செவ்வாய், 31 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அடுத்தவர் சொல்வதை கேட்டு முடிவு செய்யக் கூடாது. 

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி




சரயு நதி....

 

நாங்கள் அயோத்யா சென்ற சமயம் சைத்ர நவராத்திரி என்பதால் மக்கள் சாரி சாரியாக வந்த வண்ணமே இருந்தார்கள்.... அனைவரையும் எந்தவித தடங்கலும் இல்லாமல், சரயு நதியில் நீராடி, ராம் லல்லாவை தரிசனம் செய்து நிம்மதியாக அவரவர் இல்லம் திரும்ப வேண்டிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து இருந்தது. எண்ணற்ற காவலர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் என பல விஷயங்கள் செய்திருந்தார்கள். ஆங்காங்கே Khகோயா Pபாயா கேந்திரங்கள், அதாவது குடும்பத்தினை பிரிந்துவிட்ட நபர்களுக்கான உதவி மையங்கள் இருக்க, அங்கிருந்து தொடர்ந்து அறிவுரைகளை வழங்கியபடியே இருக்கிறார்கள். ஆற்றில் ஆழம் அதிகம், தடுப்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு..... அனைத்தும் சிறப்பு! மனைவியை விட்டு காணாமல் போன கணவனுக்கு அழைப்பு வந்தபோது தேவையில்லாமல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு நடித்த இதே போன்ற காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது.... 🙂



பட்டையைப் போட்டு விட்ட பெண்மணி...

 

வட இந்தியாவில் பல ஊர்களுக்கு பயணம் செய்திருக்கிறேன்.  இந்த மாதிரி பயணங்கள் செய்யும் போது, அதிலும் குறிப்பாக கோவில்கள் இருக்கிற ஊர்களுக்குச் செல்லும் போது கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.  நதி போன்ற நீர் நிலைகள், கோவில்கள், அங்கே நடக்கும் விழாக்கள் என அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் பலரது அன்றாட வாழ்க்கைக்கு உதவும் விதத்தில் அமைந்திருப்பதை பார்த்திருக்கிறேன். சிலர் ஏமாற்றுபவர்களாக இருந்தாலும், பலர் தங்கள் உழைப்பை நம்பியே இருப்பவர்களாகவும் இருப்பார்கள்.  மக்களின் நம்பிக்கை எனும் விஷயத்தினை பயன்படுத்திக் கொண்டு சிலர் காசு சம்பாதிப்பது வழக்கம் தானே.  

 

ஹரித்வார், ரிஷிகேஷ், அலகாபாத், காசி என எந்த நகரத்திற்குச் சென்றாலும், நதியில் குளித்து வெளியே வரும்போதே கைகளில் ஏந்திய தட்டு, அதில் இருக்கும் வீபூதி, சந்தனம், குங்குமம், சில பல அச்சுகள் என சிலர் வந்து உங்கள் நெற்றியில் பூசி விட்டு கை நீட்டுவார்கள்.  நீங்கள் விரும்பிய அளவு அவர்களுக்குக் காசு தரலாம்! ஐந்து ரூபாய் கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வார்கள்.  வெகு சிலரே இன்னும் காசு கொடு என்று கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.  நாமே சந்தனம், வீபூதி, குங்குமம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு சென்று அங்கே குளித்த பின்னர் பூசிக் கொள்ளலாம் என்றாலும் இந்த மாதிரி சிலர் இருப்பதால் அவர்களிடம் தத்தமது நெற்றியைக் காண்பித்துக் கொண்டு இருந்தால் வேலை முடிந்தது! 





பொதுவாக இது போன்றவர்களிடம் நான் என் நெற்றியைக் காண்பித்துக் கொண்டிருப்பதில்லை!  எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இதற்கென, நாம் செய்து கொள்ளத் தேவையில்லை என்பதே எனது எண்ணமாக இருக்கும்!  ஆனால் இந்த முறை பயணித்த போது, அயோத்யா நகரில் ஒரு பெண்மணி கோவில் வாசலில் அமர்ந்து கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் நெற்றிக்கு சந்தனம், குங்குமம் வைத்துக் கொண்டிருந்தார்.  பன்னீர் சேர்த்து சந்தனம் கரைத்து அழகாகப் பூசி நடுவில் ஒரு குங்குமக் கீற்று! சிலருக்கு செய்து விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, உழைக்கும் இந்தப் பெண்மணிக்கு நாமும் கொஞ்சம் உதவி செய்வோம் என்ற எண்ணத்தில் என் நெற்றியைக் காண்பித்தேன்!  நல்ல பட்டையைப் போட்டு விட்டார் அந்த பெண்மணி!  



