செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பதிவர் சந்திப்பு – 2015 - மதுரைத் தமிழன் அளிக்கும் ஃபைவ் ஸ்டார் விருது



தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு முதல் இரண்டு வருடங்கள் சென்னையிலும் மூன்றாம் வருடம் மதுரையிலும் நடந்திருக்க, நான்காம் வருடமான இவ்வருடம் புதுக்கோட்டையில் நடைபெறப் போகிறது. விவரங்கள் கீழே:

நாள்: அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் [ஞாயிறு]
நேரம்: காலை 09-00 மணி முதல் மாலை 05-00 மணி வரை.
இடம்: ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், Be Well மருத்துவமனை எதிரில், ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை.

தமிழகத்தில் இருக்கும் பதிவர்களும், வெளியூர் பதிவர்களும் இப்பொழுதே புதுக்கோட்டை செல்ல ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வசதியாக முன்னரே அறிவித்திருக்கிறார்கள்.  சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் படிவம் வெளியிட்டு இருக்கிறார். கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் படிவத்தினை பூர்த்தி செய்யலாம்!

புத்தக வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள், விருதுகள் வழங்குதல் என பல சிறப்பான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.  விழாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015 எனும் நூலை தர இருக்கிறார்கள்.  வர முடியாத வலைப்பதிவர்களுக்கு மின் புத்தகமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதியும் தந்தால் நல்லது! விழா பற்றிய தகவல்கள் தொடர்ந்து புதுக்கோட்டை பதிவர்களின் தளங்களில் வெளியிடுவார்கள். 

சென்னையில் நடந்த இரண்டாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பதிவில் நான் எடுத்த பதிவர்களின் புகைப்படங்கள் எனது தளத்தில் உண்டு! பார்க்க விரும்புவர்களின் வசதிக்காக சுட்டிகள் கீழே:








கடந்த முறை மதுரையில் நடந்த மூன்றாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். இம்முறையும் கலந்து கொள்வது கடினம். அலுவலகத்தில் தணிக்கை ஆரம்பிக்க இருக்கிறது. ஆரம்பித்து விட்டால் விடுமுறை எடுப்பது கடினம். மேலும் இந்த மாதத்தின் இறுதியில் சில சொந்த வேலைகளுக்காக ஒரு வார விடுப்பில் திருச்சி வர முன்பதிவு செய்திருக்கிறேன். ஒரு மாதத்திற்குள் மீண்டும் விடுப்பு கிடைப்பது கடினம்! கடைசி நேரத்தில் வந்தாலும் வரலாம்!

Five Star Blogger Award



முன்னணி பதிவர்களில் ஒருவரான திரு மதுரைத் தமிழன் அவர்கள், தனது தளமான “அவர்கள் உண்மைகள்எனும் தளத்தின் மூலம் Five Star Blogger என சில பதிவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிமுகம் செய்ய இருக்கிறார். அவர் தொடர்ந்து படிக்கும் பதிவர்களை அறிமுகம் செய்து “Five Star Bloggerஎன்று தனது தளத்தில் அப்பதிவரின் வலைப்பூவிற்கான சுட்டியும் தரப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

முதல் Five Star Blogger-ஆக அவர் தேர்ந்தெடுத்திருப்பது என்னையும் எனது வலைப்பூவினையும்! என்று இங்கே சொல்லிவிடுகிறேன்! அவரது தளத்தில் இரண்டு வாரங்களுக்கு விருது பெறும் பதிவர்களின் வலைப்பூவிற்கான சுட்டி இருக்கும்.  இந்த இரண்டு வாரமாக எனது தளத்தின் சுட்டி இருக்கிறது. வரும் வாரத்தில் இந்த இடத்தில் வேறொரு பதிவரின் தளத்திற்கான சுட்டி இருக்கும்.

எனது தளம் பற்றி புகழ்ந்து எழுதி இருப்பது பார்த்து மனதில் நிறைந்த மகிழ்ச்சியும், ஒரு ஓரத்தில் கொஞ்சம் பயமும் வந்தது! தொடர்ந்து நல்ல பதிவுகளை தர வேண்டுமே என்ற பயம் தான்! முடிந்த வரை படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் தான் பதிவுகள் எழுதுகிறேன் என்றாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமே என்கிற பயம் தான்!

