செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

முகப்புத்தகத்தில் நான் - கண்ணாடி வாங்கலையோ கண்ணாடி - கதை மாந்தர்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதை சொல்லிகளின் சந்திப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



கண்ணாடி வாங்கலையோ கண்ணாடி



சமீபத்தில் ஒரு காலைப் பொழுது...... அலுவலகத்திற்குப் புறப்பட்டு பேருந்து நிறுத்தம் செல்வதற்குள் மழை..... கையில் குடையும் இல்லை. Subway உள்ளே நின்று மழை நிற்கக் காத்திருந்தபோது இந்த உழைப்பாளியிடம் பேசிக் கொண்டு இருந்தேன். முன்னர் செய்து கொண்டு இருந்த வியாபாரம், தற்போது செய்து வரும் இந்த வியாபாரம், தில்லியின் நாட்டு நடப்பு என பல விஷயங்கள் குறித்து பேசினார். 


முன்னர் நிழற்படங்கள் வைத்துக்கொள்ள உதவும் ஆல்பங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தாராம்.  அலைபேசி வந்ததிலிருந்து இப்படியான ஆல்பங்களுக்கு தேவையே இல்லை. ரீல் போட்டு, ப்ரிண்ட் எடுத்து அதை ஆல்பத்தில் போட்டு என இப்படி யாருமே இன்றைக்கு இருப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிற்று! விதம் விதமான அளவுகளில் நிறைய ஆல்பங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தேன். இப்போது ஆல்பங்கள் தயாரிப்பே இங்கே இல்லாமல் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு அலைபேசி இப்படி நிறைய தொழில்களை பாதித்தது மட்டுமல்லாது முற்றிலுமாக அழித்து விட்டது என்பது அவரது ஆதங்கமாக இருந்த்தது.  தில்லி வந்த புதிதில் நான் கூட நிறைய பேருக்கு இப்படி ஆல்பங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். பிரம்பு ஸ்டூல் (மோடா!), பட்டை பட்டையான பிளாஸ்டிக் பட்டையால் பின்னப்பட்ட நாற்காலிகள், பாக்கெட் ரேடியோ, ஹெட்போன் உடனான வாக்மேன் என எத்தனையோ பொருட்கள் இங்கே பிரபலமாக இருந்து, அவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு சென்று தமிழகத்தில் கொடுத்திருக்கிறேன்.



தலைநகரின் பழைய பகுதியான Bபல்லிமாரான் எனும் இடத்தில் பல கண்ணாடிக் கடைகள், வளையல் கடைகள் என உண்டு. இந்த இடம் குறித்து முன்னர் இங்கே ஒரு பதிவு கூட எழுதியிருக்கிறேன். அங்கே மொத்த விலைக்கு இந்தக் கண்ணாடிகளை வாங்கி, லக்ஷ்மி நாராயண் மந்திர் எனும் Bபிர்லா மந்திர் அருகே வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 100 ரூபாய்க்கு ஒன்று என்று Cooling Glass எனும் இந்தக் கண்ணாடிகளை விற்பனை செய்கிறார். காலையிலிருந்து ஒன்று கூட விற்க முடியவில்லை. மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை என வருத்தப்பட்டார். ஆனாலும் மழை நல்லா பெய்யணும்.... அப்ப தான் இந்த பூமி குளிரும் என்று சொன்னபோது எனக்குள் அவர் பிழைப்பு குறித்த எண்ணங்கள்...... தினம் தினம் தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்பட்டு Bபிர்லா மந்திர் அருகே வந்து விற்பனையைத் தொடங்கிவிடுகிறார்.  மாலை வரை அங்கேயும் இங்கேயும் நடந்து வியாபாரம்.  உட்கார்ந்து வியாபாரம் செய்யும் கடை இல்லை! Probable Customer ஆக இருக்கக்கூடும் என ஒவ்வொரு சுற்றுலாப் பயணியை நோக்கியும் ஓட வேண்டும்! பேரம் பேச வேண்டும்!  தினம் தினம் பத்து இருபது கண்ணாடியேனும் விற்றால் தான் கொஞ்சமேனும் பணம்/லாபம் சம்பாதிக்க முடியும். 


