வெள்ளி, 5 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


CONFIDENCE HAS NO COMPETITION.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  

 

பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்

 

பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்

 

பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்

 

பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்

 

பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


******

 

சென்ற பகுதியில் டார்ஜிலிங் நகரின் மால் ரோடு பகுதியில் உலா வந்த போது கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  மால் ரோடு பகுதியில் உலா வந்த பிறகு எங்களுக்கான வாகனத்தில் புறப்பட்டு எட்டு கிலோ மீட்டர் தொலைவு பயணித்து எங்கள் தங்குமிடமான GHUM பகுதியில் அமைந்திருக்கும் Sterling Resorts வந்தடைந்தோம்.  எட்டு கிலோ மீட்டர் தொலைவினைக் கடக்க எங்களுக்கு சற்றேறக்குறைய 35 நிமிடங்கள் ஆனது.  தங்குமிடம் வந்து எங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று சில நிமிடங்கள் ஓய்வுக்குப் பிறகு தங்குமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் மற்றும் பிஸ்கெட்ஸ் எடுத்துக் கொண்டு அதை உண்டபடியே நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி நடத்தினோம்.  இது போன்ற பயணங்களில் கிடைக்கும் நேரம் எல்லாம் எந்தக் கவலையுமின்றி பேசிக் கொண்டிருப்பதும், ஒருவர் மாற்றி ஒருவர் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுமாக இருப்பது மிகவும் அலாதியான ஒரு விஷயம்.  எந்த வேலையும் செய்யாமல் வேளாவேளைக்கு உணவு, ஊர் சுற்றல், ஒய்வு, உறக்கம் என இருப்பது மிகவும் சிறப்பான விஷயம்.  தொடர்ந்து பணி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு Break கட்டாயம் தேவை.  

 

பெரிய குழுவாக பயணிப்பதில் சில சௌகர்யங்கள் இருந்தாலும் சில சிக்கல்களும் இருக்கிறது.  குழுவில் சிலர் பயணத்தில் சரக்கு அடிப்பதற்காகவே வருபவர்களாக அமைந்து விட்டால் எப்போது மாலை நேரம் வரும், சரக்கு அடிக்கலாம் என்பதாகவே காத்திருப்பார்கள்.  எங்களது இந்தப் பயணத்திலும் அப்படியான சிலர் இருக்கவே செய்தார்கள் - ஒன்றிரண்டு பெண்கள் உட்பட! சரக்கடிப்பது அவர்கள் உரிமை.  அது குறித்து கருத்து சொல்ல நாம் யார். ஆனாலும் அவர்களால் அனைவருடைய திட்டங்களும் மாறுவதை தான் நம்மால் பொறுத்துக்க கொள்ள முடிவதில்லை.  அவர்கள் சரக்கடிப்பதற்காகவே பயணத்திட்டங்களை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லையே! அப்படியான சிலர் மாலை நேர மால் ரோடு உலாவில் கலந்து கொள்ளாமல் தங்குமிடத்திலேயே தங்கி, சரக்கடிக்கும் வேலையைத் தொடங்கினார்கள்.  அவர்களது நிகழ்வு இரவு வெகு நேரம் வரை தொடர்ந்தது என்பதால் இரவு உணவிற்கான நேரத்தை தள்ளி வைக்கும் படி கேட்க, தங்குமிட நிர்வாகிகள் அதற்கு மறுக்க, சின்னச் சின்னதாக சில பிரச்சனைகள் உண்டானது. இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டிய நிர்பந்தமும் உண்டானது வேதனையான விஷயம்.  அப்படியானவர்களிடம் கண்டிப்பாக உங்களுக்காக காத்திருக்க முடியாது என்பதையும் உறுதியுடன் சொல்ல வேண்டியிருந்தது.  





 

இரவு உணவும் தங்குமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  அதே BUFFET வகை தான்.  விதம் விதமான உணவுகள், இனிப்புகள், திரவங்கள் (பழ ரசங்கள் மட்டுமே! சரக்கு அல்ல!) என இருந்தது! பெரும்பாலான இனிப்புகளின் பெயர்கள் புரிபடவில்லை.  எடுத்துச் சாப்பிட்ட பின்னரே அதன் பெயருக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று புரிந்து கொள்ள முடிந்தது - அதிலும் சிலவற்றில் குழப்பம்! அங்கே இருப்பவர்களிடம் கேட்டால், சொன்ன பதில் நம் தலைக்கு மேல் பறக்கும் விதமாகவே இருந்தது! பார்க்க நன்றாக இருந்தால் அவற்றை ஒரு சிறு துண்டு எடுத்து சுவைத்ததோடு சரி.  மற்ற படி ஒன்றிரண்டு ரொட்டி, ஒரு சப்ஜி, கொஞ்சம் தயிர், ஒரு கரண்டி சாதம் என்று இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. தொடர்ந்து வெளியே உணவு சாப்பிடும்போது முதல் இரண்டு மூன்று வேளைகள் சாப்பிட்ட பின்னர் ஒரு அலுப்பு தட்டிவிடும்.  எப்போது வீட்டுச் சாப்பாடு கிடைக்கும் என்று தோன்ற ஆரம்பித்து விடுவது இயல்பு.  இந்தப் பயணத்தில் இரண்டாம் வேளையே அப்படித் தோன்ற ஆரம்பித்தது!  அன்று இரவு சாப்பிட்ட இரண்டு இனிப்புகள் பெயர்கள் - Canape மற்றும் Strawberry Panna Cotta eggless! 