இது வரை 906 பதிவுகளும், கிட்டத்தட்ட 5 லட்சம் [4.83 லட்சம்] பக்கப் பார்வைகள் பெற்றிருந்தாலும் மேலும் மேலும் பதிவுகள் வெளியிடும் எண்ணம் குறையவில்லை.  அலுவலகத்தில் ஆணிகள் அதிகமென்பதால் ஒவ்வொரு நாளும் பதிவுகள் எழுதுவது கடினமாக இருக்கிறது.  முடிந்த போது பதிவுகள் வெளியிடுகிறேன்.

முதல் Five Star Blogger ஆக என்னைத் தேர்ந்தெடுத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வரும் வாரத்தில் அடுத்த Five Star Blogger-ஆக தேர்ந்தெடுக்கப் படும் நண்பருக்கு வாழ்த்துகள்! அது யார் என்பது மதுரைத் தமிழனுக்கே வெளிச்சம்!

விடை பெறுமுன்னர் உங்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக புதுக்கோட்டை பதிவர்கள் சந்திப்பிற்கு உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள திண்டுக்கல் தனபாலன் தளத்தின் சுட்டியை மீண்டும் ஒரு முறை இங்கே தருகிறேன்!


சகோ தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் தனது ஒவ்வொரு பதிவிலும் சொல்வதைச் சொல்லி பதிவினை முடிக்கலாம்!

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!



வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஃப்ரூட் சாலட் – 142 – குப்பை போடாதே! – Yummydrives.com – கண்ணகியின் தவறு!


இந்த வார செய்தி:

படம்:  இணையத்திலிருந்து....

திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் கண்ட இடங்களில் தூக்கி வீசும் குப்பைகளை மனநல நோயாளி ஒருவர் ஓடோடிச் சென்று எடுத்து குப்பை தொட்டியில் கொண்டு போடுகிறார். அவரைப் பார்த்து பயணிகளும் குப்பையை கீழே போடத் தயங்குவதால் வத்தல குண்டு பஸ் நிலையம் இப்போது சுத்தமாக காணப்படுகிறது.

வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகளை வத்தலகுண்டு பேரூராட்சி துப்பு ரவுத் தொழிலாளர்கள் தினமும் காலையில் மட்டும் அகற்றுவர். மற்ற நேரங்களில் குப்பைகள் குவிந்து காணப்படும்

இந்நிலையில் கடந்த 2 மாதங் களாக வத்தலகுண்டு பஸ் நிலை யம் குப்பை இன்றி சுத்தமாகக் காணப்படுகிறது. இதன் பின்னணி யில் ஒரு மனநோயாளி உள்ளார். காலை முதல் இரவு வரை பேரூராட்சி குப்பை வண்டியுடன் பஸ் நிலைய வளாகத்தில் சுற்றித் திரியும் இந்த மனநோயாளி பயணிகள் வீசும் குப்பைகளை ஓடிச்சென்று எடுத்து குப்பைத் தொட்டியில் கொண்டு போடுகிறார்.

கண்ட இடங்களில் கூச்சமில்லாமல் போடும் குப்பைகளை மன நலம் பாதித்த ஒருவர் எடுத்து அகற்றுவதைப் பார்த்து தற்போது பஸ் நிலைய கடைக்காரர்கள், பயணிகள், குப்பையை திறந்த வெளியில் வீசத் தயங்குகின்றனர். வத்தலகுண்டு பஸ் நிலையம் வரும் பயணிகள், அப்பகுதி மக்கள் ஒரு மன நோயாளியால் மனமாற்றம் அடைந்திருப்பது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

இதுகுறித்து பஸ் நிலைய கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர் பிச்சை கூறியதாவது:

தூய்மை இந்தியாதிட்டத்துக் காக ஒருமுறை பஸ்நிலையத்தில் சிலர் ஒருநாள் முழுவதும் இருந்து குப்பைகளை ஓடி ஓடி எடுத்தனர். அவர்களைப் பார்த்து மனநிலை பாதித்த இவர் பஸ் நிலையத்தில் ஒரு குப்பையை விடுவதில்லை.

