அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட தேவரியா தால் நோக்கி ஒரு நடை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் சிறுகதை : தங்கப்பல் - புன்னகையின் இடைவெளி
இந்த வாரத்தின் ரசித்த சிறுகதையாக - தங்கப்பல் - புன்னகையின் இடைவெளி எனும் சிறுகதை. சு. அப்துல் கரீம் என்பவரின் எழுத்தாக்கத்தில். சொல்வனம் இதழில் வந்த இந்த சிறுகதை படிப்பவர் மனதை நிச்சயம் தொடும். கதை மாந்தராக வரும் சுலைமான் பாயின் கோபம் - எனது அப்பாவை நினைவூட்டியது. அப்பாவும் இப்படித் தான் கோபம் கொள்வார் - அவரது இளமையில். முதுமையில் சுலைமான் பாய் அந்தக் கோபத்தினால் விளைந்த விளைவுகளை நினைத்துக் கொள்வதை படித்த போது எனக்குள்ளும் கோபம் விட்டுச் செல்லும் எச்சம் நினைவுக்கு வந்தது. கதையிலிருந்து சில வரிகள் மட்டும் கீழே.
வீட்டுக்குள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம்.
நேர்த்தியாக ஒழுங்குசெய்த மெல்லிய டெர்லின் சட்டையோடு நின்றிருந்தார் சுலைமான் பாய் – அந்த காலத்தின் மரியாதையின் உருவகமாக, அவரின் பக்கத்தில் – பார்வையை நேராக வைத்தபடி, பாத்திமா.
அவளது சிரிப்பு – ஒரு கன்னிகையின் மெல்லிய நாணத்தோடு கூடியது. கண்ணாடி ஃபிரேமுக்குப் பின்னாலிருந்து ஒளிரும் அந்த சிரிப்பில், ஒரு சிறிய இடைவெளி இருந்தது – முன்பற்கள் தெரியும் அந்த இடம்…அப்போது அது ஒரு அழகான குறியாய் இருந்தது. இப்போது அது… அவருடைய மனச்சாட்சியின் இடைவெளி. அவளது புன்னகையில் மெதுவாய் பதிந்திருந்த அந்த இடம் – இப்போது நொந்துக் கொண்டிருக்கும் மனத்தின் மெல்லிய பிளவாகிவிட்டது. படத்தைப் பார்த்தபடியே,அவர் மெல்ல தலைக் குனிந்தார்.
“பாழாப்போன கோபம்…” என்று ஒரு வார்த்தை மட்டும், வாயிலிருந்து சிந்தும் கசப்பான துளியைப் போல வெளியே வந்தது. வார்த்தைத் துவளும் ஓர் தூக்கமற்ற கனவுப் பேச்சு போல…அந்தச் சொற்கள், வெறும் நினைவல்ல – தண்டனையாகத் தங்கிய வெறுமை.
அவரது கண்கள் ஈரமாயின. அது சாதாரண கண்ணீர் இல்லை…கடந்த காலத்தின் சதைகளில் இன்னும் கரைந்து உறைந்திருந்த குற்ற உணர்ச்சி.
முழுக்கதையும் படிக்க சுட்டி கீழே!
தங்கப்பல் - புன்னகையின் இடைவெளி
******
இந்த வாரத்தின் படம் : பட்டம்…
சமீபத்தில் வீட்டு ஜன்னல் வழி பார்க்கும்போது எதிர் பக்க மரத்தில் நூலறுந்த பட்டம் ஒன்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியை உடனே எனது அலைபேசியில் படம் எடுத்தேன். பட்டினத்தாரின் பாடல் வரிகள் - “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!” - நினைவுக்கு வந்தன. எனக்கு அதே போலத் தோன்றிய வரிகள்/வார்த்தைகள் - “நூலறுந்த பட்டமும்”. படம் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது - சொல்லுங்களேன்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : இதுவல்லவோ விளக்கு
2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - இதுவல்லவோ விளக்கு - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
சிந்தியா மஹாராஜாக்கள் அரசாங்கம் நடத்திய தர்பாரை இரண்டு பெரிய, பிரம்மாண்டமான அலங்கார விளக்குகள் [CHANDELIERS] அலங்கரிக்கின்றன.
ஒவ்வொரு CHANDELIERS-ம் சுமார் 3.5 டன் எடையுள்ளதெனவும் அதில் 248 மெழுகுவர்த்திகளை ஏற்றலாம் என எங்களுடன் வந்த கைடு சொல்லிக்கொண்டு வந்தார். ஒன்றே இவ்வளவு எடை என்றால், இரண்டையும் சேர்த்தால் அப்பா எவ்வளவு எடை? அதாவது 7 டன்கள்.
