அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட திருவண்ணாமலை பயணம் - பகுதி இரண்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
மறதி என்பது பெரிய வரம் என்று சிலர் சொல்வதுண்டு. அதிலும் குறிப்பாக தேவையில்லாத குப்பைகளை மனச்சிறையில் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை விட மறப்பது மேல். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மறதி என்பது ஒரு வரமாக அமைகிறது. எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதை விட மறந்து விடுவது மேல் தானே. ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தேவையான விஷயங்கள் மறந்து விடுவதும் தேவையற்ற விஷயங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுவதும் இயல்பு தானே.
நண்பரின் தாயார்: நாங்கள் எப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்றாலும் அவரது தாயார் எங்களையும் அவரது மகன் போலவே பாவித்து, "சாப்பிட்டு போடா கோந்தே" என்று சொல்வதோடு சாப்பிட வைத்தும் அனுப்புவார். அவரது கை வண்ணத்தில் எத்தனையோ முறை சாப்பிட்டு இருக்கிறேன். அதுவும் பாசத்தோடு அவர் எங்களுக்கு உணவு பகிர எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாகவே உணவு எங்களுக்கு உள்ளே சென்று இருக்கும். ஆனாலும் அவர் எங்களைச் செல்லமாக திட்டுவார் "நல்லா சாப்பிடுங்கடா கோந்தேளா….. இந்த வயசுல நல்லா சாப்டா தானே வயசான காலத்துல தெம்பா இருக்க முடியும்?"என்றும் சொல்வார். நண்பரின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் அங்கே உணவு சாப்பிடாமல் அவர் எங்களை அனுப்பியதே இல்லை. எப்போதும் பாசத்தினை பொழிபவர். தலைநகரில் குடும்பத்தினரை விட்டு விலகி, தனியே இருக்கும் என் போன்ற சில நண்பர்களுக்கு அவர் எப்போதும் தனி கவனிப்பு தந்தவர் - குறிப்பாக எனது திருமணத்திற்கு முன்னர். திருமணத்திற்குப் பிறகும் கூட, என்னிடமும், மனைவி மற்றும் மகளிடம் பாசத்தினை தொடர்ந்து காட்டியவர். தலை நகர் தில்லியில் இப்படியான சில பெரியவர்கள் எனக்கு அமைந்தது ஒருவித வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
சில வருடங்கள் நண்பர், அவரது அலுவலகத்தில் பணி மாற்றம் காரணமாக தில்லியை விட்டு விலகி வேறு ஊர்களில் பணிபுரிந்தார். பல ஊர்களுக்கு மாறினாலும், கூடவே அவரது அம்மாவும் சென்று விடுவார். தில்லியில் நண்பரின் குடும்பத்தினர் இருக்க, நண்பரும் அவரது அம்மாவும் ஊர் ஊராக சென்று கொண்டிருந்தார்கள். சில மாதங்கள் முன்னர், அவரது அம்மாவின் உடல்நிலை காரணமாக, அவரது பணியில் விருப்ப ஒய்வு பெற்று மீண்டும் தில்லி திரும்பியிருக்கிறார். சென்ற வார இறுதியில் நண்பர் வீடு இருக்கும் பகுதிக்கு வேறு ஒரு வேலையாக செல்ல நேர்ந்த போது நண்பரையும் அவரது அம்மாவையும் பார்த்து வரலாம் என்று நண்பரது இல்லத்திற்குச் சென்று இருந்தேன். குரல் கேட்டு, உள்ளே படுத்திருந்தவர் வெளியே நடந்து வந்தார். சிறிது நேரம் என்னை பார்த்துக் கொண்டிருந்தவர் "நீ மீனாவோட புள்ள தான? எப்படி இருக்காய்? மீனா எப்படி இருக்கா? நீ எப்படி இருக்க? சௌக்கியம் தானே?" என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார். நான் அவரது வீட்டிற்குச் செல்லும் முன்னர் நண்பரை அழைத்து வரப்போவதைச் சொல்லி இருந்தேன். நண்பர் அவரது அம்மாவிற்கு இருக்கும் மறதிப் பிரச்சனைகள் குறித்து சொல்லி இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக Dementia தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி இருந்ததால், நண்பரின் அம்மா கேட்ட கேள்விகள் என்னை அதிகம் பாதிக்கவில்லை.