டீக்கடை, ஹோட்டலில் யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டார். நாங்கள், கடைக்காரர்கள், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அவருக்கு உணவு வாங்கிக் கொடுப்போம். இன்று அவரால் எங்கள் ஊர் பஸ் நிலையம் சுத்தமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

     தி இந்து தமிழ் நாளிதழிலிருந்து.....


இந்த வார முகப்புத்தக இற்றை:

உங்களின் தினத்தினை நேற்றைய எச்சங்களுடன் தொடங்காதீர்கள். இன்றைய தினம் புத்தம் புதியது! ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம். எழுந்திருக்கும் ஒவ்வொரு காலையும், நமது புதிய வாழ்வின் முதல் நாள் என்ற உணர்வுடன் தொடங்கட்டும்!

இந்த வார குறுஞ்செய்தி:

யாருக்கேனும் கெடுதல் செய்ய வேண்டுமெனில் மட்டுமே உங்களுக்கு வானளாவிய அதிகாரம் [தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் சொன்னதோ!] தேவை.  இல்லையெனில் அன்பு கொண்டே பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும்!

இந்த வார புகைப்படம்:



ஆகஸ்டு மாத பிட் புகைப்படப் போட்டிக்கு தலைப்பாக ஊர்வனவும் ஈரூடக வாழ்வனவும் என்று கொடுத்து நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (Amphibian) படங்களை போட்டிக்கு அனுப்ப கேட்டிருக்கிறார்கள். போட்டிக்கு அனுப்புகிறேனோ இல்லையோ, நான் எடுத்த ஒரு Amphibian-ஆகிய முதலையின் படம் இங்கே! படம் எடுக்கப்பட்டது சென்னையின் முதலைப் பண்ணையில்! வாயைத்திறந்தபடி என்னவொரு அழகு! :)

இன்றைய வாழ்த்து:



கடல் பயணங்கள்தளத்தினில் எழுதும் நண்பர் சுரேஷ்குமார் அவர்கள் திரு கேபிள் சங்கர் மற்றும் கோவை ஜீவா அவர்களுடன் இணைந்து WWW.YUMMYDRIVES.COM எனும் புதிய தளத்தினை இன்றைக்கு அறிமுகம் செய்கிறார்கள்.  எந்த ஊரில் என்ன உணவு கிடைக்கும், அந்த ஊரில் என்ன சிறப்பான உணவு என பல தகவல்களை நமக்குத் தரப்போகும் இவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பூங்கொத்துகளும்!

இந்த வார காணொளி:

India Got Talent என்று ஒரு Reality Show, Colours Channel-ல் வந்து கொண்டிருந்த்து.   அதில் Prahlad Acharya எனும் நபர் நிழல்களின் மூலம் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களை பலரை நம் கண் முன்னே கொண்டு வந்தார்.  அந்த காணொளியை நீங்களும் பார்த்து ரசிக்க இதோ இங்கே.....




படித்ததில் பிடித்தது:



பேச வேண்டிய நேரத்தில்
பேசியிருந்தால்
கேட்க வேண்டிய நேரத்தில்
கேட்டிருந்தால்
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்லியிருந்தால்
கழுத்து நகையையும்
கால் நகையையும்
கழட்டியிருக்க வேண்டாமே
தவறு செய்தவள் நீ
தண்டனை மன்னனுக்கா?

-   சுமதி

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்




புதன், 12 ஆகஸ்ட், 2015

பொய் புன்னகை சிந்திய காரிகைகள்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 2

முந்தைய பகுதி [பகுதி-1]

படம்: இணையத்திலிருந்து.

