சனி, 14 மார்ச், 2026

காஃபி வித் கிட்டு - 230 - இது என்ன? - சக பயணிகள்…. - ரிசப்ஷன் - பூனைக் கல்யாணம் - Raulane Festival - வலைப்பூ உலகம் - இட்லி Chaat


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் கேள்வி  : இது என்ன?



சென்ற சனிக்கிழமை சென்னை வரை பயணம் மேற்கொண்டேன்.  சென்னையில் ஒரு கிரஹப் ப்ரவேசம் மற்றும் ஒரு பூணல். சனிக்கிழமை காலை பல்லவனில் புறப்பட்டு, ஞாயிறு மாலை பல்லவனில் வீடு திரும்பல்!  அப்படி கிரஹப் ப்ரவேசத்திற்குச் சென்ற போது அங்கே ஒரு மரமும் அதன் கீழே படத்தில் இருப்பது போன்ற ஒரு வஸ்துவையும் பார்த்தேன். மரத்திலிருந்து இப்படியான வஸ்துக்கள் நிறையவே கீழே விழுந்து கிடந்தது.  அது என்ன என்று அங்கே இருப்பவர்களுக்கும் தெரியவில்லை.  எனக்கும் தெரியவில்லை. முகநூலில் இந்தப் படத்தினைப் போட்டு “இது என்ன?” என்றும் கேட்டிருந்தேன்.  Google Lens வழி கேட்டபோது ஒரு பதில் சொன்னது.  தமிழிலும் நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார் - கொஞ்சம் விவகாரமாக!  உங்களுக்குத் தெரிகிறதா? தெரிந்தால் சொல்லுங்களேன்!


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் :  சக பயணிகள்….



படம்: இணையத்திலிருந்து...

இரயிலில் மட்டுமல்ல எந்த வித பயணம் சென்றாலும் நமக்கு அமையும் சக பயணிகள் சரியான விதத்தில் இல்லாவிட்டால் பயணம் இனிப்பதில்லை. என்னதான் நம்ம முன்னாடியே டிக்கெட் book பண்ணி, பார்த்துப் பார்த்து உட்கார்ந்தாலும் நமக்கு அமையும் சக பயணிகள் சரியாக அமையவில்லை என்றால் பயணம் இனிப்பதில்லை. சென்னை செல்லும்போதும் சரி, திரும்ப திருச்சி வரும்போதும் சரி, சக பயணிகள் அதிக அளவில் தொல்லை தருபவர்களாகவே இருந்தார்கள்.  செல்லும்போது நாங்கள் மூன்று பேர்.  மூன்று இருக்கைகள் தொடர்ந்து இல்லாமல் இரண்டு பக்கங்களில் மாறி இருந்தது.  ஆனால் எங்களுக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் இருந்தவர்கள் இங்கே மாற்றி, அங்கே மாற்றி என எங்களை அலைக்கழிக்க நினைத்தார்கள்.  ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு எதிரே இருந்த ஒரு கணவன் மனைவியிடம் பேச ஆரம்பித்தார்கள்.  அவர்கள் ஐவரும் பேசிக் கொண்டதில் மனது நொந்து போனது தான் மிச்சம்.  இரண்டு குடும்பத்தினரும் TPT - க்களாக இருந்தார்கள்! அதாவது தற்பெருமை தக்காளிகளாக! 


இப்பதான் பார்த்துக் கொண்டாலும், இரண்டு குடும்பங்கள் அப்படி பேசி தள்ளுகிறார்கள்...... அதில் பாதி..... இல்லை இல்லை முக்காலுக்கும் மேல் தற்புகழ்ச்சி..... எனக்கு அங்க நாலு வீடு, இங்க நாலு வீடு..... நான் இவ்வளவு சம்பளம் வாங்கறேன், என் பொண்ணு US ல இருக்கா ..... அங்கே இரண்டு வீடு இருக்கு......  


போகும்போது இப்படி என்றால் வரும்போது இன்னும் மோசம்! அது குறித்து தனிப் பதிவாகவே எழுதலாம் எனும் வண்ணம் இருந்தது அந்தப் பயணம்!  எழுதுகிறேன்.  என்ன மனிதர்களோ!  சக பயணிகள் சரியாக அமைவது இறைவன் தரும் வரம் மட்டுமல்ல, இரயில்வே துறை தரும் வரமும் கூட!


