அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பயணக்கட்டுரை பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஃபிப்ரவரி 2025-இல் பயணித்து, மார்ச் 2025-இல் தொடராக எழுத ஆரம்பித்தது - ஆனால் இல்லச் சூழல்கள், அலுவலகச் சிக்கல்கள் என எல்லாம் சேர்ந்து இங்கே எதுவுமே எழுத இயலாமல் போனது. இப்போதும் கூட சூழல்கள் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும், இந்தத் தொடர் அப்படியே அந்தரத்தில் - இரண்டே இரண்டு பகுதிகளோடு - தொங்கிக் கொண்டிருப்பது எனக்கே சற்று எரிச்சலாக, கண்களை உறுத்தும் விதமாக இருந்தது. அதனால் இங்கே மீண்டும் தொடர எண்ணியிருக்கிறேன். முடிந்தவரை எல்லா பகுதிகளையும் தொடர்ந்து வரும் நாட்களில் வெளியிட்டு விடவே எண்ணம். அதற்கு முன்னர் முதல் இரண்டு பகுதிகளில் பார்த்த சில விஷயங்களை இங்கே ஒரு Recap போல பார்த்து விடலாம்!
முதல் பகுதி: ஃபிப்ரவரி மாதம் ஒரு புதன் கிழமை மாலை நண்பர் இந்தர்ஜீத் சிங், சனி, ஞாயிறு வருகிறதே எங்கேயாவது சென்று வரலாமா என என்னிடமும் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட்-இடமும் கேட்க, பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். அடுத்த நாள் அதாவது வியாழன் மதியம் வரை எந்தத் திட்டமும் இல்லை. மாலையில் நண்பர் Bபிஷ்ட் தனது திட்டத்தைச் சொன்னார் - ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சில இடங்களுக்குச் சென்று வரலாம் என்பது அவரது திட்டமாக இருந்தது. முதல் நாள் திட்டம் தில்லியிலிருந்து சாரி கிராமம் வரை சுமார் 430 கிலோமீட்டர் தொலைவு. கிட்டத்தட்ட பத்து - பத்தரை மணி நேரமாவது சாலைவழி பயணம் - தொடர்ந்து சென்றால்! நடுவில் ஒன்றிரண்டு இடங்களில் நிறுத்தி பயணத்தினைத் தொடர்ந்தால் இன்னும் சில மணித்துளிகள் அதிகமாகலாம். அடுத்த நாள் வேறு ஒரு பயணம், மூன்றாம் நாள் வேறு ஒரு இடம் என மூன்று நாட்களுக்கும் மூன்று இடங்கள் சென்று வரலாம் என திட்டமிட்டு இருந்தார் நண்பர் Bபிஷ்ட். கேட்பதற்குச் சுலபமாக இருந்தாலும் சற்றே கடினமான பயணம் இது - சாலை வழி பயணம் தவிர மூன்று நாட்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 35 கிலோமீட்டருக்கும் மேல் நடக்க/மலையேற்றம்/இறக்கம் என சற்றே கடினமான/சவாலான பயணம் தான். ஆனாலும் எங்கள் அனைவரிடமும் இந்தப் பயணத்திற்கான முனைப்பு இருந்தது என்பதால் உற்சாகமாக புறப்பட்டு விட்டோம்.
இரண்டாம் பகுதி: dhதாரி தேவி ஆலயம். பெயரைப் படிக்கும்போதே கம்பீரமாக இருக்கிறது அல்லவா? தேவியும் கம்பீரமானவள் தான். இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரியமானவளும் பிடித்தமானவளும் கூட! dhதாரி தேவி குறித்த நிறைய நம்பிக்கைகள் இந்தப் பகுதியில் நிலவுகிறது. dhதாரி தேவி காளியின் ஸ்வரூபம் என்றும் இந்த ஆலயத்தில் இருக்கும் தேவியின் சிலை ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளும் விதம் விதமாக தோற்றமளிப்பவள் என்றும் இங்கே சொல்கிறார்கள். இங்கே இருக்கும் dhதாரி தேவியின் சிலை முகம் மட்டுமே கொண்டது. காலை வேளையில் தேவியின் முகம் சிறுமியாகவும், மதியத்தில் ஒரு பெண்மணியைப் போலவும், மாலை வேளையில் மூதாட்டியாகவும் தோன்றுவாள் என்றும் இங்கே சொல்கிறார்கள். அலக்நந்தா நதியின் கரையில் எழுந்தருளியிருக்கும் தேவி இந்தப் பகுதியில் இருக்கும் chசார் dhதாம் என அழைக்கப்படும் நான்கு ஆலயங்கள் மட்டுமல்லாது இந்தப் பிரதேசம் முழுவதையும் காக்கும் தேவியாக இருக்கிறார். அலக்நந்தா நதியில் மின்சாரம் தயாரிப்பதற்கென அணை கட்டிய போது இங்கே ஆலயத்தினை தூண்கள் மீது மாற்றி எழுப்பியதால் தேவியின் கோபத்திற்கு ஆளாகி பெரிய இயற்கை விபத்து உண்டானது - 2013 கேதார்நாத் மேக வெடிப்பு - யாரால் மறக்க முடியும் அந்த இயற்கைச் சீரழிவை - என்பது இங்கே உள்ள மக்களின் நம்பிக்கை. இயற்கையை எதிர்த்து நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. எத்தனைக்கு எத்தனை இயற்கையைச் சிதைக்கிறோமோ அத்தனை தூரம் இழப்பு நமக்கு தான் என்பதும் எனது நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.
