அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் கேள்வி : இது என்ன?
சென்ற சனிக்கிழமை சென்னை வரை பயணம் மேற்கொண்டேன். சென்னையில் ஒரு கிரஹப் ப்ரவேசம் மற்றும் ஒரு பூணல். சனிக்கிழமை காலை பல்லவனில் புறப்பட்டு, ஞாயிறு மாலை பல்லவனில் வீடு திரும்பல்! அப்படி கிரஹப் ப்ரவேசத்திற்குச் சென்ற போது அங்கே ஒரு மரமும் அதன் கீழே படத்தில் இருப்பது போன்ற ஒரு வஸ்துவையும் பார்த்தேன். மரத்திலிருந்து இப்படியான வஸ்துக்கள் நிறையவே கீழே விழுந்து கிடந்தது. அது என்ன என்று அங்கே இருப்பவர்களுக்கும் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. முகநூலில் இந்தப் படத்தினைப் போட்டு “இது என்ன?” என்றும் கேட்டிருந்தேன். Google Lens வழி கேட்டபோது ஒரு பதில் சொன்னது. தமிழிலும் நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார் - கொஞ்சம் விவகாரமாக! உங்களுக்குத் தெரிகிறதா? தெரிந்தால் சொல்லுங்களேன்!
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : சக பயணிகள்….
இரயிலில் மட்டுமல்ல எந்த வித பயணம் சென்றாலும் நமக்கு அமையும் சக பயணிகள் சரியான விதத்தில் இல்லாவிட்டால் பயணம் இனிப்பதில்லை. என்னதான் நம்ம முன்னாடியே டிக்கெட் book பண்ணி, பார்த்துப் பார்த்து உட்கார்ந்தாலும் நமக்கு அமையும் சக பயணிகள் சரியாக அமையவில்லை என்றால் பயணம் இனிப்பதில்லை. சென்னை செல்லும்போதும் சரி, திரும்ப திருச்சி வரும்போதும் சரி, சக பயணிகள் அதிக அளவில் தொல்லை தருபவர்களாகவே இருந்தார்கள். செல்லும்போது நாங்கள் மூன்று பேர். மூன்று இருக்கைகள் தொடர்ந்து இல்லாமல் இரண்டு பக்கங்களில் மாறி இருந்தது. ஆனால் எங்களுக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் இருந்தவர்கள் இங்கே மாற்றி, அங்கே மாற்றி என எங்களை அலைக்கழிக்க நினைத்தார்கள். ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு எதிரே இருந்த ஒரு கணவன் மனைவியிடம் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் ஐவரும் பேசிக் கொண்டதில் மனது நொந்து போனது தான் மிச்சம். இரண்டு குடும்பத்தினரும் TPT - க்களாக இருந்தார்கள்! அதாவது தற்பெருமை தக்காளிகளாக!
இப்பதான் பார்த்துக் கொண்டாலும், இரண்டு குடும்பங்கள் அப்படி பேசி தள்ளுகிறார்கள்...... அதில் பாதி..... இல்லை இல்லை முக்காலுக்கும் மேல் தற்புகழ்ச்சி..... எனக்கு அங்க நாலு வீடு, இங்க நாலு வீடு..... நான் இவ்வளவு சம்பளம் வாங்கறேன், என் பொண்ணு US ல இருக்கா ..... அங்கே இரண்டு வீடு இருக்கு......
போகும்போது இப்படி என்றால் வரும்போது இன்னும் மோசம்! அது குறித்து தனிப் பதிவாகவே எழுதலாம் எனும் வண்ணம் இருந்தது அந்தப் பயணம்! எழுதுகிறேன். என்ன மனிதர்களோ! சக பயணிகள் சரியாக அமைவது இறைவன் தரும் வரம் மட்டுமல்ல, இரயில்வே துறை தரும் வரமும் கூட!
******
பழைய நினைப்புடா பேராண்டி : ரிசப்ஷன்
2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தில்லிவாழ் தமிழர்களின் ரிசப்ஷன்! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. தலைநகர் தில்லியில் வசிக்கும் தமிழர்கள் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்சிகளில் கிடைத்த அனுபவங்கள் சொன்ன பதிவு. அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக!
தில்லியிலேயே பலகாலம் தங்கிவிட்ட தமிழர்கள் தனது பெண்ணோ, பையனோ கல்யாண வயதிற்கு வந்துவிட்டால் பெரும்பாலும் தில்லி வாழ் மணமகன்/மகளையே தேடுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் எங்களுக்கு தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் ஒத்து வராது என்பது தான்! என்னமோ பல தலைமுறைகளாக இங்கேயே தங்கி விட்டது போல் பேசுவார்கள். அப்படிப்பட்ட கல்யாணங்கள் பெரும்பாலும் தில்லியிலேயே நடந்து விடுவதால், சிலரை முதல் நாள் மாலை ரிசப்ஷனுக்கும் உறவினர்களை மட்டும் திருமணத்திற்கும் அழைப்பார்கள்.