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : ரிசப்ஷன்


2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தில்லிவாழ் தமிழர்களின் ரிசப்ஷன்! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. தலைநகர் தில்லியில் வசிக்கும் தமிழர்கள் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்சிகளில் கிடைத்த அனுபவங்கள் சொன்ன பதிவு. அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! 


தில்லியிலேயே பலகாலம் தங்கிவிட்ட தமிழர்கள் தனது பெண்ணோ, பையனோ கல்யாண வயதிற்கு வந்துவிட்டால் பெரும்பாலும் தில்லி வாழ் மணமகன்/மகளையே தேடுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் எங்களுக்கு தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் ஒத்து வராது என்பது தான்! என்னமோ பல தலைமுறைகளாக இங்கேயே தங்கி விட்டது போல் பேசுவார்கள். அப்படிப்பட்ட கல்யாணங்கள் பெரும்பாலும் தில்லியிலேயே நடந்து விடுவதால், சிலரை முதல் நாள் மாலை ரிசப்ஷனுக்கும் உறவினர்களை மட்டும் திருமணத்திற்கும் அழைப்பார்கள்.


நல்ல கோடையாக இருந்தாலும் உடல் சிலிர்க்கும் குளிராக இருந்தாலும் மணமகனுக்கு ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ஒரு ஷெர்வானி! மணமகளுக்கு ராஜஸ்தானிய/குஜராத்தி/பஞ்சாபி முறைப்படி ஒரு காக்ரா/சோளிதான் உடையாக இருக்கும்!


மாலை 07.00 மணிக்கு ஆரம்பிக்குமென்றால் 04.30 மணிக்கே மணப்பெண்ணும் மணமகனும் ஏதாவது ஒரு ப்யூட்டி பார்லர் சென்று பழைய வண்டியை டிங்கரிங் செய்து டெண்டிங், பெயிண்டிங் செய்வது போல முகத்தினை டிங்கரிங் செய்து வருவார்கள். கண்டிப்பாக மணப்பெண் தலைமுடியை கட்டியிருக்க மாட்டார் – தலைவிரி கோலம்தான்! அதிலும் ஆங்காங்கே சில பல முடிகளில் மட்டும் கோல்டன் அல்லது சில்வர் கலரிங் உண்டு. பின்னே வீடியோ எடுப்பதற்காக போடும் விளக்குகளில் பளபளக்க வேண்டாமா!


சரி மணப்பெண்/மணமகன் என்பதால் அவர்களை விட்டுவிடலாம். வீட்டில் உள்ள எல்லா பெண்மணிகளும் கண்டிப்பாக ப்யூட்டி பார்லருக்குப் போய் அட்லீஸ்ட் ஒரு ப்ளீச்சிங் செய்து, கொஞ்சம் அதிகமாகவே அலங்காரம் செய்துகொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்வார்கள் – ஏதோ அவர்கள் தலைமையில்தான் அந்த நிகழ்ச்சியே நடப்பது போல!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் அரட்டை  : பூனைக் கல்யாணம்



நண்பர் பத்மநாபன் அவர்களுடன் அவ்வப்போது அலைபேசி வழி அரட்டை அடிப்பது வழக்கம்.  பலரின் தலைகள் அந்த அரட்டையில் உருளும்.  அண்ணாச்சி அவரது வழக்கமான நகைச்சுவை உணர்வை அந்த அரட்டையிலும் வெளிப்படுத்துவார்.  குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை எங்கள் அரட்டை தொடர்ந்து கொண்டிருக்கும். சமீபத்தில் அவருடன் பேசும்போது “அண்ணே, சென்னைக்கு ஒரு பூணல் கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்” என்றதும் அவர் கேட்டது என்னது “பூனைக் கல்யாணமா?” என்றார்.  உடனே அவரிடம் “எப்பப்பாரு பூனை நினைவாகவே இருக்கீங்களே, பூனைக்கு வேற கல்யாணம் பண்ணனுமா? என்னதான் நீங்க பூனை வளர்க்கிறீங்க என்றாலும், எப்போதும் பூனை நினைவு தானா?” என்று கேட்க, அவர் சிரித்தபடியே “அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்”ங்கற மாதிரி  எனக்கு எப்பவும் பூனை நினைவு தான் என்கிறார்.  அதை வைத்து சில நிமிடங்கள் அவரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது இப்படி அரட்டை அடித்து, பல விஷயங்களைப் பேசுவதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது - இல்லையா? 


