அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் நடை தொடங்கியது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பௌர்ணமி நிலவு - 04-03-2026:
காலை நேர நடையின் போது கொஞ்சம் கொஞ்சமாக கீழே சென்று கொண்டிருக்கும் முழுநிலவைக் காண முடிந்தது. பௌர்ணமி அன்று நிலவை படம் எடுப்பது பிடிக்கும் என்றாலும் பெரும்பாலும் எடுக்க வாய்ப்பு அமைவதில்லை. கேமரா கொண்டு எடுக்க இப்போதெல்லாம் நினைப்பதே இல்லை. அது ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருக்கிறது! 🙁அலைபேசி வழி படம் பிடிக்கலாம் என்றால் பெரிதாக zoom செய்ய முடிவதில்லை - அப்படிச் செய்தால் படத்தின் தரம் நன்றாக இருக்காது - Pixel உடைந்து போய் பூச்சி பறப்பது போல புள்ளிபுள்ளியாக இருக்கும். எடுத்த நமக்கே அந்தப் படம் பிடிக்காமல் இருக்க, அதனை எங்கே பகிர்ந்து கொள்வது? காலை நேர நடையின் போது இல்லாள் - நிலவைப் பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறதே? படம் எடுக்கவில்லையா? என்றார். எடுத்தேன்! No second thoughts when there is a command! 🙂
வழமை போலவே வீட்டிலிருந்து காலை ஐந்தரைக்கு புறப்பட்டு அரங்கனின் ஆலயத்தின் நான்காம் பிராஹாரமான உத்திர வீதிகளில் நடை. காலை நேரத்தில் கார்ப்பரேஷன் உழைப்பாளிகள் மக்கள் தங்கள் வீட்டின் முன்னே போட்டு வைத்திருந்த குப்பைகளையும், பக்தகோடிகள் தெருவில் எறிந்து சென்ற குப்பைகளையும் கூட்டி அவற்றை சிறு பேட்டரி ரிக்ஷாக்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். காலையிலேயே உழைப்பு தொடங்கி விடுகிறது இந்த நண்பர்களுக்கு! அவர்கள் கடமை காலையில் தொடங்கிவிட்டாலும், நாள் முழுவதும் குப்பையை வீசி எறிந்து விட்டு ”ஊர் முழுக்க குப்பை! சுத்தமாவே இல்லை” என்று குறை சொல்பவர்கள் மட்டும் இங்கே இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டபடியே சென்று கொண்டிருந்தோம். விதம் விதமான மனிதர்கள்… ஒன்றும் சொல்வதற்கில்லை. தங்கள் வேலைகளைச் செய்யாமல் மற்றவர்கள் வேலைகளைச் செய்யவில்லை என்று குறை சொல்வதை மட்டுமே முழு நேர வேலையாகச் செய்பவர்கள்.
நடந்து கொண்டே, பறவைகளின் ஒலிகளைக் கேட்டு ரசித்தபடியே சென்று வருவது ஒரு சுகானுபவம். அதுவும் அரங்கனின் ஆலயத்தின் திருச்சுவர்களில் இருக்கும் கிளிகளின் குரல் மனதை மயக்கும் வண்ணம் இருக்கும். ஒரு வீட்டின் வாசலில் ஒரு சிறு மரம் - அங்கே ஒரு பதாகை - கிளிகளையும் இயற்கையையும் பாதுகாப்போம் என்று! ஆனால் சற்றே முரணாக, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு Barricade! வீட்டின் முன்னே வாகனம் நிறுத்த அனுமதி இல்லை என்ற பதாகையுடன் நிறைய வீடுகளை இங்கே காணலாம். அரங்கனின் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், என்னதான் சாலை ரோடில் வாகன நிறுத்தம் இருக்கிறது என்றாலும், உத்திர வீதி வரை வாகனத்தில் வந்து கோபுர வாயில் அருகே தான் இறங்கிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பவர்கள்! அங்கேயே வாகனத்தினையும் நிறுத்தி விடுவதால் இப்படியான பதாகைகள் வைக்க வேண்டியிருக்கலாம். ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை - நாள் முழுவதும் வாகனங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்தால், வெளியே நடமாட முடிவதில்லை என்பது வீட்டினரின் எண்ணமாக இருக்கலாம்!
காலை நேர நடை - எங்களுக்குள் பேசிக்கொள்வதற்கான நேரம்! அலுவலக விஷயம், நாட்டு நடப்பு என எதை எதையோ பேசியபடி நடப்பது வழக்கமாக இருக்கிறது. இன்றைக்கும் இப்படியான விஷயங்கள். கோபுரத்தில் பாருங்களேன் - இந்தச் சிற்பத்தினை வடித்ததற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இந்தச் சிற்பத்திற்கான என்ன கதை? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார் இல்லத்தரசி. சில தெரிந்த கதையாக இருக்க, பல தெரியாத விஷயமாக இருக்கும்? எதற்காக இந்தச் சிற்பம்? அதன் கதை என்ன? இன்றைய காலை கூட ஒரு கோபுர சிற்பம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். கிருஷ்ண லீலை குறித்த ஒரு சிற்பம் - கோபுரங்களை நின்று நிதானித்து பார்த்துக் கொண்டிருந்தால் வெளியூர் போல இருக்கிறது என சிலர் நம்மை பார்த்தபடியே கடந்து போவார்கள்! 🙂 இதுல என்ன இருக்குன்னு இப்படி பார்த்துட்டு நிக்கறாங்க! என்பது போலவே அவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வை! பார்த்தால் பார்க்கட்டும் நாம் நம் வேலையைக் கவனிப்போம் என்று நாங்கள் கோபுர சிற்பங்களைக் கவனிப்போம்.