தான் தங்கியிருப்பது Bபல்லிமாரான் பகுதியில் தான் என்றும் கூட தகவல் சொன்னார். எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் வீட்டிலிருந்து புறப்படும்போதே கடைகளில் மொத்த விலைக்கு விதம் விதமான கண்ணாடிகளை வாங்கிக் கொண்டு வந்து இப்படி விற்பனை செய்ய வேண்டும். உத்திரப் பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இருப்பது தலைநகர் தில்லியில் தான். இந்தக் காலக் கட்டத்தில் பல வியாபாரங்கள், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித அனுபவங்கள் எனக் கடந்து தற்போது கண்ணாடி விற்பனையில் வந்து நிற்கிறார்.  குடும்பம் குறித்து எந்தத் தகவலும் சொல்லவில்லை என்பதால் நானாக எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.   பொதுவாக இந்த பழைய தில்லி பகுதியில் கண்ணாடிக் கடைகளும் வளையல் கடைகள் வைத்திருப்பது முஸ்லீம்கள் எனச் சொல்லி, தானும் ஒரு முஸ்லீம் தான் என்றார்.  அவர் எந்த மதமாக இருந்தால் எனக்கென்ன ஆகப் போகிறது. எந்த மதமாக இருந்தாலும் வயிறு ஒன்றுதானே.  உழைத்தால் தான் இன்றைய சோற்றுக்கு வழி கிடைக்கும்! 



ஒவ்வொரு கண்ணாடியாக பையிலிருந்து எடுத்து, துடைத்து, தன் சட்டைப்பகுதியில் வரிசையாக மாட்டிக்கொண்டு இருந்தார்.  கைகளில் வரிசையாக அடுக்கிக் கொண்டது, சட்டைப்பகுதியில் மாட்டிக்கொண்டது என கிட்டத்தட்ட முப்பது வகை கண்ணாடிகள் அவரிடம் காட்சிக்கு வைத்திருக்கிறார்.  யாரேனும் வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். ஒன்றிரண்டு பேர் விலை கேட்க, 100 ரூபாய் சொன்னவர் 70 ரூபாய்க்கு கூடத் தருவதற்கு தயார் ஆனார். ஆக ஒரு கண்ணாடிக்கு 20 ரூபாய் கிடைத்தால் கூட போதும் என்ற எண்ணமாக இருக்கலாம்.  மொத்த விலைக்கு வாங்கும்போது ஐம்பது ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகக் கிடைக்கலாம் என்பது எனது எண்ணம்.  ஆனாலும் நான் அங்கே நின்று கொண்டிருந்தவரை ஒரு கண்ணாடி கூட விற்பனை ஆகவில்லை...... வாழ்க்கை இவருக்கும் ஓடிக் கொண்டு இருக்கிறது......


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

19 ஆகஸ்ட் 2025


6 கருத்துகள்:

  1. ஆல்பம், வாக்மேன் போன்றவை வழக்கொழிந்து போனாலும் இன்றும் நான் ஒரு தரமான பாக்கெட் ரேடியோ வாங்க விருப்பம் கொண்டிருக்கிறேன். FM மற்றும் MW எடுப்பது போல..

    பதிலளிநீக்கு
  2. எப்புட்டி அம்மகு நிப்பட்டியே கதி என்றில்லாமல் இவர் அவ்வப்போது சீசனுக்குத் தகுந்தவாறு அல்லது ட்ரெண்டிங் பார்த்து தன் வியாபாரத்தை மாற்றி பார்க்கலாம் என்பது என் எண்ணம். 

    நீங்களே மரத்தடியில் போட்டிருக்கும் எளிமையான டீ ஸ்டால் பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. கால வெள்ளத்தில் பல தொழில்கள் புற்றீசல் போல வந்து பிறகு அழிந்துவிடுகிறது.

    நேரத்துக்கேற்ற புதிய வேலைதான். சமீபத்தில் ஹரித்துவாரில் பஞ்சாபி ஒருவர் அழகிய கருப்பு கண்ணாடிகளை நூறு ரூபாய்க்கு விற்றது நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  4. அந்த உழைப்பாளி இப்போது பென் ட்ரைவ் விற்கலாம் ஒரு வேளை அதற்கான முதல் கூடுதலோ? அல்லது இப்போது பென் ட்ரைவும் out dated?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இப்படியான நடை பாதை வியாபாரிகளின் பிழைப்பு ரொம்பக்கடினம் பாவமாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. படங்களைப் பார்த்து வாசிக்கத் தொடங்கியதுமே எனக்கு நினைவுக்கு வந்தது பிர்லா மந்திர் பகுதியில் விற்கப்படும் கண்ணாடிகள்தான். பதிவிலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    என் மகளும் அங்கு ஒரு கண்ணாடி வாங்கினாள்.

    எனவே இப்பதிவு என்னோடு தொடர்புடைய நினைவுகளுக்கும் கொண்டு சென்றது என்றுதான்சொல்ல வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....