செவ்வாய், 31 மார்ச், 2026

நடை நல்லது - இரண்டு கோபுரம் - சுத்தம் - சயனம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சமயபுரத்திற்கு ஒரு நடைப்பயணம்…. - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


திருவரங்கத்து கோபுரங்கள் - 25-03-2026:






திருவரங்கம் அரங்கனின் ஆலயத்தினைச் சுற்றி மொத்தம் எத்தனை கோபுரங்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  அந்தக் கோபுரங்கள் அனைத்தையும் ஒரு சேரப் பார்க்க முடியுமா?  என்றால் முடியும் என்பது பதிலாக இருக்கும்! ஆலயத்தின் உள்ளே ஒரு வசதி இருக்கிறது. பத்து ரூபாய் (இப்போதும் அவ்வளவு தானா இல்லை விலை அதிகரித்து விட்டார்களா?) கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டு சில படிகள் மேலே ஏறிச் சென்றால் மொட்டை மாடி மாதிரி இடத்தில் நின்று கொண்டு ஆலயத்தினைச் சுற்றி இருக்கும் எல்லா கோபுரங்களையும் பார்க்க முடியும்.  ஆலயத்திற்கு வரும் பெரும்பாலான பக்தர்களுக்கு இந்த வசதி குறித்து தெரிவதில்லை.  கண்ணைக் கட்டி விட்டது போல நேரே மூலவரையும் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்து விடுவார்கள்.  இது வரை இந்த கோபுரங்கள் தரிசனம் பார்த்ததில்லை என்றால், அடுத்த திருவரங்கப் பயணத்தில் சென்று தரிசித்து வாருங்களேன்!  சரி எதற்காக இந்த கோபுரங்கள் குறித்த தகவல் - சொல்கிறேன். 


எங்களுடைய நடையில் வார நாட்களில் உத்திர வீதியிலும், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதியில் சித்திரை வீதிகளிலும் நடை என்பதே பொதுவாக இருக்கிறது! இல்லை எனில் மேலூர் கிராமம் நோக்கிய நடையாக இருக்கும்.  அப்படி நடக்கும் போது நான்கு பக்கங்களிலும் இருக்கும் கோபுரங்கள் தனித்தனியே பார்ப்பது வழக்கம்.  வடக்கு வாசலில் இருக்கும் இரண்டு கோபுரங்கள் (மேல் பகுதி மட்டும்) ஒரு மூலையிலிருந்து திரும்பும்போது கண்களுக்குத் தெரியும்.  அந்த இரண்டு கோபுரங்கள் பிறகு அந்த சாலையிலிருந்து பார்க்கும்போது தெரியாது.  நேரடியாக நின்று இருபுறமும் திரும்பிப் பார்க்க முடியும் என்றாலும், சாலையின் ஒரு மூலையில் ஒரே சமயத்தில் இரண்டு கோபுரங்களையும் பார்க்க முடியும் என்பதால் அதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் அந்த மூலையிலிருந்து ஒரு நிழற்படமும் எடுத்தேன்! அது இந்தப் பதிவில்! 


ஒவ்வொரு ஊரிலும் சில சிறப்புகள், பார்ப்பதற்குரிய சில இடங்கள் இருக்கும்.  பெரும்பாலும் அவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடம் இல்லை.  இதே திருவரங்கம் ஆலயத்தில் நின்று நிதானித்து பார்க்க வேண்டிய இடங்கள், சிற்பங்கள், தகவல்கள் தான் எத்தனை உண்டு.  இந்தச் சிந்தனைகள் எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.  இன்றைய நடையிலும் இது குறித்து பேசியபடியே நடந்து கொண்டிருந்தோம்.  காலை நேரங்களில் இப்படி நடப்பது மனதுக்கு புத்துணர்வினைத் தருவதோடு, எந்தவித விசாரங்களும் இன்றி விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள உதவி செய்கிறது.  சில விஷயங்களை பேசுவதே அரிது என்றாகிப் போய்விட்டது - வீட்டு வேலைகள், பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் நாட்களில் விஸ்ராந்தியாக பேசுவதற்கான நேரம் குறைந்து கொண்டே இருக்க, இது போன்ற நடைப்பயணங்களில் பேசுவதற்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. 


