செவ்வாய், 24 மார்ச், 2026

அவர்கள் - 1977 - சினிமா - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அனு ஓர் ஆச்சர்யம் - ராஜேஷ்குமார் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


மதியப் பொழுதில் நேரத்தை செலவிட யூட்டியூபை பார்த்துக் கொண்டிருந்த போது கவிதாலயாவில் ‘அவர்கள்’ படத்தின் சீன் 3 என்று தலைப்பிட்ட காணொளி பார்க்கக் கிடைத்தது! அந்தக் காணொளியை பார்த்ததில் ஆர்வம் மேலிட இன்னும் சில காணொளிகளையும் பார்த்தேன்! பின்பு முழு திரைப்படமாகவும் வேறு சேனல் ஒன்றில் பார்க்கக் கிடைக்கவே பார்த்தேன்! 




1977ல் வெளியான ‘அவர்கள்’ என்ற இந்த திரைப்படத்தை ‘இயக்குனர் சிகரம்’ பாலச்சந்தர் சார் இயக்கியுள்ளார்! இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜனிகாந்த், ரவிக்குமார் போன்ற நடிகர்களும் நடிகை சுஜாதா கதையின் நாயகியாகவும் நடித்துள்ளார்!


கதையின் நாயகி அனு என்கிற அனுபமா பம்பாயிலிருந்து மெட்ராஸுக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில் தான் நம்மிடம் அறிமுகம் ஆகிறார்! எதிர்சீட்டிலிருக்கும் பெண்மணி இவளிடம் எது கேட்டாலும் பதிலாக ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தருகிறாள்! தன்னைச் சுற்றி எது நடந்தாலும் அவளுக்கு அது எதுவுமே பெரிதாகத் தோன்றுவதில்லை! காரணம் அவள் வாழ்வில் கடந்து வந்த தருணங்கள் அப்படி!


சந்தேகம் எனும் பேயால் பீடித்திருக்கும் sadist கணவனான ரஜினி! தேள் போன்று கொட்டிக் கொண்டே இருக்கும் அவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் மெட்ராஸுக்குச் செல்கிறாள் அனுபமா! அங்கே எதிர்வீட்டில் வசிக்கும் காதலன் பரணியை எதேச்சையாக சந்திக்கிறாள்! கடந்த கால கசப்பான வாழ்வை மறந்து திருமணம் செய்து கொள்ள முன் வரும் நேரத்தில், தான் திருந்தி விட்டதாக அங்கே வரும் ரஜினி! அனுபமாவின் அலுவலகத்தில் பணியாற்றும் நல்லதொரு நண்பனாக பழகும் கமல்!


இந்த முக்கோண வாழ்வில் அனுபமா யாருடன் இணைகிறாள் என்பது தான் கதை! பாலச்சந்தர் சாரின் திரைப்படங்கள் என்றால் அழுத்தமான கதைக்கும், காட்சிகளுக்கும், கதாப்பாத்திரங்களுக்கும் கேட்கணுமா! அற்புதமான படம் என்று சொல்வேன்! அருமையான கதாப்பாத்திரங்கள்! எப்படி இப்படியொரு திரைக்கதையை படைக்க முடிந்தது என்று வியக்கிறேன்!!


ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை பற்றியும் நிறைய யோசிக்க வைத்தது! அழுத்தமான, தைரியமான, எதற்கும் அலட்டிக் கொள்ளாதவளாக, எதற்காகவும் கலங்காதவளாகவும் தன்னுடைய கதாப்பாத்திரத்தினை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் நடிகை சுஜாதா!❤️ ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவை விட எனக்கு இந்த அனுபமா கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது!


கொடுமைக்கார மகனுக்கு எதிராகவும் மருமகளுக்கு ஆதரவாகவும் அவள் வீட்டிலேயே பணிப்பெண்ணாக சேர்ந்து வேலை செய்யும் மாமியார்! ஒரு தலையாக காதலித்தாலும் தான் நேசிக்கும் பெண்ணிற்கு எப்போதும் துணையாகவும் அவளின் நலன் விரும்பியாகவும் வலம் வரும் ஜனார்த்தனன் என்கிற ஜானி கதாபாத்திரத்தில் கமல்!


