திங்கள், 26 ஜூன், 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குவாரி பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று


தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


******


சங்குநாதம்:




நடந்து செல்லும் பாதை முழுவதும், சங்கு நாதம் வனப்பகுதிகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  சங்கு நாதம் முழங்குவது சாதாரண விஷயமல்ல! அதற்கு தகுந்த பயிற்சியும் மூச்சை அடக்கும் வித்தையும் தெரிந்து இருக்க வேண்டும்!  ஒரு முறை நானும் அப்படி முயற்சி செய்திருக்கிறேன்.  “வெறும் காத்து தாங்க வருது!” கதை தான்.  என் பிரதாபம் ஒரு புறம் இருக்கட்டும்! குழுவாக வந்த சில பக்தர்களை பார்க்கும்போது அவர்களில் மூன்று நான்கு பேர்கள் சங்கு நாதம் முழங்குவதில் வித்தகர்களாக இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  மலையேற்றத்தில் மூச்சு வாங்க ஏறிக்கொண்டு இருந்தாலும், நடுநடுவே நின்று சங்கை முழங்கியது பிரமிப்பாகவே இருந்தது.  கொஞ்சம் கடுமையான மலையேற்றத்தில் இது போன்ற சங்குநாதமும் தொடர்ந்து ஒலிக்கும் சிவ நாமமும் நமக்கு மன உறுதியை அளிப்பதாக இருந்தது.  பார்க்கும் இடமெல்லாம் இயற்கை எழில் கொஞ்ச, இது போன்ற சிவ நாமாக்களும் சங்கு ஒலியும் அந்த இயற்கைச் சூழலை இன்னும் அழகாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.  


மலையேற்றப்பாதையில்….


மலையேற்றப் பாதையில் தொடக்கத்தில் சுமார் ஒன்றரை மிலோமீட்டர் தொலைவிற்கு சிமெண்ட் பாதை/படிக்கட்டுகள் இருக்கிறது! இந்தப் பாதையைப் பார்த்து, “அட இவ்வளவு தானா? இதை எல்லாம் ஊதித்தள்ளி விடுவேன் நான்!” என நினைத்து விடக்கூடாது.  அந்த பாதை கடந்த பிறகு தான் உண்மையான மலையேற்றம் தொடங்குகிறது.  கடுமையான மலையேற்றம் தான்.  என்றாலும் எல்லாம் வல்ல இறைவனைத் தொடர்ந்து மனதில் நிறுத்தி, மன உறுதியுடன் மலையேற்றத்தினை தொடங்கினால் நிச்சயம் நம்மால் மலையேற்றத்தினை வெற்றிகரமாக முடித்து விட முடியும்.  முதல் முறையாக மலையேற்றம் செய்பவராக இருந்தால் சுமார் நான்கிலிருந்து ஐந்து மணி நேரத்திற்குள் மலை மீது அமைந்திருக்கும் சந்தன மஹாலிங்கம் கோவிலை அடைந்து விடலாம்.   மலையேற்றத்தினை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம் - வழியில் இருக்கும் இடங்களை வைத்து! 

















தற்காலிக கைலாயம்: 


நான்கு புறத்திலும் நான்கு நான்கு மலைகளாக மொத்தம் 16 மலைகள் ஒரு சதுர வடிவில் அமைந்திருப்பதால் இந்த மலைப்பகுதியை சதுரகிரி என்று அழைப்பதாகச் சொல்கிறார்கள்.  தவிர இந்த மலையை தற்காலிக கைலாயம் என்றும் அழைப்பதுண்டு.  மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மலைப்பகுதியில் பல சித்தர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  தற்போதும் இங்கே சில சித்தர்கள் உலா வருவதுண்டு என்றும் நமக்கு பாக்கியம் இருந்தால் இப்படியானவர்களை நாம் சந்திக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.  மலையேற்றப் பாதையில் முதலில் வருவது - சந்தேகமென்ன முழுமுதற் கடவுளான ஆனைமுகத்தான் - பிள்ளையார் கோவில் தான்.  பக்கத்திலேயே தங்கக் காளியம்மன் கோவில்.  அங்கே பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து மலையேறாத தொடங்கினால் மலைப்பகுதியில் ஒரு சிறு கட்டிடம் வரும் - அது மலையில் ஏற்படும் தீயைக் கண்காணிக்க வனத்துறையால் அமைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேந்திரம்.  


