வியாழன், 19 மார்ச், 2026

சில தகவல்கள் - சதுரகிரி பயணம் - பகுதி ஏழு - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஆண்டாள் தரிசனம் - பறவைகளின் குரல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….  இந்தத் தலைப்பில் இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் அனைவரும் படித்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதிலும் குறிப்பாக பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்தாக்கத்தில் வந்த நான்கு பகுதிகளையும் மிகவும் ரசித்திருப்பீர்கள்.  இது வரை வந்த இந்தத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே. 


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஒன்று


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி இரண்டு


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி மூன்று


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி நான்கு


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஐந்து


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஆறு



சதுரகிரி மலைக்கு நான் செல்வது இது இரண்டாவது முறை.  அதனால் ஒவ்வொரு இடத்திலும், முதல் முறைக்கும் இரண்டாம் முறைக்கும் ஏதேனும் மாறுதல்கள் இருக்கிறதா என்பதை பார்த்தபடியே சென்றேன்.  வனத்துறையினர் புதியதாக சில பதாகைகளை வைத்திருக்கிறார்கள்.  சந்தன மகாலிங்கம் சன்னதி வரை இருக்கக்கூடிய Water Points, அந்தந்த இடங்களின் பெயர்கள் என அனைத்தும் எழுதி இருக்கிறது. ஒரு விதத்தில் புதிதாக வரக்கூடிய நபர்களுக்கு இது வசதியாக இருக்கும். சமீபத்தில் தான் எழுதி இருப்பார்கள் என்று தோன்றுகிறது - அதனால் இன்னும் மெருகு குறையாமல் இருக்கிறது.  காலப் போக்கில் மாறலாம் - சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தால் இன்னும் சில மாதங்களில் இந்தப் பதாகைகள் பல்லை இளிக்கலாம்! நம் ஊரில் இருக்கும் பிரச்சனை - சரியான பராமரிப்பு இல்லாதது என்று கூட சொல்லலாம். 



வடக்கே இருக்கும் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் அழகாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அந்த இடம் குறித்த பல தகவல்களை ஆங்காங்கே எழுதி வைத்திருப்பார்கள்.  ஆனால் அது போன்ற பதாகைகள் இங்கே குறைவு என்று தோன்றுகிறது.  உதாரணத்திற்கு சதுரகிரி மலையை எடுத்துக் கொண்டால் சின்னப்பசுக்கிடை, கோணத்தலைவாசல் என்றெல்லாம் எழுதி இருப்பார்கள்.  எதனால் இந்தப் பெயர் வந்தது போன்ற தகவல்களை - அதிகாரபூர்வமான தகவல்களை அந்த இடங்களில் சிறு குறிப்பாகவேனும் எழுதி வைக்கலாம். இப்போது இருக்கும் அறிவியல் முன்னேற்றத்தில் இதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.  நிறைய எழுத வாய்ப்பில்லையா, எழுதி இருக்கும் இணையதளத்திற்கான QR Code கொண்ட பலகையையாவது அந்தப் பகுதிகளில் நிறுவலாம்.  மலைப்பகுதியில் Mobile Signal கிடைப்பது அரிது என்றாலும் படம் எடுத்துக் கொண்டு வந்து பின்னர் கூட படிக்கலாம்.  






ஆனால் இன்னமும் ஒரு விஷயமும் என் மனதில் தோன்றியது. சரியான வசதிகள் இல்லாதபோதே சிலர் பக்தி நோக்கத்தில் இங்கே வராமல் சுற்றுலா போல வருகிறார்கள். மலையின் புனிதம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் மலையையும் அதன் புனிதத்தினையும் சிதைக்கும் விதமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.  இங்கே வசதிகள் அதிகரித்தால் புனிதத்திற்கு மாறாக சுற்றுலாத் தலமாக மாறி எல்லா வித அசிங்கங்களும் அரங்கேறலாம்.  அதனால் இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூடத் தோன்றியது.  Basic Facilities என்று சொல்லக்கூடிய பாத்ரூம் வசதிகள் மட்டுமாவது இருந்தால் போதும்.  சமீபத்தில் வாசித்த பாஷாண லிங்கம் புத்தகத்தில் கூட, வீபூதி தாத்தாவிடம் ஒரு சித்தர் சொல்வது போல சில வரிகள் வரும் - மலைக்கு யாரும் வரவேண்டாம்… இங்கே வந்து இதன் புனிதத்தினைக் கெடுக்க வேண்டாம் என்று சொல்வார்.  அது நிதர்சனமான ஒரு விஷயமாகவே எனக்கும் தோன்றியது.  