dhதாரி தேவி ஆலயத்தில் தேவியை தரிசித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்றைய எங்களது இலக்கு உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் சாரி எனும் கிராமம் வரை எங்களது வாகனத்தில் எட்டுவது மட்டுமன்றி ஒரு சிறு மலையேற்றமும் செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் தேவியின் ஆலயத்திலிருந்து எங்களது வாகனத்தில் தொடர்ந்து பயணித்தோம். சுமார் 12 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு பயணம் தொடங்கினால் சாரி கிராமம் வரை சென்று சேர நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் சுமார் 70 கிலோமீட்டர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகலாம் என்று திட்டமிட்டாலும் வழியில் சில இடங்களில் நின்றே பயணிக்க வேண்டியிருந்தது. வழியில் மலைப்பகுதியில் வாழும் மக்களின் கடினமான உழைப்பினை பிரதிபலிக்கும் காட்சிகள் காணக் கிடைத்தன. தங்களது கால்நடைகளுக்கான உணவினை முதுகில் சுமந்து செல்லும் காட்சிகள் நமது மனதிலும் வலியை உண்டாக்குபவை என்று சொன்னால் அது மிகையாகாது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மலைப்பாதையில் தொடர்ந்து பயணித்த பிறகு நாங்கள் சென்று சேர்ந்த இடம் “ஹிமாலயன் பைன்” எனும் சிறு உணவகம். இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு பஹாடி நிம்பு எனப்படும் உள்ளூர் எலுமிச்சை சாறு குடித்து கொஞ்சம் இளைப்பாறினோம். அழகான பைன் மரக்காட்டின் அருகே இருக்கும் உணவகம். இங்கே தங்குவதற்கும் வசதி இருக்கிறது - ஒரு குடும்பம் தங்கலாம் எனும் அளவு தான். அந்த உணவகத்தின் உரிமையாளர் ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறார். அங்கே ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்த குட்டியுடன் எங்களது நண்பர் இந்தர் விளையாடினார். அவர் வீட்டிலும் இரண்டு நாய்கள் வளர்க்கிறார் என்பதால் எங்கேயெல்லாம் செல்லங்களைப் பார்க்கிறாரோ அங்கெல்லாம் அவற்றுடன் விளையாட ஆரம்பித்து விடுவார். ஆனால் நண்பர் அடிக்கடி அங்கே, அந்த வழியில் பயணிக்கும்போதெல்லாம் இங்கே நின்று இளைப்பாறிச் செல்வதால் உணவக உரிமையாளரையும் உழைப்பாளிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, தங்குமிட வசதிகளையும் பார்த்து குறித்துக் கொண்டபின்னர், திரும்பி வரும் போது வருகிறோம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
சில மணித்துளிகள் கடந்த பின்னர் பனிப்போர்வை போர்த்தியிருந்த சூழலில் பாதையோரத்தில் வண்டியை நிறுத்தினார் நண்பர் Bபிஷ்ட். ஃபிப்ரவரி மாதங்களில் உத்திராகண்ட் மாநிலத்தில் மலைப்பிரதேசங்கள் முழுவதும் மரங்களில் ஒரு வகை பூ பூத்துக் குலுங்கும். ஆங்கிலத்தில் Rhododendron என்றும் ஹிந்தியில் (உள்ளூர் பாஷையில்) Bபுரான்ஸ் (बुरांस) என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்தப் பூக்கள் பார்க்கவே வெகு அழகு. பார்ப்பதற்கு மட்டுமல்லாது இந்தப் பூக்களை பல விதங்களில் பயன்படுத்தவும் முடியும். பூக்கள் பூத்துக் குலுங்கும் காலங்களில் பூக்களை எடுத்து, காய வைத்து அதிலிருந்து திரவம் எடுத்து பருகுவதற்கு உகந்த பானமாகவும் தயாரிக்கிறார்கள். மருத்துவ குணங்களும் உடையது என்கிறார்கள் அங்கே இருக்கும் நண்பர்கள். திரவத்தினை குப்பிகளில் அடைத்து விற்பனையும் செய்வதுண்டு. நாங்கள் அங்கேயே சில இடங்களில் இந்தப் பானத்தினை அருந்தினோம். அந்த இடத்தினை விட்டு நகரவே மனதில்லை என்றாலும் அங்கேயிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று அடைந்த இடம் சாரி எனும் கிராமம். அங்கே சென்றடைந்த போது நேரம் சுமார் 02.40 மதியம்! பிறகு என்ன செய்தோம், என்ன அனுபவங்கள் கிடைத்தது என்பதையெல்லாம் அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
25 ஆகஸ்ட் 2025
பயணத் தொடர் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பூவின் ஜூஸ் அடைத்த பாட்டில்களைப் பார்த்த நினைவு
பதிலளிநீக்குதொடர்வது நன்று.