பயணம் செய்ய வேண்டிய நாளும் வந்தது. தில்லி விமான நிலையத்தின் 1D Terminal வரை வாடகைக் காரில் பயணித்து அங்கிருந்து காலை 06.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானத்தில் பயணிக்க வேண்டும். எங்கள் இல்லத்திலிருந்து விடிகாலை நேரத்தில் இருபது நிமிடங்களிலேயே விமான நிலையம் சென்றுவிடலாம் என்றாலும், இரண்டு மணி நேரங்களுக்கு முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் 04.30 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டோம்.

விமான நிலையம் சென்று முதல் வாயிலில் எங்களது பயணச்சீட்டையும் அவரவரது அடையாள அட்டையைக் காண்பித்த பிறகு உள்ளே நுழைந்தோம். நேராக Indigo Counter சென்று பயணச்சீட்டையும் அடையாள அட்டைகளையும் காண்பித்து Boarding Pass வாங்க வேண்டும். அங்கே அமர்ந்திருந்த பெண்ணிடம்,  ஒரே வரிசையில் இருக்கைகள் கேட்க, அவர் மனமிரங்கி 13-D,E,F என்று சொல்லி புன்னகையுடன் கொடுத்தார்! Security Clearance-க்குண்டான வரிசை மிக நீளமாக இருக்க, கடைசியில் போய் நாங்களும் நின்று கொண்டோம்.

சமீப காலங்களில் விமானப் பயணத்தினை தேர்ந்தெடுக்கும் இந்தியப் பயணிகள் அதிகரித்து விட்டார்கள். பல சமயங்களில் ஏதோ பேருந்து நிலையத்திலோ/ரயில் நிலையத்திலோ இருக்கும் உணர்வு வந்துவிடுகிறது – அத்தனை மக்கள் கூட்டம் - உள்நாட்டு போக்குவரத்திற்கும் விமானங்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். தில்லி விமான நிலையத்தில் காலை/மாலை வேளைகளில் அத்தனை நீண்ட வரிசை – Security Clearance-க்காக நிற்பதைப் பார்க்கும்போது மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து இருப்பது தெரிகிறது.

விமானம் புறப்பட ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே இருக்கிறது. எங்களுக்கான நுழைவாயில் அருகே உள்ள இருக்கைகளில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க துவங்கினேன். இது தானே இருப்பதிலேயே மிகமிக அவசியமான வேலை!  அதிகாலை நேரமாக இருப்பினும், பலர் நொறுக்குத் தீனிகளை வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள் – சிலருக்கு பொழுது போகவில்லை என்றால் சாப்பிடத் துவங்கி விடுகிறார்களே!  கொடுத்து வைத்தவர்கள்!

சிலர் நொறுக்குத் தீனியில் மும்மரமாக இருக்க, பலர் தங்களை செல்ஃபி எடுத்துக் கொள்வதில் மும்மரமாக இருந்தார்கள். அதிலும் தன்னந்தனியே அமர்ந்து கொண்டு விதவிதமாக செல்ஃபி எடுப்பவர்களைப் பார்த்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது – “பாவம் யார் பெத்த புள்ளையோ..... மனசு சரியில்லை போல! என்று செல்ஃபி பற்றி தெரியாதவர்கள் நினைத்து விடக்கூடும்!


படம்: இணையத்திலிருந்து.

எங்கள் விமானத்திற்கான அழைப்பு வந்ததும், அதற்குரிய வாயிலில் மீண்டும் நீண்டதோர் வரிசை – இம்முறை Indigo பணியாளர்கள் Boarding Pass/ID Card சோதனை செய்து வரிசையாக உள்ளே அனுப்ப, எங்களை விமானம் வரை அழைத்துச் செல்வதற்காக குளிரூட்டப்பட்ட பேருந்து நின்று கொண்டிருந்தது. அதில் பயணித்து விமானத்தினைச் சென்றடைந்தோம்.  பொய் புன்னகை சிந்திய காரிகை “தரணும்எங்களை வரணும்என வரவேற்றார். [அந்த காரிகையின் பெயர் Tarannum என எழுதி இருந்தது!] அரை விநாடிக்கு ஒரு முறை புன்னகைக்க இவர்களுக்கு தனியே வகுப்பு எடுத்திருப்பார்கள் போலும்!


