புதன், 27 ஆகஸ்ட், 2025

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - சாரி எனும் கிராமம் - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பயணக்கட்டுரை பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Verdant கோகுலாஷ்டமி கொண்டாட்டம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ஃபிப்ரவரி 2025-இல் பயணித்த இடங்கள் குறித்த பயணத் தொடரான மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் வரிசையில் இது வரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஒன்று


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி இரண்டு


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி மூன்று



சாரி எனும் அழகிய கிராமம்...

பயணத்தில் எங்களது அன்றைய இலக்கான dhதேவரியா thதால் என்கிற இடத்தினை அடைவதற்கு முன்னதாக வாகனத்தில் சென்று அடைய வேண்டிய இடம் தான் சாரி எனும் கிராமம்.  தில்லியிலிருது அதிகாலையில் (03.35 மணிக்கு) புறப்பட்டு சில பல அனுபவங்களுடன் நாங்கள் சாரி எனும் அழகிய கிராமத்தினை அடைந்த போது நேரம் மதியம் 02.40 மணி. அதாவது கிட்டத்தட்ட 11 மணி நேரம் பயணமும் இடை நிறுத்தங்களும்! பயணித்த தொலைவு சுமார் 430 கிலோ மீட்டர். எதிர்பார்த்த அளவு நேரத்திலேயே நாங்கள் வந்து சேர்ந்திருந்தோம்.  ஒரு அழகான கிராமம் சாரி எனும் கிராமம்.  உத்திராகண்ட் மாநிலத்தின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் இருக்கும் ஊக்கிமட் தாலுகாவில் இருக்கும் ஒரு சிறு கிராமம்.  மொத்த மக்கள் தொகை ஆயிரத்திற்கும் குறைவு! கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் சில கடைகளும், தங்குமிடங்களும், பயண ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களும் உண்டு. அந்த கிராமத்தினைச் சென்றடைந்த உடன் அங்கே வாகனத்தினை நிறுத்துவதற்கு தோதாக இருந்த இடத்தில் நிறுத்தி விட்டு எங்களது உடைமைகளில் ஒரு இரவுக்குத் தேவையானதை மட்டும் தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்தோம்.

  


சாரி எனும் கிராமத்தில் நாங்கள் நின்ற கடையிலிருந்து எடுத்த படம்...


சாரி கிராமத்தின் பிரதான கடை வீதி... அதிலிருக்கும் விடுதிகள்...

இது போன்ற சிறு கிராமங்களில் ஒரு வசதி. சின்னச் சின்ன இடங்களாக இருந்தாலும், அங்கே இருக்கும் மனிதர்களின் மனம் விசாலமாக இருக்கிறது.  நாங்கள் வண்டியிலிருந்து எங்கள் உடமைகளை எடுத்து ஒரு சிறிய பையில் வைக்க வேண்டியிருந்தது. அங்கே இருந்த ஒரு உணவகத்தில் யாருமே இல்லை. திறந்திருந்த அந்த உணவகத்தின் உரிமையாளர் இல்லை. பணியாளர்களும் இல்லை. அங்கே எங்கள் பொருட்களை வைத்து தேவையானவற்றை மட்டும் ஒரு சிறிய முதுகுப் பையில் வைத்துக் கொண்டிருந்தோம்.  கேட்பார் யாரும் இல்லை! அப்படியே வந்தால் கூட ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நண்பர் Bபிஷ்ட் சொல்லிக் கொண்டிருந்தார்.  தேவையான உடைகள், கைத்தடி, டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என அனைத்தும் ஒரு சிறுபையில் மாற்றிக் கொண்டு மற்றவற்றை மீண்டும் சரி பார்த்து வாகனத்திலேயே மீண்டும் கொண்டு வைத்தோம்.  சாலையோரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல வழி விட்டு ஓரமாக நிறுத்திவிட்டு செல்லலாம் - திருடு போய்விடுமோ என்ற கவலையில்லாமல்.  உள்ளூர் மக்கள் “தைரியமாக விட்டுச் செல்லுங்கள், கவலை வேண்டாம்” என்று சொல்லவும் சொல்கிறார்கள்.  இதை எல்லாம் செய்து முடித்ததோடு, அந்த கிராமச் சூழலில் சில படங்களும் எடுத்துக் கொண்டோம். 



மஞ்சள் நிற பூக்களுடன் கடுகுச் செடி...


பிரதான கடைவீதியில் நண்பர்கள்...

