புதன், 11 நவம்பர், 2015

சாப்பிட வாங்க: பஞ்சீரி லட்டு.....




படம்: இணையத்திலிருந்து....

எனது வலைப்பூவினை வாசித்து வரும் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...... அது தான் நேத்திக்கே முடிஞ்சு போச்சே!என்று கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன். தலைநகர் தில்லியில் இன்று தான் தீபாவளி.

சரி இந்தத் தீபாவளி சமயத்தில் கிடைக்கும் ஒரு இனிப்பு பற்றி தான் இன்றைய சாப்பிட வாங்க பதிவில் பார்க்கப் போகிறோம். அதற்கு பஞ்சீரி லட்டு என்று பெயர். சிலர் இதைக் கோந்து லட்டு என்றும் சொல்வதுண்டு. தீபாவளி சமயத்தில் இந்த லட்டு செய்வது வழக்கம். குளிர் காலத்திலும் செய்து சாப்பிடுவார்கள் உடலுக்குச் சூடு தரும் என்பதால். இதைச் செய்ய என்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்....

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [1.5 கிலோ], புரா [சீனி பொடி] [1 கிலோ], நெய் [3/4 கிலோ], பாதாம் [100 கிராம்], முந்திரி [100 கிராம்], உலர் திராட்சை [100 கிராம்], தேங்காய் துருவியது [150 கிராம்], மக்கானா [Puffed Lotus Seed] [50 கிராம்], கசகசா [100 கிராம்], கோந்து [50 கிராம்] [சாப்பிடக்கூடியது... வீட்டுல ஒட்டறதுக்கு பசங்க வச்சி இருக்கறத எடுத்து இதுல கொட்டிடாதீங்க.... அப்படி சேர்த்தால் குப்பையில கொட்ட வேண்டியதுதான்!] சுக்குப் பொடி [3 ஸ்பூன்]! இவ்வளவு தான். இவ்வளவு பொருட்களா என்று மலைப்பவர்களுக்கு... அத்தனையும் சத்தான பொருட்கள்! வடக்கில் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்தக் கோந்து லட்டு தருவது வழக்கம்.

எப்படிச் செய்யணும் மாமு!

கனமான வாணலி எடுத்துக் கொண்டு இரண்டு கப் நெய் விட்டு பாதாம், முந்திரி, தேங்காய், திராட்சை, கோந்து ஆகியவற்றை தனித்தனியே பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். கசகசாவையும் மிதமான தீயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மக்கானாவையும் வறுத்துக் கொள்ளுங்கள். சூடு ஆறியதும், பாதாம், முந்திரி, கோந்து ஆகியவற்றைக் கொஞ்சமாக பொடித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து வாணலியில் நெய் விட்டு, சிறிது சூடான பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். கட்டியில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது நீண்ட சமயம் எடுக்கும் என்பதால் உங்கள் பொறுமை கடல் அளவுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் வறுத்த கோதுமையை வாணலியிலிருந்து மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் உடைத்து வைத்த பாதாம், முந்திரி மற்றும் கோந்து ஆகியவற்றையும், திராட்சை, புரா [சீனிப் பொடி], வறுத்த கசகசா, மக்கானா ஆகிய அனைத்தையும் கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் நெய் சூடாக்கி கலந்து வைத்ததன் மீது கொட்டி நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

நன்கு கலந்து கொள்ளுங்கள். இதற்குள் கொஞ்சம் சூடு ஆறி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாதாரண லட்டு பிடிப்பது போலவே கலவையை லட்டாக பிடித்துக் கொள்ளுங்கள். காற்றுப் புகாத பாட்டிலில் லட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டால் சில நாட்கள் வரை கெட்டுப் போகாது.

இத்தனை பொறுமையும் வேலையும் இதற்குச் செய்யவேண்டுமா என்று அலுப்பாக இருக்கலாம்! அப்படி இருப்பவர்கள் எப்படிச் சாப்பிடுவது என்ற கவலை கொள்ள வேண்டாம். Haldiram, Bikaner Wala [Bikano] போன்ற நிறுவனங்கள் இவற்றைத் தயார் செய்து விற்கிறார்கள். வாங்கி இஷ்டம் போல சாப்பிடலாம்!

சத்தான லட்டு இது. பஞ்சாப் பிரதேசங்களில் இந்த லட்டுவை தீபாவளி சமயத்திலும், குளிர் காலம் முழுவதுமே கூட சாப்பிடுகிறார்கள். மேலும் குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்குச் சக்தி கொடுக்கும் என்பதால் இளம் தாய்மார்களுக்கும் கொடுக்கிறார்கள்.

நம் ஊரிலும் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது சற்றே குளிரும் இருக்கிறது. பஞ்சீரி லட்டு செய்து சாப்பிடுங்கள்.


 [தில்லி கோல் மார்க்கெட் TTD பாலாஜி கோவிலில் இன்றைய தீபாவளிக்காக நேற்று இரவு போட்ட கோலம்!]

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்......

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

46 கருத்துகள்:

  1. பஞ்சீரி லட்டு செய்து ருசிக்கிறோம் நன்றி...

