அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Verdant சத்சங்கம் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
விஜி வெங்கடேஷ் அவர்கள் தங்கியிருக்கும் வளாகத்தில் அவ்வப்போது சத்சங்க நிகழ்வுகள் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அந்த நிகழ்வுகளில் விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய, பகிர்ந்து கொண்ட விஷயங்களை நேற்றும் பகிர்ந்து இருந்தேன். அதன் தொடர்ச்சியாக சத்சங்க நிகழ்வுகளில் வாசித்தவை இன்றைக்கு இங்கே உங்கள் பார்வைக்கு. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே! ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
Verdant சத்சங்கம் - 12.06.2025
குருவாயூருக்கு அழைத்து குட்டிக் கிருஷ்ணன் சிரித்ததை சத்சங்கம்
காண்பித்தது...
மேகவர்ணம், பவள செவ்வாய், சுருண்ட கேசம்,தாமரை நயனங்கள் கள்ளச் சிரிப்பு கண்முன் விரிந்தன..
விதவா குருரம்மாள் துயர் தீர்க்க உன்னியாக அவள் மகனாக துணை நின்ற கிருஷ்ண லீலை மனதை மயக்கியது...
பக்தை மஞ்சுளாவின் மரத்தில் அணிவித்த மலர் மாலை கிருஷ்ணன் சங்குக் கழுத்தை அலங்கரித்தது...
கிழவியின் கிருஷ்ணா எனும் கூவலுடன் சாணித்துகள் அவன் செவிநுனியில் தஞ்சமடைந்தது....
நான்கு கும்பகோணம் கோவில்களில் மனது தரிசனம் கண்டது....
தமிழக பிரம்மாண்ட கோவில்களின் கட்டுமானம் பிரமிப்பை வரவழைத்தது...
நடனமங்கை வெள்ளையம்மாள் ஶ்ரீரங்கனின் பொக்கிஷத்தைக் காப்பாற்ற சுல்தான் உயிர் போக்கியதும்,
தன் உயிரையும் நீத்து தியாகத்தில் சிறந்ததும்,
கோவிலின் கிழக்கு வெள்ளை கோபுரமாக உயர்ந்து நின்றதும்
மனதை நெகிழ்த்தியது...
அதுவரை பக்தியில் தோய்ந்த மனது விமான விபத்தை அசைபோட மனது பாரமாக கண்கள் குளமானது..,
முகம் தெரியாத பலரின் ஆன்மா சாந்தியடைய சோகத்தில் தோய்ந்த உள்ளங்கள் கைகூப்பி பிரார்த்தித்தன....
கர்மா எனச் சொல்வதா? காலத்தின் கொடுமை எனச் சொல்வதா?
கனியும் காயும் பிஞ்சும் மலருமாய் கருகி உதிர்ந்தனவே...
நின்று பேசும் கடவுள் தள்ளி நின்றதென்ன?
வேடிக்கை பார்த்துவிட்டு விலகிச் சென்றதென்ன?
பதிலில்லாத கேள்விகள் மனதைக் குடைய, வேதனையுடன் அமைதியாய் சங்கம் கலைந்தது....
*******
Verdant சத்சங்கம் - 10.07.2025:
இன்று குரு பூர்ணிமா தினம்;
ஆரம்பம் பாடலோடு குரு வந்தனம்;
சேஷாத்ரி மகான்,மகாபெரியவா பாடல்கள் ஒலித்தன;
அவை மனதினுள் ஆழச் சென்று அமர்ந்தன;
புனிதவதி காரைக்கால் அம்மையார் ஆனது தெரிந்தது;
கைலாயத்தில் தன் கால் படக் கூடாதென்று கையால் நடந்தது பக்தியின் உச்சம்;
அதனால் சிவனுக்கே தாயானாள்,
அவனைப் பணிவோர்க்கு ஏது அச்சம்?
மாங்கனி விழாவின் காரணம் கிடைத்தது;
அக்கனிகள் அலங்கரிக்கும் ஈஸ்வரன் அருள் கிடைத்தது;
அபிராமி தன் பிஞ்சு விரல்களில் மருதாணி இட்டிருக்க;
அதைக் காட்டி அவள் சிரிக்க,
அவ்வழகில் மயங்கி நாம் திளைக்க,
கை பிடித்து 30 பாடல்கள் அவள் அழைத்துச் செல்ல,
கூடவே நடந்து மனம் நிறைந்தது மெல்ல..
சபரியின் ராம பக்தி அடடா மிக ஜாஸ்தி!