நல்ல கோடையாக இருந்தாலும் உடல் சிலிர்க்கும் குளிராக இருந்தாலும் மணமகனுக்கு ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ஒரு ஷெர்வானி! மணமகளுக்கு ராஜஸ்தானிய/குஜராத்தி/பஞ்சாபி முறைப்படி ஒரு காக்ரா/சோளிதான் உடையாக இருக்கும்!
மாலை 07.00 மணிக்கு ஆரம்பிக்குமென்றால் 04.30 மணிக்கே மணப்பெண்ணும் மணமகனும் ஏதாவது ஒரு ப்யூட்டி பார்லர் சென்று பழைய வண்டியை டிங்கரிங் செய்து டெண்டிங், பெயிண்டிங் செய்வது போல முகத்தினை டிங்கரிங் செய்து வருவார்கள். கண்டிப்பாக மணப்பெண் தலைமுடியை கட்டியிருக்க மாட்டார் – தலைவிரி கோலம்தான்! அதிலும் ஆங்காங்கே சில பல முடிகளில் மட்டும் கோல்டன் அல்லது சில்வர் கலரிங் உண்டு. பின்னே வீடியோ எடுப்பதற்காக போடும் விளக்குகளில் பளபளக்க வேண்டாமா!
சரி மணப்பெண்/மணமகன் என்பதால் அவர்களை விட்டுவிடலாம். வீட்டில் உள்ள எல்லா பெண்மணிகளும் கண்டிப்பாக ப்யூட்டி பார்லருக்குப் போய் அட்லீஸ்ட் ஒரு ப்ளீச்சிங் செய்து, கொஞ்சம் அதிகமாகவே அலங்காரம் செய்துகொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்வார்கள் – ஏதோ அவர்கள் தலைமையில்தான் அந்த நிகழ்ச்சியே நடப்பது போல!
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் அரட்டை : பூனைக் கல்யாணம்
நண்பர் பத்மநாபன் அவர்களுடன் அவ்வப்போது அலைபேசி வழி அரட்டை அடிப்பது வழக்கம். பலரின் தலைகள் அந்த அரட்டையில் உருளும். அண்ணாச்சி அவரது வழக்கமான நகைச்சுவை உணர்வை அந்த அரட்டையிலும் வெளிப்படுத்துவார். குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை எங்கள் அரட்டை தொடர்ந்து கொண்டிருக்கும். சமீபத்தில் அவருடன் பேசும்போது “அண்ணே, சென்னைக்கு ஒரு பூணல் கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்” என்றதும் அவர் கேட்டது என்னது “பூனைக் கல்யாணமா?” என்றார். உடனே அவரிடம் “எப்பப்பாரு பூனை நினைவாகவே இருக்கீங்களே, பூனைக்கு வேற கல்யாணம் பண்ணனுமா? என்னதான் நீங்க பூனை வளர்க்கிறீங்க என்றாலும், எப்போதும் பூனை நினைவு தானா?” என்று கேட்க, அவர் சிரித்தபடியே “அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்”ங்கற மாதிரி எனக்கு எப்பவும் பூனை நினைவு தான் என்கிறார். அதை வைத்து சில நிமிடங்கள் அவரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது இப்படி அரட்டை அடித்து, பல விஷயங்களைப் பேசுவதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது - இல்லையா?
******
இந்த வாரத்தின் தகவல் : Raulane Festival
முன்பு ஒரு முறை சென்று வந்த ஹிமாச்சலப் பிரதேசப் பயணத்தின் போது கல்பா என்கிற இடத்திற்கும் சென்று வந்தேன். அந்த இடம் அற்புதமான அழகைத் தன்னகத்தே கொண்ட ஒரு சிறு ஊர். அந்த ஊரில் இருக்கும் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றுதான் இந்த Raulane Festival எனப்படுவது. இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் சற்றே வித்தியாசமானவை. ஆண், பெண் என இரு கதாபாத்திரங்களுமே ஆண்களே பங்கெடுப்பார்கள். அவர்களது முகத்தினை மறைக்கும் வண்ணம் இருக்கும் அலங்காரங்கள் பார்ப்பதற்கு ஒரு வித அழகு. காணொளிகளாகக் கண்டிருந்தாலும் இதுவரை எனக்கு நேரில் காணும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இல்லை. வாய்ப்பு அமையாதே! அதனால் இப்படி காணொளிகளாக பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான். நான் சமீபத்தில் பார்த்து ரசித்த, இந்த நடனம் குறித்த தகவல்கள் அடங்கிய சிறு காணொளி ஒன்று - உங்கள் பார்வைக்கு…. மொழி ஹிந்தியாக இருந்தாலும், ஆங்கிலத்தில் கீழே தகவல் உண்டு
