புதன், 13 ஆகஸ்ட், 2025

முகப்புத்தகத்தில் நான் - யமனும் யமுனாவும் - National Book Lovers Day - World Lions Day


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு ”முகப்புத்தகத்தில் நான்” பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


யமனும் யமுனாவும் - ரக்ஷா Bபந்தன்:




யமுனா - யமன்... (யம்-யமுனா ஆலயம், மதுரா)

ஆகஸ்ட் 9 - வட இந்தியாவின் பல பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பண்டிகை ரக்ஷா Bபந்தன்.  தென்னிந்தியாவிலும் இப்போதெல்லாம் சில இடங்களில் கொண்டாடப்படுகிறது என்றாலும் இங்கே கொண்டாடப்படும் அளவுக்கு இருக்காது.  சகோதரர்களின் நலனிற்காக வடக்கில் இரண்டு பண்டிகைகள் - ஒன்று ரக்ஷா Bபந்தன். மற்றொன்று Bபாய் Dhதூஜ் (தீபாவளி முடிந்த பின்னர் வரும்).  சகோதரர்களின் நலனுக்காக, சகோதரிகள் நம் ஊரில் பொங்கலுக்குப் பின்னர் கணுப்பொங்கல் வைப்பதுண்டு. இங்கே இரண்டு பண்டிகைகள்.  


இந்த இரண்டு நாட்களிலுமே, குறிப்பாக இரண்டாம் பண்டிகையின் போது மதுரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் இருக்கும் விஷ்ராம் Gகாட் (கம்சனை வதை செய்த பிறகு கிருஷ்ணர் ஓய்வெடுத்த இடம்!) அதன் பக்கத்திலேயே இருக்கிறது யமன் - யமுனாவிற்கான ஆலயம் - அங்கே சென்று வழிபடுவதை இங்கே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  யமனும் யமுனாவும் சகோதர சகோதரிகள்.  தனது சகோதரனின் நலனிற்காக பக்தி சிரத்தையுடன் வேண்டிக்கொண்டு தனது சகோதரன் யமனுக்காக காத்திருக்கிறார் யமுனா.  தான் எங்கே சென்றாலும் அழிவு உண்டாகுமே, நாம் யமுனையின் வீட்டிற்குச் சென்றால் அவளுக்கு தொல்லை உண்டாகுமே என்ற எண்ணத்தில் யமன் வராமலேயே இருக்க, மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி யமன், தனது சகோதரி யமுனாவின் இருப்பிடத்திற்கு வருகிறார்.  பண்டிகை கொண்டாட்டங்கள் சிறப்பாக முடிந்த பிறகு தனது இருப்பிடத்திற்குத் திரும்புகிறார்.  


Bபாய் Dhதூஜ் சமயத்தில் சகோதர சகோதரிகள் விஷ்ராம் Gகாட் பகுதியில் யமுனை ஆற்றங்கரையில் நீராடி, அங்கேயிருக்கும் யமன் - யமுனா ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் யம பயம் நீங்கி சுகமாக இருக்கலாம் என்பது இங்கே இருக்கும் நம்பிக்கை.  இந்த ஆலயத்தில் Bபாய் Dhதூஜ் மட்டுமல்லாது ரக்ஷா Bபந்தன் சமயத்திலும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கிறது.  ஆனால் Bபாய் Dhதூஜ் அதீத அளவில் கூட்டம் இருக்கும். மதுரா நகரில் இருக்கும் பிரபலமான ஆலயமான த்வாரகாதீஷ் ஆலயம் அருகிலேயே இந்த ஆலயமும் அமைந்திருக்கிறது. அடுத்த முறை மதுரா பயணித்தால் இந்த ஆலயத்திற்கும் நீங்கள் சென்று வரலாம்! 


அனைத்து சகோதரிகளுக்கும் சற்றே தாமதமான ரக்ஷா Bபந்தன் வாழ்த்துகள். 


******


National Book Lovers Day:






9 August - இன்றைக்கு தேசிய புத்தகக் காதலர்கள் தினமாம்….. 


இப்படியெல்லாம் தினங்கள் கொண்டாடுவதில் எனக்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால் புத்தகக் காதலர்கள் தினம் என்றதும் சரி அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். புத்தகம் படிப்பதைப் தவிர வேறு எந்த வழி சிறப்பாக இருக்க முடியும்?