வேதங்களே மலைகளாக…


சதுரகிரி மலைக்கு இந்தப் பெயர் வரக் காரணமென வேறு ஒரு விஷயமும் சொல்லப்படுகிறது.  அதாவது நான்கு (ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண)  வேதங்களே நான்கு மலைகளாக இங்கே இருப்பதால் இந்த மலைக்கு சதுரகிரி மலை என்ற பெயர் என்பதாகவும் ஒரு கருத்து உண்டு. கிட்டத்தட்ட 2500 வருடங்கள் பழமையான மலை என்றும் சொல்கிறார்கள். இந்த மலையில் உறையும் சந்தன மஹாலிங்கம், மற்றும் சுந்தர மஹாலிங்கம் குறித்த கதைகளும் நிறையவே உண்டு.  அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.  முதலில் மலையேற்றத்தில் இருக்கும் நான்கு பகுதிகளைக் குறித்து பார்த்து விடலாம்.  


மலையேற்றம் - பகுதி ஒன்று - மலையடிவாரம் முதல் கோணத் தலைவாசல் வரை



மலையேற்றத்தில் இருக்கும் நான்கு பகுதிகளில் முதலாவது குறித்து இங்கே பார்க்கலாம்.  மலையடிவாரத்தில் இருந்து நடக்க ஆரம்பித்து பிள்ளையார் கோவில், தங்கக் காளியம்மன் கோவில், தீ கண்காணிப்பு கேந்திரம் போன்றவற்றைக் கடந்து சென்றால் கருப்பசாமி கோவில் வந்துவிடும். வழியில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் நின்று இறைவனை தரிசித்துக் கொள்வது உங்களுக்கு நல்லது! மலையேற்றத்தில் கொஞ்சம் ஓய்வு எடுத்தது போலவும் ஆகும், இறைவனை தரிசித்தது போலவும் ஆகும் அல்லவா? இதுவரை பாதை நன்றாக இருந்தாலும், கருப்பசாமி கோவில் தாண்டிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கடினமான பாதையாக, கற்களும், பாறைகளும் நிறைந்த பாதையாக மாறத் தொடங்குகிறது.  இந்தப் பாதையில் நாம் முதலில் கடக்க இருப்பது மாங்கனி ஓடை எனும் ஒரு சிறிய நீரோடை.  சில்லென்ற தண்ணீரில் நடக்க மிகவும் இனிமையாக இருக்கிறது. ஓடையைக் கடக்க ஏதுவாக ஒரு பெரிய கயிறும் கட்டி வைத்து இருக்கிறார்கள். அதனை பிடித்தபடியே நடக்கலாம் என்பதும் ஒரு வித வசதி.  


மாங்கனி ஓடையைக் கடந்தால் அடுத்து வருவது “வழுக்குப் பாறை”.  பெயர் உணர்த்துவது போலவே இந்தப் பாறைப்பகுதி மிகச் சிறிய அளவு தான் என்றாலும், கொஞ்சம் தடுமாறினால் வழுக்கி விட்டுவிடும் என்பதால் மிகவும் கவனமாக அடி அடுத்து வைக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் தவறினால் கூட நேரடியாக கீழே வழுக்கிக் கொண்டு போய் கீழே இருக்கும் ஓடையில் விழுந்து விடும் வாய்ப்பு உண்டு. வழுக்குப் பாறையினை கடக்க, சிறிது சிறிதாக மலையை வெட்டி சிறு படிகள் போன்று அமைத்திருந்தாலும், கவனமாகவே இந்தப் பகுதியை கடக்க வேண்டியிருக்கும்.  கொஞ்சம் கவனமாக இருந்தால் சுலபமாகவே கடந்து விடலாம்.  இதன் பிறகும் பாறைகள் நிறைந்த பகுதி தான் சுமார் 800 மீட்டர் இப்படியான பாதையில் மலையேற்றத்தினை தொடர்ந்தால் அடுத்து வருவது சங்கிலிப் பாறை