******
இந்த வாரத்தின் சிந்தனை - வலைப்பூ உலகம் :
முன்பு பரபரவென இயங்கிக் கொண்டிருந்த வலைப்பூ உலகம் இப்போதெல்லாம் முகநூலிலும் இன்ஸ்டாவிலும் தான் இருக்கிறது. எழுதுவதை விட காணொளியாக பகிர்வதில் - அதிலும் Shorts எனப்படும் சிறு காணொளிகள் பகிர்வதில் தான் அதிக ஆர்வம் இருக்கிறது. யாருப்பா நீட்டி முழக்கி எழுதறது என்று ஒவ்வொருவரும் நினைத்துவிட்டால் எழுதுவதே குறைந்து போய்விடுமோ என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவில் இந்த வலைப்பூவில் எழுதுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு தான். முன்பு ஒவ்வொரு பதிவுக்கும் வரும் பக்கப் பார்வைகள் அதிகம் இருக்கும். இப்போது நூறைத் தாண்டுவதே அரிதாக இருக்கிறது. கருத்துக்களும் கூட ஒரு சிலர் மட்டுமே தருகிறார்கள். ஆனாலும் ஒரு உத்வேகத்துடன் எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு வாழ்த்துகள். சமீபத்தில் எனது வலைப்பூவின் பக்கப் பார்வைகளைப் பார்த்தபோது 30 லக்ஷத்தினை தாண்டி இருப்பதைப் பார்த்தேன் - அது சமயமே இந்த சிந்தனைகள்….
******
இந்த வாரத்தின் உணவு - இட்லி Chaat:
வடக்கில் விதம் விதமான Chaat வகை உணவுகள் கிடைக்கும். நொறுக்குத் தீனி வகையில் வரும் இதற்கு நிறையவே வரவேற்பு உண்டு. திருமண நிகழ்வுகள், வரவேற்பு, திருவிழாக்கள் என எங்கே பார்த்தாலும் இந்த Chaat வகைகளுக்காகவே நிறைய ஸ்டால்கள் இருக்கும். அங்கே கூட்டமும் அதிக அளவில் அம்மும். முன்பெல்லாம் வட இந்திய வகைகளாக இருந்ததை கால ஓட்டத்தில் தெற்கும் வடக்குமாக கலந்து இட்லி Chaat என்ற பெயரில் கூட உணவு வகைகள் வந்து விட்டன. இட்லி வைத்து கூட தற்போது Chaat வந்து விட்டது! Chaat வகைகள்பிடிக்கும் என்றாலும் இது தேவையா என்ற எண்ணம் இருந்தாலும் சுவைத்துப் பார்க்கலாம்.. செய்முறை குறிப்பு கீழே!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
14 மார்ச் 2026







முதல் படத்தில் இருப்பது என்ன என்று நீங்கள் சொல்லப்போகும் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குரயில் பயணங்களில் இந்த மாதிரி இம்சைகள் சகஜம்!
பழைய நினைப்பைப் பார்த்து வந்தேன்!
பதிலளிநீக்குபூனைக்கு கல்யாணம் புன்னகைக்க வைத்தது. எங்க அம்மா பாடுவார் "பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்.. பூலோகமெல்லாம் கொண்டாட்டம்" என்று மெதுவாக இழுத்து இழுத்து ஒரு பாட்டு பாடுவார். அது நினைவுக்கு வருகிறது.
பதிவுகளின் பக்கப் பார்வைகள் குறைந்துதான் விட்டன. நாங்களும் விட்டேனா பார் என்று எழுதிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சநாள் சென்று மெதுவாக ரீடர்ஸ் கவுண்ட் ஏறும்.
பதிலளிநீக்குஇட்லியை நாங்கள் விதம் விதமாக கொலை செய்வோம்! அந்த ஆரோக்யமான பதார்த்தம் பாவமாக உருமாறும், நிறம் மாறும்!
தற்பெருமை... ஆஹா... நல்ல பொழுதுபோக்கு. எனக்கு எப்போதுமே தற்பெருமை பேசினால் தலையில் குட்டு வைப்பது போல சங்கடங்கள் உடனே வரும் என்ற நம்பிக்கை.
பதிலளிநீக்குபூனைப் பிரியர்கள், நாய் பிரியர்கள் வித்தியாசமானவர்கள். எனக்குத்தான் அவர்கள் அன்பு புரிவதில்லை.
இட்லி சாட்... தயிரோடு பார்க்க அழகாக இருக்கிறது. என்னுடைய சந்தேகம், இட்லி மாவு சரியா வராமல் கல்லாகி விட்ட இட்லிகளையோ இல்லை மிஞ்சினவற்றையோ இப்படித் தலைல கட்டறாங்களோ?
பதிலளிநீக்குஇனி சர்க்கரைப்்பொங்கலுக்கு வெங்காய சாம்பார் காம்பினேஷனும் வருமோ?