கைகளில் புத்தகம் வைத்துப் படிப்பதில் இருக்கும் மகிழ்ச்சி அலைபேசி வழியே அல்லது கணினி வழியாக படிப்பதில் கிடைப்பதில்லை. ஆனாலும் இங்கே அச்சுப் புத்தகம் எதுவும் இல்லை. அதனால் அலைபேசி வழியே ஒரு புத்தகம் படித்தேன். சுஜாதா எழுதிய “தப்பித்தால் தப்பில்லை” எனும் கதை. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. PDF வடிவில் இணையத்தில் கிடைத்த நூல். 


56 பக்கங்கள் கொண்ட நூல் தான் இது. தனக்கு துரோகம் இழைக்கும் மனைவியை கொலை செய்யத் திட்டமிடும் கணவன் குறித்த கதை. விறுவிறுப்பாக இருந்தாலும் சில சிந்தனைகள் எனக்குள்…. அந்த மனைவியின் பார்வையில் எந்த விஷயமும் இல்லை என்பதால், ஒரு பக்கப் பார்வை மட்டுமே என்பதால் அத்தனை பிடித்தமாக இல்லை. கொலை செய்தாரா இல்லையா என்பதை நீங்களே படித்துப் பாருங்களேன்…..


******


World Lions Day:



படம்: நான் எடுத்தது!


சில நாட்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் ஒரு தகவல். அனுப்பியது ஒரு அரசு நிறுவனம். 2016 நவம்பர் 17 அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சாசன் கீர் வனத்திற்குச் சென்ற போது முன்பதிவு செய்ததால் அவ்வப்போது அவர்களிடமிருந்து வனம் குறித்த தகவல்கள் வரும். இப்போதும் அப்படி ஒரு தகவல் தான். 


10 ஆகஸ்ட் 2025 அன்று World Lions Day என்றும் அதற்காக செய்யப்படப் போகும் சில விஷயங்களும் குறித்து தகவல்களை அனுப்பி இருந்தார்கள்…… தகவலைப் பார்த்ததும் எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன….. என்ன அற்புதமான பயண அனுபவங்கள் அந்தப் பயணத்தில் எங்களுக்குக் கிடைத்தன என்று மனதுக்குள் சிந்தனைகள். நான், நண்பர் பிரமோத் மற்றும் சிலராக ஒரு வாரம் குஜராத் மற்றும் தியூ என இரண்டு இடங்களில் பல சுற்றுலாத் தலங்களில் சுற்றி வந்தது பசுமையாக மனதில் இன்றைக்கும் உள்ளது.


வனப் பயணத்தில் எட்டுக்கும் மேற்பட்ட சிங்கங்களை ஒரே இடத்தில், அதுவும் மிக மிக அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கும் மேலாக நாங்கள் அந்த சிங்கங்களின் அருகில் இருந்து பார்க்கவும் படங்கள் எடுக்கவும் முடிந்தது. எங்களுக்கும் சிங்கங்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் இல்லை. அவை அவற்றின் வனத்தில் சுதந்திரமாக உலவ, நாங்கள் அங்கேயே சென்று, ஜீப்பில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு சிங்கம் எங்கள் ஜீப் அருகே நடந்து சென்றது நெஞ்சை படபடக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.  


World Lions Day ஆகிய இன்றைய தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என சிலவற்றை பட்டியல் போட்டு இருந்தார்கள்…… அவர்களது தளத்தில் தகவல்கள் உண்டு. அங்கே சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் குறித்து எழுதிய பதிவின் சுட்டி கீழே…… 


கிர் காட்டுக்குள் – கண்டேன் சிங்கங்களை


இந்தத் தொடரை மின்னூல் ஆகவும் வெளியிட்டேன். அதன் சுட்டியும் கீழே!  


இரு மாநிலப் பயணம் - குஜ்ராத் தியு பயணக் கட்டுரைகள்


நீங்களும்  படித்துப் பாருங்களேன்….. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

13 ஆகஸ்ட் 2025


2 கருத்துகள்:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....