அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது இ.ஜே. சுந்தர் என்பவர் எழுதிய காஷ்மீர் - கண்டதும் காணாததும் என்கிற பயண நூல் குறித்து தான். பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதை என்னை அறிந்தவர்கள் அனைவருமே தெரிந்து வைத்திருக்கலாம். அது தான் தொடர்ந்து பயணிப்பதும் அது குறித்து எழுதுவதும் என இத்தனை காலங்கள் இங்கே சொல்லிக் கொண்டே இருக்கிறேனே. அமேசான் கிண்டில் தளத்தில் அடுத்து என்ன படிக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தபோது எனக்குக் கிடைத்த ஒரு மின்னூல் தான் இந்த மின்னூல். இதற்கு முன்னர் நூலாசிரியர் பேராசியர் சுந்தர் அவர்களை நான் அறிந்திலேன். அவரது எழுத்துக்களையும் நான் வாசித்ததில்லை. பயணக் கட்டுரை என்பதாலேயே அவரது மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கினேன்.
வாசிக்க வாசிக்க அவர் இந்த நூலில் சொல்ல வரும் விஷயங்கள் பயணம் சார்ந்த விஷயங்கள் மட்டுமன்று, காஷ்மீர் குறித்த அரசியல் விளையாட்டுக்கள், அங்கே உள்ள மக்களின் குரல்கள் என பல விஷயங்களை மின்னூலில் வாசிக்கும் நமக்குத் தந்திருக்கிறார். நூலைக் குறித்த விவரங்களை எழுதிய பக்கத்தில் “காஷ்மீர் பற்றிய வரலாற்று, சமூக, பயண நூல்” என்றே குறிப்பிட்டு இருக்கிறார். 2011-ஆம் ஆண்டு இவரது பயணக் கட்டுரைகள் தொடர்ந்து பத்து மாதங்கள் ஒரு தொடராக “தங்கம்” என்கிற இதழில் வெளிவந்த கட்டுரைகள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. 2020-ஆம் ஆண்டு எழில் நிலா வெளியீட்டகம் மூலம் வெளியிட்டதோடு, அமேசான் கிண்டில் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார். விலை 100/- மட்டும். அமேசான் கிண்டில் Unlimited Subscriber ஆக இருந்தால் விலையில்லாமல் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் - என்னைப் போல!
காஷ்மீருக்கும் மூன்று என்கிற எண்ணுக்கும் இருக்கும் தொடர்பினையும் ஒவ்வொரு பகுதியிலும் விளக்கி இருக்கிறார். அவரும் அவரது இல்லத்தரசியும் பயணித்தபோது பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்களுடன் காஷ்மீர் குறித்து அவர் படித்த, அவர் அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயங்கள், அங்கே உள்ள மக்களிடம் பேசியதில் கிடைத்த தகவல்கள் மற்றும் பா. ராகவன் அவர்களின் மின்னூல் ஒன்றையும் படித்ததில் கிடைத்த தகவல்கள் என கலந்துகட்டி நமக்கு வாசிக்கத் தந்திருக்கிறார். எனது அலுவலகம் சம்பந்தமாக ஒரே ஒரு முறை காஷ்மீர் பகுதிக்குச் சென்றிருந்தாலும், அங்கே சுற்றிப் பார்த்ததில்லை. ஜம்மு பகுதிக்கு சில முறைகள் சென்றதுண்டு - மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்திற்குச் சென்று வந்த அனுபவங்களையும் எனது பக்கத்தில் வெளியிட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். காஷ்மீர், லடாக் போன்ற இடங்களுக்குச் சென்று வர வேண்டும் என்கிற எண்ணம், எண்ணமாக மட்டுமே இதுவரை இருக்கிறது!
பயண நூலின் ஆரம்பத்தில் நூலாசிரியர் சொல்லிய விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது - அது…
“பள்ளி நாள்களில் கண்கவர் காலண்டர் படங்களின் வழியே மனதில் புகுந்து கனவுகளை உருவாக்கிய இடம் காஷ்மீர். நண்பர் கலைக்கோவனுடன் இணைந்து செல்விக் கலைமன்றம் நடத்திய நாள்களில் அந்தக் கனவை நனவாக்க முயன்று தோற்றேன். கை நழுவியதால் கைகழுவிவிடப்பட்ட கனவு எதிர்பாராமல் ஒரு நாள் நனவானது. என்று நினைத்தாலும் மனதில் மெல்லிய குளிர் வீசும் காஷ்மீர் பயண அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாததாயிற்று.” நூலாசிரியருக்கு கிடைத்த வாய்ப்பு போலவே எனக்கும் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையுடன் தொடர்ந்து நூலை வாசித்தேன். அவர் பார்த்த இடங்களான ஸ்ரீநகர், பெஹல்ஹாம், குல்மார்க், யுஸ்மார்க், அழகான பூங்காக்கள், ஷிகாரா எனப்படும் படகு வீடுகளில் தங்கிய அனுபவங்கள் என ஒவ்வொரு பகுதியிலும் அவர் விவரிக்கும் போது நாமும் அங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும்.