நான் இன்னார், என் பெயர் இது, எப்படி அவர் எனக்கு பாசமாக உணவு தருவார் என்று அவரிடம் நண்பரும் நானும் சொன்னாலும், அவர் மனதில் நான் மீனாவின் மகன் என்று உருவகம் ஆகிவிட்டது என்பதால் என்னை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. சில நிமிடங்கள் மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு, “ஓர்மை இல்லைடா கோந்தே…. எல்லாம் மறந்து போயிடறது” என்று சொல்ல எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவ்வப்போது மறதி மட்டுமல்லாது கோபமும் அதிகம் வருகிறது என்றும், சின்ன வயதில் ஒரு முறை கூட மகனை அடித்திராத அவர் இப்போதெல்லாம், ரெண்டு மூன்று தட்டு தட்டிவிடுகிறார் என்றும் கேட்டபோது மனதுக்குள் ஒரு வித வலி. பல பெரியவர்கள் இப்போது இது போன்ற பிரச்சனைகளால் அதிகம் வாடுகிறார்கள். வேறு ஒரு நண்பரின் தாயாரும் இப்படி Dementia பிரச்சனையால் அதிகம் அவதிப்பட்டார். எதனால் இந்த பிரச்னை உருவாகிறது, என்னதான் மாத்திரை மருந்துகள் என மருத்துவர்கள் கொடுத்தாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை என்று தான் தெரிகிறது. இவர்களை கவனித்துக் கொள்வதும் ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது.
நண்பர் வீட்டிலிருந்து நண்பரும் நானுமாக ஒரு வேலையாக வெளியே புறப்பட, எங்கே போகிறோம் என்று குறைந்தது ஐந்து முறையேனும் கேட்டு இருப்பார் - ஒவ்வொரு முறையும் நாங்கள் பதில் சொன்ன பிறகும். அவருக்கு பதில் சொல்ல, அவரை பொறுமையாக கவனித்துக் கொள்ள தேவையான சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தரவேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன் – அதைத் தவிர என்னால் செய்ய முடிந்தது வேறு ஒன்றும் இல்லை. நண்பருடன் வெளியே சென்று வேலை முடிந்த பின்னர் நான் வீடு திரும்ப, நண்பர் அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கே சென்று வந்த பிறகு என் மனதில் நண்பரின் அம்மாவினைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காதில் தொடர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் - “ஓர்மை இல்லடா கோந்தே…” - தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் இந்த வார்த்தைகளை என்னால் இன்னும் சில காலமேனும் மறக்க இயலாது!
******
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
மூளையைத் தொடர்ந்து ஏதாவது வேலையில் எங்கேஜ் செய்து வைத்திருந்தால் இந்த டிமென்ஷியா பிரச்னைகள் வராது என்று படித்திருக்கிறேன். அந்த வகையில் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் நல்ல பழக்கம். அந்த அம்மாவின் ஞாபகங்கள் சீக்கிரம் திரும்ப வேண்டும் - ஓரளவுக்காவது.
பதிலளிநீக்குஆனாலும் அடிப்படையான பேச்சு வழக்கு, அன்பு எல்லாம் மாறவில்லை பாருங்கள்..
மூளையைத் தொடர்ந்து ஏதாவது வேலையில் எங்கேஜ் செய்து வைத்திருப்பதும் நல்லது தான். அவருக்கு இருக்கும் பிரச்சனைகள் விலகினால் நல்லதே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குமிகவும் வறுத்தமான நிகழ்வு இது சார்.
பதிலளிநீக்குஆம் பல பெரியோர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
என் பெரியப்பா, இரு ஆண்டுகள் முன் இங்கனம் பாதிக்கப்பட்டு நான் பள்ளி செல்வதாகவே நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
அவர் ஒரு பட்டாசு ஃபேக்டிரியையே நடத்திக்கொண்டிருந்தவர்.
வாசிப்புப்பழக்கமும் அல்லது எதாவது சமூகப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதலும் இத்தகைய சூழல் வராமல் தடுக்கும் என சொல்வதுண்டு என்றபோதிலும் எல்லாருக்கும் அது பொருத்தமான தீர்வுதானா எனவும் தெரியவில்லை.
அந்த அம்மையார் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வோம்.
தங்களது உறவினர் சந்திக்கும் பிரச்சனையும் இதே விதம் தான். எல்லாம் நல்லபடியாக இருக்கவேண்டும். தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குதங்களது அன்பிற்கு நன்றி தனபாலன்.