******


இந்த வாரத்தின் தகவல் :  Raulane Festival



முன்பு ஒரு முறை சென்று வந்த ஹிமாச்சலப் பிரதேசப் பயணத்தின் போது கல்பா என்கிற இடத்திற்கும் சென்று வந்தேன்.  அந்த இடம் அற்புதமான அழகைத் தன்னகத்தே கொண்ட ஒரு சிறு ஊர்.  அந்த ஊரில் இருக்கும் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றுதான் இந்த Raulane Festival எனப்படுவது.  இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் சற்றே வித்தியாசமானவை.  ஆண், பெண் என இரு கதாபாத்திரங்களுமே ஆண்களே பங்கெடுப்பார்கள்.  அவர்களது முகத்தினை மறைக்கும் வண்ணம் இருக்கும் அலங்காரங்கள் பார்ப்பதற்கு ஒரு வித அழகு.  காணொளிகளாகக் கண்டிருந்தாலும் இதுவரை எனக்கு நேரில் காணும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இல்லை.  வாய்ப்பு அமையாதே! அதனால் இப்படி காணொளிகளாக பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.  நான் சமீபத்தில் பார்த்து ரசித்த, இந்த நடனம் குறித்த தகவல்கள் அடங்கிய சிறு காணொளி ஒன்று - உங்கள் பார்வைக்கு…. மொழி ஹிந்தியாக இருந்தாலும், ஆங்கிலத்தில் கீழே தகவல் உண்டு


******


இந்த வாரத்தின் சிந்தனை  - வலைப்பூ உலகம் :



முன்பு பரபரவென இயங்கிக் கொண்டிருந்த வலைப்பூ உலகம் இப்போதெல்லாம் முகநூலிலும் இன்ஸ்டாவிலும் தான் இருக்கிறது.  எழுதுவதை விட காணொளியாக பகிர்வதில் - அதிலும் Shorts எனப்படும் சிறு காணொளிகள் பகிர்வதில் தான் அதிக ஆர்வம் இருக்கிறது.  யாருப்பா நீட்டி முழக்கி எழுதறது என்று ஒவ்வொருவரும் நினைத்துவிட்டால் எழுதுவதே குறைந்து போய்விடுமோ என்று தோன்றுகிறது.  இன்னும் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு நடுவில் இந்த வலைப்பூவில் எழுதுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அதனைப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு தான். முன்பு ஒவ்வொரு பதிவுக்கும் வரும் பக்கப் பார்வைகள் அதிகம் இருக்கும். இப்போது நூறைத் தாண்டுவதே அரிதாக இருக்கிறது. கருத்துக்களும் கூட ஒரு சிலர் மட்டுமே தருகிறார்கள்.  ஆனாலும் ஒரு உத்வேகத்துடன் எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு வாழ்த்துகள்.  சமீபத்தில் எனது வலைப்பூவின் பக்கப் பார்வைகளைப் பார்த்தபோது 30 லக்ஷத்தினை தாண்டி இருப்பதைப் பார்த்தேன் - அது சமயமே இந்த சிந்தனைகள்….



******


இந்த வாரத்தின் உணவு - இட்லி Chaat:



வடக்கில் விதம் விதமான Chaat வகை உணவுகள் கிடைக்கும். நொறுக்குத் தீனி வகையில் வரும் இதற்கு நிறையவே வரவேற்பு உண்டு.  திருமண நிகழ்வுகள், வரவேற்பு, திருவிழாக்கள் என எங்கே பார்த்தாலும் இந்த Chaat வகைகளுக்காகவே நிறைய ஸ்டால்கள் இருக்கும்.  அங்கே கூட்டமும் அதிக அளவில் அம்மும்.  முன்பெல்லாம் வட இந்திய வகைகளாக இருந்ததை கால ஓட்டத்தில் தெற்கும் வடக்குமாக கலந்து இட்லி Chaat என்ற பெயரில் கூட உணவு வகைகள் வந்து விட்டன.  இட்லி வைத்து கூட தற்போது Chaat வந்து விட்டது! Chaat வகைகள்பிடிக்கும் என்றாலும் இது தேவையா என்ற எண்ணம் இருந்தாலும் சுவைத்துப் பார்க்கலாம்..  செய்முறை குறிப்பு கீழே!

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

14 மார்ச் 2026


50 கருத்துகள்:

  1. முதல் படத்தில் இருப்பது என்ன என்று நீங்கள் சொல்லப்போகும் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்!