 படம்: இணையத்திலிருந்து.

பல சமயங்களில் இவர்களைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வு தோன்றுகிறது. என்னதான் Air Hostess என்று சொன்னாலும், தற்போது அவர்களுக்கு எத்தனை வேலைகள் – உணவு கொடுப்பதிலிருந்து, குப்பைகளை அகற்றுவதிலிருந்து, பயணிகளுக்கு தேவையான விளக்கங்கள் கொடுப்பதிலிருந்து எத்தனை எத்தனை வேலைகள். அதுவும் சமீப காலங்களில் விமானத்திற்குள்ளேயே பொருட்கள் விற்பனையும் செய்ய வேண்டியிருக்கிறது! – சிறு வயதில் பன்ரூட்டி நகர் செல்லும் போது அங்கே ஒருவர் கையில் தட்டு வைத்து “இஞ்சி மரப்பாஎன்று விநோத குரலில் விற்பனை செய்வார்.  அவர் போல இவர்கள் குரல் மட்டும் தான் எழுப்பவில்லை – அதற்கு பதில் Recorded Voice!

மேலும் பயணிகள் இவர்களுக்குத் தரும் தொல்லைகள் – அப்பப்பா! எவ்வளவு பொறுமை வேண்டும் இவர்களுக்கு – Seat Belt அணிந்து கொள்ள வேண்டிய வேளைகளில் அதை கழட்டி விடுவதும், Toilet உபயோகம் செய்யக்கூடாது என்ற அறிவிப்பு வந்த சில விநாடிகளிலேயே சிலர் எழுந்து அந்தப் பக்கம் போக முயற்சிப்பதும், சிலர் விநாடிக்கு ஒரு முறை அவர்களை அழைக்க Call Button உபயோகிப்பதும் என்னவெல்லாம் செய்கிறார்கள் – பயணிப்பது இரண்டு மணி நேரமாக இருப்பினும் அதற்குள் பத்து முறை அழைத்த ஒரு பிரயாணியை பார்த்திருக்கிறேன்!

பக்கத்து [13C] இருக்கையில் இருந்த ஒரு பெண்மணி தனது கணினியில் “A presentation on bacteria” என Powerpoint-ல் தயார் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அத்தனை Cold and Cough! தொடர்ந்து மூக்கை உறிஞ்சுவதும், தும்முவதுமாக இருந்தார்! நல்ல பொருத்தம்! இரண்டு வரிசைக்கு முன்னர் இருந்த யாரோ சத்தமாக அலைபேசியிலோ/கணினியிலோ பாட்டு கேட்டுக்கொண்டிருக்க – புரியாத மொழிப் பாட்டு - அதைக் கேட்டு பலரும் மெர்சலானார்கள்!

இப்படியாக பயண நேரமான ஒன்றரை மணி நேரம் கழிய அஹமதாபாத் நகர தட்பவெப்ப நிலை இவ்வளவு என்று சொல்லியபடியே விமானம் தரை இறங்கப் போவதாக விமானத்தினை செலுத்திய Pilot, Speaker வழியே எங்களுக்கு அறிவிக்க, இறங்கிய உடனேயே வெளியே போக வேண்டும் என்ற முனைப்புடன் பலரும் இருக்கையின் நுனிப்பகுதிக்கு வந்திருந்தனர்! விட்டால் குதித்து விடுவார்கள் போலிருந்தது!

எங்கள் மூவரையும் வரவேற்க, அஹமதாபாத் கனிவுடன் காத்திருந்தது!  நாம் தான் அஹமதாபாத் என சொல்கிறோமே தவிர, இங்கே அவ்வூரை ஆம்தாபாத் என தான் அழைக்கிறார்கள்.....  ஆம்தாபாத்! Here I come என்று சொல்லிக் கொண்டே நானும் தயாரானேன்! நீங்களும் தயார் தானே!

நட்புடன்


   

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பஞ்ச் துவாரகா - பயணிக்கலாமா?

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 1


 படம்: இணையத்திலிருந்து....

