சனி, 23 ஆகஸ்ட், 2025

ஆடிமாத அம்பாள் தரிசனம், சாரதாம்பாள் கோவில், கோவை - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பஞ்ச நாராயண கோட்டம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்கள் சமீபத்தில் சென்றுவந்த ஆலயம் குறித்தும், அங்கே கிடைத்த அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


ஆடிமாத அம்பாள் தரிசனம் - சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ், கோவை - 14 ஆகஸ்ட் 2025





ஏதாவது ஒரு அம்பாள் கோவிலுக்கு இந்த ஆடி மாசம் போகணும் என்று முடிவாயிற்று. வெள்ளிக்கிழமை போனால் கூட்டம் அம்மும், அதனால் வியாழக்கிழமை போகலாம், racecourse சாரதாம்பாள் கோவிலுக்கு போவது என்று தீர்மானித்தோம். ஒன்பது பேர் சேர்ந்தோம். 14th அன்று காலை 10 க்கு மூன்று கால் டாக்ஸி வைத்துக் கொண்டு அங்கு போய் சேர்ந்தோம்.


மிக மிக அமைதியான சூழலில் ஒரு மிக அமைதியான அழகான கோவில். taxi-யிலிருந்து இறங்கியவுடனே  அங்கிருந்தே தேவியை தரிசனம் செய்ய முடியும் அமைப்பு. இந்தக் கோவில் சிருங்கேரி சாரதா பீடத்தின் கிளை. 


உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் சுவற்றில் சாராத பீடத்தின் அனைத்து ஆச்சாரியர்களின் படங்கள்.அதற்குக் கீழே ஆதிசங்கரர் சிலை.சற்று அருகே ஆதிசங்கர் சன்னதி. 32 வயதிற்குள் பாரதம் முழுவதும் மூன்று முறை கால்நடையாக பயணித்து அத்வைத தத்துவத்தை நிலைநாட்டி ஷண்மதங்களை  ஸ்தாபித்து அனைத்து தெய்வத்தின் மீதும் பல நூறு ஸ்லோகங்கள், பாஷ்யங்கள் இயற்றி பிற மதத்தினரை வாதில் வென்று பாரதத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு பீடங்களை நிறுவி அதில் தம் பிரதம சிஷ்யர்களை பீடாதிபதியாய் அமர்த்தி பின் காஞ்சிபுரம் வந்து மூலம்நாய பீடம் அமைத்து காமாக்ஷி கோவிலில் மேருவில் அவள் சக்தியை அடக்கி இறுதியில் அவளுடனேயே கலந்த அந்த ஆதிசங்கரர் மிக அமைதியான, சாந்தமான முகத்தோடு அருள் பாலிக்கிறார். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர என்று ஜபித்துக்கொண்டே சன்னதியை மூன்று முறை வலம் வந்தோம்.


எதிரே முதலில் விநாயகர் சன்னதி, கணபதி (b)பப்பா சற்று மதுரை கற்பக விநாயகர் போன்ற தோற்றம் (தும்பிக்கை). பளபளப்பான கருநிற சிலா உருவத்தில் பளீரென மின்னும் விபூதிக்கற்றை. தும்பிக்கையில் வெள்ளிக் காப்பு. அமர்க்களமாக கொழு கொழுவென்று அமர்ந்து கொண்டு காட்சி கொடுத்து அருள்கிறது. கொள்ளை அழகு. அவரை வணங்கிவிட்டு நகர்ந்தோம்.


அடுத்தது சாரதாம்பாள் சன்னதி.


பார்த்தவுடன் ஈர்த்தது அவள் அணிந்திருந்த தங்கக்கவசம். தக தகவென மின்னிக்கொண்டிருந்தாள். அருள் சொரியும் முகத்தில் இப்பிரபஞ்சத்தை அடக்கி ஆளும்அபூர்வ அற்புதப் புன்னகை. அழகான தாமரைப்பூ நிறத்தில் புடவை விசிறிபோல் பாதங்கள் மேல் விரிந்திருந்தது. அவள் முன்னே மேரு.அர்ச்சனை அதற்குத்தான். அவள் சன்னதி கதவுகள்கூட தங்கக் கவசமணிந்திருந்தன. அதில் புடைப்பு சிற்பங்களாக அஷ்ட லட்சுமிகள்.