பதிலளிநீக்குவைக்கோலைச் சுமந்து, முழு உருவம் மறைந்து நடக்கும் பெண்ணுக்கு கால்களே கண்கள்!
உணவகச் செல்லம் அழகோ அழகு. கையிலெடுத்து கொஞ்சத் தோன்றுகிறது.
நிம்பு என்றால் எலுமிச்சை. பஹாடி என்றால் சாறா?
அந்த மலர் நம்ம ஊர் மலரொன்றை நினைவு படுத்துகிறது.
மலை நிம்பு. மலை எலுமிச்சை. தோல் கொஞ்சம் கடினமாக இருக்கும். கொழுமிச்சை போன்று. பஹாடி என்றால் மலை.
நீக்குகீதா
உங்களுக்கு பஹாடி ராகம் நினைவுக்கு வரவில்லையா கீதா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பயணத்தொடரை மீண்டும் ஆரம்பித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்கள் பயணத்துடன் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இயற்கையை எதிர்த்து நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. எத்தனைக்கு எத்தனை இயற்கையைச் சிதைக்கிறோமோ அத்தனை தூரம் இழப்பு நமக்கு தான் என்பதும் எனது நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.//
பதிலளிநீக்குஉண்மை உண்மை. என் நம்பிக்கையும் அதே!!!
நம் வாழ்வியல் உட்பட, இயற்கைக்கு எதிராக நாம் செயல்படும் போதுதான் ஆரோக்கியமும் கெடுகிறது.
கீதா
அப்பெண்மணி தலையில் சுமக்கிறார் என்று தெரிகிறது, கண் மறைக்காதோ? அதற்கு ஏற்பத்தான் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். உழைப்பாளி!!!
பதிலளிநீக்குகீதா
Rhododendron பூ பார்க்க அடுக்குச் செம்பருத்தி போன்று இருக்கிறது.
பதிலளிநீக்குகாணொளியும் சூப்பர். பனி சூழ் மேகம் போர்த்திய மலைகள் அழகு.
செல்லம் அழகு. கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது. நானும் இப்படிப் பார்க்க நேரிடும் போது கொஞ்சி விளையாடுவதுண்டு. இப்போது வீட்டில் செல்லங்கள் இல்லை.
கீதா
Very interesting travel post and I am eager to read the next part.
பதிலளிநீக்குபஹாடி நிம்பு நன்றாக இருக்கும். அந்த சார். வாசனையாகவும்.
பதிலளிநீக்குபடங்கள் விவரணம் எல்லாமே சூப்பர். முந்தைய இரு பகுதிகளும் நல்ல நினைவு இருந்தது. நீங்களும் நண்பரும் மலை பின்னணியில் பிஸ்கட், சாப்பிட்டுக் கொண்டிருந்த படம், மலைகளின் படம் நினைவுக்கு வந்தன. அது போல் dhaதாரி கோவில் நதியின் தண்ணீர் சுற்றிலும் கரையில் அமைந்திருந்த நினைவு, பாலம், எல்லாம் நினைவுக்கு வந்தன.
சரிதானா என்று போய் பார்த்துக் கொண்டேன். ஆஹா Not bad நம்ம நினைவுத்திறன் என்று எனக்கே நான் ஷொட்டு போட்டுக் கொண்டேன்!!!!
கீதா
அருமையான படங்களுடன் குளு குளு பயணம் நானும் தொடர்கிறேன் ...
பதிலளிநீக்குபோன மாத மேகவெடிப்பின் பொழுது அப்பாவும் அம்மாவும் பத்ரி பயணத்தின் அந்த சாலையில் சென்று கொண்டிருந்தனர்.. திகில் நேரங்கள் எங்களுக்கு. அவர்கள் சென்றது பத்ரில் 10 நாள் தங்கி திவ்ய பிரபந்த சேவைக்கு பெருமாளின் அனுக்கிரகத்தால் நல்லபடியாக சேவித்து ஊர் திரும்பிவிட்டனர்.
ஆனால் அந்த இயற்கை பேரிடர்களை காணும் பொழுது மிக பயமாகவும், வருத்தமாகவும் உள்ளது