கோபுரங்களை தரிசித்த படியே இன்றைய நடை நல்ல விதமாக முடிந்தது!  மேலும் தொடர்ந்து நடக்க வேண்டும்!  காலை நேரங்களை இன்னும் அழகாக்கும் இந்த நடை நிச்சயம் நமக்குத் தேவை!


*******


சுத்தம் - 24-03-2026:




எங்கள் வீட்டின் அருகிலேயே ஒரு சிறு மளிகைக் கடை இருக்கிறது. வாசலிலேயே ஒரு தேநீர் கடையும் உண்டு. கணவன் - மனைவி இருவருமாக சேர்ந்து கடையை நிர்வகிக்கிறார்கள். பொதுவாக இந்தக் கடையில் நாங்கள் எதுவும் வாங்குவதில்லை - எப்போதாவது ப்ரெட் வாங்குவதைத் தவிர!  பக்கத்தில் நிறைய Construction வேலைகள் நடப்பதால், வட இந்தியத் தொழிலாளிகள் இந்தக் கடையில் வந்து தேநீர் அருந்துவதும், தேவையான சில பொருட்களை வாங்குவதும் உண்டு.  கடைக் காரர் கொஞ்சம் வழிசல் பேர்வழி என்பதாலேயே அங்கே செல்வதற்கு பிடிக்காது!  காலை நேரத்தில் ஐந்து மணிக்கே எழுந்திருந்து பூஜை எல்லாம் செய்து கடையைத் திறந்து வைத்திருப்பார்.  ஆனால் இன்றைய காலை அவர் செய்த ஒரு வேலையைப் பார்க்க நேர்ந்தது - நல்ல வேளை இங்கே நாம் தேநீர் அருந்துவது இல்லை என்று தோன்ற வைத்தது அந்தக் காட்சி!


தேநீர் தயாரிப்பதற்குத் தேவையான பாக்கெட் பாலை பாத்திரத்தில் ஊற்றுவதற்கு, அந்தப் பால் பாக்கெட்டை தன் பல்லால் கடித்து இழுத்து, பிரித்து பாத்திரத்தில் விடுகின்ற காட்சியைப் பார்க்க நேர்ந்தது!  “அடேய்…. ஏண்டா இப்படி இருக்க! ஒரு கத்திரிக்கோல் கூடவா இல்லை உன் கடையில!” என்று யோசிக்க வைத்தது!  என்னதான் கடையில் அந்த நேரத்தில் அவரைத் தவிர யாரும் இல்லை என்றாலும், பல பேர் அங்கே டீ வாங்கிக் குடிப்பார்களே என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி பல்லால் கடித்து இழுக்கிறாரே என்று தோன்றியது. உண்மையாகவே பல கடைகளில் இப்படியான அசுத்த வேலைகள் நடக்கத்தான் செய்கிறது. கலப்படங்கள் இல்லாத கடைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  அந்த பயத்திலேயே பொதுவாக வெளியே செல்லும்போது எதையும் சாப்பிடத் தயக்கம் தான் வருகிறது.  


*******


சயனம் - 26-03-2026:






அரங்கன் அனந்தசயன கோலத்தில் இருப்பதைப் பார்க்க முடிவதில்லை.  உள்ளே அத்தனை கும்பல்! ஆனால் அரங்கன் ஆலயத்தின் ஐந்தாம் பிராஹாராத்தில் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் உலா வரும்போது பார்க்கும் காட்சி ஒன்று - சாலையோரத்தில் கட்டாந்தரையில் போர்வை மூடி சயனத்திலிருக்கும் ஒரு வீடற்றவர்.  ஒவ்வொரு நாளும் அவரைக் கடக்கும்போதும், அவர் யார்? எங்கிருந்து வந்திருப்பார்?  பகலில் பார்த்ததில்லையே, எங்கே செல்வார்? அவர் கதை என்ன என்ற சிந்தனைகள் மனதில் ஓடும்.  அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் காவிரிப் பாலம் பகுதியிலும் இப்படி நிறைய மனிதர்கள் படுத்திருப்பார்கள். அவர்களுக்கு ஏன் இந்த நிலை?  என்னதான் அவர்களுக்கு பிரச்சனை என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பேன்.  எத்தனை எத்தனை காட்சிகள் இப்படி! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் திருக்குறள் ஏனோ நினைவுக்கு வந்தது…