    ரயில் பயணங்களில் இந்த மாதிரி இம்சைகள் சகஜம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருப்பதை விதம் விதமாகச் சொன்னாலும் அதன் பெயர் குதிரைப் பிடுக்கன் விதை என்று தெரிகிறது. எதற்குப் பயன்படும் என்பதை நீங்கள் கூகுள் செய்தால் தெரிந்து கொள்ளலாம்!

      ரயில் பயண இம்சைகள் சகஜமே... ஆனாலும் தொல்லை ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பழைய நினைப்பைப் பார்த்து வந்தேன்!

    பூனைக்கு கல்யாணம் புன்னகைக்க வைத்தது.  எங்க அம்மா பாடுவார் "பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்..  பூலோகமெல்லாம் கொண்டாட்டம்" என்று மெதுவாக இழுத்து இழுத்து ஒரு பாட்டு பாடுவார்.  அது நினைவுக்கு வருகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நினைப்பு - அங்கேயும் சென்று வந்ததில் மகிழ்ச்சி.

      பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம் - வித்தியாசமான பாடல் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதிவுகளின் பக்கப் பார்வைகள் குறைந்துதான் விட்டன.  நாங்களும் விட்டேனா பார் என்று எழுதிக் கொண்டிருக்கிறோம்.  கொஞ்சநாள் சென்று மெதுவாக ரீடர்ஸ் கவுண்ட் ஏறும்.

    இட்லியை நாங்கள்  விதம் விதமாக கொலை செய்வோம்!  அந்த ஆரோக்யமான பதார்த்தம் பாவமாக உருமாறும், நிறம் மாறும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளின் பக்கப் பார்வைகள் - அது குறித்த கவலை இல்லை. முடியும் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம்.

      இட்லியை விதம் விதமாகக் கொலை! ஹாஹா.... நிலை மாறும் இட்லி! இப்படிச் செய்யும் போது சில சமயங்களில் சுவையாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தற்பெருமை... ஆஹா... நல்ல பொழுதுபோக்கு. எனக்கு எப்போதுமே தற்பெருமை பேசினால் தலையில் குட்டு வைப்பது போல சங்கடங்கள் உடனே வரும் என்ற நம்பிக்கை.

    பூனைப் பிரியர்கள், நாய் பிரியர்கள் வித்தியாசமானவர்கள். எனக்குத்தான் அவர்கள் அன்பு புரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்பெருமை பேசினால் தலையில் குட்டு வைப்பது போல சங்கடங்கள் உடனே வரும் - நல்ல விஷயம் தானே! பெரும்பாலும் நம்மைப் பற்றி நாமே பெருமையாகப் பேசிக்கொள்வது சரியல்ல! ஆனால் இன்று அனைவருமே இப்படித்தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

      பூனை, நாய் பிரியர்கள் வித்தியாசமானவர்கள் - பார்வைகள் மாறுபடலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. இட்லி சாட்... தயிரோடு பார்க்க அழகாக இருக்கிறது. என்னுடைய சந்தேகம், இட்லி மாவு சரியா வராமல் கல்லாகி விட்ட இட்லிகளையோ இல்லை மிஞ்சினவற்றையோ இப்படித் தலைல கட்டறாங்களோ?

    இனி சர்க்கரைப்்பொங்கலுக்கு வெங்காய சாம்பார் காம்பினேஷனும் வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க அழகாகவே இருக்கிறது - உண்மை. மிஞ்சினவற்றை இப்படித் தலைல கட்டறாங்களோ? இருக்கலாம் - வீட்டில் மீந்து போன இட்லியை வைத்து இட்லி உப்புமா செய்வது வழக்கம் தானே!

      சர்க்கரைப்பொங்கலுக்கு வெங்காய சாம்பார் - வந்தாலும் வரலாம் இந்தக் காம்பினேஷன்! ஏற்கனவே சில வீடுகளில் பொங்கல் சமயத்தில் பால் பொங்கல் என வெண்மையான பொங்கலுக்கு சாம்பார் உடன் சாப்பிடுவது வழக்கம் தானே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. வாசகம் சூப்பர்! அதேதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  7. இது என்ன - தேங்காய் ஓட்டில் செய்ய்ப்பட்டது போன்று இருக்கு காய்ந்த மட்டைத் தேங்காயில் அல்லது நுங்கு shell ல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் மட்டை, நுங்கு ஷெல் - இல்லை. ஸ்ரீராம் கருத்திற்குப் பின்னூட்டமாகச் சொல்லியிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. பார்த்துவிட்டேன் ஜி. அதன் பயன்பாடும்!!!