நானும் நண்பரும்…

 

அப்படியே சரயு நதிக்கரையில் அமர்ந்து கொண்டு இருந்த போது ஒரு முதியவர் - எப்படியும் எண்பது வயது இருக்கலாம் - கூன் விழுந்த முதுகு, தள்ளாமை என மொத்த உருவமும் பார்க்கும்போதே பரிதாபம் கொள்ள வைத்தது.  கைகளில் “ராம்” என்று ஒரு சீல் வைத்திருந்தார் - அதை குங்குமத்தில் வைத்து ஒரு அழுத்து - அப்படியே கரையோரத்தில் பக்தர்கள் நெற்றியில் ஒரு அழுத்து - ”ராம்” என்று நெற்றியில் வார்த்தைகள் வர, கையை நீட்டுகிறார்!  வேண்டாம் என்று சொல்ல நினைத்தாலும், மீண்டும் மீண்டும் கேட்க, சரி என அவரிடமும் “ராம்” என்ற பெயரை எங்கள் நெற்றியில் பொறித்துக் கொண்டு கொஞ்சம் காசு கொடுத்தோம்! பத்துப் பதினைந்து பேராவது அவருக்குக் காசு கொடுத்தால், ஏதோ அன்றைய பொழுது கொஞ்சம் சாப்பிட்டுப் படுப்பார் - சரயு நதிக்கரையில்!  

 

எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனை எத்தனை விஷயங்கள் நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது.  பார்க்கும் பார்வையில் பார்த்தால், எல்லா விஷயங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியவையே!  இந்தப் பயணத்தில் பார்த்த இந்த விஷயமும் அப்படித்தான் என்று எனக்குத் தோன்றுகிறது!  சந்தனம் பூசிக் கொண்ட போது எடுத்த காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு! 🙂  மாலை நேரம் என்றாலும் சரயு நதிக்கரையில் சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். பிரதான சாலையிலிருந்து கீழே இறங்கி நாங்களும் நடந்தோம்.  நதி வரை சென்று அங்கே குளிக்கவில்லை என்றாலும் நதிக்குள் இறங்கி நின்று சில நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தோம்.  கொஞ்சமாக சரயு நதி நீரை எடுத்து தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டதோடு, சில மந்திரங்களையும் உச்சரித்தபடி நின்றிந்தோம்.  இந்த முறை அயோத்யா ஜி பயணத்தில் சரயு நதியில் நீராட முடியவில்லை. அடுத்த அயோத்யா ஜி பயணம் அமைந்தால் நிச்சயம் சரயு நதியில் நீராட வேண்டும்! இராம் லல்லா அழைப்பு விடுத்தால் சென்று விட வேண்டியது தான்! 

 

அயோத்யா ஜி குறித்த மேலும் பல தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

24 கருத்துகள்:

  1. பக்தியை வியாபாரமாக்குவோர் மத்தியில் வியாபாரத்தில் பக்தியை புகுத்தி பிச்சை எடுக்காமல் கௌரவமாக வாழ எண்ணும் அவர்களை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிச்சை எடுக்காமல் கௌரவமாக வேலை செய்து பிழைக்கும் அவர்களை வாழ்த்துவோம் - அதே தான் ஸ்ரீராம்.

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. காணொளி பார்த்தேன், சந்தன பட்டை , குங்குமம் வைத்து விட்டது நன்றாக இருக்கிறது.

    //பத்துப் பதினைந்து பேராவது அவருக்குக் காசு கொடுத்தால், ஏதோ அன்றைய பொழுது கொஞ்சம் சாப்பிட்டுப் படுப்பார் - சரயு நதிக்கரையில்! //

    அதுவும் சரிதான். நம்மால் முடிந்த உதவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டதில் மகிழ்ச்சி. தங்கள் அன்பிற்கு நன்றி. பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி கோமதி அம்மா.

      நீக்கு
  3. நதி போன்ற நீர் நிலைகள், கோவில்கள், அங்கே நடக்கும் விழாக்கள் என அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் பலரது அன்றாட வாழ்க்கைக்கு உதவும் விதத்தில் அமைந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.//

    ஆமாம் ஜி.

    ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூட இந்த விழாக்கள் பற்றிச் இப்படிச் சொல்லியிருப்பதை எங்கேயோ வாசித்த நினைவு.