எது எப்படி நடந்தாலும், நம் நோக்கம் நல்லதாகவே இருந்தால் போதுமானது என்ற கொள்கையுடன் தான் எனது பயணங்கள் அமைகின்றன.  வழியில் இருக்கும் ஒவ்வொரு ஆலயத்திலும் நெக்குருக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவது ஒன்றைத் தான் - “ஆண்டவா, எல்லோரையும் நல்லபடியாக வைத்திரு!” என்பது மட்டுமே வேண்டுதலாக இருக்கும்.  நமக்கு என்ன தரவேண்டும் என்பதை அவன் அறியாதவனா என்ன?  கோரக்கர் குகை பகுதியில் சிவபெருமான் லிங்க வடிவிலும் அருகே கோரக்கரின் சிலை ஒன்றும் இருக்க, பின்புறத்தில் கூர்ந்து கவனித்தால் தெரிந்த ஒரு பைரவரின் வாகனுமமும் இருந்தார்கள்.  அங்கே சாஷ்டாங்கமாக படுத்தபடியே வணங்கும்போதும் வேண்டியது எல்லோருடைய நலனை மட்டுமே. அந்தப் பகுதியில் அமைதியாக அமர்ந்து, வேறு எந்த வித எண்ணமும் மனதை ஆக்கிரமிக்காது இறை நினைவுடன் இருந்தாலே மனதில் ஒரு வித புத்துணர்வு வந்துவிடுகிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். மலையில் இருக்கும் பல மூலிகைகளின் வாசம் அங்கே வீசும் காற்றில் தவழ்ந்து வந்து நம் நாசிகளை அடையும். அதற்கே நிறைய பலன்கள் உண்டு.  அங்கேயே அமர்ந்து சில நிமிடங்களேனும் தியானம் செய்தால் நல்லது.







மலைப்பாதையில் ஆங்காங்கே இருக்கும் தரைக் கடைகளில் - உள்ளூர் மக்களால் நடத்தப்படும் கடைகளில் சுக்குக் காப்பி, எலுமிச்சை ஜூஸ், அன்னாசிப் பழம், மாங்காய், கடலை மிட்டாய், க்ளூக்கோஸ், முடக்கத்தான் சூப், தண்ணீர் (பிளாஸ்டிக் பாட்டில்களில் 🙁) என அனைத்துமே கிடைக்கின்றன.  நாம் தண்ணீர் எடுத்துச் செல்லாவிட்டாலும் இது போன்ற கடைகளில் நாம் வாங்கிக் கொள்ளலாம்.  கீழே இருக்கும் கடைகளில் நீண்ட குச்சிகள் கிடைக்கும். மலையின் மீது ஏறிச் செல்லும்போதும், மலையிலிருந்து கீழே இறங்கும்போதும் இந்தக் குச்சிகள் நமக்கு ஒரு துணையாக இருக்கும் - குறிப்பாக மலையிலிருந்து இறங்கும்போது.  மலையேற்றம் குறித்து எழுதியபோது நிறைய பேரின் கேள்வி எவ்வளவு நேரம் எடுக்கும், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமா என்பதற்கெல்லாம் பதில்…. தண்ணீர் கடைகளில் கிடைப்பது தவிர ஆங்காங்கே வனத்துறை தொட்டி கட்டி, பைப் வைத்திருக்கிறார்கள்.  அங்கே மலையில் கிடைக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது.  உணவு மலையடிவாரத்திலும், சுந்தர/சந்தன மகாலிங்கம் சன்னதிக்கு அருகே இருக்கும் கஞ்சி மடம் போன்ற அன்னதானக் கூடங்களில் மட்டுமே உணவு கிடைக்கும்.  தனியார் கடைகள் இல்லை. 





