செவ்வாய், 5 அக்டோபர், 2021

கல்லூரி நாட்கள் - தொடரின் முடிவு - பகுதி பதினேழு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


A NICE PERSON WILL ALWAYS BE N MEMORY; A BETTER PERSON WILL ALWAYS BE IN DREAM; BUT A SINCERE PERSON WILL ALWAYS BE IN HEART. 


******





கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை சில பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பத்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினொன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பன்னிரெண்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதிமூன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினைந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினாறாம் பகுதி


சென்ற பகுதியில் என் திருமணம் முடிவானதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியை இந்தப் பகுதியில் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். கல்லூரிக்குப் பிறகான இரண்டு வருடங்கள் வேலை தேடிக் கொண்டும், வேலை பார்த்துக் கொண்டும் என ஓடிய கால்களுக்கு மெட்டி போட்டுக் கொள்ளும் நாள் முடிவானது!


ஃபேன்சி ஸ்டோர் வேலை என் வாழ்வின் திருப்புமுனைகளை முடிவு செய்தது என்று சொல்லலாம். என் வாழ்வின் முக்கியமான மனிதர்களை அங்கு தான் சந்தித்திருக்கிறேன். எங்கோ பிறந்த இருவரும் ஒரு வயதானப் பெண்மணியால் பிணைக்கப்பட்டோம். அவர் யாரெனக் கேட்டால் என் நாத்தனாரின் மாமியார்! இன்றும் நான் அவரை நினைத்துக் கொள்வேன். 


இரு வீட்டினரும் ஃபோனில் பேசிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்யும் நாள் உறுதியானது. ஒரு ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் என முடிவு பண்ணி மாப்பிள்ளை வீட்டில் புடவை கூட  எடுத்தாச்சு. அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை தான் பெண் பார்க்கும் படலம்!


இதுவரை ஃபோட்டோவே பார்க்காமல் மாப்பிள்ளை நிச்சயதார்த்ததுக்கும் கிளம்பி வந்துவிட்டார். என்னமோ ஒரு நம்பிக்கை! அவரின் அம்மாவும், தங்கையும் என்னை நேரில் பார்த்திருக்க, அக்கா ஃபோட்டோவில் பார்த்திருக்க இப்படியாக முடிவானது எங்கள் நிச்சயதார்த்தம்! அதற்கு அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம்! வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு சென்றேன். இதோ கடந்து விட்டது இருபது வருட இல்லறம். இந்த 20 வருடக் கதைகளை தனியாகவே எழுதுகிறேன்...:) இரு வேறு ரசனைகள் கொண்ட இருவர் ஒத்துப் போவது எப்படி என்று!


என்னவரைப் பற்றி சுருக்கமாக சொல்லணும் என்றால், பாலகுமாரன் அவர்களின் 'தாயுமானவன்' பரமுவாக அவரை நினைத்துக் கொள்வேன். தன்னை நம்பி வந்த ஜீவனை தன்னுடைய உழைப்பில் தான் காப்பாற்றணும் என்ற கொள்கையுடையவர். எக்காரணத்தைக் கொண்டும் அவளை கஷ்டப்படுத்தி விடக்கூடாது என நினைக்கும் மனிதர். அதனால் அதன் பின் வேலைக்கு செல்லும் சந்தர்ப்பமே எனக்கு கிடைக்கவில்லை..:) குடும்பம், குழந்தை, புகுந்த வீட்டு மனிதர்கள் என என்னுடைய உலகம் மாறிப் போயிற்று..:)


அப்பா, அம்மாவின் மறைவுக்குப் பின் எனக்கு எல்லாமுமாக மாறிப்போன என்னவர்! மிஸ்டர் வெங்கட் என்பவர் இல்லாமல் இந்த ஆதி/புவனா இல்லை..:) இன்றும் என்னை ஒரு குழந்தை போல அன்பும், அக்கறையுமாக பார்த்துக் கொள்பவர். சாலையைக் கடக்கும் போது கூட ஒருவித பதற்றத்துடன், 'அவசரப்படாதம்மா! இரு! இரு!'' என்று என் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்..:)


இப்படியாக 'கல்லூரி நாட்கள்' என்ற தலைப்பில் கல்லூரியில் ஆரம்பித்து கல்யாணம் வரை எழுதிய இந்தத் தொடரில் என்னுடன் பயணித்த, ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்த 'கடந்து வந்த பாதை' தொடரை எழுதிய சுப்பு சாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


28 கருத்துகள்:

  1. தொடரை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். திருமணமாகி, அதற்குப் பாலமாக இருந்தவருடன் பழகும் சந்தர்ப்பங்கள் வாய்த்ததா இல்லை தில்லிக்குச் சென்றுவிட்டீர்களா?, குழந்தை, தன் பெற்றோரின் பெற்றோர்களுடன் இருக்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்ததா என்பதெல்லாம் பிறிதொரு தொடரில் தெரியும் என நினைக்கிறேன்.

    மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையின் கல்லூரி காலத்தை மிகுந்த ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணமாகி பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளாகவே டெல்லிக்கு போயாச்சு. இந்தக் குழந்தைக்கே தன் பெற்றோருடன் இருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது மிகக் குறைவு..:) அடுத்த தொடரில் திருமணத்திற்கு பின் என் வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களை சொல்கிறேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  2. அருமையான தொடர். எங்கள் வீட்டிலுள்ள உங்கள் விசிறிகள் உங்கள் போஸ்ட் வந்தவுடன் படித்துவிடுவார்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசிக்கும் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  3. கல்லூரிக் கால நினைவலைகளை திருமணக்கோலம் வரை கண்முன் கொண்டுவந்து காட்டி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரை தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. தொடரை சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
    மேலும் பல அணுபவங்களை விரைவில் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு அடுத்த தொடரை துவக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  5. திரைப்படம் கண்டதுபோல் இருந்தது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு மனிதனின் அனுபவங்கள் தானே சினிமாவாக எடுக்கப்படுகின்றன.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  7. நெகிழ்வான தொடர்.  கல்லூரி முதல் கல்யாணம் வரை என்று தலைப்பிட்டிருக்கலாம்.  வெங்கட்டின் அன்பு, அக்கறை பற்றி பலமுறை முன்னரே சொல்லி நெகிழ்ந்திருக்கிறீகள்.    வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரி நாட்களை பற்றி தான் எழுதலாம் என்று நினைத்து துவக்கினேன்..:) அது கல்யாணம் வரை செல்லும் என்பது எதிர்பாராதது. மின்னூலாக வெளியிட்டால் கல்லூரி முதல் கல்யாணம் வரை என்றே வைக்கலாம் என்று தான் நினைத்துள்ளேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  8. உங்கள் இருவருக்குமே மனமார்ந்த் வாழ்த்துகள்.

    வெங்கட்ஜி பற்றி சொல்லியிருக்கீங்களே ஆதி!!! வெங்கட்ஜி Man of good heart!!! A man with a good heart is worth more than a man with a good bank balance and a good heart keeps you beautiful always!!!!!!!! டக்கென்று இந்த வாசகம் நினைவில் வந்தது இந்தப் பதிவிற்கு!!!

    //இதுவரை ஃபோட்டோவே பார்க்காமல் மாப்பிள்ளை நிச்சயதார்த்ததுக்கும் கிளம்பி வந்துவிட்டார். என்னமோ ஒரு நம்பிக்கை! //

    ஹாஹாஹாஹா ஹலோ ஆதி! நீங்கதானே சொல்லிருந்தீங்க முன்னாடி பதிவுல..கழுதையோ குதிரையோ ன்னு மாப்பிள்ளை (வெங்கட்ஜி!!) சொன்னதாக ஹாஹாஹா.

    வெங்கட்ஜி க்குப் பாராட்டுகள்! வாழ்த்துகளும்! ஆதியிடமிருந்து இப்படி ஒரு பாராட்டுப் பத்திரம் பெறுவதற்கு.

    //இரு வேறு ரசனைகள் கொண்ட இருவர் ஒத்துப் போவது எப்படி என்று!//

    புரிதல் இருந்தால் போதும் ஒருவருக்கொருவரது ரசனைகளை, விருப்பங்களை மதிக்கத் தெரிந்தால் போதும். அதுதான் மிக மிக முக்கியம். ஒரே ரசனை இருப்பவர்களுக்குள்ளும் கூட கருத்து வேறுபாடுகள் வரலாம், ஈகோ தலை தூக்கலாம்...

    புரிதலுடன் ஒருவருக்கொருவர் திறமைகளை மதித்து ஊக்குவித்தாலே எவ்வளவோ செய்யலாம்..

    ரொம்ப அருமையாக எழுதறீங்க ஆதி. மீண்டும் வாழ்த்துகளுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. கழுதையோ, குதிரையோன்னு சொன்னாலும் மனதுக்குள் கொஞ்சம் பக் பக்னு தான் இருந்திருக்கும்..:)

      உண்மை தான். புரிதல் இருந்தால் பிரச்சினைகள் இன்றி ஒத்துப் போகலாம்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதே போன்று கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று மனைவியும் பாடினால் அந்தக் குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!

    உங்கள் தொடரில் இடையே கருத்து இடவில்லை என்றாலும் எல்லாம் வாசித்துவந்தேன். அடுத்த தொடரையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    இருவருக்குமே உங்கல் மகளுக்கும் சேர்த்து (நல்ல பெற்றோர் இருந்தால் குழந்தைகள் நன்றாக வளர்வார்கள்) இதே சந்தோஷத்தை இறைவன் என்றேன்றும் நல்குவாராக!

    மனமார்ந்த வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  10. சுவாரஸ்யமான தொடர். தொய்வில்லாத எழுத்து நடை. வாழ்த்துகள். திட்டமிட்டு நடத்தப்படும் /வாழப்படும் வாழ்க்கையைவிட கடவுள் நம்மை அழைத்துச்செல்லும் வழியில் பயணிப்பதே அதிக நிம்மதி தருவதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் நம்மை அழைத்துச் செல்லும் பாதை... உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க இணைய திண்ணை.

      நீக்கு
  11. நல்ல பதிவு. நீண்டகால நினைவுகளை துள்ளியமாக நினைவு வைத்து எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.

      நீக்கு
  12. தாயுமானவர்க்கு வாழ்த்துகள். :)
    அது கிடைக்க நீங்களும் கொடுத்து வைத்தவர்தான்.
    இருவருக்குமே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  13. //என்னை ஒரு குழந்தை போல அன்பும், அக்கறையுமாக பார்த்துக் கொள்பவர். சாலையைக் கடக்கும் போது கூட ஒருவித பதற்றத்துடன், 'அவசரப்படாதம்மா! இரு! இரு!'' என்று என் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்..:)//

    நெகிழ்வு.
    அன்பு வாழ்க !

    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. அற்புத எழுத்தாளராக உருவாகி இருக்கும் ஆதி வெங்கட்டுக்கு நல் வாழ்த்துகள்.

    கழுதை குதிரை ஜோக் இருந்தாலும் நல்லவர் கணவராகக் கிடைப்பது பெரிய புண்ணியம்.
    அவருக்கும் உங்களைப் போன்ற மனைவி
    கிடைத்திருப்பது மிக அருமை.
    என்றென்றும் இனிமையான வாழ்வு தொடர அன்பு ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....