    //மக்களின் நம்பிக்கை எனும் விஷயத்தினை பயன்படுத்திக் கொண்டு சிலர் காசு சம்பாதிப்பது வழக்கம் தானே. //

    இதுவும் ரொம்பவே நடக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  4. உழைக்கும் இந்தப் பெண்மணிக்கு நாமும் கொஞ்சம் உதவி செய்வோம் என்ற எண்ணத்தில் என் நெற்றியைக் காண்பித்தேன்! நல்ல பட்டையைப் போட்டு விட்டார் அந்த பெண்மணி! //

    நல்ல விஷயம்தான் ஜி நமக்குச் சில விஷயங்கள் வேண்டாம் என்று தோன்றினாலும் மற்றவருக்கு உதவுவதற்காக இது நல்லதே. காணொளி கண்டேன்,

    //பத்துப் பதினைந்து பேராவது அவருக்குக் காசு கொடுத்தால், ஏதோ அன்றைய பொழுது கொஞ்சம் சாப்பிட்டுப் படுப்பார் - சரயு நதிக்கரையில்! //

    உண்மைதான்....ஓ அதுதான் அந்தக் குங்கும கோபியா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றால் இந்த உதவியை நான் ஏற்றுக்கொள்வதே இல்லை (அங்கிருக்கும் பூசாரி செஞ்சாந்தைப் பூச முற்பட்டால். அது போகவே போகாது)

      நீக்கு
    2. அடுத்தவர்களுக்கு உதவுவதற்காக இப்படி சில விஷயங்கள் செய்வது நல்லதே.

      அந்த பெரியவர் போட்டு விட்டது ராம் ராம் என்பது. இங்கே சேர்த்திருக்கும் படம் அவரிடம் நெற்றியை காண்பிப்பதற்கு முன்னர் எடுத்தது.

      தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
    3. செந்தூரம்/செஞ்சாந்து போவதில்லை. பல முறை முகம் அலம்பிய பிறகும் போவதில்லை தான் நெல்லைத்தமிழன்.

      தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. சரயு அழகாக இருக்கிறது. அயோத்யா ஜி க்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு அது தற்போது ரொம்பவே எழுந்து கொண்டிருக்கிறது. அப்படிச் சென்றால் கண்டிப்பாக சரயுவில் முங்கி எழுந்துவிட வேண்டியதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரயு வெகு அழகு தான். அதுவும் தனியாக அமைக்கப்பட்டு இருக்கும் Gகாட் பகுதிகள் வெகு அழகு. அயோத்யா செல்லும் வாய்ப்பு உங்களுக்கு அமையட்டும் கீதா ஜி. எனக்கும் மீண்டும் ஒரு முறை செல்லும் எண்ணம் உண்டு.

      நீக்கு
  6. எத்தனை வகையான மனிதர்கள் இவ்வுலகில் எல்லாவற்றையும் நாம் கடந்து போய்க்கொண்டு வாழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமான மனிதர்கள்… விதம் விதமான அனுபவங்கள்…

      தங்கள் அன்பிற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. மனிதர்களை படிக்க சிறந்த வாய்ப்பு தங்களுக்கு வாய்த்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்களை படிக்கும் வாய்ப்பு - அப்படியும் சொல்லலாம். தங்கள் அன்பிற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. நல்லவேளை....இன்னும் கொஞ்சம் நடந்திருந்தால், கையில் கோல் கொடுப்பதற்கும் ஒருவர் இருந்திருப்பார். சாமியார் லுக் வந்திருக்கும்.

    உழைப்பவர்களுக்கு உதவுவதுபோல வேறு எந்தச் செயலும் நமக்குத் திருப்தி தராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமியார் லுக் - ஹாஹா… கையில் கோலுடன் என்னை இந்தக் கோலத்தில் கற்பனை செய்து பார்த்துக் கொள்கிறேன் நெல்லைத்தமிழன்.

      தங்களின் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  9. பட்டை, குங்குமமும் அழகாகத்தான் இருக்கிறது . பக்தி முற்றிய மனிதர்களாக அயோத்யாஜி மாற்றி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கோலம் நன்றாக இருப்பதாக சொன்னதில் மகிழ்ச்சி மாதேவி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பக்தர்களை மிரட்டாமல் அவர்கள் தானாக முன்வந்து கொடுக்கும் காணிக்கையை அவர்கள் வாங்கி கொண்டால் எந்தவித பிரச்சினை யும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுப்பதை வாங்கிக் கொண்டால் பிரச்னை இல்லை - உண்மை தான். சிலர் அடாவடியாக இருப்பதும் பார்த்திருக்கிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. வித்தியாசமான அனுபவங்கள் ...

    காசியில் எனக்கும் ஒரு பெண் சூலம் போன்ற பொட்டு வைத்துவிட்டார் கணவரும் , அத்தைகளும் வேண்டாம் என்று விட்டனர் . எனக்கு நான் சரி என்னும் முன்னே வைத்துவிட்டார்.

    வித்தியாசமாக எனக்கு பிடித்துத்தான் இருந்தது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய அனுபவங்களையும் இங்கே சொன்னது சிறப்பு. தங்கள் அன்பிற்கு நன்றி அனு ப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....