      ஆங்கிலத்தில் முதலில் ஒரு பெயரைச் சொல்கிறது ஆங்கிலத்தில் திட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கெட்டவார்த்தை!!!!!

      நல்லவிதமாக ஜாவா ஆலிவ் என்றும் போட்டிருந்தது. பல பெயர்கள் கொண்ட மரம் போல!

      கீதா

      நீக்கு
    3. ஜாவா ஆலிவ்..... ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி சொல்கிறது......

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. இது என்ன? - தேங்காய் சிரட்டை/காய்ந்த மட்டைத்தேங்காயில் அல்லது நுங்கு shell ல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காய்ந்த மட்டைத் தேங்காய்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஓ அப்ப மட்டைத் தேங்காய் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் ஒத்தையா ரெட்டையா விளையாட்டு மாதிரி இதுவா அதுவா இதுவா இருக்குமோன்னுலாம் எழுதறாரே

      நீக்கு
    2. ஹாஹா....... கண்டுபிடிப்பதில் இருக்கும் ஆர்வம் காரணம்.....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.....

      நீக்கு
  11. இன்னொன்று இங்கு ஒரு மரம் பல இடங்களிலும் இருக்கின்றது. அதிலிருந்து விழுவது காய்ந்தால் இப்படி இருக்கும் ஆனால் இவ்வளவு பெரிதாக இருக்காது. சின்னதாக இருக்கும். பெய்ர் தெரியவில்லை. நானும் அதை கூகுளில் போட்டுத் தேட வேண்டும் என்று நினைப்பதுண்டு மறந்துவிடும்.

    இப்ப இந்தப் படத்தை கூகுளில் போட்டுத் தேடினேன் ஆனால் அது என்னென்னவோ சொல்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னென்னவோ சொல்கிறது - ஹாஹா... அப்படித்தான் சில சமயங்களில் எது சரி என்று தெரியாமலேயே போய்விடும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. என்ன மனிதர்களோ! சக பயணிகள் சரியாக அமைவது இறைவன் தரும் வரம் மட்டுமல்ல, இரயில்வே துறை தரும் வரமும் கூட!//

    ஹாஹாஹா! உண்மைதான். ஆனால் ரயில்வே க்கு எப்படித் தெரியும் அந்த மனிதர்களைப் பற்றி!!!!!ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயில்வே க்கு எப்படித் தெரியும்? உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  13. தில்லி வாழ் தமிழர்களின் ரிசப்ஷன் சின்ன அனுபவம் உண்டு. சில வீடுகளில் தெற்கும் வடக்கும் கலந்து கட்டி வேறு இருக்கும் குழம்பி!! (இப்ப பல கல்யாணங்களில் அப்படித்தானே!)

    //நல்ல கோடையாக இருந்தாலும் உடல் சிலிர்க்கும் குளிராக இருந்தாலும் மணமகனுக்கு ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ஒரு ஷெர்வானி! மணமகளுக்கு ராஜஸ்தானிய/குஜராத்தி/பஞ்சாபி முறைப்படி ஒரு காக்ரா/சோளிதான் உடையாக இருக்கும்!//

    அதே!! இப்ப நம்ம ஊர்க் கல்யாணங்களுமே உடைகள் இப்படித்தான்..

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது தமிழகத்திலும் அதே நிலை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  14. ரிசப்ஷன் சொன்ன நேரத்திற்குத் தொடங்குவதில்லை.

    //வீட்டில் உள்ள எல்லா பெண்மணிகளும் கண்டிப்பாக ப்யூட்டி பார்லருக்குப் போய் அட்லீஸ்ட் ஒரு ப்ளீச்சிங் செய்து, கொஞ்சம் அதிகமாகவே அலங்காரம் செய்துகொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்வார்கள் – ஏதோ அவர்கள் தலைமையில்தான் அந்த நிகழ்ச்சியே நடப்பது போல!//

