புதன், 20 ஆகஸ்ட், 2025

3BHK திரை அனுபவம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கண்ணாடி வாங்கலையோ கண்ணாடி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




நேற்றைய பொழுதில் (17 ஆகஸ்ட்) இணையம் வழியே 3BHK திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது! படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது! சரத்குமார், தேவயானி, சித்தார்த் போன்ற நடிகர்களின் நடிப்பில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது! அப்பாவாக சரத்குமாரும், அம்மாவாக தேவயானியும், மகனாக சித்தார்த்தும் நடித்திருக்கின்றனர்! ஃபீல் குட் மூவி என்று சொல்லலாம்!


சொந்தமாக ஒரு வீட்டை வாங்க பல வருடங்களாக போராடும் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி! அவர்களின் முயற்சிகள், திட்டங்கள், அவமானங்கள், தோல்விகள் இவை தான் இந்தப் படத்தின் கதை என்று சொல்லலாம்! படிப்பில் சுமாராக இருக்கும் சித்தார்த்! அவருக்காக செலவு செய்யும் அப்பா! எத்தனை மெனக்கெட்டாலும் அவருக்கு மீண்டும் மீண்டும் கிடைப்பது தோல்வியே! அவரின் தங்கை அரசுப் பள்ளியில் படித்தாலும் பொதுத் தேர்வில் 95% மதிப்பெண்களை எடுக்கிறார்!


இதன் நடுவே பல வருடக் கனவாக சொந்த வீடு! அதற்காக பல திட்டங்கள் வகுத்து பணத்தை கட்டுச்சிட்டாக சேர்த்தாலும் இவர்கள் வாங்க நினைக்கும் போது வீட்டின் விலையும் கூடி விடுகிறது, வாழ்விலும் சறுக்கல்கள்! தன்னால் இயலாத ஒன்றை மகனைக் கொண்டாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணும் தகப்பன்! மகனோ தான் நினைக்கும் ஒன்றையாவது செய்யணும் என்று எண்ணுகிறார்! குடும்பத்துக்காக கல்லூரிக் கனவை தியாகம் செய்யும் தங்கை!


இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களின் கனவு எப்போது நினைவானது என்பது தான்  மீதிக்கதை! இது மிடில் கிளாஸ் குடும்பங்களில் ஒவ்வொரு வீட்டிலும் நிகழும் நிகழ்வுகள் தான்! அதை மிகச் சிறப்பாக திரையில் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்! ஆனால் படம் முழுவதும் ஏன் அவ்வளவு சோகம் என்று தான் தெரியவில்லை! சரத்குமார், தேவயானி இருவரின் முகத்திலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை! 


சிறு வயது முதலே அரசுக் குடியிருப்பில் வளர்ந்த போதிலும் அதுவும் சின்னஞ்சிறு வீடு என்றாலும் எங்கள் வீட்டில் ஒருநாளும் சிரிப்புக்கு பஞ்சம் இருந்ததே இல்லை! வாழ்வில் எத்தனையோ எதிர்பாராத சறுக்கல்கள் உண்டு தான்! ஆனாலும் அது அந்தந்த சந்தர்ப்பத்தில் மட்டும் தான்! அதற்காக எப்போதுமே கலக்கத்துடனே இருக்கணும் என்ற எந்த அவசியமும் இல்லை! சொந்த வீட்டில் வசித்ததெல்லாம் என் திருமணத்திற்கு பிறகு தான்! அப்பாவுக்கும் வீடு வாங்க எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தன! அவையெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் பிறகு கையை விட்டும் போனது!


அப்பா என்பவர் எப்போதுமே விரைப்பாகவே தான் இருக்கணும் என்று யார் சொன்னார்கள்?? நேற்று பார்த்த ஒரு காணொளி ஒன்றில் ஒரு பட்டிமன்ற பேச்சாளர் தன் சிறு வயதில் அவரின் அப்பா அவரின் பேச்சை மறைந்திருந்து கேட்டு விட்டு அம்மாவிடம் தான் சொல்வார் எனச் சொன்னார்! ஆண்கள் தன் உணர்வுகளை பெரிதாக வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள் என்று சொல்வது தான்! ஆனாலும் அவர் தன் குழந்தைகளிடத்தில் கூட சகஜமாக பேசிக் கொண்டிருக்க மாட்டாரா என்ன?? கதை 2000ல் நிகழ்வது போல தான் காண்பிக்கிறார்கள்!! அப்போதிருக்கும் அப்பா அப்படி இருப்பார் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை!


இந்தப் படத்தில் சித்தார்த் பல தோல்விகளுக்குப் பின் கூறும் போது, ‘எதிர்காலத்தை பற்றியே சிந்தித்து நிகழ்காலத்தை தவற விட்டு விடுகிறோம்’ என்றார்! உண்மை தான்! கடந்து சென்ற நேரத்தையோ, வயதையோ திரும்பக் கொண்டு வர முடியாது என்பது தான் நிதர்சனம்! வாழும் நாட்களில் கிடைக்கும் மகிழ்வையும், அமைதியையும் எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடக்கூடாது! வீடு என்பது எல்லோரின் கனவு! அது சிறிது பெரிதோ அதை அடைய முயற்சிக்கலாம்! அதற்காக உழைக்கலாம்! ஆனால் அதற்காக நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களை மறந்து விட வேண்டாம்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

20 ஆகஸ்ட் 2025


3 கருத்துகள்:

  1. பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. பாஸுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதால் தள்ளிக்கொண்டே போகிறது. அவரொரு போன் பக்தை. நான் மட்டும் பார்க்கும் படங்களை நான் பாத்துக்க அவ்வப்போது பார்த்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  2. விமர்சனத்தில் அழகாக கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். சிறு வீடு, வாடகை வீடானாலும் உங்கள் அனுபவத்தையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். என் அனுபவமும் அதுதான். இளமையில் வாடகை வீட்டில் இருந்த மகிழ்ச்சி இப்போது சொந்த வீட்டில் இல்லை. அத்தனூண்டு ஹாலில் அத்தனைபேரும் படுத்துக் கொள்வோம். பாவம் அப்பாவும் அம்மாவும் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் காரணமும் அவர்கள்தானே!!

    பதிலளிநீக்கு
  3. // வாழும் நாட்களில் கிடைக்கும் மகிழ்வையும், அமைதியையும் எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடக்கூடாது! வீடு என்பது எல்லோரின் கனவு! அது சிறிது பெரிதோ அதை அடைய முயற்சிக்கலாம்! அதற்காக உழைக்கலாம்! ஆனால் அதற்காக நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களை மறந்து விட வேண்டாம்!//

    உண்மை. அழகு. அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....