அதற்கு அடுத்து தெய்வ நாயக விசாகன் முருகன் சன்னதி. அன்று சஷ்டியாக இருந்ததால் வரிசையாக அர்ச்சனை, பூஜை போன்றவற்றை ஏற்றுக் கொண்டு இரு கரங்களில் வேலும் சேவர்கொடியும் ஏந்தி அழகும், அருளும் சிந்த மந்திரப் புன்னகை புரிந்து அனைவரையும் ஆண்டு கொண்டிருந்தான். அவன் அழகில் சொக்கிப்போய் அவனைவிட்டு வர மனமில்லாமல் நின்று கொண்டிருந்தோம்.


பிரதக்ஷணம் செய்துவிட்டு வரும்போது வலது புறத்தில் ஒரு ஹால்.அதை ஒட்டி வேத பாடசாலை. இரு சிறு பாலகர்கள் முகத்தில் தேஜஸ் மிளிர பாடங்கள் ஒதிக்கொண்டிருந்தனர்.  


Counter இல் போய் அம்பாளுக்கு சாத்தின புடவைகள் ஏலம் விடுவதுண்டா என்று வினவினோம். இல்லையாம். அனைத்தும் சிருங்கேரி போய்விடுமாம்.


ஆடிமாதம் என்பதால் சன்னதி முன்னே கண்ணாடி வளையல்களின் தோரணம். கோவில் விதானம், கோவில் முன்புறம் எல்லாவிடத்திலும் வித விதமான ஜொலிக்கும் கண்ணாடி வளையல்களின் அணிவகுப்பு, தோரணம். அதில் மிளிர்ந்த ஒழுங்கு, நேர்த்தி, அழகுமிக அருமை. ஏனோ தானோவென தொங்கவிடப்படவில்லை. ஒரு தோரணம் முழுதும் ஒரே கலர் வளையல்கள். அது போல் பல நிறங்களில் வரிசையாக தோரணங்கள். இரு புறமும் பூ வேலைப்பாடு செய்து (chandelier போல்) அதைத் தொங்க விட்டு அதன் ஊடே சிறு அளவில் multi கலர் வளையல்கள். காணக் காண உற்சாகம், ஆனந்தம்.


கோவிலெங்கும் சுத்தமும், அழகுணர்வும், செழிப்பும்  தாண்டவமாடின👌🏻👌🏻👌🏻


வெளிப் பிராகாரத்தில் ஒரு நீல பிளாஸ்டிக் கூடையில் அம்பாளுக்கு அணிவித்த கண்ணாடி வளையல்கள் பல size, design நிறங்களில் இருந்தன. சுற்றிலும் நான்கு பேர் நின்று கொண்டு size பார்த்து பொறுக்கி எடுத்து, மன்னிக்க… தேர்ந்து எடுத்து அங்கேயே போட்டுக் கொண்டும் விட்டோம்.இதில் ஆண்களும் தலையை கிட்டத்தட்ட உள்ளே விட்டு கையால் அவற்றை அளைந்து எடுத்துக் கொண்டிருந்தனர். குட்டி குட்டி வளையல்களை ஒருவர் கை விரல் முழுதும் மாட்டிக் கொண்டிருந்தார் (பேத்திக்கு போலிருக்கிறது!).


மறுபடி சாரதா தேவியைப் பார்த்து நமஸ்கரித்துவிட்டு அங்கிருந்து குஜராத்தி சமாஜ் நோக்கிப் பயணம். எதற்கு?


தெய்வ வடிவங்களை கண்களால் பருகியபின், ஆயாசம் தீர சற்று வயிற்றுக்கு நியாயம் செய்யத்தான்.


அது unlimited குஜராத்தி & வட இந்திய உணவுக்கு பிரபலம். குஜராத்தி தாலி ஒன்று 160/- தான். நாங்கள் அதைத்தான் ஆர்டர் செய்தோம். முதலில் exhibition இல் கிடைக்கும் ராக்ஷஸ size பாபட் மேலே மசாலா தூவியது order செய்து பாகப் பிரிவினை செய்து உண்டோம்.பின்னர் தாலி அதான் தட்டு வந்தது. ஆனாலும் அநியாயத்துக்கு மிருதுவான phulka சப்பாத்தி போடுகிறார்கள் (நான் செய்வது சில சமயம் தோசைக் கல்லா சப்பாத்தியா என்று வித்யாசம் தெரிவதில்லை😳) அதனால் அதை ஒரு கை பார்த்தோம். எண்ணிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை😊. எண்ணாமல் துணிவது கருமம்… வடகம் super. சைட் dishes ok. மோர் சப்பென்று அருமை. சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் கறி cum ஊறுகாய் ஓஹோ. அதை உள்ளே வைத்தே  முழுங்கலாம்.பின் விளைவுகளைப் பற்றி அப்போது கவலைப் படவில்லை. sweet சாப்பிடாமல் உணவை முடிப்பது தவறு என்று ரஸ்மலாய் order செய்து சாப்பிட்டோம்.