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

31 மார்ச் 2026


36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  2. திருவரங்கம் அரங்கனின் ஆலயத்தினைச் சுற்றி மொத்தம் எத்தனை கோபுரங்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தக் கோபுரங்கள் அனைத்தையும் ஒரு சேரப் பார்க்க முடியுமா? என்றால் முடியும் என்பது பதிலாக இருக்கும்! ஆலயத்தின் உள்ளே ஒரு வசதி இருக்கிறது. பத்து ரூபாய் (இப்போதும் அவ்வளவு தானா இல்லை விலை அதிகரித்து விட்டார்களா?)//

    தெரியும் ஜி. வந்திருக்கிறேன். சென்று எல்லா கோபுரங்களையும் ஒரு சேர பார்த்து படங்களும் போட்டிருக்கிறேன் தளத்தில். அப்போது கேமராவோடு சேர்த்து 50 ரூ கொடுத்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் அந்த வசதியைப் பயன்படுத்தி கோபுரங்களை பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. இதே திருவரங்கம் ஆலயத்தில் நின்று நிதானித்து பார்க்க வேண்டிய இடங்கள், சிற்பங்கள், தகவல்கள் தான் எத்தனை உண்டு. //

    ஆமாம் ஜி உள்ளே சென்றால் அரை நாளுக்கு மேல் இருக்கின்றன விஷயங்கள் பார்த்து தெரிந்து கொள்ள.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரை நாள் - அது கூட குறைவு தான் ஜி. நிறைய இடங்கள், தகவல்கள், கதைகள் உண்டு. தெரிந்தவர்கள் உடன் சென்றால் நிறைய விஷயங்கள் புதிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. பல ஹோட்டல்களிலும், கடைகளிலும் இப்படியான விஷயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. எதை எதையோ தொட்டுவிட்டு கையில் உறை அணியாமல் தொட்டு எடுத்துத் தருவதும் கூட அடக்கம். எனவே வெளியில் சாப்பிட ரொம்பவே யோசிக்க வைக்கிறது. தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே அல்லாமல் வெளியில் சாப்பிடாமல் இருப்பதே நல்லது என்று நாட்பட நாட்பட தோன்ற வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியில் சாப்பிடாமல் இருப்பதே நல்லது - 100% அதே தான். வேறு வழியில்லாமல் சாப்பிட நேரும்போதும் பார்த்துப் பார்த்து தான் சாப்பிட வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. சயனம் - முதல் படம் என்னவோ மலைப்பாம்பு போன்று இருந்தது டக்கென்று பார்க்க

    பாவம் இப்படி ரோட்டோரங்களில் படுத்திருப்பவர்கள். ஆனால் கூடவே வேறு சிந்தனைகளும் எழும் எனக்கும். அவர்கள் வாழ்வு அவர்கள் கையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் வாழ்வு அவர்கள் கையில் - உண்மை. ஆனாலும் பல சமயங்களில் வேறு சிலரின் கைகளில் சிக்கி வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடுகிறதும் நடக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. திருவரங்கம் கோவில் கோபுரங்கள்...  பொதுவாகவே கோவில் கோபுரங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அழகு.  படம் எடுத்து மாளாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. கோபுரங்கள் அலுப்பதே இல்லை. விதம் விதமான கோணங்களில், ஒவ்வொரு முறை பார்க்கும்போது புதியதோர் செய்தியைத் தரும் விதத்தில் இருப்பவை. நானும் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. திருவரங்கம் கோவிலில் மேலே சென்று அனைத்து கோபுரங்களையும் பார்க்கும் வசதி புதிய தகவல்.  நிச்சயம் இப்போது பத்து ரூபாயாக இருக்காது.  மினிமம் நூறாக்கி இருப்பார்கள். 