நடந்து செல்லும் போது வாய் வறண்டு போகாமல் இருக்க, புளிப்பு மிட்டாய், கடலை மிட்டாய், க்ளூக்கோஸ் போன்றவற்றை உங்கள் முதுகுச் சுமை பைகளில் வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் சாப்பிடும்போது கொஞ்சம் எச்சரிக்கை தேவை - ஏனெனில் குரங்குகள் மலைகளில் அதிகம் நடமாடும்.  அவை உணவைப் பார்த்தவுடன் உங்கள் அருகே வந்து பிடுங்கலாம்.  அவற்றுடன் சண்டையிடுவது, அவற்றைக் கோபப்படுவது சரியல்ல.  எங்களது இந்தப் பயணத்தில் இரண்டு நபர்கள் அதனுடன் சண்டையிட்டு முதுகிலும் கால்களிலும் குரங்குகளின் நகக்கீறல்களை பரிசாகப் பெற்றார்கள் - ஒருவருக்கு ரத்தமே வந்தது.  இரண்டு பேரிடமும் உடனேயே தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளச் சொன்னதோடு, மலையை விட்டு இறங்கியதும், மருத்துவரிடம் சென்று At least TT injection ஆவது போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னோம்.  குரங்கு கடித்தாலும் Anti-Rabies Injection போட்டுக் கொள்வது அவசியம்.  ஆனால் நம் மக்கள் போகும் வழியில் அவற்றை வம்புக்கு இழுத்த வண்ணமே இருந்தார்கள் - மாக்கள் - வேறு என்ன சொல்ல?






கடைசியாக, சதுரகிரிக்கு இதுவரை இரண்டு முறை பயணித்து விட்டேன்.  இருந்தாலும் அங்கே மீண்டும் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  யாரேனும் என்னுடன் வரத் தயார் என்றால், அங்கே சென்று வர வேண்டும் என்று கேட்டால், சரி போகலாம், வாருங்கள் என்று சொல்லிவிடுவேன் என்றே தோன்றுகிறது.  ஒரு சில இடங்களுக்கு எத்தனை முறை சென்றாலும் மனதில் அலுப்பு தோன்றுவதில்லை - அப்படியான இடங்களில் ஒன்றாக எனக்கு இருந்த இடம் - தமிழகத்தில் இருந்த இடம் - திருவண்ணாமலை.  அந்த வரிசையில் இப்போது சதுரகிரி மலையும் சேர்ந்துவிட்டது.  சுந்தர/சந்தன மகாலிங்கத்தின் அருள் இருந்தால் மீண்டும் அங்கே சென்று இறைதரிசனம் பெற்று வருவேன்.  யாருக்கேனும் செல்ல ஆசை இருப்பின் சொல்லுங்கள் - பத்மநாபன் அண்ணாச்சி சொன்னது போல டப்பு, டிப்பு டப்பு என ஒரு திட்டம் போட்டு சென்று வந்துவிடலாம்…..


ஏற்கனவே சென்ற சதுரகிரி பயணம் குறித்து இங்கே எழுதி இருக்கிறேன் என்பதால் தகவல்கள் பெரிதாக இங்கே பகிரவில்லை. முன்னர் சென்ற பயணம் குறித்த பதிவுகள் உண்டு.  தவிர அந்தப் பதிவுகளை மின்புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன்.  முடிந்தால் வாசித்துப் பாருங்களேன்.  இந்த முறை செய்த பயணம் குறித்து நண்பர் பத்மநாபன் அவர்கள் விரிவாக எழுதி இருப்பதால் நானும் எழுத வேண்டாம் என்ற நோக்கத்துடன் சில தகவல்களை மட்டும் எழுதி இருக்கிறேன்.  இந்தத்  தகவல்கள் சதுரகிரி செல்ல நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே நல்க எனது பிரார்த்தனைகள்…  வேறு பயணம் வாய்க்குமெனில் அந்தப் பயணம் குறித்த பதிவுகளுடன் விரைவில் சந்திப்போம்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

19 மார்ச் 2026


16 கருத்துகள்:

  1. சென்றமுறை சென்றபோது பார்த்த இடங்கள் அவ்வளவு துல்லியமாக மாறுதல்களை கணிக்கக் கூடிய அளவு நினைவிருக்கிறதா?  அட..

    பதிலளிநீக்கு
  2. அந்ததந்த இடங்கள் பற்றிய சிறு குறிப்புகள் நல்ல யோசனை.  யாரிடம் சொல்வது?  யார் செய்வார்கள்?  ஆனால் நீங்கள் அடுத்து சொல்லும் வரிகளும்  சரியென்றே  படுகிறது.  நம் மக்கள் அவ்வளவு மோசமானவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  3. இப்படி குரங்குகளிடம் வம்பிழுக்கும் குரங்குகளால் கூட வரும் நமக்கும் தொல்லை! 

    படங்களும் விவரங்களும் அருமை, சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  4. நிறைவா எழுதியிருக்கீங்க.

    படங்கள், அதிலும் கோரக்கர் சிவலிங்கம் படம் மிகவும் மனதைக் கவர்ந்தது. யுகாதி அன்று அருமையான படம்.