வெளியில் சற்று மெதுவாக நடந்து வந்து (வயிற்று பாரம் என்று சொல்லித்தான்  தெரிய வேண்டுமென்பதில்லை🙂..) குரூப் photo எடுத்துக் கொண்டு வீடு நோக்கிப் பயணம். மனமெங்கும் நீக்கமற சாரதாம்பாளின் புன்னகையும், அக்கோவிலின் சாந்நித்யமும் செழிப்பும் அமைதியும் நிரம்பியிருந்தன...


எங்களையெல்லாம் ஒன்று சேர்த்து எந்த நாள் எந்தக் கோவில் என்று சரியாகத் தேர்ந்தெடுத்து அழகாக Organize செய்து கூட்டிப் போய் வரும் ஜெயஶ்ரீக்கு ஒரு தனி பாராட்டும் நன்றியும், ஆசிகளும்👍🏻வாழ்க வளமுடன்🙌🏻🙌🏻


மேலதிகத் தகவல்:  என் சாரதாம்பாள் கோவில் விசிட்(14.8.25) பற்றிய கட்டுரை படித்த உறவினர் ஒருவர் எழுதிய (எனக்குப் புதிய) தகவல். சுவாரசியமாக இருக்கிறது. அதனால் உங்களுடன் பகிர்கிறேன்👇🏻


இந்த சராதம்பிக்கை கோவிலில்  மாத்திரம் ஒரு விஷேசம் என்னவென்றால்  மற்ற எல்லா சாரதாம்பிக்கை கோவில்களில் எல்லாம் மூன்றே சன்னதி இருக்கும். இடது பக்கம் பிள்ளையார், நடுவில் சாரதாம்பிக்கை, வலது பக்கம் சங்கரர். இது தான் உலகம் பூராவும் உள்ள சாராதம்பிக்கை கோவில்களில் உள்ள விதிமுறை. ஆனால் கோவை மாத்திரம் விதிவிலக்கு. எனக்குக் கன்னடம் தெரியும் ஆதலால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன், உன்னுடன் பகிர்கிறேன். அந்த கோவிலுக்கு இடம் கொடுத்து கட்டியவர் பெரிய முருக பக்தர். சிங்கேரி மடத்தின் அப்ரூவல் இல்லாமலே கோவிலை கட்டிவிட்டார். பிள்ளையார், சாராதம்பிக்கை, முருகன் சன்னதி என்று கட்டியபிறகு வருஷகணக்கில் காத்திருக்க வேண்டிஇருந்தது.கடைசியில் சங்கரர் சன்னதி தனியாக கட்டப்பட்டது. அதற்கு பிறகு தான் கோவில் திறக்க பட்டது. - மணி,சென்னை.


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

23 ஆகஸ்ட் 2025


2 கருத்துகள்:

  1. உங்களுதவியால் சாரதாம்பிகை தரிசனம் மானஸீகமாகப் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
  2. Race course சாலையில் இருக்கும் கோவில்தானே? கோயம்புத்தூரில் இருக்கும் போது போயிருக்கிறேன். அழகான அமைதியான கோவில். அம்பாள் அழகு. பார்க்கும் போதே ஈர்த்துவிடும் நம் கண்களையும் மனதையும்.

    சென்னையிலும் கூட ஆர்காடு ரோடில், கோடம்பாக்கத்தில், மீனாட்சி கல்லூரிக்கு அடுத்தாப்ல சேகர் எம்போரியத்துக்கு எதித்தாப்ல, கோடம்பாக்கம் பாலம் இறங்கும் இடத்தில் சாரதாம்பாள் கோவில் இருக்கு. அழகான அம்பாள். ரொம்ப அமைதியான கோவிலும் கூட.

    கோயம்புத்தூர் கோவிலைப் பற்றிய புதிய தகவலுடன், உங்கள் விவரணமும் நன்று

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....