    இதுபோல தஞ்சை பெரியகோவில் கோபுரத்தின்மேல் ஏறும் வசதி ஒரு காலத்தில் இருந்தது.  அப்போது நான் தஞ்சையில் வசித்தும், அந்த வாய்ப்பைத் தவற விட்டேன்.  இப்போதும் அந்த வசதி இருக்கிறதா, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை திருவரங்கம் வந்தால் கோபுரங்களைப் பார்க்க செல்லுங்கள் ஸ்ரீராம். தஞ்சை கோபுரத்தில் மேலே சென்று பார்க்கும் வசதி - இப்போதும் இருக்கிறதா என்பதை தஞ்சை நண்பர்கள் தான் சொல்ல வேண்டும். தில்லியில் இருக்கும் குதுப் மினார் மேலே சென்று பார்க்கும் வசதி இருந்தது - அங்கே நடந்த ஒரு விபத்திற்குப் பிறகு யாரையும் மேலே செல்ல அனுமதிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. திருவரங்கம் கோவிலும் மிகப்பெரிது.  சட்டென நின்று நிதானித்து ஒரு நாளில் பார்த்து விட முடியாது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு வித கதை, வரலாறு உண்டு. நின்று நிதானித்துப் பார்ப்பதோடு, அந்த இடத்தின் சிறப்பை புரிந்து கொண்டு, அதைச் சொல்பவர்கள் உடன் சென்றால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும். ஒரு முறை வேளுக்குடி அவர்கள் திருவரங்கத்தில் உள்ள பள்ளிச் சிறுவர்களை அழைத்துச் சென்று கதைகளைச் சொன்னார். மகள் கலந்து கொண்டாள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. பல்லால் கடித்து பால் பாக்கெட் திறந்து..  இது போன்ற அசிங்கம் நிறைய இடங்களில் வெவ்வேறு ரூபங்களில் நடக்கிறதுதான்.  பெரிய ஹோட்டல்கள் உட்பட..  நம் கண்ணில் படாத வரை நம் மனதுக்கு நிம்மதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பார்த்தால் அசிங்கமே... நட்சத்திர ஹோட்டல்களில் கூட உள்ளே சென்று ஒரு முறை பார்த்த அனுபவம் உண்டு. யக்! என்று சொல்ல வைத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. சயனர்களைப் பார்த்தபோது நான் பார்த்த ஒரு சயனரும் நினைவுக்கு வருகிறார்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பார்த்த சயனர் - சொல்லுங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ஸ்ரீ ரங்கம் கோபுர தரிசனங்கள் பெற்றுக் கொண்டேன். கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    நாங்கள் இரண்டாவது முறை ஸ்ரீ அரங்கனை தரிசிக்க வந்த போது, (நான்கு வருடங்களுக்கு முன்பு) நீங்கள் சொன்ன இடத்தில் ரூ 100 க்கும் மேல் தந்து அந்த மொட்டை மாடி ஏறி அனைத்து கோபுரங்களையும் தரிசித்து வந்தோம். உங்கள் பதிவை படிக்கையில் அது நினைவுக்கு வந்தது.

    சுத்தம் எல்லாவிடத்திலுமே கம்மிதான். அவர்களை திருத்த இயலாது. புரிந்துதான் நாமும் வெளியிடங்களில். வேறு வழியில்லாத நிலையில் உணவருந்துகிறோம். அதனால், உபாதைகளையும் உடனே பெற்று வருகிறோம். என்ன செய்வது?

    சாலையோரம் படுத்திருப்பவர்களை பற்றி, நானும் இப்படி யோசித்திருக்கிறேன். ஆனால் அத்தனை வாகன, மற்றும் நடந்து செல்பவர்களின் காலடி ஓசைகள் என பல சத்தங்களையும் தாண்டி அவர்களின் நிம்மதியான உறக்கம் என்னை வியக்க வைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நிம்மதியான உறக்கம் - உண்மை தான். எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் உறங்குவதற்குக் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜி.

      நீக்கு
  12. சயனம்.... குடும்பத்தைப் பற்றிக் கவலை இல்லை. வானமே எல்லை.

    பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானமே எல்லை - உண்மை. முடிந்த போது வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. மூன்றாவது படம்...இரட்டை கோபுரம் அதில் ஒன்றில் ஒளி..மிக அருமையாக வந்துள்ளது.