வழுக்குப் பாறை போலவே இந்த சங்கிலிப் பாறையும் கொஞ்சம் கடினமான பாதை என்பதால் பக்கவாட்டில் ஒரு சங்கிலியை மலையேறுபவர்கள் வசதிக்காக அமைத்திருக்கிறார்கள். அந்த சங்கிலியைப் பிடித்துக் கொண்டு இந்த சங்கிலிப் பாறை பகுதியை கடந்து விடலாம்.  நாங்கள் சென்ற போது அந்த சங்கிலி இல்லை! சங்கிலி பிணைப்பதற்காக போடப்பட்டிருந்த குழிகள் தான் இருந்தன! அதனால் சங்கிலி இல்லாமலேயே இந்தப் பகுதியை கடக்க வேண்டியிருந்தது எங்களுக்கு! வழுக்குப் பாறை பகுதியை விட இந்தச் சங்கிலிப் பாறை பகுதி இன்னும் கடினமானது - செங்குத்தானதும் கூட!  நாங்கள் சென்ற சமயத்தில் மழை இல்லை என்பதால் பிரச்னை இல்லை.  மழை சமயமாக இருந்தால் இந்தப் பகுதி வழியே தான் நாம் சதுரகிரி ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கும்.  மழைக் காலங்களில் இந்த மலையேற்றம் இன்னும் கடினமாக இருக்கும் என்பதையும் சொல்லி விடுகிறேன்.  பொதுவாக அதிக அளவு மழைப்பொழிவு இருந்தால் மலையேற்றம் செய்ய வனத்துறையினர் அனுமதிப்பதில்லை என்பதும் இங்கே சொல்ல வேண்டிய தகவல்!  சங்கிலிப் பாறையைக் கடந்து பத்துப் பதினைந்து நிமிடங்கள் நடந்தால் நாம் வந்து சேரும் இடம் கோணத் தலைவாசல். 


பயணத்தில் தொடர்ந்து கிடைத்த அனுபவங்களை வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. சங்கிலிப்பாறையும், வழுக்குப்பாறையும் பயமுறுத்துகின்றன.  எவ்வளவு தூரம் ஒவ்வொன்றும்?  சுவையான சுவாரஸ்யமான பயணத்தை வாசிக்க, தொடர்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கிலிப்பாறை, வழுக்குப் பாறை பயமுறுத்துபவை தான். இரண்டும் சுமார் ஒன்றிரண்டு கிலோ மீட்டர்கள் இருக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சங்கிலி, வழுக்குப் பாறைகளை புகைப்படம் எடுக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பயணத்தில் எடுத்த படங்கள் மிகக்குறைவு ஸ்ரீராம். நேரடியாக பார்த்து ரசிப்பதிலேயே நிறைய ஈடுபாடு இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. தங்களது விளக்கம் பயணிப்பவர்களுக்கு நல்ல பயனைத் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற பயணம் குறித்த பதிவுகளும் அதில் தரும் தகவல்களும் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பயண விவரங்கள் நன்று. 3-4 மணி நேர மலைப்பாதை பயணமா? அதிகாலையிலேயே ஆரம்பிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாலை ஆரம்பித்து விட்டால் இந்த மலையேற்றம் நல்லது. முதல் முறை என்றால் இன்னும் அதிக நேரம் எடுக்கலாம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. சங்கிலிப் பாறையும், வழுக்குப் பாறையும் அந்தக் காலத்திலேயே அச்சமூட்டுபவை.. இப்போது சொல்லவே வேண்டாம்..

    சிறப்பான வழிகாட்டியாய் இந்தப் பதிவுகள்..