இந்த தர்பார் நடக்கும் பெரிய அறையின் மேல்பாகம் முழுவதும் தங்கத்தினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர CHANDELIERS – லும் மொத்தம் 56 கிலோ தங்கம் பயன்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றும் இடங்கள் முலாம் பூசப்பட்டு உள்ளன. ”56 கிலோ தங்கமா!” என்று அங்கே பிளந்த வாய் பல நிமிடங்கள் வரை மூடவேயில்லை நிறைய பேருக்கு. இன்றைய தேதிக்கு, இந்த தங்கத்திற்கு மட்டுமே 15 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பாகும்.
சரி 7 டன் எடையுள்ள இவற்றை உத்திரத்தில் மாட்டினால் அது தாங்குமா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது. இப்ப கட்டற கட்டிடமெல்லாம் சும்மா இரண்டு ஃபேன் மாட்டினாலே தாங்குமா என்று கேட்கணும். இதுல இவ்வளவு எடையிருந்தா என்ன ஆகிறது?
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் தகவல் : பழக்கம்
படித்ததில் பிடித்ததாக - சமீபத்தில் படித்த ஒரு தகவல்.
அந்தக் காலத்தில் எகிப்திய வணிகர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது.
அவர்கள் காலையில் கடையைத் திறந்ததும், கடை வாசலில் ஒரு நாற்காலியை வைத்துவிடுவார்கள்.
முதல் வாடிக்கையாளர் வந்து தங்கள் கடையில் பொருளை வாங்கிச் சென்றதும், அவர்கள் அந்த நாற்காலியை உள்ளே எடுத்து வைத்துவிடுவார்கள்.
அப்படி அடுத்த அவர்கள் கடைக்கு வந்தால், கடைக்காரர் கடைக்கு வெளியே வந்து பார்த்து, எந்தக் கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்தக் கடையை கைகாட்டி, "எங்களது கடையில் முதல் வியாபாரம் நடந்துவிட்டது. இன்னும் அந்தக் கடையில் நடக்கவில்லை. நீங்கள் தயவுசெய்து உங்களுக்கு தேவையானதை அந்தக் கடையில் வாங்கி அவருக்கு உதவுங்கள்." என்று கூறி அவர்களை அங்கே அனுப்பி வைப்பார்கள்.
சக வியாபாரி தனது வியாபாரத்தையே துவக்காமல் இருக்கும் போது, தான் மட்டும் லாபத்தை பார்ப்பது சரியல்ல என்ற நல்ல குணம்தான் இதற்கு அடிப்படைக் காரணம்.
இதே குணத்தால்தான் இவர்களது வியாபாரமும் அந்தக் காலத்தில் செழித்து வளர்ந்தன என்கிறது வரலாறு.
******
இந்த வாரத்தின் நிழற்படம் : குறும்பு
சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு நிழற்படம். இப்படியான குறும்புத்தனங்கள் பார்க்கவும், கேட்கவும் எப்போதுமே ரசனையாவை தானே!
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Sticking Together
ஒரு விளம்பரம் எதைச் சொல்ல வருகிறது என்பதை மிகவும் ரசனையாக, எதிர்பார்ப்புடன் பார்க்க வைப்பதில் இருக்கிறது அந்த விளம்பர தயாரிப்பாளரின் திறமை. இந்த விளம்பரம் அப்படி எடுக்கப்பட்ட ஒன்று. ஜப்பானிய விளம்பரம் இது பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் செய்தி : ஆபத்தான பயணம்…
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நர்ஸாக பணிபுரியும் கமலா தேவி என்பவர் குறித்த தகவல்கள் நிறைய வந்து கொண்டிருந்தன. அவர் பணியில் காட்டிய கடமை உணர்வு பாராட்டத்தக்கது என்றாலும் சற்றே தவறியிருந்தாலும் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. அங்கே இருக்கும் அதிகாரிகளும் அதையே சொல்லி இருக்கிறார்கள். ஹிந்து தமிழ் நாளிதழில் வந்த செய்தி படிக்க சுட்டி கீழே!
இமாச்சலில் குழந்தைக்கு தடுப்பூசி போட ஆற்றை கடந்து ஆபத்தான பயணம் செய்த நர்ஸ்
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
30 ஆகஸ்ட் 2025
சிறுகதை கரு மனதில் இடம் பிடிக்கிறது. சிறுகதையை வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குபட்டம் தன்னைக் காத்துக்கொள்ள தாலியையே அடகு வைக்கிறது!
பழைய பதிவை இப்போதுதான் படித்தேன்!