சின்னச் சின்னதாய் வீடுகள், சில பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், உணவகங்கள் என அனைத்தும் ஒரு வீதியில் இருக்கின்றன.  அவை தவிர உள்ளூர் மக்கள் தங்கும் வீடுகளும் ஆங்காங்கே மலைப்பகுதியில் பார்க்க முடியும்.  உள்ளூரில் பனிப்பொழிவு இருக்கும் சமயங்களில் விவசாயம் செய்ய பெரிதாக வாய்ப்பில்லை.  அதனால் மற்ற சமயங்களில் மட்டுமே பயிரிடுகிறார்கள். நாங்கள் சென்ற சமயம் கடுகுச் செடிகள் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.  மஞ்சள் போர்வை போர்த்தியது போல அப்படி ஒரு அழகிய காட்சி.  வடக்கில் இந்த மாதங்களில் பல இடங்களில் இப்படி கடுகுச் செடிகளையும் அவற்றின் பூக்களையும் காண முடியும்.  அதே போல மலைப்பகுதிகளில் சென்று தங்களது கால்நடைகளுக்கான உணவை (புல்) எடுத்து வந்து காய வைத்து மரக்கிளைகளில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.  இதைத் தவிர சென்ற பகுதியில் பார்த்த புரான்ஸ் மலர்களை பதப்படுத்துவதும் இங்கே ஒரு தொழிலாகவே இருக்கிறது.  



இங்கே தான் போகப் போகிறோம்...

இந்த ஊரிலிருந்து தான் எங்களது முதல் நாள் இலக்கான தேவரியா தால் (ஆங்கிலத்தில் Deoria Tal) எனும் இடத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.  உள்ளூர் மக்கள் Gகட்வாலி எனும் மொழியும், ஹிந்தி மொழியும் பேசுபவர்கள்.  ஹிந்தி நமக்குப் புரிந்தாலும் அவர்களது மொழி நிச்சயம் புரியாது. அதனால் அங்கே இருக்கும் மக்கள் நமக்குத் தெரியாமல் பேச வேண்டுமென்றால் பயன்படுத்துவது Gகட்வாலி தான்! வடக்கில் பல வருடங்களாக இருப்பதால் ஒரு மாதிரி குன்ஸாக புரிந்து கொண்டாலும் அதில் சில சிக்கல்கள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் பொதுவாகவே ஹிந்தியில் தான் எனது சம்பாஷனைகள் இருக்கும்.  உள்ளூர் மக்களிடம் சற்றே பேசிக் கொண்டிருந்தேன்.  அதற்குள் நண்பர்களும் தயாராக எங்களது மலையேற்றத்தினைத் தொடங்குவதற்கு தயாராக இருந்தேன்.  அந்த ஊரிலிருந்து நாங்கள் அன்றைய இரவு தங்கவேண்டிய இடமான தேவரியா தால் வரை செல்வதற்கு சுமார் 3 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடக்க வேண்டியிருக்கும்.  நாம் நடப்பதைப் பொறுத்து ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் கூட ஆகலாம்.  அதிலும் இயற்கை எழிலை ரசித்தபடி, ஆங்காங்கே நின்று சென்றால் இன்னும் கூட அதிக நேரமாகலாம்.  



கட்டிடத்தின் பக்கத்தில் மலையேற்றத்திற்கான நுழைவாயில்!

ஒரு வழியாக சாரி கிராமத்திலிருந்து புறப்பட நினைத்தபோது சற்றே மழை தொடங்க ஆரம்பித்தது.  அதிகமான மழைப்பொழிவு இல்லை என்றாலும் நடந்து போவதற்குள் நனைந்து விடுவோம் என்று தோன்றியது.  வழியிலேயே நாங்கள் மழைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு தான் வந்தோம் - Raincoat 150 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டோம். என்னதான் கையில் குடை எடுத்து வந்திருந்தாலும், அதனை விட Raincoat சுலபம் என்பதால் அதனையும் எங்களது சிறு கைபையில் வைத்துக் கொண்டோம். அப்படி அதிக அளவில் மழை வந்தால் பயன்படுத்துவோம் என்ற முன் ஜாக்கிரதை உணர்வுடன்! இன்னும் சிறிது நேரம் காத்திருக்க மழை நின்றது.  அந்த நேரத்தில் அங்கே சில படங்களை எடுத்துக் கொண்டு மலைப்பாதைக்கான நுழைவாயில் அருகே சென்றோம்.  அப்போது நேரம் மாலை 03.15. சுமார் அரை மணி நேரம் அந்த கிராமத்தில் இருந்தோம். எங்கள் மலையேற்றத்தில் என்னவிதமான அனுபவங்கள் கிடைத்தன, பார்த்த காட்சிகள் எப்படி போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

27 ஆகஸ்ட் 2025


3 கருத்துகள்:

  1. தொடர்கிறேன்.  அந்த இடங்கள் பார்க்க மிக அழகாய் இருக்கின்றன.  அவர்களின் நேர்மை மனதுக்கு இதமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. மனித மனம் விசாலம்.. பொதுவா பாரதத்தில் மேலேர்ந்து கீழ வரும்போது மனவிசாலம் குறுகுகிறது எனத் தோன்றும். நம்ம ஊர் காரங்களே அங்கேயே பெரும்காலம் வாழ்ந்தால் மனம் விசாலமாகும் என்பது என் அவதானம்

    பதிலளிநீக்கு
  3. சூழலைப் பதிவு செய்தலைப் போல‌ அவர்கள் உணவினையும் உடையினையும் வீட்டின் அமைப்பினையும் முடிந்தால் புகைப்படமாக பதிவு செய்தால் அந்த எல்லையோர மக்களை இன்னும்சரியாக உணர்ந்து கொள்ள முடியும் தானே..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....