பஞ்ச் துவாரகா....  ஆங்கில Punch அல்ல! ஹிந்தி பஞ்ச்! அதாவது ஐந்து....  ஐந்து துவாரகைகள் – துவாரகா, [B]பால் கா தீர்த், டாகோர்ஜி, ஷ்யாம்லாஜி மற்றும் ஸ்ரீநாத்ஜி! ஆகிய ஐந்து இடங்களே பஞ்ச் துவாரகா என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்தில் நான்கு குஜராத் மாநிலத்திலும் ஸ்ரீநாத்ஜி ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்ளன.  பெரும்பாலானவர்கள் இந்த பஞ்ச் துவாரகா பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கடினமான பயணம் – ஒவ்வொரு இடத்திற்கும் இடையிலான தொலைவு சற்றே அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

என்னுடைய நண்பர் ஒரு நாள் பேச்சு வாக்கில் பஞ்ச் துவாரகா செல்ல நினைத்திருப்பதாகச் சொல்ல, போகும் போது எனக்கும் சொல்லுங்கள், முடிந்தால் நானும் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன். சில நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கும் போது பஞ்ச் துவாரகா பயணம் உறுதியாயிற்று.  அந்த சமயத்தில் விமானப் பயணத்திற்கான சில சலுகைகளும் அறிவிக்கப்பட உடனடியாக மூன்று பேருக்கு தில்லி – அஹமதாபாத் – தில்லி பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்து விட்டார்.  

பயணம் செய்ய வேண்டிய நாள் வருவதற்கு முன்னரே அங்கே என்னென்ன பார்க்க வேண்டும், எங்கே தங்குவது என்ற எதிலும் நான் கவனம் செலுத்தவில்லை. நண்பரே எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டதால் எனக்கு எந்த வேலையும், கவலையும் இல்லை! பல பயணங்கள் சென்றிருந்தாலும், குஜராத் மாநிலத்திற்கு இதுவே முதல் பயணம். குஜராத் மாநிலம் பற்றி பலரும் பலவிதமாய் சொல்லிக் கேட்டிருக்கும் எனக்கு நேரடி அனுபவம் கிடைக்கப் போகிறது என மனதில் நினைத்துக்கொண்டேன்.

பஞ்ச் துவாரகா என்பதில் இருக்கும் இடங்கள் என்ன என்று மேலே சொன்னேன். அவை பற்றிய சில குறிப்புகளை பயணிப்பதற்கு முன்னரே பார்க்கலாமா?


படம்: துவாரகா - ஜகத் மந்திர்

துவாரகா: 108-திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. மதுராவினை ஆண்டு வந்த கிருஷ்ணர் அவ்விடத்தினை விட்டு விலகி துவாரகாவில் தான் தனது ராஜ்ஜியத்தினை உருவாக்கினார். துவாரகா – துவார் என்றால் கதவு. கா என்பதற்கு ப்ரஹ்மா அதாவது மோக்ஷம்.  துவாரகா என்பதற்கு மோக்ஷத்தின் கதவு என்ற பொருள் – இங்கே பயணம் செய்து கிருஷ்ணனை த்யானிப்பவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன என நம்பிக்கை. இவ்விடத்தின் அருகிலேயே [B]பேட் த்வாரகா, கோம்தி த்வாரகா, ருக்மிணி த்வாரகா, நாகேஷ்வர் போன்ற ஸ்தலங்களும் உண்டு.  கோமதி ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் ஜகத் மந்திர் த்வாரகா பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


படம்: இணையத்திலிருந்து....
[கிருஷ்ணரும், அவர் பாதங்களில் அம்பு எய்த ஜராவும்]

[B]பால் கா தீர்த்:  முக்தி த்வாரகா என அழைக்கப்படும் இடம் இது. ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான சோம்நாத் அருகில் இருக்கும் இடம் இது. ஜரா எனும் வேடன் கிருஷ்ணரின் பாதங்களை மானின் பாதங்கள் [பறவையின் அலகு எனவும் சிலர் சொல்வதுண்டு] என நினைத்து அம்பு விட அது கிருஷ்ணரின் பாதங்களில் புகுந்தது. அதன் மூலமாகவே விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தின் முடிவும் வந்தது.  இந்த இடத்தில் தான் கிருஷ்ணர் கடைசியாக இருந்தார் என்பதால் இவ்விடத்தினை முக்தி த்வாரகா என்றும் அழைக்கிறார்கள்.  