எகிப்திய வணிகர்களின் குணம் மனதைத் தொடுகிறது.
Essay On Dog புன்னகைக்க வைத்தது.
கமலா தேவியின் கடமை உணர்வு பதைக்க வைக்கிறது.
பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குபட்டம் குறித்த உங்கள் வரிகள் நன்று.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
சிறு கதையை படித்துவிட்டு வருகிறேன் ஜி.
பதிலளிநீக்குஅந்த நர்ஸ், அதிகாரிகள் சொல்லியிருபப்து போல், கடமை உணர்ச்சி பாராட்டத்தக்கது என்றாலும் அந்தக் கடமை இன்னும் பலருக்கும் உதவ வேண்டுமே எனவே தகவல் கொடுத்து தக்க ஏற்பாடுகளைப் பெற்றிருக்கலாம்.
கீதா
கடமை உணர்வு நல்லது தான். ஆனாலும் சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதும் அவசியமே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
மீதிக்கு அப்பால வருகிறேன்
பதிலளிநீக்குகீதா
அவசரம் இல்லை. எப்போது முடிகிறதோ அப்போது வாசிக்கலாம் என்பது தானே இங்கே வசதி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
வாசகம் அருமை. சிறுகதை விமர்சனம் அருமை, படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குமரத்தில் மாட்டிக் கொள்ளும் பட்டம் படம் பல கதைகளை சொல்கிறது.
56 கிலோ தங்க விளக்கு இப்போது நினைத்தால் மலைப்புதான்.
//சக வியாபாரி தனது வியாபாரத்தையே துவக்காமல் இருக்கும் போது, தான் மட்டும் லாபத்தை பார்ப்பது சரியல்ல என்ற நல்ல குணம்தான் இதற்கு அடிப்படைக் காரணம்.//
வியாபாரிகளின் நல்ல எண்ணம் அனைவரையும் வாழ வைக்கும்.
குறுப்பு ரசிக்க வைத்தது.
காணொளி நன்றாக இருக்கிறது அனைத்து உணர்ச்சிகளும் நன்றாக காட்டுகிறார்கள்.
கமலா தேவி கடமை உணர்ச்சி பாராட்டபட வேண்டியது என்றாலும் பயமாக இருக்கிறது பத்திரமாக போய் சேர்ந்து அவர் வேலையை பார்க்கவேண்டுமே!
பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அற்புதமான சிறுகதை..இறந்தவர்களின் கோப நினைவுகள் மட்டுமல்லாமல் இருப்பவர்கள் பட்டகோபத்தின் நினைவுகளைத் கிளறி ரணம் ஏற்படுத்திக் போகிறது..
பதிலளிநீக்குகோபம் குறித்த தங்களது சிந்தனைகள் உண்மை. பதிவினை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி ஐயா.
தங்கப்பல் கதை அருமையான கதை. எழுதிய விதம், கரு அதைச் சொன்ன விதம் சூப்பர். ஒரு மனிதனின் மிகவும் கேவலமான குணம் கோபம். விவரிக்கவில்லை ஏனென்றால் இது பற்றி நான் எழுதும் ஒரு கதையில் எழுதி வைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
சிறுகதை குறித்த தங்களது சிந்தனைகள் உண்மை. உங்கள் சிறுகதை படிக்க காத்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
எந்தப் பிள்ளைகள் விட்ட பட்டமோ!! அறுந்துவிழுந்த பட்டம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, எந்தக் குச்சி வந்து கிழித்துவிடுமோ என்று.
பதிலளிநீக்குகீதா
இன்றைக்கு அதே பட்டம் பார்த்த போது கிழிந்து இருக்கிறது :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
பழையனினைப்புடா பேராண்டிய இப்பதான் பார்த்தேன் ஜி அங்கு கமெண்டிட்டேன்!!!!!
பதிலளிநீக்குஎகிதிய வியாபாரிகளின் நல்ல மனம் மனதைக் கவர்கிறது.
குறும்பு - புன்னகைக்க வைத்தது!! ரசித்தேன்
காணொளி பின்னர் பார்க்கிறேன் ஜி. எங்கள் வீட்டில் நெட் ரொம்ப ரொம்ப படுத்துது. இணையமும் சரி நார்மல் நெட்வொர்க்கும் சரி. அதுவும் வீட்டினுள். ஒவ்வொரு அழைப்பையும் வீட்டிற்கு வெளியில் வந்துதான் பேச வேண்டியிருக்கிறது.
கீதா
பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குசிறுகதை படிக்க வேண்டும் எகிப்திய வியாபாரிகளின் நல்ல மனம் கவர்கிறது
பதிலளிநீக்கு