    உத்தரவீதி என்பதற்கு, இராமானுஜர் வரலாற்றில், உள் துறை வீதி என்ற அர்த்தம் என்று படித்தேன். அதுவே மாறி உத்தரவீதி என்றாகிவிட்டதாம். கோயில் பணி புரிபவர்களுக்கான தெரு இதுவாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது கோபுரம் - வெள்ளை கோபுரம்...... முன் பக்கத்தில் விளக்குகள் உண்டு. அதன் ஒளி தான் தனியாக தெரிகிறது.

      உள்துறை வீதி...... புதிய தகவல். அப்போது சித்திரைவீதி, அடையவளைந்தான் தெரு ஆகிய வீதிகளுக்கு என்ன பெயர் இருந்தது?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. திருவரங்கம் கோயில்.... எவ்வளவு நெடிய வரலாறு உடைய கோயில். இப்போது இராமானுஜர் வந்தால் பார்த்து ஆச்சர்யப்படுவார், கோயில் வளர்ச்சியைப் பார்த்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல விதங்களில் வளர்ச்சி....... அது குறித்து என்ன சொல்லக்கூடும் என்று நானும் யோசிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. //தேவையான பாக்கெட் பாலை பாத்திரத்தில் ஊற்றுவதற்கு// கடைகளோ இல்லை யாத்திரையின்போதோ.... மறந்தும்கூட கிச்சன் பகுதிக்குச் சென்றுவிடக் கூடாது. காய்கறிகள் மல்லி கருவேப்பிலை போன்ற பலவற்றையும் அலம்பவே மாட்டார்கள். எல்லாம் அடுப்புல கொதிக்கும் அது போதும் என்ற எண்ணம்.

    நிறைய தயாரிப்புகளை யூடியூபில் பார்க்கும்போது (பொரி, முருக்கு போன்று)... அடக் கடவுளே இதையா நாம் சாப்பிடுகிறோம் என்றிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்...... உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடம், தயாரிக்கும் விதம் பார்த்தால் சாப்பிடத் தோன்றாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. படங்கள் அனைத்தும் அழகு!

    சயனர்களைப் பார்த்து பொறாமைப் படவா இல்லை பாவப்படவா தெரியல்லையே!

    தேனீர்க்கடை சமையலறை அட்டகாசங்களை பற்றி என்னத்தச் சொல்ல? மைக்கேல் மதன காமராசன்ல டெல்லி கணேஷ் அசிஸ்டன்ட் ஒரு ஆளு சொரிஞ்சிகிட்டே சமையல் வேலை செய்வாரு. (ஆமா! இந்த மாதிரி கடைகளில் ஏன் வடை டேஸ்ட்டா இருக்கு)

    பதிலளிநீக்கு
  17. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  18. நான் ஒரு சேர பார்த்ததில்லை..அடுத்த முறை வருகையில் அவசியம் பார்த்து விடுவேன்..பால் பாக்கெட் விசயம் எல்லா டீக்கடையிலும் இப்படித்தான் நடக்கிறது..படங்களுடன் பதிவு அருமை..வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை வரும்போது பாருங்கள் ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  19. வாசகம் அருமை.
    கோபுர தரிசனங்கள் கிடைத்தது மகிழ்ச்சி.
    எத்தனை முறை கோயிலுக்கு வந்து இருக்கிறேன் ஆனால் மேல் தளம் சென்று ஒரு சேர கோபுர தரிசனம் செய்தது இல்லை.

    //இது போன்ற நடைப்பயணங்களில் பேசுவதற்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. //

    ஆமாம் .

    //தேநீர் தயாரிப்பதற்குத் தேவையான பாக்கெட் பாலை பாத்திரத்தில் ஊற்றுவதற்கு, அந்தப் பால் பாக்கெட்டை தன் பல்லால் கடித்து இழுத்து, பிரித்து பாத்திரத்தில் விடுகின்ற காட்சியைப் பார்க்க நேர்ந்தது!//

    அப்படி செய்ய கூடாது என்று எடுத்து சொல்ல பெரியவர்கள் யாரும் இல்லை போலும் அவருக்கு. இதை கண்ணால் பார்த்து விட்டீர்கள் இனி இந்த மாதிரி இடங்களில் டீ குடிக்க
    தோணாது.

    இப்படி சாலையோரம்,படுத்து தூங்குபவர்களை கண்டால் மனதில் இப்படி கேள்விகள் எழும் எனக்கும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....