படம்: டாகோர்ஜி கோவில் ஒரு தோற்றம்

டாகோர்ஜி:  அஹ்மதாபாத் நகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடம் டாகோர்ஜி என அழைக்கப்படும் இடம். கிராமிய சூழலில் அமைந்திருக்கும் அழகான கோவில்.  அஹமதாபாத் நகரிலிருந்து மும்பை செல்லும் NE-1 [National Expressway-1] வழியாகச் சென்றால் இங்கே சுலபமாகச் சென்றடைய முடியும். துவாரகாவில் வந்து வழிபடமுடியாத வயதானவருக்காக கிருஷ்ணபகவான் கோவில் கொண்டதாக ஒரு கதையும் உண்டு! இங்கே விசேஷமாக தங்கத்தில் துலாபாரம் இருக்கிறது.


படம்: ஷாம்லாஜி கோவிலின் ஒரு தோற்றம்

ஷாம்லாஜி:  மிகவும் பழமையான கோவில். மேஷ்வோ நதிக்கரையில் இருக்கும் இக்கோவிலை கடவுள்களின் சிறிபியான விஸ்வகர்மா ஒரே இரவில் கட்டியதாகவும் சில கதைகள் உண்டு. குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் இருக்கும் இந்த கோவிலும் மிக அழகான கோவில். இங்கே நவம்பர் மாதத்தில் நடக்கும் ஷாம்லாஜி மேளா மிகவும் பிரசித்தி பெற்றது.  நாங்கள் சென்ற போது கோவிலை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருந்தது. பழைய கோவில்களை அவ்வப்போது செப்பனிடுவது மிகவும் அவசியமான ஒன்று. புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டுவது தவிர்த்து இருக்கும் பொக்கிஷங்களை பராமரிப்பது நல்ல விஷயம்.


படம்: எட்டு அலங்காரங்களில் ஒன்று - ஓவியத்தினை படமாக எடுத்தது.

ஸ்ரீநாத்ஜி: பஞ்ச துவாரகா என அழைக்கப்படுவதில் நான்கு இடங்கள் குஜராத் மாநிலத்தில் இருக்க, ஐந்தாவதான ஸ்ரீநாத்ஜி மட்டும் அடுத்த மாநிலமான ராஜஸ்தானில் [உதய்பூர் மாவட்டத்தில்] இருக்கிறது.  மிகவும் அருமையான கோவில்.  வருடம் முழுவதும் இங்கே பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எட்டு விதமான அலங்காரங்களில் இவரை அழகு படுத்துகிறார்கள். இங்கே வரும் பல பக்தர்கள் எட்டு விதமான அலங்காரங்களிலும் இவரைப் பார்ப்பதற்காக அங்கேயே நாள் முழுவதும் தங்கிவிடுவதுண்டு!  நாங்கள் ஒரே ஒரு அலங்காரத்தில் – நாளின் முதல் அலங்காரத்தில் மட்டுமே பார்த்தோம். அங்கே கிடைத்த அனுபவங்கள் கட்டுரையின் வரும் பாகங்களில்!

என்ன நண்பர்களே, பஞ்ச துவாரகா என அழைக்கபடும் இடங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டீர்களா? பயணம் ஆரம்பிக்கும் முன்னர் இது ஒரு முன்மாதிரி தான்! அடுத்த பகுதியில் தான் பயணம் ஆரம்பிக்கப் போகிறது! தில்லியிலிருந்து தொடங்கி முழுவதும் பார்க்கத்தானே வேண்டும்!....

ஆதலினால் பயணம் செய்வோம்!