நீக்குவயது ஆக ஆக பலர் மீண்டும் குழந்தையாகவே மாறிவிடுகின்றனர். அவர்களை பார்த்துக் கொள்வது கொஞ்சம் கடினமான பணிதான். எங்கள் வீட்டின் எதிரே நூறு வயதை தொட்ட பாட்டி இருக்கிறார். ஒருநாள் வீட்டில் உள்ளவர்கள் அசந்த நேரம் வெளி வாசலைப் திறந்து சாலை பக்கம் சென்றவர் திரும்பி வர வழி தெரியாமல் திணற நல்லவேளையாக அவ்வழி வந்த பக்கத்து வீட்டுக்காரர் கைபிடித்து வீட்டில் விட்டார். இதனால் பொறுமை இழந்த பாட்டியின் மருமகன் (வயது 70) பாட்டியை திட்ட பேரன் சமாதானப் படுத்தி பாட்டியை அரவணைத்துக் கொண்டார்.
பதிலளிநீக்கு100 வயது பாட்டியை அரவணைத்துக் கொண்ட பேரன் - ஆஹா... மகிழ்ச்சி. இப்படியான பெரியவர்களை கவனித்துக் கொள்வது கடினமான பணி தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
உங்கள் பதிவுகள் வெளியிட்டு அதிக நாளாயிற்று. சீக்கிரம் ஒரு பதிவு எழுதி அனுப்புங்கள் அண்ணாச்சி.
பேரன் - வாவ்!!!! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு பேரன் அணைத்துக்கொண்டதைக் கேட்டதும்.
நீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குமறதி என்பது எல்லா மனிதருக்கு இறைவன் கொடுப்பதில்லை.
பதிலளிநீக்குசிலருக்கு பட்ட மரத்தில் அடித்த ஆணி போல சில விடயங்கள்....
இறைவன் எல்லோருக்கும் மறதியைக் கொடுப்பதில்லை - உண்மை.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
மறதி... சமீபத்தில் நிறை உறவினர்களுக்கு இந்தப் பிரச்சனை, என் மாமியார் உட்பட. பல கேள்விகள் அவர் கேட்கும்போது மனது துன்பப்படும். அவ்வப்போது, என்னை மறக்கலையே எனக் கேட்டுக்கொள்வேன்
பதிலளிநீக்குஎனது உறவு வட்டத்திலும் இப்படி நிறைய முதியவர்கள் இருக்கிறார்கள். வேதனையான காலம் தான்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
இதைவிட எனக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு விசேஷத்துக்குச் சென்றிருந்த நான், மனைவியின் உறவினரிடம் (பெண்) பேசிக்கொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் தள்ளி இருந்த இன்னொருவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் சிரித்து கையை ஆட்டிவிட்டுச் சென்றுவிட்டேன். மனைவியின் உறவினரிடம், ஏன் அவர் கணவர் வரவில்லை என்று கேட்கணும் என நினைத்திருந்தேன் (அவரை எனக்கு நன்கு பரிச்சயம்). திரும்ப ஊருக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, என்னைப் பார்த்துச் சிரித்தவர்தான் அவருடைய கணவர் என்று. பொதுவாகவே எனக்கு முகங்களை நினைவு வைத்துக்கொள்வது கடினம். (நிறைய தடவை பார்த்தால்தான் நினைவுக்கே வரும். இல்லைனா, எங்கேயோ இவரைச் சந்தித்திருக்கிறோம் என்றே தோன்றும். இது அலுவலகத்தில் எனக்குச் சில சங்கடங்களைக் கொடுத்திருக்கிறது. நானே என் இந்தக் குறையைச் சொல்லிவிடுவேன்). இப்படி அவரது கணவர் முகத்தையே மறந்து, வேறொருவர் என்று நினைத்துவிட்டேனே என்று எனக்குச் சங்கடமாகப் போய்விட்டது. அவரை தொலைபேசியில் கூப்பிட்டு என் தவறைச் சொல்லி வருத்தம் தெரிவித்தேன். இப்பவே இப்படி... இன்னும் வயசானா என்னாகுமோ?
பதிலளிநீக்குஎனக்கும் இந்த மாதிரி மறதி பிரச்சனை உண்டு - பலரது முகம் நினைவிருந்தாலும் பெயர் நினைவில் நிற்பதில்லை. அதிலும் அலுவலகத்தில் தினம் தினம் பலரை சந்திக்கிறோம் - அனைவரது பெயரும் நினைவில் நிற்பதில்லை தான்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
ம்னம் கஷ்டப்பட்டுவிட்டது ஜி. என் மாமனாருக்கும் வந்தது.