 

இரவு உணவிற்குப் பிறகு தங்குமிடத்தின் வாயிலில் இருந்த இடத்தில் நானும் எங்கள் பயிற்சியாளருமாக நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தோம்.  இந்தப் பயணத்தில் ஒவ்வொரு தினமும் இரவு நேரத்தில் இப்படி அவருடன் நடப்பது தொடர்ந்து கொண்டிருந்தது.  அவர் வருவதற்கு நேரமானால் வேறு சில சக பயணிகள் என்னுடன் நடந்து கொண்டிருந்தார்கள்.  மொத்தத்தில் இரவு நேரம் குறைந்தது ஒரு மணி நேரமாவது இனிமையான இயற்கைச் சூழலில் சுத்தமான காற்று வாங்கியபடி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.  கூடுதலாக, சக பயிற்சி பெரும் மற்ற அலுவலகத்தைச் சேர்ந்த நபர்களுடன் அளவளாவ ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.  புதிய தொடர்புகள் என்றைக்கும் நல்லது! ஏதோ ஒரு விதத்தில் இந்த நட்பு பயன்படலாம் என்பது இது போன்ற பயிற்சிகளில் கிடைக்கும் ஒரு வித வரம்.  பயிற்சிகளில் முதன் முதலாக சந்தித்த சிலருடன் பல ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கு வரை நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே இதன் பயன் புரியும்.  அப்படியான சில நட்புகள் இணைபிரியா நட்பாக மாறி இருப்பது மிகவும் சிறப்பான விஷயம்.  நீண்ட நடைக்குப் பிறகு எங்கள் பயணத்தின் முதல் நாள் சிறப்பாக முடிவடைய, நான் எனது அறைக்கும், எங்கள் பயிற்சியாளர் அவரது அறைக்கும் திரும்பினோம்.  

 

நான் திரும்பிய போது ஏதோ ஒரு அறையிலிருந்து எங்கள் குழுவினரின் சரக்கு பார்ட்டிகள் சத்தமாக பாடிக் கொண்டிருப்பது கேட்டது! மற்றவர்களை தொந்தரவு செய்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி என்ற நினைவுடன் எனது அறைக்கு வந்து எனது படுக்கையில் படுத்தேன்.  அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை மனதில் அசைபோட்டதுடன் எனது அலைபேசியில் சிறு குறிப்புகளாகவும் எழுதி வைத்துக் கொண்டேன் - அந்த குறிப்புகள், பயணம் குறித்த ஒரு அறிக்கை தயார் செய்து பயிற்சி கொடுத்த அமைப்பிற்குத் தரவும், இங்கே இந்தப் பயணக்கட்டுரை எழுதவும் பயன்படுகிறது. பொதுவாகவே ஒவ்வொரு பயணத்திலும் முடிந்த போதெல்லாம் குறிப்புகளை எனது அலைபேசியில் சேமித்து வைப்பதோடு, ஒவ்வொரு நாள் இரவும் அறைக்குத் திரும்பிய பிறகு அலைபேசியில் சேமித்து வைப்பதும் வழக்கமாகவே ஆகிவிட்டது. இந்தப் பயணத்திலும் சேமிப்புகள் தொடர்ந்தன. முடிந்த வரை சிறு குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டால், அவற்றையும் பயணத்தில் எடுக்கும் படங்களையும் வைத்து கோர்வையாக ஒரு தொடரை எழுதி விடலாம் என்பது இத்தனை பயணங்களில் எனக்கு புரிபட்ட ஒரு விஷயம்.  