நட்புடன்


   

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

ஃப்ரூட் சாலட் – 141 – ஷாஹித் அஃப்ரிதி – பதிவர் சந்திப்பு – அழுகிய தக்காளி



இந்த வார செய்தி:



கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும்கிரிக்கெட் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் நாட்டு நலனுக்காகவே செலவிட்டு வருபவர்.

கிராமங்களுக்கு சாலை போடுவது, புற்றுநோய் மருத்துவமனை கட்டுவது போன்ற அறப்பணிகளில் சாகித் அப்ரிடி ஈடுபட்டு வருகிறார். கராச்சி நகரில் செயல்பட்டு வரும் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'தாருல் சுகான்' என்ற அமைப்புக்கு நேற்று சாகித் அப்ரிடி சென்றார்.

அங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்ட அப்ரிடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் பேசியும் மகிழ்ந்தார். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்காக  20 லட்சம் பாகிஸ்தான் பணத்தையும் நிதியுதவியாக சாகித் அப்ரிடி அளித்தார்.

-          விகடன் இணைய இதழிலிருந்து......

இந்தியாவுடன் நடக்கும் போட்டிகளில் இவர் கொஞ்சம் அதிகமாகவே பற்றுடன் நன்றாகவே விளையாடுவார். அதனாலேயே எனக்கென்னமோ இவரை கொஞ்சம் பிடிக்காது! ஆனாலும் இன்று இந்த செய்தி படித்தவுடன் அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுக்க நினைக்கிறது மனது.  வாழ்த்துகள் ஷாஹித் அஃப்ரிதி!

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:




தலைநகரில் ஒரு பதிவர் சந்திப்பு:

வரும் அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு நடக்கப் போவது பற்றி நேற்றிலிருந்து பதிவுகள் வெளிவந்தபடி இருக்கிறது.  விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும். ஆனால் இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது இந்த வாரத்தில் தலைநகர் தில்லியில் நடந்த பதிவர் சந்திப்பு பற்றி....  தலைநகர் வந்திருந்த பதிவர் ஒருவரை நான் சந்தித்தேன்.  சந்திப்பு பற்றி அவரே விரைவில் எழுதுவார் என நினைக்கிறேன்! தலைநகர் வந்த பதிவர் யார்! விரைவில் உங்களுக்குத் தெரிய வரும்!



அடுத்த பயணக் கட்டுரை:


ஹிமாச்சல் பிரதேசம் சென்று வந்தது பற்றி எழுதியதை என் வலைப்பூவில் வெளியிட்டு சில நாட்கள் ஆகிவிட்டன. சென்று வந்த பயணங்கள் மூன்று உண்டு – குஜராத் மாநிலத்திற்கு நான்கு நாள் பயணம், வடகிழக்கு மாநிலங்களுக்கு 15 நாட்கள் பயணம் மற்றும் நம் தமிழகத்தின் கொடைக்கானலுக்கு ஒரு நாள் பயணம் – என மூன்று பயணங்கள் சென்று வந்ததும் அதில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் நிறையவே விஷயங்கள் உண்டு! சில நாட்களாகவே பதிவுகள் எழுதுவதிலும், சக வலையுலக நண்பர்களின் பதிவுகளை படிப்பதிலும் சில தடங்கல்கள்....  பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன!

எனது வேலைகள் ஒரு புறம் என்றால் அடுத்த பயணத் தொடர் என்ன என்று இதுவரை யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை :)  

கேட்டாலும் கேட்காவிட்டாலும் இன்னும் சில தினங்களில் குஜராத் பயணம் பற்றிய கட்டுரைகள் வெளி வரும் என்ற செய்தியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வார காணொளி:

அற்புதமான இசை.... கேட்டு ரசியுங்களேன்.  மோகன்ஜி முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட காணொளி இது! அவருக்கு நன்றி..


Extraordinary super video. Don't forget to see this video.
Posted by Satya Krishnamurthy Hanasoge on Thursday, January 1, 2015



படித்ததில் பிடித்தது:



மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.

எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒருவன் 'பத்து' என்றான்; அடுத்தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.

இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார். மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.

அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்! மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர். பெரியவர்களும் பகை மறந்து நடந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்