காஷ்மீர் குறித்த சில வரலாற்று விஷயங்களைப் படிக்கும்போது பல விஷயங்கள் அரசியல் சம்பந்தமானவை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீர் எனும் சொர்க்கபுரி எப்படியெல்லாம் மனிதர்களின் ஆசைகளால் அழிந்தது என்பதையும் நம்மால் உணர முடியும். ஆசிரியரின் எண்ணங்களை அவர் பகிர்ந்து இருப்பதை அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை எனிலும் பல விஷயங்கள் அங்கேயிருந்து வெளியே இருக்கும் நம்மைப் போன்றவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று என்பதை மட்டும் சொல்லலாம். அவர் பயணித்த 2011-க்கும் தற்போதைய 2026-இன் சூழலுக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கலாம். நேரடியாக அங்கே சென்று பார்க்காமல் இணைய வழியில் கிடைக்கும் தகவல்களை வைத்து மட்டுமே நாம் எதையும் முடிவு செய்துவிடமுடியாது என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.
இந்த மின்னூல் வழி காஷ்மீர் குறித்த நூலாசிரியரின் பார்வையும், அங்கே அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் தெரிந்து கொள்வதோடு, அவர் மின்னூலில் பகிர்ந்து இருக்கும் படங்கள் வழி அங்கே அவர்களுக்குக் கிடைத்த காட்சிகளை நாமும் பார்க்க முடியும் என்பதும் ஒரு வித சிறப்பு. காஷ்மீர் என்று இங்கே நாம் சொன்னாலும், வடக்கில் கஷ்மீர் என்றே அழைப்பது வழக்கம். அதையும் நூலில் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். எப்படி வட இந்தியர்கள் தென்னிந்திய பெயர்களை படிக்கும் போது தவறாக படிக்கிறார்களோ, அதே போல நாமும் வட இந்திய பெயர்களை ஆங்கிலத்தில் படிக்கும்போது பல வார்த்தைகளை தவறாகவே உச்சரிக்கிறோம். தில்லி சென்ற புதிதில் இப்படி பல வார்த்தைகள் நாம் தவறாக உச்சரிப்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படியே தான் இந்த கஷ்மீர் ஐ - காஷ்மீர் என்று நாம் உச்சரிப்பதும்.
நூலில் அவர் விவரிக்கும் ஒரு காட்சி - “பகல்காமின் (பெஹல்ஹாம்) அழகை விட, ஸ்ரீநகரிலிருந்து பகல்காமிற்கு வரும் வழியெங்கும் கண்ட காட்சிகளே எங்களை மிகவும் ஈர்த்தன. குங்குமப்பூ வயல்களில் வயலட் நிற குங்குமப்பூக்கள் மலரக் காத்திருந்தன. வயல்களையொட்டிய சிற்றூரின் நெடுஞ்சாலைக் கடைகளுக்கு எங்கள் வண்டி ஓட்டுநர் அழைத்துச் சென்றார். அங்கு விளையும் அசல் குங்குமப்பூக்களைப் பதப்படுத்தி, நகரத்துக் கடைகளை விட மலிவாக விற்கிறார்கள். அங்கு விளையும் பாதாம், வால்நட் பருப்புகளையும் அக்கடைகளில் குறைந்த விலையில் வாங்க முடிகிறது.” இது போன்ற விவரிப்புகள் நிச்சயம் அங்கே சென்று குங்குமப்பூ வயல்களை நாம் பார்க்க ஆர்வத்தினைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. முதன்முதலாக மஞ்சள் போர்வை விரித்து வைத்தார்போல கடுகுச் செடிகளின் மஞ்சள் வண்ண பூக்களைப் பார்த்தபோது எனக்குத் தோன்றிய எண்ணங்கள், அந்த நினைவுகள் இன்றைக்கும் மறக்க முடியவில்லை.
காஷ்மீர் குறித்த பல தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த நூலை அவசியம் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். வாசித்துப் பாருங்களேன் நண்பர்களே.
பதிவினை வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
26 ஜனவரி 2026




வாசகம் சூப்பர். அதுதானே வாழ்க்கை! எல்லாவற்றையும் சமநிலையில் எடுத்துக் கொண்டும் போக வேண்டும்...அதுதான் மிகப் பெரிய கலை.
பதிலளிநீக்குஎனக்கும் என் மாமா ஒருவர், தினமும் மிக நல்ல வாழ்வியல் கருத்துகளுடன் காலைவணக்கம் போடுவார். அதில் சிலவற்றைக் குறித்தும் கொண்டுள்ளேன்.