 

அத்தனை நடை, பயணம் என உடலை சோர்வு கொள்ளும் விஷயங்கள் அன்றைய தினம் நடந்திருந்தாலும் எனக்கு உறக்கம் வரவில்லை. உறக்கம் வர அதிக நேரமாக ஒரு காரணம் - அடுத்த நாள் மிக விரைவில் - இரவு 03.30 மணிக்கு எங்கள் தங்குமிடத்தின் வரவேற்புப் பகுதியில் அனைவரும் குழும வேண்டும் என்று எங்களுக்கு பயிற்சியாளர் கட்டளை இட்டிருந்தார்.  அடுத்த நாள் காலை 03.30 மணிக்கு புறப்பட்டு கொஞ்சம் பயணித்து ஒரு அற்புத அனுபவத்தினை நாங்கள் பெற இருந்தோம்.  அதனால் 02.30 மணிக்கே எழுந்திருந்து வேலைகளை முடித்துக் கொண்டு, தயாராகி வரவேற்புப் பகுதியை அடைந்தேன்.   அந்த அதிகாலை வேளையில் நல்ல குளிர் தெரிந்தது.  நவம்பர் மாதம் தான் என்றாலும் காலை நேரங்களில் நல்ல குளிர்.  தகுந்த உடைகளை அணிந்து கொண்டு தயாராக ஒவ்வொருவராக வரவேற்புப் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.  சக பயணிகளில் சிலர் - குறிப்பாக சரக்கு பார்ட்டிகள் வர நேரமானது - சிலர் வர போவதில்லை என்று முந்தைய தினமே சொல்லி விட்டார்கள்! ஒவ்வொரு நபராக வந்து சேர, அன்றைய தினத்தின் பயணத் திட்டத்தினை தொடங்கினோம்.  நாங்கள் எங்கே பயணித்தோம், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்ற விஷயங்களை அடுத்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன். 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

 

6 கருத்துகள்:

  1. Ghum என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?  கும் ஹை கிஸி பியார்கா இன்னொரு பாடலும் (ஹம் சகள்) இந்த வார்த்தையோடு தொடங்குகின்றன.

    பதிலளிநீக்கு
  2. சரக்கடிப்பவர்களுக்கு இந்தப் பயணத்தில் இடமில்லை ன்று ஆரம்பத்திலேயே சொல்லி அவர்களை நம்மோடு இனைக்கக் கூடாது.  அப்படி பழக்கம் இருப்பவர்கள் தனியாக சென்று கொள்ள வேண்டியதுதான்.  மற்றவர்களுக்கும் இடைஞ்சல்.

    பதிலளிநீக்கு
  3. 2019 ல் என்னுடன் காசிக்கு பயணித்த இரண்டு பேர்கள் இன்னும் என் தொடர்பில் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பயணத்தின் விபரங்கள் நன்றாக உள்ளது. இந்த மாதிரி பழக்கங்கள் உள்ளவர்கள் பயண குழுவில் அவர்களே வந்து சேராமல் இருந்தால் நல்லதுதான்.

    சென்ற பயணங்களில் இணைந்தவர்கள் இன்னமும் தங்களுடன் நட்பாக இணைப்பில் இருப்பது மகிழ்ச்சி.

    உணவு படங்கள் அனைத்தும் பார்க்க நன்றாக உள்ளது. அடுத்ததாக சென்ற இடங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. சரக்கடிக்கும் நபர்கள் மட்டும் தனி குழுவாக பயணிப்பதே இங்கு சுபமான பயணமாக அமையும் (ஆண்-பெண் இருபாலருமே)

    இங்கு அவர்கள் பார்வையில் நாம் வாழ்த்தெரியாத ஜந்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பயண விவரனைகள் அறுமை சார்.
    இயர்க்கையோடு வாழச் சென்று அங்கும் குடிபோதையில் இருப்பது வேதனை.
    சரக்கு அடிப்பதால் நிறைய பெரிய தொடர்புகள் கிடைக்கும் என்றும் சிலர் நியாயப்படுத்துவதுண்டு.
    அப்படி ஒரு தொடர்பை என் அலுவலக நன்பர் ஒருவர், எங்கள் வாகனம் பழுதடைந்தபோது அரிமுகம் செய்வித்தார்.
    முதல் தடவை ஒழுங்காக பழுதை சரி செய்த நம்பிக்கையால், அடுத்த முறையும் அவரிடமே கொடுத்தோம்.
    பிரச்சனை சற்று பெரியதாகவும், தனக்கு ஒரு இரவு தேவை எனவும் சொல்லிய அவரை மறுநாள் பார்க்கச் சென்றபோது வண்டியை பாகம் பாகமாக களற்றி விற்கத் தொடங்கிய அதிர்ச்சி உன்மை வெளிப்பட்டது.
    எனவே குடிப்பழக்கம் ஆபத்தான மனிதர்களாக சாதாரனவர்களையும் மாற்றவல்லது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....