திரும்பி வரும்போது அந்தக் காலை நேரத்திலேயே “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்பது போல எதிரே மணி ஓசையுடன் யானை வந்து கொண்டிருந்தது. சிறு காணொளி எடுத்தேன் - அது மேலே! நிலவு, கோபுரங்கள், யானை என அனைத்தையும் பார்த்தபடி வீடு திரும்பினோம். நடை நல்லது! ஆதலால் தொடர்ந்து நடப்போம்!
*******
பூவில் மோதிரம் - 05-03-2026:
காலை நேரம் நடக்கும் உத்திர வீதியிலும் இன்னும் சில பாதைகளிலும் வாசனை தரும் மலர்கள் தரும் மரங்கள் உண்டு. சற்று தொலைவிலிருந்தே அப்பூக்களின் வாசம் நம் வாசிகளை அடைந்து பரவசம் கொள்ளச் செய்யும். ஆங்கிலத்தில் Plumeria என்றும் தமிழில் நெல சம்பங்கி என்றும் இந்தப் பூவை அழைப்பது வழக்கம். ஹிந்தியில் ஃப்ரங்கிபானி என்ற பெயரில் கூட அழைப்பார்கள். இதே வகையைச் சார்ந்த ஒரு மரத்தின் இலை/பூ காலாசூச்சி என்று கூட அழைப்பதுண்டு என்பதெல்லாம் இணையம் சொல்லும் தகவல். அது அப்படியே இருக்கட்டும். காலை நேர நடைப்பயிற்சியில் இந்தப் பூமரம் சில இடங்களில் இருக்கிறது. சில மீட்டர் தொலைவிலிருந்தே பூக்களின் வாசம் நம் நாசியை வந்தடைய, இல்லத்தரசி அந்தப் பூ குறித்த அவரது அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்தார். சிறு வயதில் வீட்டின் அருகே இருக்கும் இப்பூவை மோதிரம் மாதிரி அணிந்து கொள்வோம் என்று சொன்னார்.
ஒரு மரம் தாண்டி, இரண்டாம் மரம் அருகே வந்த போது, அந்த மரத்தின் கீழே ஒரு தள்ளுவண்டி நிறுத்தியிருந்தது. அந்த வண்டியின் மீது சில பூக்கள் விழுந்து கிடக்க, அதனை நெருக்கத்தில் படம் எடுத்தேன். அதனை இல்லத்தரசியிடம் கொடுக்க, சிறு வயது நினைவாக, விரல்களுக்குக்கிடையே மோதிரம் போல வைத்து அழகு பார்த்துக் கொண்டார். அதனை அப்படியே நான் அலைபேசி கேமராவில் படம் பிடிக்க அந்தப் பக்கம் நின்றிருந்த ஒரு மூதாட்டிக்கு அப்படி ஒரு சிரிப்பு! எதற்காக அந்த சிரிப்பு - “இதுங்க பண்றத பார்த்தியா? சின்னப் புள்ளைங்க மாதிரி!” என்று நினைத்து சிரித்தாரோ என்று ஒரு சம்சயம். சரி எங்களால் அவரும் மகிழ்ச்சியாக இருந்தாரே என்று நினைத்தபடி நாங்களும் சிரித்துக் கொண்டே அந்த இடம் விட்டு நகர்ந்தோம். ஒவ்வொரு நாள் காலையும் ஒவ்வொரு வித அனுபவம் தான் காலை நேர நடையின் போது!
இந்த தினத்திலும் வேறு ஒரு கோபுரம் படம் - ஒரு பக்கத்தில் நிலா - சின்னஞ்சிறியதாய்! இன்னும் சில படங்களும் எடுத்ததை இந்தப் பகுதியில் இணைத்திருக்கிறேன். முதல் நாள் போலவே இந்த தினத்திலும் நடை முடித்து வீடு திரும்பும்போது யானையின் தரிசனம் - ஆடி அசைந்தபடி வந்து கொண்டிருந்தது. யானையைப் பார்த்தால் எந்த வயதிலும் ஒரு சந்தோஷமும் மனதில் ஒட்டிக்கொள்கிறது தானே! மேலும் நடை தொடர்ந்தால்…. நடை நல்லது பதிவுகளும் தொடரும் - உங்களுக்கும் படிக்க ஆர்வமிருந்தால்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
6 மார்ச் 2026













செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுக்க தயங்க மாட்டோம். ஒவ்வொரு பொதுஜனமும் எப்போது இனி பொது இடங்களில் குப்பை போடக்கூடாது என்று தானாக திருந்துவார்களோ...
பதிலளிநீக்குகோபுரம் படங்கள் ஏற்கனவே பார்த்தது போலவே இருக்கின்றன. நிலவு படம் அருமை. நிலவு வந்து வானத்தை மட்டுமல்ல நம் உள்ளங்களையும் திருடிக்கொள்கிறது!
பதிலளிநீக்குவீட்டின் முன்னே வாகனங்கள்.. இன்னொரு அராஜகம்!
பதிலளிநீக்குமஞ்சள் கலந்த வெண்பூ அழகு.