    சிவ சிவ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கிலிப் பாறையும் வழுக்குப் பாறையும் கொஞ்சம் அச்சமூட்டும் விதமாக இருந்தாலும் மலையேறி விடலாம் - இறைவன் அருளுடன். பதிவுகள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. ஒவ்வொரு பகுதியைப் பற்றிய விவரங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. வெங்கட்ஜி, கிட்டத்தட்ட பர்வதமலை ஏற்றம் போல இருக்கிறது. அதிலும் செங்குத்தான பகுதி கொஞ்சம் அசந்தால் காலை பிரட்டி விடும் பாறைக்கற்கள், கால் வைப்பதே கடினம். அது போல வழுக்கும் பகுதி, சங்கிலிப் பகுதி,இரும்புப் பாலம் என்று ....

    வாசிக்க வாசிக்க ஆவல் கூடிக் கொண்டே போகிறது. எப்போது வாய்க்குமோ?!! வீட்டில் சொல்லத் தொடங்கிவிட்டேன்.

    விளக்கமாகச் சொல்வதும் நன்றாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பர்வத மலை இன்னும் கொஞ்சம் கடினம் என்று அது குறித்த காணொளிகளைப் பார்த்தபோது தோன்றியது. அடுத்த தமிழகப் பயணத்தில் அங்கே சென்று வர யோசித்துக் கொண்டிருக்கிறேன் கீதா ஜி.

      உங்களுக்கும் சதுரகிரி பயணம் அமைய எல்லாம் வல்ல ஈசன் அருள்புரியட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. ஆமாம் சங்குநாதம் கடினமானது நல்ல மூச்சுப்பயிற்சி அவசியம்...நானும் முன்பொருமொறை முயற்சி செய்திருக்கிறேன். காற்றில் எந்தன் கீதம் தான்....ஹாஹாஹா சங்கு என்னவோ ஒலி எழுப்பியது நாதமாக இல்லை!!

    காணொளியில் கேட்டேன். அருமை.

    ஏறும் போது எடுத்த காணொளியும் நல்லாருக்கு. சங்கிலிப்பாறை, வழுக்குப் பாறை, அந்த ஓடை படங்கள் எல்லாம் அடுத்த பதிவில் வருமோ ?

    படங்கள் எல்லாம் நல்லாருக்கு. கூடவே நம் மக்கள் போடும் குப்பைகளும் தெரிகின்றன

    ரசித்து வாசிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்குநாதம் இசைப்பது மிகவும் கடினமான விஷயம். மூச்சுப்பயிற்சியும், சங்கு ஒலிக்க தேவையான பயிற்சியும் அத்தியாவசியம் தான்.

      எடுத்த படங்கள் குறைவே. முடிந்த வரை பகிர்ந்து கொள்கிறேன் கீதா ஜி. குப்பைகள் - வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. அருமை. ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் வெறும் காலுடனே நடப்பதை காணமுடிகிறது. ஒரு அம்மா இடுப்பில் குழந்தையுடன். ஓம் நமசிவாய!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் வெறும் காலுடனேயே நடக்கிறார்கள் பத்மநாபன் அண்ணாச்சி. குழந்தையைச் சுமந்தபடி நடந்தவர்கள், சிவநாமம் சொல்லியபடி நடந்த முதியவர்கள் என பார்க்கும்போது நமக்கும் மலையேற்றத்தில் இருக்கும் சிரமங்கள் குறைந்து விடுகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. அற்புதமான, தெய்வீக பயணம் ..

    எனது அண்ணியின் தாய் வீட்டு குலதெய்வம் இவர். அந்த மாமாவின் பெயரும் சந்தன மகாலிங்கம்.

    எங்களுக்கும் இவரை தரிசிக்கும் ஆசை உண்டு...பார்ப்போம் அவன் அருள் இருந்தால் அனைத்தும் தானே நடக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உறவினர் குலதெய்வம் - ஆஹா... மகிழ்ச்சி. உங்களுக்கும் சதுரகிரி பயணம் அமைய எல்லாம் வல்ல ஈசன் அருள்புரியட்டும் அனு ப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. படிக்கவே பயணிக்கவேண்டும் என்ற ஆவலைதருகிறது. பயணத்தில் தொடர்கிறோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. சிறப்பான விளக்கம் சார்.
    படிக்கப் படிக்க சுவாரசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....