    பதிலளிநீக்கு
  5. எங்க வளாகத்துல எல்லாம் படிக்கற குழந்தைகள் பசங்க. ஆனாலும் சிப்ஸ் பாக்கெட் மற்றும் மற்ற குப்பைகளை பொது இடத்தில் போடறாங்க. நீச்சல் குளத்தின் சுற்றுப் பகுதியில் அழகுக்காக வைத்திருக்கும் கருப்புநிற கூழாங்கல்ல தண்ணீல போடறாங்க. இவங்களே இப்படீன்னா, நிறைய மக்கள், அதிலும் படிக்காதவர்கள் வந்து போனா, எப்படி சுத்தம் சுகாதாரம் ஒழுங்கு இவற்றைக் கடைபிடிக்க வைக்கிறது? படிக்காதவங்கன்னு எழுதியது தவறு. படிச்சவங்களும் இப்படித்தான் செய்யறாங்க, படிக்காதவங்களைவிட

    பதிலளிநீக்கு
  6. விமான நிலையங்கள்ல, கேபின் பை என்ன சைஸுல இருக்கணும் என்பதற்கு ஒரு மாதிரி அளவு வைத்திருப்பாங்க. நம்ம பை அதுக்குள்ள போகும்படி இருக்கணும்.

    அது மாதிரி, இந்த மலையேற்றத்துக்கு இந்த சைஸுல ஆள் இருந்தால்தான் அழைச்சுக்கிட்டுப் போவேன்னு ஏதேனும் அளவு வச்சிருக்கீங்களா? நீங்களும் பத்னாபன் அண்ணாச்சியும் மலையேற்றத்துக்கு தகுந்தபடி உடம்பை வச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  7. பாதைகளைப் பார்க்கும்போது அஹோபிலம் மலைப்பாதைதான் என் நினைவுக்கு வருது.

    திருவண்ணாமலை பயணம் எழுதியிருக்கீங்களா? இருந்தால் சுட்டி தாங்க. அதுபோல இதற்கு முன் சென்ற சதுரகிரி பயணச் சுட்டியும் இந்தப் பதிவுகள்ளயே இணைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. காலையிலேயே பதிவை வாசித்துவிட்டேன் இன்று இருஐடிக்களும் இங்கு வேலை செய்யலை கருத்து போட மறுத்தன....என்னன்னு தெரியவில்லை.

    இப்ப மீண்டும் முயற்சி...

    வெங்கட்ஜி, இந்த மலை என் லிஸ்டில் அதாவது நினைவு தெரியும் நாட்களுக்கு முன் சென்றது என்பதால் நினைவு தெரிந்த நாட்ளில் இருந்து செல்வதற்கு லிஸ்டில் உண்டு. இடையில் சான்ஸ் வந்து நழுவியது. இப்ப சான்ஸ் ரொம்பக் கம்மி....நான் தனியாகக் கூடப் பயணம் செய்துவிடுவேன் ...ஆனால் அதற்கும் இப்ப வழியில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பரிந்துரைகள் அனைத்தையும் டிட்டோ செய்கிறேன் ஜி.

    பர்வதமலைப் பயணம் போனப்ப இதை எல்லாம் கடைப்பிடித்தோம். அதுவும், எனக்கு சர்க்கரை குறையும் சான்ஸ் உண்டு என்பதால் நான் எப்பவும் கையில் இனிப்பிற்குப் பதிலாக உலர்பருப்புகள், பழங்கள் வைத்திருப்பேன்.

    நீங்க சொல்றாப்ல குரங்குகளை நாம் வம்புக்கு இழுக்காமல் போக வேண்டும். அவர்களின் முன்னால் பொட்டலங்களைத் திறக்கக் கூடாது.

    பர்வத மலை போன போது ஓரிடத்தில் சற்று ஓய்வெடுத்த போது நான் அமர்ந்திருந்தப்ப என் பக்கத்தில் எங்களுடன் வந்தவர்தான் உட்கார்ந்திருப்பது போலத் தெரிய நானும்....இந்தாங்க என்று பேசிக்கொண்டே கடலையை நீட்ட!!!!!! டக்குனு உணர்வு வந்து பார்த்தால் நம்மவர்!!! அட என்று பதற்றமில்லாமல் கடலையை அவருக்குக் கொடுத்துவிட்டு அவரது கவனத்தைத் திருப்பிவிட்டு மெதுவாக அங்கிருந்து எழுந்தேன்.