    டிட்டோ...இப்போது ரொம்பவே சகஜம்....வரும் விருந்தாளிகளும் கூட!!!!!! சமீபத்தில் கூட அப்படி ஒன்று...அவர்களே பேசிக் கொண்டதில் தெரிந்தது.... ஃபோட்டோக்கு அப்படி இருந்தால்தான் நன்றாக இருக்குமாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாண நிகழ்வினை விட அங்கே எடுக்கப்படும் நிழற்படங்களும் காணொளிகளும் மிக மிக முக்கியம் - அதில் அழகாக, எடுப்பாகத் தெரிவதே முக்கியம். அதற்காகவே தங்க நகை வேண்டாம் என்று வாடகைக்கு எடுத்த செய்ற்கை நகைகள் தான் அதிகம் அணிகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  15. பப்பு அண்ணாச்சியின் நகைச்சுவை!!! நிஜமாக இப்படிச் சிரித்துவிட்டால் நோய் நொடியே இருக்காது!

    கண்டிப்பாக சுகம் தான், இப்படியான அரட்டை!!! ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான அரட்டைகள் தான் நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  16. Raulane Festival - தகவல்கள் மனதை ஈர்க்கின்றன. படமும் தான். ஹூம் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு காணொளியைப் பார்க்கிறேன். காணொளி சொக்க வைக்கிறது.

    இடையில் புஸு புஸுன்னு செல்லங்கள் வேறு!!! வடக்கில் பனிப் பிரதேசங்களில் உள்ள செல்லங்கள் இயற்கையாகவே புஸு புஸுன்னு இருக்கின்றன. fur coat போட்டுக் கொண்டு!!!!!

    ஒருவர் கையில் டவல் ஒன்றை வைத்துக் கொண்டு வித்தை காட்டுகிறார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமூச்சு - பல சமயங்களில் இப்படித்தான். வேறு வழியில்லை. எனக்கும் பிடித்திருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  17. அதிலும் Shorts எனப்படும் சிறு காணொளிகள் பகிர்வதில் தான் அதிக ஆர்வம் இருக்கிறது.//

    உண்மை ஜி. நட்பு கூட இப்படித்தான் இப்ப...இது trend ஆம் இப்படித்தான் காலத்துக்கு ஏற்ப போய்க்கணும்னு!!!!! reals செய்கிறார் ஆனால் எழுதுவது......

    //யாருப்பா நீட்டி முழக்கி எழுதறது என்று ஒவ்வொருவரும் நினைத்துவிட்டால் எழுதுவதே குறைந்து போய்விடுமோ//

    வாசிப்பவர்களும் வாசிப்பதில்லை எனவே என்று காரணம்!!!

    ஆனால் எனக்கென்னவோ எழுதுவதுதான் ...இந்த reels, shorts எல்லாம் ஷண நேரம் டக்குடக்கென்று வருவது சில சமயங்களில் புரிவதில்லை....மிகவும் வேகமாகப் பேசுகிறார்கள்.....எழுத்துகளும் வேக வேகமாக வந்து மறைகின்றன. ஒரு வேளை என் திறன் குறைகிறதோ என்னவோ தெரியவில்லை. அவற்றைப் பார்ப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. நிதானமாகப் பார்த்து, வாசிப்பதுதான் பிடித்தும் இருக்கிறது.

    உளவியல்/நரம்பியல் வல்லுநர்கள் சொல்வது, இது மூளைக்கு நல்லதல்ல என்று. ஆனா பாருங்க அந்த மருத்துவர்களே reels, shorts நிறைய போடறாங்க!!!!!!!

    பொதுவாகவே பார்வையாளர்கள் குறைந்திருக்கிறது என்று சொன்னாலும்....நான் எழுதுவதற்கெல்லாம் ரொம்பக் குறைவு! ஜி பார்வையாளர்கள். குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் உள்ளே போய் பார்ப்பதும் இல்லை. காரணம் இப்ப இருக்கும் சோர்வு இன்னும் நீண்டுவிடும் என்று!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shorts தான் இப்போ trending....... ஒவ்வொரு சமயத்திலும் இப்படி ஏதோ ஒன்று......

      நானும் பொதுவாக பார்வையாளர்கள் கணக்கு விவரங்கள் பார்ப்பது இல்லை. எப்போதாவது பார்ப்பது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. எதற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படவேண்டும்? குமுதத்தில் ஜெயகாந்தன் (அல்லது வேறு ஒரு எழுத்தாளர்) சிறுகதை வந்தால், குமுதம் 10 லட்சம் பிரதி விற்றால், பத்து லட்சம் பேரும் அதனைப் படிப்பார்கள் என்று நினைத்துக்கொள்ள முடியுமா? நம் ஆர்வத்திற்கு எழுதுகிறோம். நிச்சயம் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும் அது நல்லதுதானே.