நீக்குஇது கூடக்கூட அவர்களுக்குத் தாங்கள் சாப்பிடுவது கூடத் தெரியாது. ஒருவர் கவனித்துக்கொள்வது அவசியமாகிவிடும். பொறுமை நிறைய வேண்டும்.
பொதுவாக நாம் சுறு சுறுப்பாக, புத்தகம் வாசிப்பது எழுதுவது என்று இருந்தால் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப் போடலாம்...வராமலும் போகலாம்.
ஆனால் வந்தால் இதற்குத் தீர்வு கிடையாது.
கீதா
நெல்லை ஹாஹாஹா...அப்ப என்னை ஒரு முறைதானே பார்த்திருக்கீங்க அடுத்த முறை பார்க்கறப்ப ஏதேச்சையாக சாலையில் பார்த்தால் கூட நினைவு இல்லாம...கடந்து போய்டுவீங்கன்னு சொல்லுங்க!!! ஹாஹாஹா
நீக்குகீதா
இது சிரிக்கிற விஷயமா கீதா ரங்கன். ஏதோ இது ஒரு குறை எனக்கு. ஆபீஸில் வரும் க்ளையண்ட்ஸ், என்னிடம் சகஜமாகப் பெயர் சொல்லிப் பேசும்போது, அவங்களை எங்க சந்திச்சோம் என்று நினைவுக்கு வராது. உங்கள் முகம் நினைவில் இல்லை. புகைப்படத்தைப் பார்த்தால்தான் நினைவுக்கு வரும்.
நீக்கு//ஆனால் வந்தால் தீர்வு கிடையாது// - ஆமாம் ஜி. சில மாத்திரை மருந்துகள் இருந்தாலும் அவை முற்றிலுமான தீர்வு தருவதில்லை என்பதை நானும் கேட்டு இருக்கிறேன்.
நீக்குஇப்படியானவர்களை கவனித்துக் கொள்ள நிறையவே பொறுமை வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
//பார்த்தால் நினைவு கூட இல்லாமல் கடந்து போகலாம்// - அப்படியும் நடக்கலாம்! இப்படி கடந்து போன சிலரை நான் கண்டதுண்டு - அவர்கள் வேண்டுமென்றே கூட அப்படிச் செய்ய வாய்ப்புண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
முகம் நினைவில் இல்லை - எனக்கும் இப்படி ஆவதுண்டு நெல்லைத் தமிழன். ஒரே ஒரு முறை பார்த்த பல நபர்களின் முகம் இப்போது நினைவில் இல்லை.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஓர்மை இல்லைடா கோந்தே...// கோந்தே எங்க வீட்டில் நான் எல்லாருமே கோந்தே அதிகம் பயன்படுத்துவோம்...மகனைச் சொல்வதும் அப்படித்தான். என் தங்கைகளுக்குள்ளும் நானும் மற்றொரு தங்கையும், குட்டி, குட்டிமா, கோந்த்தே இப்படித்தான் சொல்லிக் கொள்வது.
பதிலளிநீக்குகீதா
பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பலர் இப்படியான வார்த்தைகளை பிரயோகிப்பது உண்டு. நெல்லை/நாகர்கோவில் பகுதியிலும் இப்படியான வார்த்தைப் பிரயோகம் உண்டென்று தெரிகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
மறதியைப் பற்றிய நல்ல பதிவு, நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.
நீக்குஇப்போதுவரை இப்படியானவர்களை சந்திக்கவில்லை..உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் நினைவுடனே இருந்தார்கள் இருக்கிறார்கள் ஆனாலும் இப்போதெல்லாம் கொஞ்சம் கவனமாக நினைவில் கொள்ளவேண்டும் என நினைத்து வைக்காத விசயமெல்லாம் மறந்துவிடுகிறது...கூடுதலாகபடிக்கவும் எழுதவேண்டும் எ நினைக்கிறேன்..
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்படியானவர்களை காண மனதுக்கு கஷ்டமாக இருக்கும் கூட இருந்து கவனிப்பவர்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும்.
பதிலளிநீக்குகவனிப்பவர்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும் - உண்மை தான் மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.