    பதற்றம் கூடாது. அது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வெங்கட்ஜி, என்னைப் பொருத்தவரை நீங்கள் சொன்னதையே ஆமோதிப்பேன்...அதாவது சில மாற்றங்கள் வசதிகள் செய்யாமல் இருப்பதே.

    சதுரகிரி மலையின் ரகசியங்களைப் போல அம்மலை ரகசியமாக இருப்பதே மேல். நம்ம மக்களுக்கு அந்த அளவு விழிப்புணர்வு இல்லை ஜி. ஒரு பொது இடத்திற்கு, இப்படியான புனிதமான இடத்திற்குச் செல்லும் போது எப்படி நாம் செல்ல வேண்டும் என்று.

    எனவே எனக்குத் தோன்றும் அடிக்கடி....இமயமலையில் கூட, ரொம்ப வசதிகள் செய்து சுற்றுலாத்தலமாக ஆக்காமல், குறிப்பிட்ட சிலர் அதன் ரகசியங்களையும், புனிதத்தையும் காப்பாற்றுபவர்கள் சென்றால் போதும் என்று நினைப்பது உண்டு. காரணம் சுற்றுலாத்தலமாக மாறும் போது உணவகங்கள் பெருகுகின்றன. தங்கும் விடுதிகள் பெருகிவிடும். குப்பைகள் பெருகும். அதனால் மலைகளுக்கும் அந்தச் சூழலுக்குமே கேடுதான். நதிகளுக்கும் கேடுதான்.

    எனவே சதுரகிரி சதுரகிரியாகவே இருக்கட்டும் என்பேன். இன்னும் தடைகள் கொண்டுவந்தால் கண்டிப்பாக வரவேற்கலாம். குறிப்பாக உள்ளே நுழையும் முன் குடித்திருக்கிறார்களா என்ற சோதனை உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. குரங்குகளினால் காயம் ஏற்பட்டால் நீங்கள் சொல்லியிருபப்தை அப்படியே டிட்டோ செய்கிறேன் ஜி.

    கண்டிபபக Anti Rabies ஊசி எடுத்துக் கொள்வது நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. திருவண்ணாமலையும் எனக்கு ரொம்பப் பிடித்த இடம். இங்கு வந்த பிறகு செல்ல வேண்டும் என்று இரு முறை திட்டம் போட்டு முடியாமல் போனது. என் தங்கையும் நானும் மட்டும் போவதாகவும் இருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சுனை, பாறை இடுக்கில் சிறிய ஓடை பாய்வது, கோரேக்கர் சிவலிங்கம்....மலைப்பாதையின் படங்கள் எல்லாமே மனதைக் கவர்கின்றன.

    நல்ல காலம் மலையில் தனியார் உணவகங்கள் இல்லை என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    //மலைக்கு யாரும் வரவேண்டாம்… இங்கே வந்து இதன் புனிதத்தினைக் கெடுக்க வேண்டாம் என்று சொல்வார். அது நிதர்சனமான ஒரு விஷயமாகவே எனக்கும் தோன்றியது. //

    டிட்டோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இன்றைய வாசகம் படம் பயங்கரமாக இருக்கிறது.
    பணம் , பணம் என்று அதன் பின்னால் ஓடினால் அன்புக்கு நேரம் இல்லைதான்.

    பதிலளிநீக்கு
  15. இது போன்ற மலைபாதைகளில் வழிதடங்கள் பேர் அழியாதமாதிரி எழுதி வைப்பது நல்லது.
    பாத்ரூம் வசதிகள் இருந்தால் நல்லது. மலைபாதையை சுத்தமாக வைத்து கொள்ள உதவும்.
    வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என்றாலும் நம் மக்கள் கொடுப்பார்கள், அப்புறம் குரங்குகளால் அவதி படுவார்கள்.

    இப்போது வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகள் தொந்திரவு அதிகமாக இருக்கிறதாம். பக்தர்கள் வாழைபழங்களை கொடுத்து பழக்கி விட்டார்கள்.


    பதிலளிநீக்கு
  16. மலைபாதை படங்கள், கோரக்கர் குகையில் தரிசனம் அருமை.
    போகும் வழியில் குரங்குகளால் ஏற்படும் துன்பங்களை வரவழைத்து கொள்ள கூடாது என்ற எச்சரிக்கையும் அனைவருக்கும் உதவும்.

    மீண்டும் சதுரகிரி பயணம் அமையட்டும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....