புதிய எழுத்தாளர். காஷ்மீர் என்றாலே போக வேண்டும் பார்க்க வேண்டும், இந்தியா பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும். அங்கிருக்கும் கிராமங்கள் எப்படி இருக்கும் என்று எல்லாம் எண்ணி போக முடியாதே என்று நெட்டில் பார்ப்பதுண்டு.
கீதா
காஷ்மீர் குறித்த அரசியல் விளையாட்டுக்கள், அங்கே உள்ள மக்களின் குரல்கள் என பல விஷயங்களை மின்னூலில் வாசிக்கும் நமக்குத் தந்திருக்கிறார். //
பதிலளிநீக்குஎனக்கும் இது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. அத்தனை அழகான பூமி இயற்கையிலும் ஆன்மீகத்திலும் கூட. அப்படிப்பட்ட பூமி எப்போதும் ஒரு பதற்றத்தில் இருப்பது மனதுக்கு வேதனையாகவே இருக்கும்.
ஆசிரியர் பரிச்சயமில்லை எனக்கும். இப்போது உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன்.
கீதா
குடியரசு தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அதற்கு ஏற்றதோ அதாவது காஷ்மீர் பகுதி தானே பிரச்சனைக்குள்ளான பகுதி இனியேனும் அது இல்லாமல் இருக்க வேண்டும்
கீதா
காஷ்மீர் ஒரு கனவுக்கன்னி. காஷ்மீர் ஒரு புதிர். நீங்கள் அங்கு சென்றபோது மனதில் லேசான பதட்டம் இருந்ததா என்று தெரிந்து கொள்ள ஆவல். உங்கள் எண்ணங்கள், விருப்பங்களுடன் புத்தகம் பற்றிய அறிமுகம் நன்றாயிருந்தது.
பதிலளிநீக்குஅந்த நீல எழுத்துகள் தான் என் மனதிலும் ஓடிக் கொண்டே இருக்கும்...கூடவே இமயமலைப் பகுதி பற்றி நீங்க ஒவ்வொரு முறை எழுதும் போதும் என் ஆசை விசிறிவிடப்படும்!
பதிலளிநீக்குஅதுவும் முதல் முறை பல பல வருடங்களுக்கு முன்னர் ஷிம்லா மணாலி சென்ற போதே இமயமலையில் கால் பதித்ததுமே மெய் மறந்து பேச்சற்று ஒருவித பரவச நிலையில் கண்ணில் நீர்த்துளிகள்....நான் அச்சமயம் பேசியது மிகவும் குறைவு. அத்தனை பிரமிப்பு. அது ஏதோ ஒரு வித சக்தி ஆட்கொள்வது போல இருந்தது. மகனிடம் காட்டி காட்டி நாங்கள் இருவரும் சிலாகித்து....அந்தப் பேச்சு மட்டுமே மற்றபடி அமைதிதான்...அதன் பின்னர் ஒரு முறை வாய்த்தது..... அப்படி கஷ்மீர் மனதில்...எப்பவும் உண்டு..
இப்ப பெஹல்ஹாம் என்றாலே சமீபத்திய நிகழ்வுதான் நினைவுக்கு வருது.
நண்பர் துளசியும் அவங்க குழுவும் அங்கு மாட்டிக் கொள்ள இருந்தவர்கள். டக்கென்று அவர்கள் பயணம் மணாலி. குலு என்று திரும்பியது கடைசி நேரத்தில். அங்கிருந்த போது பெஹல்ஹாம் நிகழ்வு. திரும்பும் போது பதற்றத்துடன் திரும்பினார்கள். அப்பயணம் பற்றி அவர் இன்னும் எழுதவில்லை. நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
கீதா
அங்கேயிருந்து வெளியே இருக்கும் நம்மைப் போன்றவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று என்பதை மட்டும் சொல்லலாம். அவர் பயணித்த 2011-க்கும் தற்போதைய 2026-இன் சூழலுக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கலாம். நேரடியாக அங்கே சென்று பார்க்காமல் இணைய வழியில் கிடைக்கும் தகவல்களை வைத்து மட்டுமே நாம் எதையும் முடிவு செய்துவிடமுடியாது என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். //
பதிலளிநீக்குடிட்டோ. ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமாக இருக்கும்தான்.
கஷ்மீர் பகுதி (ஆமாம் கஷ்மீர் ) பெஹல்ஹாம் போகும் வழி இப்போது எப்படி இருக்குமோ தெரியவில்லை. குருகிராமத்தில் இருக்கும் என் தங்கை பெஹல்ஹாம் போய்வந்திருக்கிறாள். அவளும் சொன்னாள். என் ஆசையைக் கிளறிக் கொண்டே!!!
வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...
நல்ல புத்தக அறிமுகம் ஜி
கீதா