      நீக்கு
    3. பார்வையாளர்கள் எண்ணிக்கை பற்றிய கவலை இல்லை நெல்லைத் தமிழன். நமக்குப் பிடித்ததால் எழுதுகிறோம் - அவ்வளவே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  18. இட்லி சாட் செய்திருக்கிறேன் ஜி.

    வழக்கமாகச் செய்யும் இட்லியில், இட்லி ஃப்ரை, தயிர் இட்லி, இட்லி மஞ்சூரியன்/65 என்றும்,!!!!!!!!!!!!!!!!! மகன் இங்கு இருந்த வரை விதம் விதமாகச் செய்து.....இப்ப சுத்தம் அல்லது செய்வது அபூர்வம்.

    காணொளி பார்த்தேன் ஜி. நல்லா இருக்கு. ஆனா அவங்க திடீர் இட்லி செய்யறாங்க. சோடா உப்பு பயன்படுத்தறாங்க. நம் வீட்டில் பயன்படுத்துவது இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோடா உப்பு பயன்படுத்துவது நல்லதல்ல...... இது திடீர் இட்லி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  19. விஜயலஷ்மி சென்னை14 மார்ச், 2026 அன்று 3:25 PM

    இது என்ன ஓடு சென்னையில் எந்த இடத்தில் உள்ளது காணொளி அருமை பயணத்தில் இந்த மாதிரியான தொல்லைகள் அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் பார்த்தேன். நிறைய மரங்கள் இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயலக்ஷ்மி.

      நீக்கு
  20. வாசகம் அருமை.
    காஃபி வித் கிட்டு பதிவு பகிர்வுகள் எல்லாம் அருமை.
    காணொளிகள் பார்த்தேன்.
    ஹிமாச்சலப் பிரதேசப் பயணத்தில் பார்த்த கல்பா என்ற் ஊர் அழகு இயற்கை வனப்பு நிரம்ப பெற்றது., நடனம் அருமை.
    இட்லி Chaat இரண்டும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  21. பழைய பதிவுகளை படித்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
  22. //தேவையற்ற ஒரு ஆடம்பரமாக ரிசப்ஷனுக்கு என்று அனாவசியமான செலவுகள் செய்வதற்கு பதில்// - பழைய பதிவில் கருத்தெழுதினால் பாலைவன ரோஜா போல ஆகிவிடும். அதனால் இங்கு எழுதறேன். நம் திருமணங்களில் 99 சதம் பணம் வீணடிக்கிறோம், யாருக்கும் பிரயோசனம் இல்லாமல். இது பெரிய crime என்று நான் கருதுகிறேன்.

    எல்லோருக்கும் ஒரு வேளை விருந்து கொடுக்கலாம். அரை நாளுக்கு மேல் திருமணத்தில் என்ன இருக்கிறது? 100 ரூபாய் செலவழிக்கும் இடத்தில் 10 ரூபாய் செலவழித்துவிட்டு, 90 ரூபாயை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவங்களுக்கு உதவியாக இருக்கும் இல்லையா?

    அந்த ஊர்ல தீர்த்தவாரி வேறயா? மற்ற எல்லாமே தமிழக திருமணங்களில் வந்துவிட்டது.-அல்லது பல சமூகத்திற்கும் பரவிக்கொண்டிருக்கிறது.

    ஒரு செய்தியில் பார்த்தேன், அல்லது தெரிந்தவர் சொன்னார். நெல்லையில் இரண்டு வேளை உணவிற்கு மாதம்பட்டிக்கு 50 லகரம் கொடுத்தார்களாம். சந்தனம் மிஞ்சினால் எங்கு பூசிக்கொள்வது என்று விவஸ்தை இல்லையா எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... இப்போதெல்லாம் கல்யாண சமையல் என்ற பெயரில் தரப்படும் உணவுக்காக செய்யப்படும் செலவு அதீதமாகவே இருக்கிறது. தில்லியில்/வடக்கில் ப்ளேட் கணக்கு தான். இங்கே எப்படி இலைக் கணக்கோ அங்கே ப்ளேட் கணக்கு! ஒரு ப்ளேட் இரண்டாயிரம் வரை கூட வாங்கிய திருமணங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த உணவு என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....