பத்ரியில் (இலந்தைப்பழம்) லக்ஷ்மி வாசம் செய்வது செய்தி;
அதை அவள் ராமன் கையில் ஈந்தது உசத்தி;
அதனால் அவளுக்கு கிடைத்தது முக்தி;
அருணாசல பிரதேசத்தில் மகாதேவர் ஆலயம் உண்டு;
அதில் 12 ஆண்டுக்கு ஒருமுறை லிங்கத்தை மின்னல் தாக்குவதுண்டு;
உடைந்த லிங்கம் சேருவது விந்தையல்லவா;
அம்மகாதேவன் உலகத்துக்கே தந்தையல்லவா!
ஜகத்குரு கிருஷ்ணனின் வாய்மொழியாம் கீதை
அதில் ஒரு ஸ்லோகம் படித்தே, நாம்
பெற்றது நிறை;
குரு பூர்ணிமா என்பதால் குழு புகைப்படத்துடன் கலைந்தது சங்கம்;
மனதில் திருப்தி வகித்தது அங்கம்;
குருவே சரணம்🙏🏻
******
Verdant சத்சங்கம் - 24.07.2025:
போலாநாத்தைக் கூவி அழைக்க பக்திமணம் கமழ்ந்தது;
எண்ணிக்கை கூடிட சபையும் நிறைந்தது;
ஆன்மாவின் இருப்பு, அதன் அழியாத்தன்மை;
அதில் பரமாத்மா ஜீவாத்மாவெனும் இரு தன்மை;
கீதையைத் தெளிவாய் பொருளுடன் வாசிக்க;
அதன் அர்த்தத்தில் ஆழ்ந்து நாம் யோசிக்க;
இந்நல் விஷயங்களை மனம் மேலும் நேசிக்க;
பரம்பொருளிடம் உள்ளம் அதையே யாசித்தது...
கன்னியாகுமரியின் பேரழகு கண்முன் விரிந்திட;
சிவன்பால் அவளுக்குக் காதல் பிறந்திட;
நாரதர் கலகத்தால் கல்யாணம் நின்றிட;
அவள் கோபத்தால் நெல்மணிகள் சிதறிட;
பாணாசுரன் வந்து அவள் கரம் பற்றிட;
அவன் சிரத்தை அவள் கொய்திட;
பின் சாந்தமாகி நின்று நமக்கு அருளிட;
தெய்வ தரிசனம் யாம் பெற்றிட்டோம்;
பட்டுப் பாவாடை சரசரக்க, கிளுக் எனச் சிரித்தே மயக்கி
அபிராமி 35 பாடல் வரை அழைத்துச் சென்றாள்;
ஹாசனம்பாள் கோவிலின் அற்புதங்கள் பேசப்பட;
ஆச்சர்யத்தால் நம் விழிகள் விரிவடைந்தன;
சிம்மத்தின் மேல் ஒரு கிழச்சிம்மமாய் நவாப் சபையில் நுழைந்து;
பார்த்த சபையோரை பயத்தால் அலரவைத்து;
சகலகலாவல்லி மாலை எனும் கவிதையைப் புனைந்து;
அதனால் சகல மொழிகளையும் கைவரப் பெற்று;
அரபியில் பேசி அவனை அசத்தி;
காசி கோவிலை திறக்கச் செய்து;
கங்கைக் கரையில் ஓர் மடமும் அமைத்த;
குமரகுருபரர் கதை சிலிர்ப்பூட்டியது;
கேட்ட, பகிர்ந்த நற்செய்திகளால் மனம் நிறைந்திருக்க;
சபை மெல்லக் கலைந்தது....
******
இன்றைய பதிவு உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
7 ஆகஸ்ட் 2025
மனதில் நிறையும் இறையின் எண்ணம்
பதிலளிநீக்குமனதை ,முழுதும் சுத்தமாக்கும் என்பது திண்ணம்.
நன்றிகள்.கவிதையாகவே பதிலிறுத்தது அழகு.
பதிலளிநீக்குவிஜி.
கவிதைகள் அருமை. அழகாக எழுதறீங்க.
பதிலளிநீக்குஅபிராமி அந்தாதி நன்றாக இருக்கும்.
//ஹாசனம்பாள் கோவிலின் அற்புதங்கள் பேசப்பட;//
புதியது. ஹாசனம்பாள் பெயரே மனதைக் கவர்கிறது
கீதா
நன்றி கீதா mam.எனக்கும் ஹாசனாம்பாள் செய்தி புதிதுதான்.சேலம் ருக்மிணி அம்மாள் சொன்னது.ஒரு post இலும் படித்தேன்.எத்தனை அற்புதங்கள் நம் மதத்தில் கோவில்களில்!
நீக்குவிஜி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குசத்சங்க பகிர்வுகளும், படங்களும் மிக அருமை.
சத்சங்கத்தில் கேட்டதை கவிதையாக பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
நன்றிகள்.
நீக்குவிஜி