    கோலம் அழகு...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. சேர்க்கும் பொருட்களைப் பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு சத்தான உருண்டை இது என்று.. புதியதொரு இனிப்பின் அறிமுகத்துக்கு நன்றி வெங்கட். அடுத்த தீபாவளிக்கு ட்ரை பண்ணலாம் என்று நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

      நீக்கு
  3. தனியாக செய்யப் பொறுமை இல்லை, நீங்கள் வைத்திருப்பதிலேயே இரண்டு எடுத்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சூபர் மார்க்கெட்டில் இருந்தால் வாங்கிச் சாப்பிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே செய்து விடுங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  5. தீபாவளிக்கு நிறைய பலகாரம் சாப்பிட்டதை செரிக்க இது உதவும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. பஞ்சீரி லட்டு.. இதன் செய்முறையே சிறப்பாக இருக்கின்றது..
    தங்கள் பதிவின் முலமாக புதிய லட்டு பற்றி தெரிந்து கொண்டோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  8. ஸத்தான லட்டு. சாப்பிட்டிருக்கிறேன். தீபாவளி வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா.

      நீக்கு
  9. தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் பஞ்சீரி லட்டு
    சாப்பிட வெகு ஆவல்! செய்முறை விளக்கத்தை குறிப்பு எடுத்துக் கொண்டோம்.
    இனிப்பான பதிவு இனித்தது நண்பரே!
    தலை நகர கொண்டாடும் இன்றைய தீபாவளிக்கு நல்வாழ்த்துகள்.
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாதவன் நம்பி.

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ட்ரூ ஃப்ரெண்ட்.

      நீக்கு
  11. ரொம்ப காஸ்ட்லியான ஸ்வீட் போல இருக்கு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  12. அருமையான லட்டு. சுவைத்திருக்கின்றோம். பகிர்வுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

    கீதா: சுவைத்திருந்தாலும், செய்து பார்க்க முயற்சி செய்தேன். அந்தக் கோந்து இங்கு கிடைக்கவில்லை. நாட்டு மருந்துகடைகளில் கிடைக்குமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன். இந்த அளவுகள் சற்று வித்தியாசமாக இருப்பதால் குறித்து வைத்துக் கொண்டேன். செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்திருக்கும் அளவு குறைத்தும் செய்யலாம். கோந்து இல்லாமலும் இந்த லட்டு செய்வதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  14. கோலம் ஸ்வீட்டாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  15. இதுவரை கேள்விப் படாதா லட்டு
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  16. பஞ்சீரி லட்டு. மிக சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன், செய்முறை அருமை.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். கோலம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  17. கோந்து லட்டா?வாயில் ஒட்டிக்குமோ?!
    நீங்க என்ன இனிப்பு சாப்பிட்டீங்க தீபாவளிக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டிக் கொள்ளாது! நான் நிறைய இனிப்புகள் சாப்பிட்டேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  18. லயா பிறந்த சமயம், நானே ரெசிப்பி தேடி செய்து சாப்பிட்டேன்..இன்னும் கோந்து இருக்கு..செய்திடலாம் இன்னொரு முறை. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! திருமதி எப்படி இருக்காங்க..ஆளையே காணோம்? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி நலம்..... மகளும் நலம். இணையத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய சூழல்.... விரைவில் வந்து விடுவார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

      நீக்கு
  19. முன்பே நீங்கள் பதிவிட்டிருந்தால் இந்த தீபாவளிக்கே சுவைத்திருக்காலாம்.
    த ம 11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  20. பொறிவிலங்காய் உருண்டை செய்வது போலவே இருக்கிறது இந்த லட்டின் செய்முறை.
    ஆனால் நம்ம ஊரில் அரிசி மாவில் செய்வார்கள்.
    நீங்கள் குறிப்பிட்டது செய்து பார்க்கிறேன் நாகராஜ்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. வணக்கம்
    ஐயா
    பார்த்தவுடன் பசி வந்து விட்டது ஐயா.. த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  22. பண்ணலாம் என்று நினைக்கிறவங்களையும், கைவலிக்கற வரை கோதுமை மாவைக் கிளரவேண்டும் என்று சொல்லியதால், பண்ணவிடாமல் பண்ணிட்டீங்களே.. பேசாம பிகானிர் வாலாவையோ ஹால்திராமையோ டிரை பண்ணிவிட வேண்டியதுதான். எப்பயாச்சும் சென்னைப் பக்கம் பதிவர் திருவிழா நடக்கும்போது கொண்டுவந்து கொடுக்காமலா இருந்துவிடுவீர்கள். அப்போது டேஸ்ட் பார்த்தால் போச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  23. எங்க பையர் பிறந்தப்போ ராஜஸ்தானில் தான் இருந்தோம். அங்கே இருந்த தோழி ஒருத்தர் எனக்குச் செய்து கொடுத்திருக்கார். சாப்பிட்டிருக்கேன். நன்றாகவே இருக்கும். செய்து பார்த்ததில்லை. கோந்து லாடின் கோந்தும் கடைகளில் கிடைக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....