிங்கம் போல இருக்கும் மண்விளக்கு - என்னையும் அது கவர்ந்தது கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பயண விபரங்கள் அருமை.
பதிலளிநீக்கு'சிவாயநமக...' தொடர்வோம்.
பயண விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபயணம் பற்றிய பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அணில் அழகாக உள்ளது. சிவலிங்கம் போலுள்ள மண்ணாலான விளக்குகள் அழகாக உள்ளது.
மலையேற்றம் கடினமாக இருந்ததா? இங்கெல்லாம் செல்வதற்கு இறைவனின் அருளோடு, கால்களில் நல்ல பலம் வேண்டும். பயண விபரங்கள் அருமை. பக்தியுடன் உங்கள் பயணத்தை படித்து பின் தொடரும் பொது, நாங்களும் அந்த பயணத்தில் கலந்து கொள்வது போன்ற நிறைவு வருகிறது. தொடர்கிறேன். ஓம் நமசிவாய. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
மலையேற்றம் சில சமயங்களில்/இடங்களில் சற்று கடினமாகவே இருந்தது. என்றாலும் ஈசனின் அருளால் மலையேற்றமும் கீழ் நோக்கிய இறக்கமும் சரியாகவே முடிந்தது. சில நாட்கள் கால்வலி இருந்தாலும் நிச்சயம் பிடித்த பயணமாக இருந்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நல்ல பதிவு. சிவாய நமக
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஐயா.
நீக்குவாசகம் மிக உண்மை, அதைத்தான் இன்றைய காலங்களில் நிறையப்பேர் பண்ணிக்கொண்டிருக்கிறோம் தெரிந்தும் தெரியாமலும்.
பதிலளிநீக்குஆவ்வ்வ் சாம்பிராணி பார்க்கவே ஆசையாக இருக்கு. எனக்கு உண்மையில் சாம்பிராணி எனில் ஒரு பைத்தியம், வீடெல்லாம் போட்டுக் காட்டுவேன், அதனால கண்டால் விடமாட்டேன் வாங்கிடுவேன், இந்தியா என்றாலே சாம்பிராணிதானே என நினைச்சு டெல்லி வந்தால், அங்கு இங்குபோலவே வெறும் பக்கெட்டுக்களில் மட்டும் கிடைச்சது. அதுவும் கிலோ 200 ரூபாயா? எவ்ளோ மலிவாக இருக்கு, இதிலென்ன லாபம் அவர்களுக்கு வந்திடப்போகிறது.
வாசகம் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு அதிரா.
நீக்குசாம்பிராணி அங்கே மலிவு. தில்லியில் கிடைக்கும் சாம்பிராணி அத்தனை நன்றாக இருக்காது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
//மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்//
பதிலளிநீக்குஓ படம் வந்துதே பார்த்திட்டேன்...
பயணம் நன்றாக இருக்கிறது.
பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அதிரா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆசையை தூண்டும் பதிவு. அடுத்த முறை என்னையும் கைபிடித்து அழைத்துச் செல்வீர்கள் என்று எண்ணுகிறேன். சாம்பிராணி கிலோ 200 ரூபாய் மலிவுதான். (சின்ன வயதில் அவ்வப்போது என் அப்பா 'மடச்சாம்பிராணி' என்று (செல்லமாக?) திட்டுவார். ஏன் என்று தெரியவில்லை. சோம்பிறித்தனமாக இருக்கும் பெண்களை வேண்டுமென்றால் 'சோம்பிராணி' என்று திட்டலாம். காரணப் பெயராகவாவது இருக்கும்.
பதிலளிநீக்குஅடுத்த பயணத்தில் உங்களையும் அழைத்துச் செல்கிறேன் பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குசோம்பிராணி - குசும்பு தான் உங்களுக்கு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
“ஓம் நமசிவாய” ... “ஓம் நமசிவாய” ... “ஓம் நமசிவாய”
பதிலளிநீக்குஓம் நமசிவாய....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனு ப்ரேம் ஜி.