ஒரு சமயத்தில் இருவரும் காதலித்தாலும் காலத்தின் கட்டாயத்தில் இருவரும் இப்போது பிரிந்து விட்டாலும் மீண்டும் சந்திக்கும் நேரும் போதும் கண்ணியத்துடன் வலம் வரும் கதாபாத்திரத்தில் பரணியாக ரவிக்குமார்! 


அனுபமா கதையின் இறுதியில் தன் மகனை ‘பரத்’ என்று அழைக்கும் போது நேற்றைய வகுப்பில் நான் கற்றுணர்ந்த மகாகவி காளிதாசரின் அமரகாவியமான சாகுந்தலத்தை நினைவூட்டியது! அந்த சகுந்தலாவைப் போல தான் இந்த கதையின் நாயகி அனுபமாவும் என்று உணர்த்துகிறாரோ!


காற்றுக்கென்ன வேலி கடலுக்கு என்ன மூடி! கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடைந்து விடாது! 


இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்….!


இப்படி ஓர் தாலாட்டு பாடவா! அதில் அப்படியே என் கதையை கூறவா!


‘அவர்கள்’ என்று இந்த படத்தின் தலைப்பு தேர்வு செய்தது முதல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் அர்த்தம் பொதிந்த பாடல்கள், காட்சிகள், கதை என்று நிறைய நிறைய ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கும் பெட்டகமாக திகழும் திரைப்படம்! நான் ரசித்த திரைப்படம்! நீங்கள் இதுவரை பார்த்ததில்லை என்றால் நிச்சயம் பாருங்களேன்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

24 மார்ச் 2026


5 கருத்துகள்:

  1. படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.  அதுவும் இனிமையான ஒரு மாலைப்பொழுதில் தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் மாலையில் போடும் திறந்தவெளி திரையில்.

    பாலச்சந்தர் தன் நாயகிகள் இன்ப வாழ்வைத்த தொடர்ந்து விடக்கூடாது என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார்!!  அரங்கேற்றம் நாயகி, கவிதா, சிந்து, நந்தினி...   யாருக்கும் அவர் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவில்லை!!!

    'இப்படியோர் தாலாட்டு பாடவா' பாடலே அருமை.  அதில் பாடலின் இறுதியில் அருமையானால் Flute Bit வரும்.  ரசித்தீர்களா?

    இன்னொரு சூப்ப்ப்ப்பர் பாடலை விட்டு விட்டீர்களே..  "அங்கும் இங்கும் பாதை உண்டு..  இன்று நீ எந்தப் பக்கம்?"  கண்ணதாசன் பாடல்கள். SPB.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் படம் பார்த்த இனிமையான அனுபவமும் தங்களின் கருத்துகளும் அருமை.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. வாசகம் அருமை.
    படம் பார்த்து இருக்கிறேன்.
    பாடல்கள் நன்றாக இருக்கும்.

    சந்தேகம் எனும் பேயால் பீடித்திருக்கும் sadist கணவனான ரஜினி! //
    இந்த மாதிரி ஆட்கள் அந்தகாலத்திலிருந்து இப்போதும் இருக்கிறார்கள்.
    வாழவும் மாட்டார்கள் , தன்னை விட்டு போன மனைவியை வாழ்வும் விடமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா. அப்போதும் சரி! இப்போதும் சரி! மனிதர்கள் மாறுவதில்லை...: (

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன்.

    இந்தப்படம் நான் தொலைக்காட்சியில் ஞாயறு மாலை நேர ஒளிபரப்புகளில் பார்த்துள்ளேன். பாலசந்தர் அவர்களது இயக்கத்தில் வந்த படங்கள் அனைத்தையும் ஒரு சில படங்களை தவிர்த்து ஒரளவு பார்த்து ரசித்திருக்கிறேன். நல்ல இயக்குனர். இந்தப்படத்தை யும் அருமையாக இயக்கியுள்ளார். படத்தின் பாடல்களும் நன்றாக இருக்கும். . உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....